பிரகாஷ் காரத்
பொதுச்செயலாளர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிப்ரவரி 24 முதல் மாற்றுக்
கொள்கைகளை முன் வைத்து அகில இந்தியப் பிரச்சாரப் பயணம் நாட்டின் பல
முனைகளிலிருந்தும் தொடங்கவிருக்கிறது. அன்றையதினம்
கன்னியாகுமரியிலிருந்து தில்லி நோக்கி முதல் பயணக்குழு புறப்படுகிறது. மற்ற
மூன்று பயணக் குழுக்கள் கொல்கத்தா, அமிர்தசரஸ் மற்றும் மும்பை
நகரங்களிலிருந்து வரும் நாட்களில் புறப்பட இருக்கின்றன. குவாஹாத்தி,
பரலேகமுண்டி, சிம்லா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலிருந்தும் பயணக்
குழுக்கள் புறப்பட்டு, இப்பயணக் குழுக்களுடன் இணைந்து கொள்கின்றன.
இவையன்றி பல மாநிலங்களில் துணைப் பயணக்குழுக்களும் தொடங்கப்பட்டு,
பிரதானப் பயணக்குழுக்கள் தங்கள் மாநிலங்களுக்கு வரும்போது, அவற்றுடன்
இணைந்து கொள்கின்றன. நான்கு பிரதானக் குழுக்களும் சங்கமிக்கும் நாளான
மார்ச் 19 அன்று தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி
நடைபெற விருக்கிறது.
ஏன் இந்தப் பயணக் குழுக்கள்?
எதற்காக
இந்தப் பயணக்குழுக்கள்? நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை
சந்தித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில்
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி முன்னெப்போதும் இல்லாத
அளவிற்கு இப்போது ஆழமாகியுள்ளது; விரிவடைந்துள்ளது. உலகில் விரல்விட்டு
எண்ணக்கூடிய பணக்காரர்களின் வரிசையில் உள்ளவர்கள் இந்தியாவிலும் சிலர்
உள்ளனர். சிலரைப் பெற்றிருக்கிற அதே சமயத்தில், மிகப் பெரிய அளவில்
ஏழைகளும் இந்தியாவில் உள்ளனர். உலகில் ஊட்டச் சத்தின்றி வாடும் குழந்தைகளை
மிகப்பெரும் எண்ணிக்கையில் பெற்றுள்ள நாடாக மிகவும் வெட்கக் கேடான
முறையில் இந்தியா மாறியுள்ளது. ஆட்சியாளர்கள் தாராளமயக் கொள்கைகளைப்
பின்பற்றத் துவங்கிய பின்னர், கடந்த இருபதாண்டுகளில், மிகவும்
அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகள்
தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிவேகமாக
வளர்ந்திருக்கிறது. சமீப காலங்களில் வேலை வாய்ப்பு இல்லாத வளர்ச்சி மட்டுமே காணப்படுகிறது. இவை அனைத்துமே திவாலாகிப் போன
முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கொள்கையின், அதிலும் குறிப்பாக கடந்த
இருபதாண்டு காலமாகக் கடைப்பிடித்து வந்த நவீன தாராளமயக் கொள்கையின்,
விளைவேயாகும். நாட்டில் பெரும் வர்த்தக நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள்,
பன்னாட்டு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஊகவர்த்தகர்கள் மற்றும் மஃபியா
கும்பல்கள் அபரிமிதமானமுறையில் தங்களை வளப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
இன்னும் சரியாகச் சொல்லப்போனால் நாட்டில் மிகவும் வலுவாக இருக்கக்கூடிய
இத்தகு சக்திகள், நாட்டின் செல்வாதாரங்களை முழுமையாகச் சூறையாடுவதற்கு உதவக்கூடிய விதத்திலேயே ஆட்சியாளர்களின் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள்
அடிக்கும் கொள்ளை லாபத்தின் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.
இதுநாள் வரை இருந்த வரிவிதிப்புகளும்கூட இவர்கள் கட்டுவதைத் தவிர்க்கக்
கூடிய விதத்திலேயே புதிதாக உருவாக்கப்படும் சட்டங்கள் இவர்களுக்கு
உதவிவருகின்றன. அதேசமயத்தில் அரசாங்கம் விலைவாசியை உயர்த்தக்கூடிய
விதத்திலும், பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடிய விதத்திலும் கொள்கைகளைப்
பின்பற்றி வருகிறது. பெட்ரோல், டீசல், இரசாயன உரங்கள் மற்றும் உணவுப் பொருள்களுக்கு அளித்து வந்த மானியங்களை வெட்டிச் சுருக்கியதன் மூலம்
கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசிகளின் காரணமாக மக்கள் நிர்க்கதியான
நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் - பாஜக ஆகிய இரு கட்சிகளுமே நவீன தாராளமயக் கொள் கைகளுக்கு வக்காலத்து வாங்கி, அமெரிக்காவின்
தலைமையில் இயங்கும் ஏகாதிபத்தியத்தின் நலன்களைத் தூக்கிப்
பிடிப்பவைகளேயாகும். அது, மத்தியில் ஆட்சி செய்யும் ஐ.மு.கூட்டணி
அரசாங்கமானாலும் சரி அல்லது பாஜக தலைமையில் உள்ள மாநில அரசாங்கங்களானாலும்
சரி. தனியார்மயம், பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு நாட்டின் செல்வாதாரங்களை ஒப்படைத்தல், அந்நிய நிதி மூலதனத்தின் நலன்களுக்கு விசுவாசமாக
இருத்தல் என எந்த விஷயத்திலும் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம்
எதுவும் கிடையாது. அரசின் மிக உயர்ந்த இடங்களிலும், பொது நிறுவனங்களிலும்
காணப்படும் லஞ்ச ஊழல்கள், நவீன தாராளமயக் கொள்கைகளின் பிரிக்க முடியாத
அங்கங்களேயாகும். இவைகள் பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் -
அதிகாரவர்க்கத்தின் இடையேயுள்ள நெருக்கமான பிணைப்பின் வெளிப்பாடேயாகும்.
இத்தகைய லஞ்ச ஊழல் மூலதனக் குவியலின் ஒரு கருவியாகும். நவீன தாராளமயக்
கொள்கைகளை மாற்றாமல் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது
முடியாது. காங்கிரஸ், பாஜக மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளால் ஊழலைக் கட்டுப் படுத்துவது என்பது இயலாது.
ஏனெனில் அவையும் ஊழல்
என்கிற நெருக்கமான பிணைப்புடன் பிரிக்கமுடியாத வகையில்
பின்னிப்பிணைந்தவைகளேயாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்
இடதுசாரிகளால் மட்டுமே இத்தகைய ஊழல் என்னும் தொற்றுநோயினால்
பாதிக்கப்படாமல் அவற்றை எதிர்த்துத் துணிந்து நிற்க முடியும். இவ்வாறு
மக்களைச் சூறையாடக்கூடிய முதலாளித்துவப் பாதையானது சமூக ஏற்றத்
தாழ்வுகளுக்கும் சமூகப் பதற்ற நிலைமைகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது. அதன்
மூலமாக நாட்டில் வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சிக்கும், அவற்றின்
சீர்குலைவு நடவடிக்கைகளுக்கும் நிலைமைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
பிராந்திய வெறி மற்றும் இன அடையாள அரசியல் ஆகியவற்றின் அடிப்படையிலான
பிரிவினைவாத சக்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. வலதுசாரி சக்திகள் தங்களுடைய பிற்போக்குத்தனமான அரசியலுக்காக இத்தகைய சக்திகள் அனைத்தையும்
பயன்படுத்த முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றன. இப்பிரச்சாரப் பயணமானது மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டத்தின் அவசியத்தை முன்னெடுத்துச் செல்லும்.
நாட்டிலுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் - விவசாயிகள், விவசாயத்
தொழிலாளர்களின், அணிதிரட்டப்பட்ட மற்றும் முறைசாராத் தொழிலாளர்களின்,
பெண்களின், தலித்துகளின், பழங்குடியினர்களின், சிறுபான்மையினர்களின்-
பிரச்சனைகளையும் கவலைகளையும் எடுத்துச் சொல்லும். பிரச்சாரப் பயணமானது,
வகுப்புவாத அரசியலுக்கு எதிராக உழைக்கும் மக்களின் ஒற்றுமையை உயர்த்திப்
பிடிக்கும்.
பயணக்குழுவின் குறிக்கோள்கள்
பயணக்குழுவானது ஆறு
முக்கிய அம்சங்களின் மீது மக்கள் கவனத்தை ஈர்க்கும்:
(1) நிலம் மற்றும்
வீட்டுமனைகளுக்கான உரிமை : உபரியாக உள்ள நிலங்களை நிலமற்றவர்களுக்கு
விநியோகிப்பதன் மூலம் நிலச்சீர்திருத்தக்கொள்கைகளை அமல்படுத்த வேண்டும்.
நிலமற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் வீட்டுமனைகளை உத்தரவாதப்படுத்த
வேண்டும்.
(2) விலைவாசியைக் கட்டுப்படுத்துக - உணவு உரிமையை வழங்கிடுக :
அதிகபட்சமாக ஒரு கிலோ 2 ரூபாய் விலையில் மாதந்தோறும் 35 கிலோ உணவு
தானியங்களை அனைத்துக் குடும்பத்தினருக்கும் வழங்கக்கூடிய விதத்தில் பொது
விநியோக உரிமையை அமல்படுத்துக; மோசடியான வறுமைக் கணக்கீட்டின்
அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டுக்கு மேல் / வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்பதை ரத்து செய்யவேண்டும்; உணவு தானியங்கள்
மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்கள் மீதான முன்பேர வர்த்தகத்தை
நிறுத்திடுக.
(3) கல்வி உரிமை மற்றும் சுகாதார உரிமை : கல்விநிலையங்களையும்
சுகாதார சேவைகள் அளிக்கும் நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதை
நிறுத்திடுக; கல்விக்கும், சுகாதாரத்திற்கும் ஒதுக்கீடுகளை அதிகப்படுத்திடுக; கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதை உத்தரவாதப்படுத்திடுக; சுகாதாரத்துறையில் பொதுச் சேவைகளை வலுப்படுத்திடுக;
தனியார் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள் முறையாகச் செயல்படுவதை
உத்தரவாதப்படுத்திடுக.
(4) வேலை உரிமை : வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதை
உத்தரவாதப்படுத்தும் வகையில் பொது முதலீட்டை அதிகரித்திடுக; அரசு நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுப்பதற்காகத் தற்போதுள்ள தடையை விலக்கிக்கொள்க;
ஒரு காலவரையை நிர்ணயித்து அதற்குள் அனைத்துக் காலியிடங்களையும் நிரப்பிடுக;
குறிப்பாக தலித் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் காலியிடங் களை நிரப்பிடுக; மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத்
திட்டத்தின்கீழ் வேலை செய்யும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்திடுக;
அவர்களுக்கு விலைவாசிக் குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்ட குறைந்தபட்ச
ஊதியத்தை வழங்கிடுக; நகர்ப்புறங்களில் உள்ளோருக்கும் வேலை நாட்களை உத்தரவாதப்படுத்தக் கூடிய விதத்தில் அதனை விரிவுபடுத்திடுக.
(5) சமூக
நீதியை உத்தரவாதப்படுத்துக : பெண்களுக்கு எதிரான வன்முறைக்குக்
கடிவாளமிடுக; நாடாளுமன்றம் / சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு
பங்கு இடங்களை அளித்திடுக; தீண்டாமைக் கொடுமை மற்றும் தலித்துகளுக்கு
எதிரான பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக; பழங்குடியினரின் நிலம்
மற்றும் வன உரிமைகளைப் பாதுகாத்திடுக; முஸ்லிம் சிறுபான்மையினருக்கு,
கல்வி மற்றும் வேலைகளில் சமவாய்ப்புகளை வழங்கிடுக.
(6) லஞ்ச ஊழலுக்கு
முற்றுப்புள்ளி வைத்திடுக : புலனாய்வு மேற்கொள்வதற்கு சுயேச்சையான
அதிகாரங்களுடன் கூடிய லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுக; வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுக; இழப்புக்குப்
பொறுப்பான கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இழப்புகளை மீட்டிடுக; லஞ்ச
ஊழல் பேர்வழிகளை சிறைக்கு அனுப்புக;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு
கட்சி என்ற முறையில், நாடு தழுவிய அளவில் இத்தகைய பயணத்தை நடத்துவது இதுவே
முதல்முறை. 2012 ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் 20 - ஆவது அகில இந்திய
மாநாட்டில் தீர்மானித்தபடி கட்சியின் சுயேச்சையான பங்கினையும் நடவடிக்கைகளையும் வலுப்படுத்திட வேண்டும் என்பதன் ஒரு பகுதியாக, இத்தகைய
பிரம்மாண்டமான முயற்சியில் கட்சி இறங்கி இருக்கிறது. சுதந்திர இந்தியாவின்
வரலாற்றில் உழைக்கும் வர்க்கத்தின் மாபெரும் நடவடிக்கையாக மத்தியத் தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க பிப்ரவரி 20 - 21 தேதிகளில் நடைபெற்ற
வரலாற்றுச் சிறப்பு மிக்க இருநாட்கள் வேலைநிறுத்தத்தினை அடுத்து அகில
இந்தியப் பிரச்சாரப் பயணம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அனை வருக்குமான
பொது விநியோக முறையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இடதுசாரிக்கட்சிகளால் நாடு தழுவிய அளவில் மிகவும் விரிவானமுறையில் நடத்தப்பட்ட
மக்கள் கையெழுத்து இயக்கத்தை அடுத்து இந்த பேரியக்கம் வருகிறது. இப்
பிரச்சாரத்தின் போது ஐந்து கோடிக்கும் மேலான மக்களிடம் வாங்கிய கையெழுத்துக்கள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட இருக் கின்றன.
உண்மையான மாற்று
மாற்றுக்
கொள்கைக்கான பயணம் என்பது வரவிருக்கும் காலங்களில் நாம் நடத்தவிருக்கும் பிரம்மாண்டமான இயக்கங்களுக்கும், அனைத்து இடதுசாரி மற்றும்
ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவதற்கும் முன்னோடியாகும். தற்போதைய முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு ஓர் உண்மையான மாற்றை இடதுசாரி மற்றும்
ஜனநாயக சக்திகளால்தான் தந்திட முடியும் என்கிற செய்தியை இப்பயணம்
மக்களுக்குத் தெரிவித்திடும். அகில இந்திய பிரச்சாரப் பயணம்,
விவசாயிகளும் பழங்குடியினரும் தங்களிடமிருந்து வலுக்கட்டாயமாகக்
கையகப்படுத்திய நிலங்களை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் பகுதிகள்
வழியாகச் செல்லும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், தங்கள்
விளைபொருட்களுக்கு நியாயமான விலை வேண்டி போராடிக் கொண்டிருக்கும் பகுதிகளைக் கடந்து செல்லும், நியாயமான ஊதியத்திற்காக அணிதிரட்டப்பட்ட
தொழிலாளர்களும், ஒப்பந்த முறைக்கு எதிராக முறைசாராத் தொழிலாளர்களும்
போராடிக் கொண்டிருக்கிற பகுதிகள் வழியாக இந்தப்பயணம் செல்லும். கல்வி
வணிகமயமாவதற்கு எதிராகவும் சிறந்த கல்வி வசதிகளுக்காக வும் மாணவர்களின்
போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற பகுதிகளையும் தொட்டுச்செல்லும்.
பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகவும் சமஉரிமைகள் கோரியும் பெண்கள்
போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வழியாக, சமூக நீதி கோரி
தலித்துகளின் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிற வழியாக,
வேலையின்மைக்கு எதிராக வாலிபர்களின் இயக்கங்கள் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் வழியாக இந்தப் பயணம் கம்பீரமாக செல்லும்.
போராட்டக்களத்தில் உள்ள அனைவருக்கும், மாற்றுக் கொள்கைக்கான இந்தப் பயணம்
ஓர் உந்துசக்தியாகத் திகழும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டில்
போராடிக் கொண்டிருக்கும் இம்மக்களின் பக்கம் நிற்கிறது என்கிற செய்தியை
இப்பயணம் அவர்களுக்கு அளிக்கும்; அத்துடன் மாற்றுக் கொள்கைக்காகப் போராட
முன்வருக என்றும் அவர்களை அறைகூவி அழைத்திடும்.
தமிழில்: ச.வீரமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக