சனி, 9 பிப்ரவரி, 2013

''சாமிகள்'' மோதல் - தள்ளாடும் புதுச்சேரி...!


                இதை ரங்கசாமியும் நாராயணசாமியும் அவசியம் படிக்கவேண்டும்...!         
            
            புதுச்சேரியில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் என். ரங்கசாமி எப்போதுமே வெறுங்கையில் முழம் போடுபவர். இவர் மாநில மக்களை கவர்ந்திழுப்பதற்காக நிதியே இல்லாமல் பல திட்டங்களை அறிவிப்பார். அத்திட்டங்களுக்கென்று தனி நிதி ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்காது. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார். அதற்காக மத்திய அரசிடமும் யாசிக்கமாட்டார். புதுச்சேரி என்பது இந்தியாவின் ஒரு அங்கம். மத்திய அரசின் தயவில்லாமல் மாநில நிர்வாகம் இயங்காது என்பதையும் யோசிக்கமாட்டார். இப்படி தான் கடந்த காலங்களில் சுனாமி நிதி, தலித் மக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சிறப்புக் கூறு நிதி, பாதாள சாக்கடைப் போடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என பல்வேறு நிதிகளில் கையை வைத்து விடுவார். மக்களும் திருப்தியடைந்துவிடுவார்கள். இது என்ன அக்ஷய பாத்திரமா அள்ள அள்ள  வளர்வதற்கு...? இப்போது கஜானவில் பணம் இல்லை. ஒரு பக்கம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே அரசிடம் பணமில்லை. காவல் துறையினற்கு பதிமூன்று மாதங்களுக்கு  கொடுக்கவேண்டிய சம்பளத்தில் ஒரு மாத சம்பளத்தை வெட்டியிருக்கிறார். பாவம் போராடி பெற்றுத்தருவதற்கு தொழிற்சங்கம் இல்லாத சீருடைப் பணியாளர்கள் என்ன செய்வார்கள்...? வெறுமனே முணுமுணுத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு சம்பளமோ, அவர்கள் சேமித்து வைத்திருக்கக் கூடிய பி. எப். என்று சொல்லக்கூடிய வருங்கால வைப்பு நிதியிலிருந்து  எடுத்து அவர்களுக்கே சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. நாய் வாலையே வெட்டி நாய்க்கு சூப் வெச்சிக் கொடுக்கிற கதையா போச்சு.  இதனால் என்ன ஆச்சுன்னா...? அரசு ஊழியர்கள் தங்களது குடும்பத்தேவைக்காக தாங்கள் சேர்த்து வைத்த பி. எப் பணத்தை  திரும்ப பெறுவதற்கோ அல்லது அதில் கடன் பெறுவதற்கோ அதிகாரிகளிடம் விண்ணப்பம் அளித்தால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கே திரும்ப கொடுக்கப்படுகிறது என்று இன்னொரு பக்கம் அரசு ஊழியர்கள் முணுமுணுக்கிறார்கள்.
            இங்கே தான் கொடுமை தலைவிரித்தாடுதுன்னு கோயிலுக்குப் போனா அங்க ஒரு கொடுமை ஆடுச்சாம்... அது போல, கூட்டுறவு மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பல மாதங்களாகவே ஊதியம் வழங்கப்படாமல், அவர்கள் அரசுக்கு இலவசமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். புதிதாக யு. டி. சி., எல். டி. சி., ஆசிரியர்கள் போன்ற பணிகளுக்கு படித்த இளைஞர்கள் போட்டித்தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்னமும் பணி ஆணை கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறார்கள். வசதியற்ற மக்களுக்கு வீடு கட்ட மானியம் மற்றும் தொழில்முறைக் கல்விப்பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கொடுக்கப்படும் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.  இப்படியாக புதுச்சேரி மாநிலத்தின் நிதி நிலைமை என்பது மிகவும் மோசமடைந்து, அரசே தள்ளாடிக்கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணம், கடந்த 12 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை சார்ந்த என். ரங்கசாமியும், வி. வைத்தியலிங்கமும் மாறி மாறி ஆட்சி செய்ததில் நிர்வாக கோளாறும், நிர்வாக சீர்கேடும் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதுமட்டுமல்லாமல்  காங்கிரஸ் கட்சியின் நிர்வாக திறமையின்மையும், ஊழல் முறைகேடுகளும் தான் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.
               பதவி மற்றும் அதிகாரத்தில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சி, கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே இரண்டாக உடைந்தது. ரங்கசாமி தலைமையில் என். ஆர். காங்கிரஸ் கட்சி என்று துவக்கி தேர்தலில் போட்டியிட்ட போது ரங்கசாமி இலவசங்களை அள்ளி வீசுவார் என்ற எதிர்பார்ப்பில் மக்களும் ரங்கசாமிக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்து ஆட்சியில் அமரச் செய்தாலும், இங்கு நடப்பது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியே என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ரங்கசாமிக்கென்று தனி வழியோ அல்லது தனிக் கொள்கையோ கிடையாது. ரங்கசாமிக்கும் நாராயணசாமிக்கும் தான் பிரச்சனையே தவிர ரங்கசாமிக்கும் சோனியாவுக்கும் அல்ல. காங்கிரஸ் கட்சித் தலைமையலான மத்திய அரசை அப்படியே பின்பற்றக்கூடியவர் தான் இந்த ரங்கசாமி. மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை ஒருபோதும் ரங்கசாமி எதிர்த்ததே கிடையாது. எனவே ரங்கசாமி செய்யும் ஆட்சி என்பது காங்கிரஸ் கட்சி ஆட்சி தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
              ரங்கசாமிக்கும் நாராயணசாமிக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார போட்டியில் இருவரும் திரைமறைவில் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதும், வளர்ச்சியை முடக்குவதுமான வேலைகளில் ஈடுபடுவதும் மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். மத்திய அரசில் இடம்பெற்றிருக்கும் நாராயணசாமி மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வேண்டிய நிதியை பெற்றுத்தந்திருக்க முடியும். புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு கொடுக்கவேண்டிய வட்டித் தொகையை நாராயணசாமி நினைத்திருந்தால் தள்ளுபடி செய்திருக்கலாம். ஆனால் ரங்கசாமியின் மீதான பகையுணர்வின் காரணமாக நாராயணசாமி இவைகளையெல்லாம் வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார் என்பது தான் உண்மை.
           இதுமட்டுமல்ல... கடந்த வைத்திலிங்கம் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் தன் சொந்த வீட்டிற்கே அரசிடம் வாடகை பெற்றதும், அரசு பணத்தில் தேநீர் மற்றும் உணவுக்கு செய்த செலவு, விமான பயணச்செலவு என மக்கள் பணம் வீணடிக்கப்பட்டதும்,  வைத்திலிங்கமானாலும், ரங்கசாமியானாலும் வேண்டியவர்களுக்கு கூட்டுறவு அமைப்புகளிலும், தன்னாட்சி அமைப்புகளிலும் முறைகேடான வகையில் அதிகமான எண்ணிக்கையில் ஆட்களை பணியில் அமர்த்தப்பட்டதும் இவர்களின் நிர்வாக சீர்கேடுகளுக்கு உதாரணமாக சொல்லலாம். அதுமட்டுமல்ல... தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமி தன்னையே சுற்றிவரும் தன் கூட்டாளிகளை திருப்தி செய்வதற்காக செயல்படாமல் இருந்த 23 வாரியங்களை தூசு தட்டி அதற்கு தன் கூட்டாளிகளை வாரியத்தலைவர்களாக நியமித்தது என்பது இப்படிப்பட்ட நெருக்கடி நேரத்தில் செய்யப்பட்ட முட்டாள் தனம் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். இவர்களுக்கே மாதந்தோறும் கோடிக்கணக்கில் நிதித் தேவைப்படுகிறது. இவர்களின் மாத சம்பளம் ஒருவருக்கே ரூ. 60,000/- இவர்கள் அனைவருக்கும் அரசு செலவில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள கார் வாங்கித்தரப்பட்டுள்ளது. ஒரு வாரியத் தலைவர் தனக்கு 20 இலட்சம் மதிப்புள்ள கார் தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கியிருக்கிறார். இந்த கார்களுக்கு ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு மாதசம்பளம், காருக்கு பெட்ரோல் செலவு, வாரியத் தலைவரின் அலுவலக செலவு மற்றும் ''இதர'' செலவுகள என ஒரு மாதத்திற்கே கோடிக்கணக்கில் செலவாகின்றது. இப்படிப்பட்ட நெருக்கடி நேரத்தில் இதுபோன்ற வீண் செலவுகளை தவிர்த்திருக்கவேண்டும்.
              சரி... இப்படியெல்லாம் புலம்புவதால் நமக்கு தீர்வுகிடைத்து விடாது.
நாம் செய்யவேண்டியது என்ன..? சிந்திக்க வேண்டும். அரசும் மக்களும் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

1. புதுச்சேரி சட்டமன்றம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மத்திய அரசு புதுச்சேரிக்கு கட்டாயமாக ''மாநில அந்தஸ்து'' வழங்க வேண்டும்.

2. அப்படி மாநில அந்தஸ்து கிடைக்கப்பெற்றால், மத்திய நிதிக் கமிஷனின் கடைக்கண் பார்வை புதுவை மாநிலத்தின் மீது விழும். அப்போது தான் புதுச்சேரி மாநிலம் மூலமாக மத்திய அரசிற்கு கிடைக்கும் வருமான வரி போன்ற வருமானத்திலிருந்து மாநிலத்திற்கு கொடுக்கப்படவேண்டிய பங்கு என்பது கிடைக்கும். தற்போது புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் நிதிக்கமிஷன் கொடுக்கவேண்டிய நிதி புதுவைக்கு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

3. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் மத்திய நிதிக் கமிஷனின் நிதி புதுச்சேரிக்கு கிடைக்கும். அப்படி நிதி கிடைக்கும் பட்சத்தில் மாநிலத்தில் அந்த நிதியை நிர்வகிக்க கண்டிப்பாக மாநில அளவிலான நிதிக் கமிஷன் ஆரம்பிக்கவேண்டிவரும். அப்படி மாநில அளவிலான நிதிக் கமிஷன் ஆரம்பிக்கும் பட்சத்தில் மாநிலத்தின் நிதி நிலைமை சீர்படும் என்பது மட்டுமல்ல. அதன் மூலம் தேவையில்லாத வாரியத் தலைவர்கள் நியமனங்கள், தேவையற்ற பணி நியமனங்கள், அதன் மூலம் ஏற்படும் அனாவசிய செலவீனங்கள், ஊழல் முறைகேடுகள்,
வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்துதல் போன்றவை  தவிர்க்கப்படும். தான்தோன்றித்தனமான செலவீனங்கள் ஒழிக்கப்பட்டு நிதி நிலைமை சீர்ப்படும் என்பதை மக்கள் உணரவேண்டும்.

4. ரங்கசாமியும், நாராயணசாமியும் அதிகாரப்போட்டியை கைவிட்டு -  மோதல் போக்கை கைவிட்டு மாநில வளர்ச்சியில் அக்கறை காட்டவேண்டும்.

5. மாநில அந்தஸ்தும், நிதிக் கமிஷனும் தான் ஒளிமயமான புதுவைக்கு இன்றைய தேவையாகும்.