வியாழன், 4 ஜூலை, 2013

குஜராத் போலி என்கவுண்டர் - நரேந்திர மோடியின் முகத்திரையை கிழிக்கத் தயங்குவதேன்....?



                     முதலமைச்சர் நாற்காலியில் சொகுசாக உட்கார்ந்திருந்தாலும், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு இந்திய பிரதமர் நாற்காலியின் மீது எப்போதுமே ஒரு கண் உண்டு. அதற்காக மக்கள் மனதில் தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி ஹீரோ மாதிரி ஏதாவது ஸ்டண்ட் அடித்துக்கொண்டே இருப்பார். அண்மையில் கூட உத்திரகாண்ட்டில் ஆற்றின் சீற்றத்தால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த 15,000 குஜராத் மாநில மக்களை மட்டும் நரேந்திர மோடி தான் மட்டும் தன்னுடைய அதிகாரிகள் சிலரை அழைத்துக்கொண்டு ஹெலிகாப்டரில் பறந்து சென்று காப்பாற்றி அழைத்து வந்ததாக ''காதில் பூச்சுற்றும் செய்தியை'' பரவலாக செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் பரப்பிவிட்டார்.
         இந்தியாவிலுள்ள முதலமைச்சர்களிலேயே தன்னை வித்தியாசமான முதலமைச்சராக காட்டிக்கொள்வதற்காகவும், பப்ளிசிடிக்காவும் ஒரு ஹீரோவைப் போன்று ஸ்டண்ட் அடித்து திரிபவர் தான் இந்த நரேந்திர மோடி.
         இதேப்போல் 2002 - ஆம் ஆண்டில் தான் இந்து மதத்தை காக்க வந்த பரமாத்மாவாக தன்னைக் காட்டிக் கொள்வதற்காகவே மதவெறி பிடித்த நரேந்திர மோடி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்தார். இதன் மூலம் இந்துக்கள் மத்தியில் தன்னை ஒரு ஹீரோவாக - ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியாக காட்டிக்கொண்டார்.
         அதற்கு பிறகும் ''பப்ளிசிட்டி'' பிரியரான நரேந்திர மோடியின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த ''மதம் பிடித்த மிருகம்''  2004 - ஆம் ஆண்டு மீண்டும் விழித்துக்கொண்டது. ''ரகசிய போலிஸ் 115'' மற்றும் ''ஜேம்ஸ்பாண்டு 007'' வேஷங்களை மாட்டிக்கொண்டு, மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை ''டப்.. டப்..ன்னு'' சுட்டு தள்ளி விட்டார். ஏண்டா பாவி சுட்டேன்னு கேட்டா, ''அவிங்கல்லாம் லஷ்கர் - இ - தொய்வா தீவிரவாத அமைப்பினால் என்னை கொலை செய்ய அனுப்பப்பட்ட ஆளுங்க... அதான் சுட்டுட்டேன்னு நரேந்திர மோடி எல்லாரும் நம்புற மாதிரி டபாய்ச்சுட்டாரு. எந்தவிதமான விசாரணையும் இன்றி என்கவுண்டர் என்ற பெயரில் இரக்கமின்றி செய்யப்பட்ட படுகொலை அது. எப்போதுமே சினிமாவில ஹீரோ கொலை பண்ணா தப்பே கிடையாதே. அதேப்போல் தான் இந்த ஹீரோ பண்ணக் கொலையையும் மூடி மறைத்துவிட்டார்கள். சட்டத்தையும், நீதியையும் அதே என்கவுண்டர் மூலம் கொலை செய்து விடலாம் என்று நினைத்திருந்தார்கள்.
          இறுதியாக பாதிக்கப்பட்டவர்களின் கடுமையான போராட்டங்களுக்குப் பின் உச்சநீதிமன்றத்தின் ஆணைபடி , மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ விசாரித்து அண்மையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது. இந்த வழக்கிலும் சி.பி.ஐ வழக்கம் போல் எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளை மட்டுமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறது என்பதை தான் நடுநிலையான மக்கள் முணுமுணுக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: