கட்டுரையாளர் : சீதாராம் யெச்சூரி,
தலைமைக்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
நெல்சன் மண்டேலா மறைந்து விட்டார். நான் மாணவப் பருவத்தில் இருந்தபோது
ஒரு பிரபலமான கீதம் இசைக்கப்பட்டது: “சாத்தியமில்லாத கனவை கனவு காணவீழ்த்த
முடியாத எதிரியை வீழ்த்திடதாங்க முடியாத துயரத்தை தாங்கிடதைரியம் கூட
செல்லத் துணியாத இடத்திற்கு ஓடிட திருத்த முடியாத தவறினை திருத்திட... அடையாத
முடியாத நட்சத்திரத்தை அடைந்திட... இதுவே எனது தாகம்அந்த நட்சத்திரத்தை
பின்தொடர்ந்திட... நம்பிக்கையின்மை என்பதே இல்லை எத்தனை தூரம் என்பதும்
பிரச்சனையில்லை...” இத்தகைய லட்சியங்களுக்காக ஒரு மனிதன் வாழ்ந்தார்
என்றால், அதைவிட இன்னும் முக்கியமானது தனது வாழ்நாளிலேயே இந்த மைல்கற்களையெல்லாம் எட்டினார் என்றால் அவர் `மடிபா’ என்று அன்போடு
அழைக்கப்படுகிற நெல்சன் மண்டேலா மட்டுமே.
அவரது அரசியல் வாழ்வும் பணியும் ஏற்கெனவே மிகச்சிறப்பான முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன; எனவே அவை
பற்றி மீண்டும் இங்கே குறிப்பிடப்போவதில்லை. அவர் கடந்து வந்த காலங்களும்,
பங்களிப்புகளும் அவருடன் தோளோடு தோள் நின்ற அகமது கத்ரடா மற்றும் இதர
தோழர்களால் இன்னும் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விபரங்கள்
எதிர்காலத்தில் இன்னும் செறிவூட்டப்படும் என்பது உறுதி. எனது தலைமுறையினர்
வளர்ந்து கொண்டிருந்த காலத்தில், சுதந்திரத்திற்கும் விடுதலைக்குமான
மனிதகுலத்தின் வீழ்த்த முடியாத உணர்ச்சிப்பிழம்பாக மண்டேலா திகழ்ந்தார்.
ஒரு இளம் மாணவராக அவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவை
அணிதிரட்டினார்; அதைத்தொடர்ந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப்படை
பிரிவான உம்கோந்த்தோ வி சிஸ்வே யின் முதல் தளபதியாக பொறுப்பேற்றார்; இந்தப்
படைப்பிரிவே அந்த தேசத்தின் உந்துசக்தியாக திகழ்ந்தது.
தென்னாப்பிரிக்க
மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளை மறுத்த, ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையை
கட்டவிழ்த்துவிட்ட நிறவெறி ஆட்சிக்கு எதிராக உறுதிமிக்க போராளியாக மண்டேலா
திகழ்ந்தார். அவர் கைது செய்யப்பட்டு, பிரபலமான ரிவோனியா வழக்கு என்ற அந்த
குறிப்பிட்ட வழக்கு விசாரணையைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
அந்த விசாரணையின்போது தனது தரப்பு வாதத்தை முன்வைத்து உரையாற்றிய மண்டேலா
முடிவாகச் சொன்னார்: “எனது வாழ்நாளில் ஆப்பிரிக்க மக்களுக்காக இந்த
மாபெரும் போராட்டத்தை அர்ப்பணிக்கிறேன். வெள்ளை இன ஆதிக்கத்திற்கு எதிராக
நான் போராடினேன்; கறுப்பின ஆதிக்கத்திற்கும் எதிராகவும் நான் போராடினேன்.
நம் அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் ஒன்றாக வாழவும், சமமான
வாய்ப்புகளோடு வாழவும் ஒரு ஜனநாயகமான, சுதந்திரமான சமூகம் உருவாக வேண்டும்
என்ற சித்தாந்தத்தை முழுமையாக உள்வாங்கியிருக்கிறேன். அந்த மகத்தான
இலக்கிற்காக தேவைப் பட்டால் என் உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன்“.
(ஜூன் 11, 1964) ரோபென் தீவில் அமைந்துள்ள மிகக் கொடூரமான நிறவெறி அரசின்
சிறையில் நீண்டகாலம் அடைக்கப்பட்டிருந்த மண்டேலாவுக்கு ஆறு தருணங்களில்
நிபந்தனையின் பேரில் விடுதலை செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு
முறையும் அதை அவர் மறுத்தார்; கடைசியாக அளிக்கப்பட்ட வாய்ப்பை மறுத்த போது
கூறினார் : மக்கள் அமைப்புகள் தடை செய்யப்பட்டிருப்பது தொடருமானால் எனக்கு
மட்டும் விடுதலை கொடுத்து என்ன ஆகப்போகிறது? ஏற்கெனவே
குற்றம்செய்துவிட்டதாக என்னை கைது செய்துவிட்டு எப்படிப்பட்ட விடுதலையை
எனக்கு அளிக்கப் போகிறீர்கள்? பிராண்ட்போர்ட் நகரில் எனது ஆருயிர் மனைவி
சிறை வைக்கப்பட்டிருப்பது தொடரும் போது எப்படிப்பட்ட குடும்ப வாழ்விற்காக
எனக்கு விடுதலை அளிக்கப்போகிறீர்கள்? ஒரு நகர்ப்புறப் பகுதியில்
வாழ்வதற்காக கட்டாயம் அனுமதி கேட்க வேண்டும் என்ற நிபந்தனையோடு
எப்படிப்பட்ட சுதந்திரத்தை எனக்கு அளிக்கப்போகிறீர்கள். வேலை செய்வதற்குக்
கூட எனது அடையாள அட்டையில் உங்களின் முத்திரையை பெற வேண்டிய தேவையோடு
எப்படிப்பட்ட விடுதலையை எனக்கு அளிக்கப் போகிறீர்கள்? தென்னாப்பிரிக்க
குடிமகன் என்ற எனது அடிப்படையான அடையாளம் மதிக்கப்படாத போது எப்படிப்பட்ட
விடுதலையை எனக்கு அளிக்கப்போகிறீர்கள்? சுதந்திரமான மனிதர்களே
பேச்சுவார்த்தை நடத்த முடியும்... நானும் எனது மக்களும் சுதந்திரமாக இல்லாத
போது எந்தவொரு உத்தரவாதத்தையும் உங்களுக்கு தந்துவிட
முடியாது”. இப்படிப்பட்ட, எவராலும் அசைக்க முடியாத உள்ள உறுதியை கொண்டவர்
அவர்.
அதன் மூலம் அனைவரையும் ஈர்த்தவர். அவரின் விடுதலை எப்போது
நிகழ்ந்தது? நவீன உலகில் நிறவெறி ஆட்சி அமைப்பு ஒரு மோசமான எதேச்சதிகாரம்,
அராஜகவாதம் என்பதை இந்த உலகமே உணர்ந்தபோது, இன்னும் குறிப்பாக
சொல்வதென்றால் அந்த ஒடுக்குமுறை ஆட்சியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்களே கூட இதை உணர்ந்தபோதுதான் அவரது விடுதலை நிகழ்ந்தது. பனிப்போர்
முடிவுக்கு வந்திருந்த அந்தக் காலக்கட்டத்தில் இனியும் தொடரமுடியாது என்ற
சூழல் முடிவைநோக்கி தள்ளிய நிலையில் - நாசகரமான அந்த நிறவெறி ஆட்சி
முடிவுக்கு வந்தது; தென்னாப்பிரிக்க மக்களுக்கு விடுதலை பிறந்தது. நமது
தலைமுறையினருக்கு இதில் கற்றுக்கொள்ள பாடம் உண்டு - வரலாறு எப்போதுமே
முரண்பட்ட திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. சோசலிச சோவியத்
ஒன்றியத்தின் வீழ்ச்சியால் உலகையே நெருக்கடி சூழ்ந்துகொண்டிருந்த
காலகட்டமும், ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை ராணுவ ரீதியிலும் பொருளாதார
ரீதியிலும் எதிர்த்து நிற்கும் சூழல்கள் முடிவுக்கு வந்த காலகட்டமும்
மண்டேலாவின் விடுதலையோடு கூடவே வந்தது; ஆப்பிரிக்க கண்டத்தின் ஒரு
பெரும்பகுதி மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதும் அதே
தருணத்தில் நிகழ்ந்தது.
பழங்கால சீனத்தில் ஒரு முதுமொழி உண்டு:
“ஒவ்வொரு நெருக்கடியும் ஒரு வாய்ப்பினை கூடவே கொண்டுவரும்“ என்ற அந்த முதுமொழி இங்கு உண்மையானது. நெல்சன் மண்டேலாவை மூன்று முறை சந்திப்பதற்கு எனக்கு
வாய்ப்பு கிடைத்தது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் 48வது மாநாட்டின்போது
முதல்முறையாக அவரைச் சந்தித்தேன். 1960ம் ஆண்டில் அக்கட்சி தடைசெய்யப்பட்ட
பின்னர் முதல்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் 1991ல் ஜூலை மாதம் டர்பன்
மாநகரில் அந்த மாநாடு நடைபெற்றது. அந்தசூழல் எனது வாழ்நாளிலேயே மிக
முக்கியமான அனுபவமாக இருந்தது. 30 ஆண்டுகாலத்திற்கும் மேலாக
தனிமைச்சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்ட தோழர்கள் முதல்முறையாக
ஒருவருக்கொருவர் இந்த மாநாட்டில் சந்தித்துக் கொண்டார்கள். இளமைப்
பருவத்தில் பிரிந்த அவர்கள் ஒருவரையொருவர் முதுமைப் பருவத்தில் சந்தித்த
போது ஒருவரையொருவர் அடையாளம்காண முடியாமல் தவித்தார்கள். டர்பன் மாநகரம்
இன்றைக்கும் நிறவெறிப் பிரிவினரின் அடையாளங்களை தன்னில் வைத்திருக்கிறது;
அதன் புகழ்மிக்க கடற்கரைகளில் “வெள்ளையினத்தவர் அல்லாதவர்கள் மற்றும்
நாய்கள் - இங்கு வரக்கூடாது” என்று எழுதப்பட்ட பலகைகள் அந்தக் கொடுமையை
அம்பலப்படுத்திக் கொண்டிருந்தன. நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தபோது
நாடெங்கும் மிகப்பெரும் உற்சாக வெள்ளம் ஏற்பட்டது; எனினும் மண்டேலா அந்த
மாநாட்டில் பேசுகையில், ஓர் எச்சரிக்கை குறிப்பையும் சுட்டிக்காட்டினார்:
“ஆயுதப்போராட்டத்தை
நாம் நிறுத்தி வைக்கிறோம்; ஆனால் அதே நேரத்தில் ஆயுதப்போராட்டத்தை நாம்
கைவிட்டுவிடவில்லை. அது நாட்டின் உள்ளே இருந்தாலும் சரி; வெளியில்
இருந்தாலும் சரி, உம்கோந்த்தோ வி சிஸ்வே படைக்கு எந்த தருணத்திலும் ஒரு
ஜனநாயக சமூகத்தை படைப்பதற்கான அமைதிப்பாதையை எதிர்ப்புரட்சி சக்திகள்
குறுக்கிடுவதாகத் தெரிந்தாலும் அதற்கு எதிராக செயல்பட தயாராக இருக்க
வேண்டிய பொறுப்பு உள்ளது. நிறவெறி ஆட்சி அமைப்பு மீண்டும் எழுவதற்கான
வாய்ப்பு இருக்கிறது என்பதையும், தற்போதைக்கு அதற்கான சக்திகள் நமது
போராட்டத்தால் பலவீனமடைந்துள்ளன என்பதையும் உணர்வது அவசியம். நமது மக்களின்
போராட்டத்தால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடை நீக்கப் பட்டுள்ளது;
இன்றைக்கு நமது சொந்த நாட்டிலேயே நாம் சந்திப்பதற்கு வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது. அப்பட்டமான கம்யூனிச எதிர்ப்பு சித்தாந்தத்தை அடிப்படையாகக்
கொண்ட ஒரு ஆட்சி, நமது கூட்டாளியான தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி
மீதான தடையையும் விலக்குவதற்கு மக்கள்போராட்டம் உதவியுள்ளது; கம்யூனிஸ்ட்
சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்வதற்கு தடைவிதித்த சட்ட விதிகளும் நீக்கப்பட்டுள்ளன”.
மண்டேலா கைது செய்யப்படுவதற்கு அவர் மீது சுமத்தப்பட்ட
முக்கியக் குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்பதாகும்.
உண்மையில் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட்
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக இருந்தார். பனிப்போர் முடிவடைந்த
காலத்தில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஆட்சியின் கூட்டாளிகள், விடுதலையடைந்த
மண்டேலா மீது மீண்டும் ஒருமுறை அதே குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்;
மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் இதை வைத்து மண் டேலாவை எச்சரிக்கையும்
செய்தன. அச்சமயத்தில்தான், அந்த மாபெரும் மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற
பிரம்மாண்ட பேரணியில் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் தத்துவார்த்த
தாக்குதலுக்கு எதிராக முழங்கினார் மண்டேலா : “உங்கள் கூட்டாளிகளோடு உங்கள்
வேலையைப் பாருங்கள்; எங்கள் கூட்டாளிகளோடு எங்கள் வேலையைப்
பார்க்கிறோம்“. நான் இரண்டாவது முறையாக மண்டேலாவை அதே ஆண்டில் டிசம்பரில்
நடைபெற்ற தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் 8-வது மாநாட்டின்போது
சந்தித்தேன். ஆயுதப்படையான உம் கோந்த்தோ வி சிஸ்வேயின் தலைவராக
மண்டேலாவிற்கு அடுத்து பொறுப்பு வகித்த தோழர் கிறிஸ் ஹானி, தென்னாப்பிரிக்க
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இந்த மாநாட்டில் தேர்வு
செய்யப்பட்டார். சிற்சில நாட்களில் தோழர் ஹானி, நிறவெறி - எதிர்ப்புரட்சி
சக்திகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு பிறகு
ஏற்கெனவே ஆப்பிரிக்க மக்கள், மனித இனம் தாங்க முடியாத அளவுக்கு துயரத்தை
அனுபவித்துவிட்ட பின்னணியில், இப்போதைக்கு அமைதியே மிக முக்கிய இலக்கு என்ற
நிலையில் மண்டேலா அந்தப் பாதையில் பயணித்தார். காலனியாதிக்க பிற்போக்கு
சக்திகளின் வன்முறைகள் தொடர்ந்த நிலையில், ஆயுத மோதலும் தொடர்ந்த சூழலில்,
உண்மை மற்றும் மறுவாழ்வு ஆணையத்தை அமைக்க மண்டேலா முன்மொழிந்தார். அமைதி
மற்றும் மறுவாழ்வுக்கான இந்த முக்கியமான ஏற்பாடு, பலரது பழிவாங்கும் உணர்வை
தடுத்து நிதானிக்க வைத்தது.
அதே நேரத்தில், தென்னாப்பிரிக்க
கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் கூட்டாளிகளையும், தென்னாப்பிரிக்க காங்கிரஸ்
மற்றும் தென்னாப்பிரிக்க தொழிற்சங்கமான `கொஷாட்டு’வின் தோழர்களையும்,
எதிரிகளது ஆயுதத் தாக்குதலுக்கு எதிராக விழிப்போடு இருக்குமாறு
எச்சரித்தார். எனவே, `அகிம்சை’ வடிவம் என்பது மண்டேலாவைப் பொறுத்தவரை ஒரு
நடைமுறை உத்தியாக மட்டுமே இருந்தது. ஆனால் இது பலராலும் காந்திய வழி என்று
தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. டர்பனில் அவரை சந்தித்தபோது முதல்முறையாக
என்னிடம் கூறிய வார்த்தைகள், இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள்,
இந்தியா எங்களுக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அனுப்பி வைத்தது;
இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா மகாத்மாவை அனுப்பிவைத்தது. கடைசியாக நான்
அவரை தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் 10-வது மாநாடு 1998 ஜூலையில்
ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற போது சந்தித்தேன். அப்போது மண்டேலா தானாகவே
முன் வந்து ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்திருந்தார்; தபோ எம்பெகியிடம்
ஜனாதிபதி பதவியை அளித்திருந்தார்; தென்னாப்பிரிக்க மக்கள் அதை துயரத்துடனே
ஏற்றுக் கொண்டார்கள். இப்படி பதவியை விட்டுக்கொடுத்த ஒரேயொரு ஆப்பிரிக்கத்
தலைவர் அநேகமாக மண்டேலா மட்டுமே. தானாகவே முன்வந்து பதவி விலகிக் கொண்ட
மற்றொரு தலைவர், என்னைப் பொறுத்தவரை மேற்குவங்கத்தின் முதல்வராக இருந்த
நமது அருமைத் தலைவர் ஜோதிபாசு மட்டுமே. ஜோதிபாசுவும் மண்டேலாவும் மிக
நெருக்கமான, ஒற்றுமையான உறவினைக் கொண்டிருந்தார்கள்.
மண்டேலா
முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்தபோது கல்கத்தாவுக்கு செல்ல
வேண்டுமென்று அவர் மிகுந்த விருப்பம் தெரிவித்தார். அந்த மாநகரம் அவருக்கு
கண்ணீர் பெருக்கோடு பெரும் வரவேற்பை அளித்தது. அந்த மாபெரும் கூட்டத்தில்
அவர் பேசினார் : இந்த மாநகரின் வீதிகளில் இன்றைக்கு நீங்கள் அளித்துள்ள
வரவேற்பு, எனது சொந்த இல்லத்திற்கு வந்ததைப் போல என்னை உணரவைக்கிறது. சக
புரட்சியாளர்களோடு நான் இங்கே அமர்ந்திருக்கிறேன்... அன்றைய தினம் உங்களது
கதாநாயகர்களாக இருந்தவர்கள் எங்களுக்கும் கதாநாயகர்களாக இருந்தார்கள்; இந்த
உலகின் மாபெரும் மனிதர்களுக்கு மத்தியில் நாங்கள் நேதாஜி சுபாஷ் சந்திர
போஸையும் பார்க்கிறோம்; கறுப்பின மாணவர்களாக இருந்த எங்களுக்கெல்லாம்
உங்களது தலைவர்கள் ஆதர்ச சக்திகளாக திகழ்ந்தார்கள்... கல்கத்தாவிற்கு வந்த
பிறகு இன்னும் அதிக சக்தி பெற்றிருக்கிறேன். மீண்டும் புத்தெழுச்சி பெற்ற
மனிதனாக நான் உணர்கிறேன்“. (அக்டோபர் 1990) தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட்
கட்சியின் 10-வது மாநாட்டில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அரசாங்கத்தால்
பின்பற்றப்படும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து சீரிய விவாதம் நடைபெற்றது;
அந்த விவாதங்களில் மண்டேலா முழுமையாக பங்கேற்றார்;
கம்யூனிஸ்ட்டுகளால்
அந்த மாநாட்டில் செய்யப்பட்ட விமர்சனங்களையும், வழிகாட்டுதல்களையும் அவர்
ஏற்றுக்கொண்டார். தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் புதிய
தாராளமய உலக கட்டமைப்போடு மேலும் மேலும் இணையத் துவங்கியது; மக்களின்
விடுதலைக்கான வாக்குறுதிகள் தொடர்ந்து தொலைதூரத்திலேயே இருக்கும் நிலை
நீடித்தது. தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, தபோ எம்பெகி அரசை
இதுகுறித்து எச்சரித்தது. ஆளும் மூன்று கட்சி கூட்டணியிலிருந்து வெளியேற
வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்தது. பின்னர் அதிலிருந்து
வெளியேறியது. அரசாங்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பணியை செய்தது.
தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் மகத்தான பாரம்பரியத்தில், இன்னும்
தீர்வுகாண முடியாத பிரச்சனைகளாக இந்த உண்மைகள் பிரதிபலிக்கின்றன. கறுப்பின
மக்கள் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெறுவதற்கு அடிப்படையானது உடனடி
நிலச்சீர்திருத்தம் என்றும், அதை தன் வாழ்நாளில் கண்டுவிட வேண்டும் என்றும்
மண்டேலா மிகவும் விரும்பினார். ஆனால் கடைசி வரை அவரால் அதைப் பார்க்க
முடியவில்லை. இந்த இலக்கு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் சுதந்திர
சாசனத்தில் இன்னும் ஒரு முக்கிய அம்சமாக நீடிக்கிறது; தேசிய ஜனநாயக
புரட்சியின் நிகழ்ச்சிநிரலாகவும் நீடிக்கிறது. தென்னாப்பிரிக்க பொருளாதார
சக்தியின் அடிப்படை அம்சங்கள் அனைத்தும் இன்னும் அவர்களது முன்னாள் காலனிய
ஆதிக்க சக்திகளின் கைகளிலேயே இருக்கிறது; ஒரு சிறிய பிரிவு கறுப்பின
முதலாளிகள் தற்போது முன்னாள் காலனிய சக்திகளோடு கூட்டுச்சேர்ந்து
செயல்பட்டு வருகிறார்கள்.
இவையெல்லாம், மண்டேலா தனது வாழ்நாளில்
தனது உண்மையான நிகழ்ச்சி நிரலை காண முடியாமல் செய்துவிட்டது. அந்நாட்டின்
தற்போதைய தலைமுறையினர் எதிர்காலத்தில் செய்ய வேண்டியிருப்பது ஏராளம்.
தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் 10-வது மாநாடு, சோசலிசமே எதிர்காலம்
என்று முழங்கியது; அதற்கான போராட்டத்தை அது தொடர்கிறது. எப்படியிருப்பினும்
மேலும் மேலும் உச்சத்தை எட்ட வேண்டும் என்ற மனிதகுலத்தின் தீராத
தாகத்திற்கு, மனிதகுல விடுதலை என்ற அந்த உன்னதமான லட்சியத்தை தொடர்ந்து
முன்னெடுத்துச் சென்ற நெல்சன் மண்டேலா வழிகாட்டியாக திகழ்கிறார்; அந்த
பாடல் மீண்டும் எதிரொலிக்கிறது... “கடைசித் துளி துணிச்சல் இருக்கும் வரை
அடைய முடியாத அந்த நட்சத்திரத்தை அடைவதற்கு போராடுவேன்“.-
தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்
நன்றி :