புதன், 10 ஜூலை, 2013

அமிதாப் - அம்பானிக்கு விவசாயக் கடன்...! - ஏழை விவசாயிக்கு தற்கொலை...!!

           

 பத்திரிக்கையாளர் பி. சாய்நாத் அவர்களின் உரையிலிருந்து....
               இந்தியாவில் புதிய தாராளமயக் கொள்கை அமல்படுத்திய பின்பு விவசாயிகள் தற்கொலை அதிகரித்தது.   குற்ற ஆய்வு கழகம் வழங்கிய புள்ளி விவரப்படி, கடந்த 18 ஆண்டுகளில் 2லட்சத்து 84 ஆயிரத்து 694 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடைசி 9 ஆண்டுகளில் தான் தற்கொலைகள் அதிகமாகியுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும், 2001-2009 - ஆம் ஆண்டுகளுக்குள் 18ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். சராசரியாக வருடத்திற்கு ஆயிரத்து 800 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.          ஆனால், அந்த மாநில அரசு, விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லையென செய்தி வெளியிட்டது. 2013 ல் 4 பேர் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்தது.
            மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஆண்டில் (2012) ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லையென மம்தா அரசு தவறான தகவலை கூறியது. உண்மையென்னவெனில் கடந்த 2012 - ஆம் ஆண்டில் மட்டும் 14 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாட்டில், கடந்த 9 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்.
             1990 வரை விவசாயிகள் தற்கொலை இல்லை. தற்போது 21 -ஆம் நூற்றாண்டில் மட்டும்  ஏன் இந்தக் கொடூரம் நடக்கிறது? 1960-70 காலகட்டத்தில் விவசாயிகளின் எழுச்சிமிக்க, வீரம் செறிந்த மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக நிலத்தை மீட்கும் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. 1940 - ஆம் ஆண்டில் நடைபெற்ற வீரத் தெலுங்கானா போராட்டத்தால் ஏழை விவசாயிகள் ஏராளமான நிலங்களைப் பெற்றனர். தற்போது விவசாயிகளின் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெறுவதில்லை. தற்கொலைச் சாவில் முதல் மாநிலம் மகாராஷ்டிரா. இங்கு, 11.5 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அதிகமாக உள்ள, வசதி படைத்த மாநிலமாகும். ஆனால், அங்கு மட்டுமே விவசாயிகளின் தற்கொலைச் சாவு அதிகமாக நடைபெறுகிறது. காரணம் என்னவெனில், சமத்துவமான வளர்ச்சி இல்லை.
             பொருட்களை உற்பத்தி செய்யும் மக்களுக்கு சரியாக பணம் கிடைப்பதில்லை. ஒளரங்காபாத் மாவட்டத்தில்  115 வங்கிகள் உள்ளன. ஆனால் இங்கு கடன்கள் பணக்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இங்குள்ள வணிகக்குழுவில் உள்ள 120 பேர், விலைமதிப்பு மிக்க மெர்சிடெஸ் பென்ஸ் ரகக் கார்களை வங்கியில் கடன் பெற்று வாங்கியுள்ளனர்.  ஆனால், விதர்பா விவசாயிகள் யாருக்குமே வங்கி கணக்கு இல்லை. பிறகு எப்படி அவர்கள் விவசாய கடன் பெற முடியும்?
              பாரத ஸ்டேட் வங்கி, சொகுசுக் கார் வாங்கும் பணக்காரர்களுக்கு 7 சதவீத வட்டியில் கடன் தருகிறது. ஆனால், விவசாயிகள் டிராக்டர் வாங்கினால், 14 சதவீத வட்டி என்கின்றனர். இந்த விவசாயக் கொள்கை யாருக்காக உள்ளது. சிறு,குறு விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு இல்லை. இதனால் அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி விவசாயம் செய்கின்றனர். வாங்கிய கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். ‘விவசாயக் கடன்’ வாங்குபவர்கள் எல்லாம் விவசாயிகள் தானா? எனப் பார்க்க வேண்டியுள்ளது. விவசாயக் கடன் யாரிடம் போய்ச் சேர்கிறது? இதனை பேராசிரியர் ராம்குமார் என்பவர் ஆய்வு செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மெட்ரோ வங்கியில் 53 சதவீதம் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
   நகர்ப்புறத்தில் வாழக்கூடிய பணக்காரர்களுக்கு இந்தக் கடன் போய்ச் சேர்ந்துள்ளது. உதாரணமாக நடிகர் அமிதாப்பச்சன் பெயரில் பட்டா உள்ளதால் அவர் விவசாயக் கடன் பெற்றுள்ளார். இதைவிடக் கொடுமை முகேஷ் அம்பானியும் விவசாயக் கடன் பெற்றுள்ளார்.
           வெறும் 43 சதவீதம் மட்டுமே சிறு, குறு விவசாயிகளுக்குக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி போய், ப.சிதம்பரம் வந்தாலும் கொள்கை மாறவில்லை.  இவர்களால் கார்ப்பரேட் நிறுவனங்களே பயனடைந்துள்ளன. முகேஷ் அம்பானி குளிர்பதன கிட்டங்கி அமைக்க வெறும் 4 சதவீத வட்டியில் வங்கி மூலம் விவசாய கடன் பெறமுடியும்.   அவர் விவசாய பொருட்களை அதில் சேமித்து வைக்கிறாராம். ஆனால், ஏழை விவசாயிக்குத் தர மாட்டார்கள். அந்த  விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும், அரசாங்கம் அவர்கள் விவசாயி கிடையாது என அறிவிக்கும்.
         இறந்து போன ஒருவரின் நிலத்தில் அவரது உறவினர்கள், வாரிசுகள் வேலை செய்தால் அவர்கள் விவசாயி கணக்கில் வரமாட்டார்கள். ஏனெனில், இறந்தவரின் பெயரில் பட்டா இருக்காது. இறந்தவரை காவல்துறை கணக்கு எடுக்கும். அப்போது பட்டா இருக்க வேண்டும். அதேபோல், குத்தகை விவசாயி தற்கொலை செய்தாலும் அவர் கணக்கில் வரமாட்டார். பிரபாகர் கட்டாரி என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பட்டா அவரது தந்தை பெயரில் இருந்தது. எனவே, அவருக்கு இழப்பீடு தர முடியாது என மாநில அமைச்சரே அறிவித்தார்.  அதேபோல் 3 ல் 2 பங்கு விவசாயப் பணியில் ஈடுபடும் பெண்கள் அரசாங்கக் கணக்குப்படி விவசாயிகள் கிடையாது.
அப்படியென்றால், விவசாயப் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன?
             ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் பட்டியலிலும் பெண்கள் கிடையாது. மழை இல்லாத காரணத்தாலோ, போதிய தண்ணீர் கிடைக்காத காரணத்தாலோ, பூச்சிகள் பயிர்களை சேதப்படுத்தியதாலோ விவசாயிகளின் தற்கொலை அதிகரிக்கவில்லை. மாறாக, அதிக மகசூல் கிடைத்தும்,  கட்டுப்படியான விலை கிடைக்காத காரணத்தாலேயே 45 சதமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
            உணவு உற்பத்தியைக் கைவிட்டு பணப் பயிருக்கு மாறுங்கள் என அரசாங்கம் சொல்கிறது. அதற்காக கடனும் வழங்குகிறது. பணப் பயிர்களான பருத்தி, நிலக்கடலை, கரும்பு, வெண்ணிலா பயிரிட்ட விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டனர். 2002-03 ல் விதர்பாவில் ஒரு கிலோ பருத்தி விதை 9 ரூபாய் 2003 கடைசியில் அரசாங்கம் அதிக மகசூல் பெறும் விதைகளை அறிமுகப்படுத்தியது. அதன் விலை 450 கிராம் 320 ரூபாய் 2004 - ஆம் ஆண்டில் பி.டி காட்டன் விதை 450 கிராம் விலை ரூ.1600 என உயர்ந்தது.
          மான்சாண்டோ விதைகளை அறிமுகப்படுத்தியதால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
 2003 - ஆம் ஆண்டில் இருந்து விவசாய இடு பொருட்களின் விலையை ஆய்வு செய்துள்ளேன்.
மானாவாரியில் பயிரிட ஏக்கருக்கு ரூ.2500 ம், பாசன விவசாயத்திற்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமும்  செலவாகிறது.  2010 - ஆம் ஆண்டில் மானவாரியில் பருத்தி பயிரிட ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரமும்,  பாசனத்தில் 45 ஆயிரமும் செலவாகிறது. மகாராஷ்டிராவில் பருத்தி ஒரு குவிண்டால் பயிரிட ரூ.4500 செலவாகிறது என அரசாங்கமே கூறுகிறது. உற்பத்தி செலவு 5 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், விவசாயிகளின் வருமானம் 5 மடங்கு உயரவில்லை.
மத்திய அரசின் தவறான விவசாயக் கொள்கையால் தற்கொலைகள் அதிகரித்தன. தற்கொலைப் பாதை தீர்வல்ல என்பதை விவசாயிகள் உணரவேண்டும். போராட வேண்டும்.
நன்றி :


 

கருத்துகள் இல்லை: