சனி, 9 பிப்ரவரி, 2013

அவை ஒழுக்கமும் கண்ணியமும் காப்பாற்றப்படவேண்டும்...!



           ஊழல் குற்றச்சாட்டுகளில் தத்தளித்துக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தற்போது ஒரு படி மேலே போய் பாலியல் குற்றச்சாட்டில் நுழைந்திருக்கிறது. இதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் ''அரசியல்ல சகஜமப்பா'' என்று நீங்கள் சொல்லுவது கேட்கிறது. அந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அந்த ''மகா யோக்கியர்'' யார் என்பது தான் நமது கேள்வி....? அவரு யாருன்னு தெரிய வேண்டுமென்றால் நாம் 17 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் செல்லவேண்டும்.
                ''சூரியநெல்லி'' என்ற ஓர் ஊர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு முன் 1996 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 வயதே ஆன அந்த சூரியநெல்லி ஊரைச் சேர்ந்த ஒரு சிறுமியை பஸ் கண்டக்டர் ஒருவன் ஏமாற்றி கடத்திச் சென்று வேறொருப் பெண்ணிடம் விற்றுவிட்டான். அந்தப் பெண்ணோ பாலியல் தொழில் செய்யும் விடுதிகளுக்கு தவறான முறையில் அப்பாவிப் பெண்களை சப்ளை செய்பவள். இவளது கூட்டாளியாக இருந்து இது போன்ற வேலைகளுக்கு உதவியாக இருந்தவன் தர்மராஜன் என்ற வக்கீல் தொழில் செய்தவன். வக்கீல் தொழிலைத் தவிர இது போன்ற சமூகப் பணிகளைச் செய்தவன்.
           இப்படி சிக்கிய 16 வயதே ஆன அந்த சிறுமியை கேரளாவில் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பாலியல் தொழிலில் ஈடுபத்தி வன்கொடுமை செய்துள்ளனர். பெரிய பெரிய முதலாளிகள், பெரிய அதிகாரிகள், பிரபலமான அரசியல்வாதிகள் என பல பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தான் வெட்கக்கேடான விஷயம். சுமார் 40 நாட்களாக 42 பேர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பிறகு துரத்தி அனுப்பிவிட்டனர்.
            அந்த 42 பெரிய மனிதர்களில் ஒருவர் தான் இந்த ''மகா யோக்கியர்'' கேரளா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவைத் துணைத்தலைவருமான ''பெருமரியாதைக்குரிய'' பி. ஜே. குரியன் என்பது இந்த நாடு தலைகுனிய வேண்டிய விஷயமாகும். அந்த சிறுமி பாலியல் கொடுமை சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கிய குரியன் உட்பட அந்த   42 பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள். பிறகு அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டு, அந்த 42 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது தவறு என்று உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது.
          இது ஒரு பக்கம் இருக்க... கடந்த டிசம்பர் மாதம் புதுதில்லியில், ஓடும் பஸ்ஸில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்துவிட்ட சம்பவத்தை எதிர்த்து நாடு முழுதும் எழுந்த மக்களின் கிளர்ச்சியின் காரணமாக மத்திய அரசு கடந்த வாரம் ''பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் அவசர சட்டத்தை'' பிறப்பித்தது. இந்த சட்டம் வருகிற பாராளுமன்றக் கூட்டத்தொடரிலேயே விவாதிக்கப்படவுள்ளது. மாநிலங்களவையிலும் விவாதிக்கப்படும். பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை வழங்கும் ஒரு சட்டத்தை அவையில்  விவாதிக்கும் போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் - அதாவது இந்த ''மகா யோக்கியர்'' பி. ஜே. குரியன் அவையின் துணைத்தலைவராக இருந்து அவையை நடத்துவது என்பதோ அல்லது ஒரு மாநிலங்களவை உறுப்பினராக கூட அவையில் அமர்ந்திருப்பது என்பதோ நியாயமற்றது.. நீதியற்றது என்பது தான் இன்றைக்கு மக்கள் மத்தியில் உலா வரும் செய்தியாகும்.
            பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை வழங்க வழிச்செய்யும் இந்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நுழைவதற்கு முன், பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அவையின் துணைத்தலைவர் வெளியேற வேண்டும். கண்டிப்பாக அவராகவே பதவி விலகவேண்டும் அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமை அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாகும். அப்போது தான் அவையின் ஒழுக்கமும், கண்ணியமும் காப்பாற்றப்படும். அது தான் அவையின் மாண்புக்கு மரியாதைக்கும் அர்த்தமாகும்.
         ஆனால் ''அன்னை'' சோனியா காந்தியும், ''அண்ணன்'' ராகுல் காந்தியும் எந்தவிதமான சலனமும் இல்லாமல் வாயை மூடிக்கொண்டு மவுனமாக இருக்கின்றனர் என்பதை தான் நாடு தலைகுனிந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: