வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

சுகாதார உரிமை பறிப்புக்கு எதிராக மக்கள் போர்க்கொடி...!

      அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எல்லாம் தரம் தாழ்ந்தவை என்றும், நிர்வாகச் சீர்கேடு நிறைந்தவை என்றும், அதனால் அவற்றையெல்லாம் தனியாரிடம் விட்டுவிட வேண்டும் என்றும் இடையறாத பிரச்சாரம் நடைபெற்று வருகின்ற காலம் இது. இந்நிலையில், இந்தக் கருத்தைப் பொய்யென நிரூபித்து வரும் நிறுவனம், புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசுத்துறையின் கீழ் இயங்கிக்கொண்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உயிர்காக்கும் தரமான மருத்துவமனையாக அது விளங்கி வருகிறது. 1964-ம் ஆண்டிலிருந்து அரை நூற்றாண்டாக ஜிப்மர் மருத்துவமனை மக்களுக்கு செய்து வந்துள்ள சேவை மகத்தானது. அத்துடன், மருத்துவப்படிப்பு வணிகரீதியில் விலைக்கு விற்கப்பட்டு, கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் மட்டுமே மருத்துவர்களாக முடியும் என்ற இன்றைய சூழ்நிலையில், ஏராளமான ஏழை மாணவர்களை சிறந்த மருத்துவர்கள் ஆக்கிய பெருமை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியைச் சாரும். ஆனால், ஆளும் கூடாரத்தில் இருந்து கொண்டு, ஆக்கப்பூர்வமானதை எல்லாம் அழித்து ஒழிப்பதற்காக அயராது செயல்பட்டு வரும் நவீன தாராளமயவாதிகள் ஜிப்மரை விட்டுவைப்பார்களா? கடந்த பல ஆண்டுகளாக இந்த மருத்துவமனையை தனியார் கொள்ளைக்கு விட்டுவிட அடுத்தடுத்து முயற்சிகளை செய்துகொண்டே வருகின்றனர்.
            சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிப்மரை தன்னாட்சி நிறுவனமாக மாற்றுவது என்று சில முயற்சிகள் நடந்தது. ஜிப்மர் ஊழியர்கள் உள்ளிட்ட மக்கள் போராட்டம் நடைபெற்றது. ஜிப்மர் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக இலவச மருத்துவம், இலவச மருத்துவக் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை, ஊழியர் நலன் ஆகியவற்றில் தற்போது இருந்துவருகிற உரிமைகள் தொடரும் என்று போராட்டக்குழுவிற்கு ஆட்சியாளர்கள் உறுதி அளித்தனர். இந்தப் பின்னணியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த “ஜவஹர்லால்  மருத்துவ பட்டமேற்படிப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனச் சட்டம்” இயற்றப்பட்டு 14.08.2008 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. ஆக, ஜிப்மர் ஊழியர்கள் மற்றும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் காரணமாக, தனியார்மயம் என்ற, தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போனது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு ஜிப்மரில் இலவச மருத்துவ சேவை தொடர்வது பிடிக்கவில்லை. ஏனெனில், இலவச மருத்துவ சேவை என்பது நவீன தாராளமயக் கொள்கைக்கு நேர் எதிரான நடைமுறை. அதனால், ஜிப்மர் நிர்வாகம் 14.07.2012 தேதியிட்ட சுற்றறிக்கையில் 16.07.2012 முதல் அனைத்துவித நோய் கண்டறிதல், அறுவை சிகிச்சை மற்றும் உணவு என அனைத்திற்கும் கட்டணத்தை அறிவித்தது. மாத வருமானம் ரூ.2,499-க்கு மேல் உள்ள அனைவருக்கும் மருத்துவ சேவைக்கான கட்டணம் வசூலிக்க உத்தர விடப்பட்டது. மாத வருமானம் ரூ.2500-லிருந்து, அதற்கு மேல் பெறுகின்ற அனைவருக்கும் கட்டணம் என்பது ஒரு கண்துடைப்பு. உண்மையில் இலவச மருத்துவம் என்ற மக்களின் சுகாதார உரிமை பறிப்பு தான் இது. இதை அறிவித்தவர்கள் திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவின் சீடர்கள் போல் தெரிகிறது. அவர்தான் ரூ.28க்கு மேல் நாள் வருமானம் பெறுபவர்கள் வசதி படைத்தவர்கள் என்று சொல்லி, அவர்களுக்குக் கிடைக்கும் நலத்திட்டப் பயன்கள் கிடைக்காமல் செய்திட சதித்திட்டம் போட்டார். இதே போன்றதுதான் ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ள வருமான வரம்பு. இந்த மருத்துவ சேவை கட்டணத்திற்கு அவர்கள் இட்ட பெயர் ‘பயனாளிக் கட்டணம்’( USER FEE ). இந்த சொற்றொடருக்கு பூர்வீகம் எது தெரியுமா? உலக வங்கியும் சர்வதேச நிதி நிறுவனமும்தான்.
        இருபது ஆண்டுகளுக்கு முன்பு பயனாளிக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை கட்டாய நிபந்தனையாக விதித்து மூன்றாவது உலக நாடுகளுக்கு கடன் கொடுத்தார்கள். அதாவது சுகாதாரம் முழுமையாக தனியார் கார்ப்பரேட்களுக்கு விட வேண்டும் என்பதுதான் இதற்கு பின்னணியாக இருக்கும் அடிப்படை நோக்கம். இந்த நிபந்தனையை ஏற்று கடன் வலையில் அன்று சிக்கிய கொலம்பியா, மெக்ஸிகோ போன்ற நாடுகள் தங்கள் நாட்டு பொது சுகாதார முறையை சீரழித்து பெரும்பான்மை மக்களை மரணப்படுக்கையில் தவிக்கும் நிலைக்கு ஆளாக்கின. இந்த கொலைகாரத் திட்டம்தான் பயனாளிக் கட்டணம் வசூலிக்கும் திட்டம்.வழக்கம்போல் இதற்கு சில ‘நியாயங்கள்’ சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு சிகிச்சைக்கும் செலவாகிற தொகையில் வெறும் 10 சதவீதம் தான் பயனாளி கட்டணமாக வசூலிக்கப் போகிறோம் என்கின்றனர். அதாவது 90 சத வீதம் அரசாங்கம் செலவழிக்கிறது, நீங்கள் ஏன் மீதியை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பது தான் முன்வைக்கப்படும் வாதம். 
90 சதவீதம் ஏற்கும் அரசு ஏன் இந்த பத்து சதவீதத்தை மக்களிடம் வசூலிக்க முயற்சிக்கிறது? படிப்படியாக மக்களே தங்கள் செலவை ஏற்றுக்கொள்வது என்பதை ஆரம்பித்துவிட்டால் பிறகு அதை இலாபம் கொழிக்கும் நிறுவனமாக மாற்றி தனியாரின் வேட்டைக்கு விட்டு விடலாம். அரசு ஒதுங்கி விடலாம்.’ சுகாதாரத்திற்கு அரசு ஒதுக்கும் நிதியை குறைக்க வேண்டும்; அரசு சுகாதாரத்தை இலவசமாக வழங்க வழி வகுக்கும் பொதுச் சுகாதார முறையை முற்றாக ஒழிக்க வேண்டும்’ என்ற நவீன தாராளமய சித்தாந்தத்தின் வெள்ளோட்டம் தான், ஜிப்மர் அறிவித்துள்ள கட்டண அறிவிப்பு. தற்போது உருவாக்கப்பட்டு வரும் 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சுகாதாரம் குறித்த தலைப்பில் சொல்லப்பட்டுள்ள ஆலோசனைகள் அனைத்தும் தனியார் மெகா கார்ப்பரேஷன்களுக்கு மருத்துவத்துறையை மொத்தக் குத்தகைக்கு விடும் திட்டங்கள் ஏராளமாக சொல்லப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் தான் ஜிப்மரின் அறிவிப்பு வந்துள்ளது. ஜிப்மரின் கட்டண உயர்வு அறிவிப்பு வந்தவுடன் புதுச்சேரியில் தொடர் போராட்டங்கள் நடந்ததால் நிர்வாகம் சிறிது பின்வாங்கி பல பிரிவுகளுக்கு கட்டண விதிப்பை வாபஸ் பெற்றது. ஆனாலும், புற்றுநோய் உள்ளிட்ட இரண்டு முக்கிய மருத்துவப் பிரிவுகளின் கீழ் 34 வகை மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு கட்டண விதிப்பு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சி.டி. ஸ்கேன் போன்றவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கும் கட்டணத்தை விட அதிகம். இந்த கட்டண விதிப்பு முற்றாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை. தினந்தோறும் தொலைக்காட்சியில் தரிசனம் தந்து ஊர், உலகப் பிரச்சனைகள் அனைத்திலும் தலையிடுகிற புதுச்சேரியை சேர்ந்த மத்தியஅமைச்சர் நாராயணசாமி இந்த பிரச்சனையில் அசையாமல் இருக்கின்றார். ஏழை மக்களுக்கு எதிராக, கட்டண உயர்வுக்கு ஆதரவாக நிற்கும் காங்கிரஸ் கட்சியின் அந்த ‘சாமி’ அப்படியிருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், காங்கிரசை எதிர்த்து ஆட்சியைப் பிடித்த முதல்வர் ரங்கசாமி இந்தப் பிரச்சனையில் உறுதியாக தலையிடவில்லை. கட்டண உயர்வை வாபஸ் பெற முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அவர் கடந்த தேர்தலின் போது பெற்ற ஆதரவை இழப்பது நிச்சயம். தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை. அவர்கள் இது ஏதோ புதுச்சேரி மக்கள் பிரச்சனை என்று நினைத்தால் அது தவறு. தினந்தோறும் மருத்துவ உதவி நாடி வருகின்ற சுமார் 5000 நோயாளிகளில் 4000க்கும் மேற்பட்டவர்கள் தமிழக மாவட்டங்களிலிருந்து செல்கின்றனர். குறிப்பாக, புதுச்சேரிக்கு பக்கத்தில் இருக்கும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலிருந்து வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான மக்கள் வெறும் பேருந்துச் செலவுக்கு மட்டும் சிறிது பணம் ஏற்பாடு செய்துகொண்டு இலவச மருத்துவ சேவையை பெற்று வீடு திரும்புகின்றனர்.
         தனியார் மருத்துவமனைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய இயலாத பலர், இங்கு வந்து இதய அறுவை சிகிச்சை பெற்றதால் இன்றளவும் உயிர் வாழ முடிந்துள்ளது. ஜிப்மர் இல்லையென்றால் அவர்களது வாழ்வு கேள்விக்குறியாகி இருக்கும். சேலம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். பல தமிழக மாவட்டங்களில் ஏழைக் குடும்பங்கள் ஜிப்மரை நம்பியிருக்கின்றனர்.அவர்களின் வாக்குகளை வாங்கி சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் சென்றுள்ளவர்கள் எல்லாம் இந்தப் பிரச்சனை பற்றி அக்கறையற்று இருக்கின்றனர். எல்லாப் பிரச்சனைகளுக்கும் பிரதமருக்கு கடிதம் எழுதும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜிப்மரை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களைச் சார்ந்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு வேட்டு வைத்த மத்திய அரசின் நடவடிக்கையை ஏன் இதுவரை கண்டு கொள்ளவில்லை?’ இப்பிரச்சனை எழுந்தவுடன் தமிழகத்திலிருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர்  ஜி.ராமகிருஷ்ணன் புதுச்சேரி வந்து கருத்தரங்கில் கலந்து கொண்டு கண்டனக்குரல் எழுப்பினார். மற்ற தலைவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்?’ என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நவீன தாராளமயத்திற்கு எல்லொரும் தலைவணங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இடதுசாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதில்லை. முன்பு ஜிப்மர் தன்னாட்சிப் பிரச்சனை வந்த போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி மக்களின் உரிமையை பாதுகாத்தது. இப்போது இந்தப் பிரச்சனை வந்த போதும், ஒருபுறம் ஜிப்மர் ஊழியர்கள் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட ஜிப்மர் போராட்டக்குழு சார்பாகவும் தனியாகவும் தொடர் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வருகின்றது. கடந்த ஆகஸ்ட் 21 அன்று மாபெரும் கண்டனக் கருத்தரங்கை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது. பல நூற்றுக்கணக்கான மக்கள் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் கட்டண உயர்வை முழுமை யாக வாபஸ் பெற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மூன்று மாவட்ட உழைக்கும் மக்களும் ஒருங்கிணைந்து குரல் எழுப்பும் வகையில் செப்டம்பர் 1- அன்று கருப்புக்கொடி உயர்த்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறை கூவல் விடுக்கப்பட்டது. இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள ஒன்றியத் தலைநகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் வெகுமக்கள் ஆர்ப்பாட்டமாக இது நடைபெறவுள்ளது. இதில் உயர்த்தப்படுவது கருப்புக்கொடி மட்டுமல்ல; மருத்துவத்தை சந்தைச் சரக்காக்கி, மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையை இருள்மயமாகச் செய்யும் ஆளும் வர்க்கங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஏந்தும் போர்க்கொடி.

ஆக்கம் : என்.குணசேகரன்
நன்றி : தீக்கதிர் 

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

''நீல் ஆம்ஸ்ட்ராங்'' - நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் - சோவியத் யூனியனுக்கு போட்டியாக ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்...!

        நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங் நேற்று காலமானார். இந்தியாவில் உள்ள இளைஞர்களெல்லாம் பேஸ் புக்கிலும், டிவீட்டரிலும் ஒப்பாரி வைத்திருக்கிறார்கள். இன்று பேஸ் புக்கையும் டிவீட்டரையும் திறந்தால் நம் நாட்டு இளைஞர்களின் ஒப்பாரியை தான் பார்க்க முடிந்தது. இவர்களின் அமெரிக்க அக்கறை இருக்கிறதே... அது அளவு கடந்து போகின்றது. இவர்கள் என்ன செய்வார்கள் பாவம். படிக்கும் போதும், வேலைக்குப் போகும் போதும் ''நிலாவில் முதன்முதலில் காலடி வைத்தவர் யார்..? என்ற கேள்விக்கு பதில் சொல்லியே பழக்கப்பட்டவர்கள் தானே.. சரி அது போகட்டும். நீல்  ஆம்ஸ்ட்ராங் நிலாவில் காலடி வைத்த கதையை இங்கே சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது. 
         உலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன் தான். 1930 - ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். அதேப்போல், நிலாவிற்கு விண்களம் அனுப்பியவர்களும் இவர்களே. இருபதுக்கும் மேற்பட்ட  ஆளில்லா விண்களங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். இப்படியாக நிலாவை நோக்கிய இந்த விண்களப் பயணமும், நிலாவைப் பற்றிய ஆராய்ச்சியும் வெற்றிகரமானதாக அமைந்தவுடன், 1957 - ஆம் ஆண்டு விண்களத்தில்  ''லைகா'' என்ற நாயை  வைத்து நிலாவிற்கு அனுப்பி வைத்தனர். ''லைகா'' நாயும் உயிர் சேதாரமின்றி நிலவிற்கு சென்று திரும்பியது. அந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததை  பார்த்து உலகமே வியந்தது. 
           இத்தனைப் பயணங்களும்  வெற்றிகரமாய் அமைந்திடவே, சோவியத் யூனியன் அடுத்து சோவியத் யூனியனைச் சேர்ந்த மூன்று பேர்களை  நிலவிற்கு அனுப்பி சோதனை செய்ய முயற்சித்தது. அந்த மூன்று பேர்களையும் ஏற்றிக்கொண்டு நிலாவை நோக்கி புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே வெடித்து சிதறியது. அதனால் உலகமே அதிர்ச்சியடைந்தது. மூன்று உயிர்களை அனாவசியமாக பலியிட்டுவிட்டோமே என்று சோவியத் யூனியனும் உறைந்து போனது மட்டுமல்லாமல், இது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறி மன்னிப்பும் கேட்டனர். அது மட்டுமல்லாமல், நிலாவிற்கு ஆட்களை அனுப்பி செய்யும் சோதனையை இத்துடன் கைவிடுவதாகவும் அறிவித்துவிட்டனர். 
             அந்த காலங்களில், எதிலும் சோவியத் யூனியனுடன் போட்டிப்போடும் அமெரிக்கா நிலாவைப் பற்றிய சோதனையிலும்  போட்டிப்போட்டது. நிலாவிற்கு ஆட்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் யூனியன் அறிவித்தவுடன், ''அவர்களால் செய்யமுடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்து காட்டமுடியும்'' என்று அமெரிக்கா சவால் விட்டது. 
         அதன் பிறகு தான், அமெரிக்கா உலகத்திலேயே தான் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த நாடு என்று காட்டுவதற்காக, கடந்த   1969 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் ''அப்போலோ - 11'' என்ற விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும் நிலாவிற்கு அனுப்பிவைத்தது. ஜூலை 20 - ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில் வந்தது. பிறகு ''நிலாவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்...?'' என்ற கேள்வியே இல்லாத  பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகிவிட்டது. 
               அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா  தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல் ஆராய்ச்சியில் எங்களை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ''நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த'' திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.

          அவர்கள் சொன்னது என்னவென்றால், நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலக மக்களை எப்படியெல்லாம் அமெரிக்கா  மடையர்களாக ஆக்கியிருக்கிறது என்று என்னும் போது  நமக்கெல்லாம் உண்மையிலேயே கோபம் வருகிறது. 
இவர் தான் இயக்குனர் 
              ''ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்'' என்ற உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய ''science  fiction'' பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் - இன் மனைவியும் வெளியிட்டிருக்கிறார்.
            அப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை  விளங்கும்.
          1) முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி  பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய, தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.
          2 ) நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி  அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி  பறப்பதற்கு சாத்தியமே இல்லை. 
         3 ) அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே. அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது  புழுதி பறக்கும்.  இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும். 
            4 ) சுற்றிலும் focus  லைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும். 
           5 ) நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின் உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும் போது மூன்றுவதாக இன்னொருவர் யார்...? 
           இப்படியாக அந்த படபிடிப்பில் கோட்டைவிட்டிருப்பதால் அமெரிக்கா நிலாவிற்கு செல்லவில்லை என்றும்,  நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமே அது என்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
             இவ்வளவு அறிவியல் வளர்ச்சியும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் உள்ள இந்த காலத்திலேயே அமெரிக்கா, இந்தியா, சீனா   உள்ளிட்ட பல நாடுகள் இன்றைக்கு  நிலாவைப் பற்றிய எந்தவிதமான முழுமையான முடிவுக்கும் வரமுடியாமலும், நிலாவிற்கு ஆட்களை அனுப்ப யோசித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அன்றைக்கு - அதுவும் 60 - களில்  இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று அடிக்கடி எனக்குள்ளே கேட்டுக்கொள்வேன்.
            எது எப்படியோ நிலாவின் ( திரைப்படத்தின் ) நாயகன் மரணம் அடைந்திருக்கிறார். அவருக்கு நமது அஞ்சலி.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

கரியை காசாக்கிய காங்கிரஸ் கட்சியும், காசைக் கரியாக்கும் பாரதீய ஜனதா கட்சியும்...!

        கடந்த மூன்று நாட்களாகவே இந்திய பாராளுமன்றத்தில் அனல் பறக்கிறது. பாராளுமன்றத்தின் மக்களவை  மற்றும் மாநிலங்களவை ஆகிய   இரு அவைகளும் நடத்த முடியாமல்  பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளினால் முடக்கப்பட்டிருக்கின்றன. சென்ற வாரம் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் கிளப்பிவிட்ட புயல் ஓயவே இல்லை. திடிரென்று வந்த ''தானே'' புயல் மாதிரி, தலைமை கணக்கு தணிக்கையாளர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையே ஆட்டம் காண வைத்திருக்கிறது என்பது உண்மை தான்.  
              இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல்.... 2 ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழலையே   மிஞ்சி விட்ட மெகா  ஊழல்... அரசின் கையிலிருந்த  நிலக்கரி சுரங்கங்களை தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு   திறந்துவிடப்பட்டதில் அரசுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய  வருமான இழப்பு என்பது 1.86 இலட்சம் கோடி என்ற தகவலை தலைமை கணக்கு தணிக்கையாளர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துயிருக்கிறார். இது ''திருவிளையாடல்'' எப்போது நடந்தது என்றால்...  நிலக்கரி சுரங்கம்  பிரதமரின் கட்டுப்பாட்டில் இருந்த காலக்கட்டத்தில்  தான் என்பது குறிப்பிடத்தக்கது.

             பாராளுமன்றத்தை முடக்குவதற்கு வாய்ப்புகளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த அறிக்கை என்பது மிகப்பெரிய அல்வா துண்டு போல கிடைத்துவிட விட்டேனா பார் என்று குழப்பத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கி கடந்த மூன்று நாட்களாக பிரதமர் பதவி  விலகவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்கி வருகின்றனர். ''விடாக்கண்டன்- கொடாக்கண்டனான'' நம்ம பிரதமர் மன்மோகன் சிங் வழக்கம் போல் இதுவரை வாயையே திறக்கவில்லை. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட ''தலை'' ஆடவில்லை... ஆனால்  ''வால் '' மட்டும் துடித்து ஆடியது. ஆம்... பிரதமரின் வாலாக ஒட்டிக்கொண்டிருக்கக்கூடிய மத்திய அமைச்சர் நாராயணசாமி தலைமை கணக்கு தணிக்கையாளரை  மிரட்டுவதுபோல் பேசினார். தலைமை கணக்கு தணிக்கையாளர் அரசை கலந்தாலோசிக்காமல் அறிக்கையை நேரடியாக தாக்கல் செய்தது என்பது தவறானது என்று கர்ஜித்தார். தலைமை கணக்கு தணிக்கையாளர் என்பவர் இந்திய அரசியல்சாசன சட்டப்படி பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவர் என்பதையே இந்த  அமைச்சர் மறந்துவிட்டு பேசினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடிய திமுகஉள்லிட்ட கட்சிகளும் வாயை திறக்கவில்லை.
             ஆனால் ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளெல்லாம் பேசவே முடியாமல் ஆடிப்போயிருக்கின்றன. இன்னொரு பக்கம் இந்த ஊழலை காரணம் காட்டி வரும் 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி விட்டு  தாங்கள்    எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியினர் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
         கர்நாடகா மாநிலத்தில் இதே போல் நிலக்கரி ஊழலில் சிக்கி நாறிக்கொண்டிருக்கிற பாரதீய ஜனதா கட்சி தங்களை உத்தமர்களைப் போல் காட்டிக்கொள்ள பாராளுமன்றத்தைப் பயன்படுத்துகின்றனர். தாங்கள் தான் ஊழலை ஒழிக்க வந்த பரமாத்மா போல் ஊழலுக்கு காரணமான மன்மோகன் சிங் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என்று கூறி  இரு அவைகளையும் நடத்தவிடாமல் கடந்த மூன்று நாட்களாக பாராளுமன்றத்தையே முடக்கிவருகின்றனர். இது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான செயல் ஆகும்.பாராளுமன்ற ஜனநாயகத்தின் குரல்வளையையே நெரிக்கும் செயலாகும்.
            அது மட்டுமல்லாமல், குற்றம்  சாட்டப்பட்ட பிரதமர் தன்னுடைய கருத்துக்களை பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பதற்கும், இந்த ஊழல் சம்பந்தமாக மற்ற எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்தில்  தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்வதற்குமான  வாய்ப்பைகளை  தடுக்கின்ற  செயலாகும். பறிக்கின்ற செயலாகும். . இப்படி மற்றவர்களை பேசவிடாமல், பாராளுமன்றத்தில் அடாவடித்தனமாக தகராறு செய்வதன்  மூலம், தாங்கள் மட்டுமே ஊழலுக்கு எதிராக  குரல் கொடுப்பவர்கள் போலவும், பாரதீய ஜனதா கட்சி மட்டுமே ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று என்பது போலவும்  ஆன கருத்துக்களை மக்களிடம் உருவாக்கவே பாரதீய ஜனதா கட்சி  இந்த பாராளுமன்ற சீர்குலைவு வேலைகளை செய்து நாடகம் ஆடி வருகின்றனர்.  
                உண்மையிலேயே பாரதீய ஜனதா கட்சியினர் ஊழலுக்கு எதிராக போராடுகின்றார்கள் என்றால், நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்...? இந்த ஊழல் சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அரசை வற்புறுத்தியிருக்க வேண்டும். இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட பிரதமரையும், கோடிக்கணக்கான அரசின் பணத்தை சுருட்டிய பெருமுதலாளிகளையும் விசாரணைக்குள்  உட்படுத்த வேண்டும் என்று போராடியிருக்க வேண்டும்.
             அதேப்போல், இந்திய பன்னாட்டு பெருமுதலாளிகள் கோடிகோடியாய் கொள்ளையடித்த மக்கள் பணத்தையும் அதனால் சேர்த்த சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து  பாரதீய ஜனதா கட்சியினர் வலுவாக நாடாளுமன்றத்தில் போராடியிருக்கலாமே...? ஏன்  செய்யவில்லை...?
          ஏனென்றால், பாரதீய ஜனதா கட்சியினர் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக செயல் படுவார்களே தவிர எதிராக  செயல்பட மாட்டார்கள். இவர்களின் தேர்தல் செலவை கவனிப்பவர்கள் அவர்கள் தானே...? பாரதீய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியினை போலவே மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாதர்ககள். பெருமுதலாளிகளுக்கு ஆதரவானவர்கள்.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கட்டணம் வசூலிப்பு நியாயமற்றது...!

          ''ஜிப்மர்'' இந்தியாவின் நுழைவாயிலிலேயே இருக்கின்ற மருத்துவமனை. 1964 - ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில்  வெளி சிகிச்சை, அறுவை சிகிச்சை, உள் சிகிச்சை, மருத்துவ பரிசோதனை மற்றும்  மருந்துகள்  அத்தனைத்தும்  இலவசம். புதுச்சேரியில் வாழும் மக்கள்  மட்டுமல்ல, சுற்றியிருக்கின்ற கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்தும்  அன்றாடம் ஆயிரக்கணக்கில் மக்கள்   இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துகொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா , கேரளா   மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் மக்கள் சிகிச்சைக்காக இங்கே தான் வருகிறார்கள். தினந்தோறும் இங்கு வரும் ஆறாயிரம் ஏழை எளிய  மற்றும் உழைப்பாளி மக்களுக்கு நம்பிக்கையான - தரமான  சிகிச்சையளிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு இங்கு வருகிற நோயாளிகளுக்கு ''நாங்க இருக்கோம்'' என்று  நம்பிக்கையையும் சிறந்த சிகிச்சையையும் அளிக்கின்றனர்.
            அப்படிப்பட்ட மருத்துவமனையை ஏழை - எளிய மக்களிடமிருந்து பறிப்பதற்கென்றே அண்மையில் ஆகஸ்ட் 16 - ஆம் தேதியிலிருந்து நோயாளிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்றனர். திடீரென்று கட்டணம் வசூலிப்பது என்பது நியாயமற்றது. மிகவும் கண்டிக்கத்தக்கது.
              இவ்வளவு நடக்குது... புதுச்சேரியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாராயணசாமி மற்றும்  மாநிலங்களவை உறுப்பினர் கண்ணன் இருவருமே வாயில கொழுக்கட்டை வெச்சிகிட்டு இருக்காங்க. மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூட இதை எதிர்த்து வாயை திறக்கவில்லை. இந்த கட்டணம் வசூலிக்கும் முறையை பற்றி  இந்த மூவருமே  கண்டுகொள்ளவே இல்லை என்பதை மக்கள் தான் கவனிக்க வேண்டும்.
             இதைக் கண்டித்து வழக்கம் போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டண முறையை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் ஒன்று   ஏற்பாடு  செய்யப்பட்டது. அந்த கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவரது புதுவை வருகைப் பின்னர் போராட்டம் வலுப்பெறுகிறது.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

''வேற்றுமையில் ஒற்றுமை'' - பள்ளிப்பாடத்தில் படிப்பதற்கு மட்டும் தானா...?

                  ''இந்தியாவில் காஷ்மீரை அடுத்து இன்னொரு அழகிய மலைப்பிரதேசம் அசாம்'' என்று சுவாமி விவேகானந்தர் அசாமின்  அழகையும் அமைதியையும் பற்றி அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார். ஆனால் அப்படிப்பட்ட அசாம் தான் இன்று ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் எரிமலையாய்  எரிந்துகொண்டிருக்கிறது.
             இந்த வடகிழக்கு மாநிலத்தில் சென்ற மாதம் தொடங்கிய கலவரத்தில், பாதிக்கபட்டவர்கள்  பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளைத்  தவிர, மத்தியிலும்  மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசுகளோ,  தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் போன்ற  ஊடகங்களோ, மற்ற அரசியல் கட்சிகளோ  இந்தப் பிரச்சனையில் தலையிடாமலும், அக்கறை காட்டாமலும்,   அவ்வளவாக கண்டு கொள்ளாமலும்  இருந்து வருகின்றன.    அசாமில் எரிந்துகொண்டிருக்கும் இந்த பிரச்சனை என்பது  இன பிரச்சனையா...? அல்லது மொழி பிரச்சனையா...? அல்லது மத பிரச்சனையா...? என்பது குறித்து அசாம் மக்களே  இன்னும் தெளிவு பெற்றதாக தெரியவில்லை.  நாட்டின் மற்றப் பகுதி மக்களும்  இது நமக்கு தேவையில்லாத பிரச்சனை என்பது போல் இருந்து வருகிறார்கள். 
             ஆனால் பாரதீய ஜனதா கட்சியோ குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் துடிக்கிறது. தற்போது  கூட்டணி குழப்பங்கள் மற்றும்  உள்கட்சி குழப்பங்கள் என பல்வேறு குழப்பங்களில்  திணறி கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கு அசாம் பிரச்சனை   நல்லதொரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.   இந்த சம்பவத்தை தன்னுடைய  எதிர்கால அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள பாரதீய ஜனதா கட்சியானது  ''பழங்குடி இன குழுக்கள்'' என்ற போர்வையில் செயல்பட்டு வரும் ''போடோ பிரிவினைவாத குழுக்கள்''  மீது  ஏறி சவாரி செய்து வருகிறது. 
             பாரதீய ஜனதா கட்சியோ எரிந்து கொண்டிருக்கும் இந்த  பிரச்சனைக்கு  தீர்வு காண உதவி செய்வதற்கு பதிலாக, பிரச்சனையை மேலும் ஊதி பெரிதாக்கி அதில் குளிர்காயவே நினைக்கிறது. இந்திய தேசத்தில் இருந்து முஸ்லிம்களை வேறோடு அழித்துவிட வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர்களான   அத்வானி வகையறாக்கள்  “வங்கதேசத்தில் இருந்து அசாம்க்கு    சட்டவிரோதமாக வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம்கள்  தான் இந்த பிரச்னைக்கு காரணம்” என்று தொடர்ந்து திருவாய் மலர்கிறார்கள்.
                 ஆனால் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, ''ஒரே மாநிலத்தைச் சேர்ந்த போடோ பழங்குடி இன மக்களும், ஏழை இஸ்லாமிய விவசாய மக்களும் இப்படி மோதிக்கொள்வது என்பது துரதிருஷ்டவசமானது. மத்திய - மாநில அரசுகள் உரிய நேரத்தில் தலையிடாததால், 3 இலட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து முகாம்களில் தங்கியுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு, சென்னை, புனே,  போன்ற தொழில் நகரங்களில் வாழ்வாதாரத்திற்காக தங்கியுள்ள வடகிழக்கு மாநில மக்கள் தாக்குதல் அபாயத்தால், தங்கள் வேலை மற்றும் கல்வியை விட்டுவிட்டு இரயில்களில் தங்களின் சொந்த ஊருக்கு கூட்டம் கூட்டமாய் செல்வது என்பது வேதனைக்குரியது. வகுப்புவாத, பிரிவினைவாத சக்திகளின் இவ்வகை அச்சுறுத்தல்களில் இருந்து இம்மக்களை பாதுகாக்கவேண்டும்'' என்றும், ''பாதிக்கப்பட்ட இடங்களில் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பேணிக்காக்க வேண்டும்'' என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய - மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. 
             சில ஆண்டுகளுக்கு  முன்னர் இதே அசாமில் தான்  பீகார் மாநிலத்தை சார்ந்தவர்கள் தாக்கப்பட்டனர்  என்பதையும் யாரும் மறந்திருக்க முடியாது. இங்கே வகுப்புவாத சக்திகளும், பிரிவினைவாத சக்திகளும் மத்திய - மாநில ஆட்சியாளர்களாலும், பாரதீய ஜனதா கட்சி போன்ற மதவாத சக்திகளாலும் தான்   உரம் போட்டு வளர்க்கப்படுகின்றன என்பதையும் யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அதேப்போல் வளர்ந்து வரும் இந்த வகுப்புவாத சக்திகளையும், பிரிவினைவாத சக்திகளையும் வேரோடு கிள்ளி எறியாவிட்டால், ''வேற்றுமையில் ஒற்றுமை'' என்பதை நாம் பள்ளிப்பாடங்களில் மட்டுமே படிக்க முடியும்...பார்க்கமுடியும்.

பார்த்தீனியம் போல் பார்ப்பனியமும் இன்னும் சாகவில்லை...!


எழுதுகிறேன்....  

சனி, 18 ஆகஸ்ட், 2012

மன்மோகன் சிங்கின் புதிய ஊழல் சாதனை - 2ஜி - யை மிஞ்சியது...!


                      ஒரு கிலோ அரிசி ரூ. 2 /- வீதம் ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் 35 கிலோ அரசி கொடுக்க ஏற்பாடு செய்வதன் மூலம் நாட்டிளுள்ள அனைத்து மக்களுக்கும் உணவு பாதுகாப்பை ஏற்படுத்து என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் போராடி வருவதுடன் அதற்கான கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து மனு ஒன்றையும் கொடுத்திருக்கிறார்கள். வெறும் 1.50 இலட்சம் கோடி ரூபாய்களே தேவைப்படும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மன்மோகன் சிங் யோசிக்கிறார். அதற்கு நிதி இல்லை என்று நழுவுகிறார். மக்களுக்கென்று ஒரு திட்டம் நிறைவேற்றவேண்டுமென்றால் மத்திய அரசு தயங்குகிறது. ஆனால் இதே மத்திய அரசு இந்திய பெருமுதலாளிகளுக்கு 5 இலட்சம் கோடி வரை மானியமும், வரிச்சலுகைகளையும் தாராளமாக வாரி வழங்குகிறது. 
              ஆனால் ''பொருளாதார வளர்ச்சி'' என்ற பேரில் சாதாரண மக்களுக்கு மட்டும் கூடுதல் வரி, புதிய வரி, மானியம் வெட்டு என பல்வேறு கோணங்களில் மக்களை நசுக்குகிற வேலைகளை மத்திய அரசு மனசார செய்கிறது. 
            அண்மையில் சுதந்திரதினத்தன்று கொடியினை ஏற்றிவைத்து விட்டு சந்தோஷமாக நாலு வார்த்தைகளை பேசாமல், மன்மோகன் சிங் ஒப்பாரிவைத்து அழுதே விட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கிறதாம். அதற்கு காரணம்  அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்தொற்றுமை இல்லையாம். மக்களை திசைத் திருப்புவதற்கு எதிர் கட்சியின் மீது இப்படியொரு குற்றச்சாட்டு. 
            மன்மோகன் சிங் செய்கிற ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளுக்கும், முதலாளித்துவ ஆதரவு கொள்கைகளுக்கும் இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அவருக்கு எரிச்சல் வருகிறது.  அரசியல் கட்சிகள் அனைத்தும் அறிவுப்பூர்வமாக சிந்தனை செய்யாமல், மக்களைப் பற்றி யோசிக்காமல், கண்மூடித்தனமாக இவரையும், இவர்  கொண்டுவரும் அறிவிலித்தனமான  திட்டங்களையும் ஆதரிக்கவேண்டும் என்று கூசாமல் எதிர்ப்பார்க்கிறார். 
              இப்படியாக மண்ணுமோகன் ஆட்சி என்பது திக்குத் தெரியாமல் திக்குமுக்காடி கொண்டிருக்கும் வேளையில் - ஏற்கனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலும், காமன்வெல்த் விளையாட்டு ஊழலும், ஆதர்ஷ் வீட்டு ஊழலும் கொடிகட்டிப் பறக்கும் இந்த சூழ்நிலையில் தான்,  இந்த ஊழல்கள்   எல்லாம் தோற்கும் விதமாக 3.86 இலட்சம் கோடி அளவில் புதிய ஊழல்களை புரிந்து மண்ணு மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி புதிய சாதனையை புரிந்திருக்கிறது. மிகப்பெரிய சாதனை - பெருமையாக இருக்கிறது. இத்தனைக்கும் மன்மோகன் சிங்கிற்கு நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு  தனியாருக்கு அனுமதியளித்ததில் 1.86 இலட்சம் கோடி ரூபாயை, மக்களுக்கு திட்டங்களை தருவதில் நிதியை காரணம் காட்டுகிற மத்திய அரசு இழந்திருக்கிறது என்பது காரித்துப்புகிற அளவிற்கு கேவலமானது.
             அதில் மன்மோகன் சிங்கின்  காங்கிரஸ் கட்சிக்கு  தேர்தல் செலவை கவனிக்கின்ற - பாராளுமன்றத்தில் சோதனையான காலங்களில் மன்மோகனை காப்பாற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதிகளை கொட்டி இறைக்கின்ற  ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு  இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை சொன்னது வேறு யாரும் அல்ல. மத்திய கணக்கு தணிக்கை  குழு நேற்று  பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த விவரங்களில் மிகவும் முக்கியமானது. 
             ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ; நாங்கள் சாகவோ'' என்று  பாரதியை போல் ஆட்சியாளர்களுக்கு  எதிராக ஒரு நாள் மக்கள் கொதித்தெழுவார்கள்.

தன் பள்ளி மாணவனின் உயிரைக் குடித்த ஒய்.ஜி.பி. பாட்டியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை...?


                கல்வி வணிகமயத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு கடந்த பல ஆண்டுகாலமாக கல்விக் கொள்ளையில் திறமையாக ஈடுபட்டு வருபவர் பத்மா சேஷாத்திரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்.ஜி.பி. பாட்டி தான். அந்த பள்ளியை வசதி படைத்தவர்கள் மட்டுமே நெருங்க முடியும். பணம் பறிப்பதற்கென்றே தன்  பள்ளிக்கூடத்தை ஒரு ஸ்டார் ஹோட்டல் மாதிரியே  நடத்துகிறார். அடுக்கு மாடி கட்டிடம். நீச்சல் குளம் இருக்கிறது. குதிரை ஏற்றம் இருக்கிறது. குழந்தைகள் சென்று வர பஸ் வசதி வேறு. இவைகள் எல்லாம் பணத்தை பறிப்பதற்கான ஏற்பாடுகள். இவைகளை எல்லாம் பார்த்து வசதி படைத்தவர்கள் முட்டி மோதி தங்கள் குழந்தைகளை இங்கே சேர்த்து விட்டு பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
             இப்படிப்பட்ட பள்ளியில் தான் அண்மையில்  காலை நீச்சல் பயிற்சியின் போது 4 - ஆம் வகுப்பு படிக்கின்ற  ரஞ்சன் என்ற மாணவன்  முறையான பயிற்சியாளர் இல்லாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் என்பது நடைபெற்றது. ''தரமான கல்வி'' என்ற பெயரில் தனியார் கல்வி முதலாளிகளின் இலாபவெறி  பள்ளிக் குழந்தைகளை படுகொலை செய்வது  என்பது அன்றாடம்  நடக்கும் மிகப்பெரிய பயங்கரம். இவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள், குழந்தைகளின் உயிர் ஒரு பொருட்டல்ல. 
          இப்படிப்பட்ட கொலை என்பது வகுப்பு  நேரத்திலேயே  தன்  பள்ளியில் நடந்திருக்கிறது. தன்  நிர்வாகத்தின் கோளாறு - அலட்சியம் -  குழந்தைகள் மீது அக்கறையின்மை இவைகள்  காரணமாகத்  தான் நடந்திருக்கிறது என்று பள்ளியின் தாளாளர்  திருமதி ஒய்.ஜி.பி. பாட்டியே  முன் வந்து கைதாகி இருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்யவும் இல்லை. அதேப்போல், அண்மையில் அலட்சியம் காரணமாக ஒரு பள்ளி மாணவி உயிரிழந்த போது  சியோன் பள்ளி தாளாளரை கைது செய்த தமிழக அரசு - பத்து தொழிலாளர்களை பலிகொண்ட தனியார் கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஜேப்பியாரை  கைது செய்த தமிழக அரசு, இந்த சிறுவன் ரஞ்சன் படுகொலைக்கு காரணமான இந்த ஒய்.ஜி.பி. பாட்டியை மட்டும் தமிழக அரசு ஏன் கைது செய்யவில்லை...? எது தடுகிறது...? 
           ''ஏதோ ஒரு உணர்வால்'' தமிழக அரசு அண்மையில்  இந்த ஒய்.ஜி.பி. பாட்டிக்கு ''அவ்வையார் விருது'' வழங்கி கவுரவப்படுத்தி இருக்கலாம். அதற்காக இவர் என்ன ''பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்று சொன்ன அவ்வையார் பாட்டியா - கைது செய்யாமல் இருக்க...?  இவர் யார் தெரியுமா...?  சென்ற ஆண்டு சமச்சீர் கல்வி வருவதை எதிர்த்து முழுமூச்சுடன் போராடிய பார்ப்பன - மேட்டுக்குடி கூட்டத்திற்கு  தலைமை தாங்கியவர் இவர் தான். 
             ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் சம்பந்தமாக போடப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த இந்த  ஒய்.ஜி.பி. பாட்டி சமச்சீர் கல்வி திட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய பாடங்கள் எதுவும்  தரமானதாக இல்லை என்று சொல்லி அந்த திட்டத்தை நடைமுறை படுத்தப்படாமல் சீர்குலைக்கவே  வாதிட்டவர். கல்வி வணிகமயத்தின் மூலம் கல்விக் கொள்ளையை தடையின்றி செய்யும் மற்ற கல்விக் கொள்ளையர் கூட்டத்திற்கெல்லாம் இந்த பாட்டி தான் முன்னோடியானவர். 
            அதுமட்டுமல்ல,  ''அனைவருக்கும் கல்வி'' திட்டத்தின் படி 25 சதவீத வசதி குறைவான மாணவ -  மாணவியருக்கு தனியார் பள்ளிகள் இடமளிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் சட்டத்தையே தூக்கி எறிந்தவர். அதை எதிர்த்து '' வசதிபடைத்த எங்கள் குழந்தைகளோடு வசதியில்லாத குழந்தைகளும் சேர்ந்து படிப்பதா..?'' என்று தன்  பயிலும் மாணவ - மாணவியரின்  பெற்றோர்களிடமிருந்து கடிதங்களை பெற்று போராடி இன்றுவரை அந்த சட்டத்தையே மதிக்காதவர். அரசியல் சாசனத்தையே மதிக்காத குற்றத்திற்காக தமிழக அரசு அந்த பள்ளியின் அனுமதியை  ரத்து செய்ய வேண்டும் அல்லது அந்தப் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும். 

பொருளாதார மேதாவிகளே....! மானியம் வெட்டினால் மக்கள் வெடித்துவிடுவார்கள்...!

        

























                 ''அடிக்க அடிக்க தாங்குராங்களே.... ரொம்ப நல்லவங்க''ன்னு மக்களை பற்றிய எண்ணம் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு இருக்கிறது. காய்கறி விலை ஏறினாலும் கண்டுக்க மாட்றாங்க... ஏத்துக்கிறாங்க. மளிகை  சாமான்களின் விலை ஏறினாலும் கண்டுக்க மாட்றாங்க... ஏத்துக்கிறாங்க. பெட்ரோல் - டீஸல் விலை ஏற்றினாலும் கண்டுக்க மாட்றாங்க... ஏத்துக்கிறாங்க. பணவீக்கம் ஏறினாலும் மக்களுக்கு கவலையில்லை. ரூபாயின் மதிப்புக் குறைந்தாலும் மக்களுக்கு கவலையில்லை. எல்லாவற்றையும் ஏத்துக்கிறாங்க. ரொம்ப நல்லவிங்களா இருக்காங்க... கோபமேமேமேமே....  வரமாட்டேங்குது... எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்க... எனவே மக்களுக்கு இன்னொரு அடிக்கொடுப்பதற்கு மத்திய அரசு தாயாராகிவிட்டார்கள். அது என்ன தெரியுமா...? சமையல் எரிவாயுக்கு இதுவரை மத்திய அரசு கொடுத்து வந்த மானியத்தை வெட்டுவது என்கிற மத்திய அரசின் நீண்ட கால ஆசையை - கனவை நிறைவேற்றலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
             நாம் இதுவரை நம் வீடுகளில்  பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை சுமார் 400 ரூபாயாகும். நாம் ஓராண்டுக்கு சராசரியாக சுமார் 12 சிலிண்டர்களை  வாங்கிப் பயன்படுத்துகிறோம்.  நாம் பயன்படுத்தும் அத்தனை சிலிண்டருக்கும்  மத்திய அரசு ஒரு சிலிண்டருக்கு சுமார் 400 ரூபாய் வீதம் மானியம் வழங்குகிறது. ஒரு எரிவாயு சிலிண்டரின் மொத்த விலை சுமார் 800 ரூபாயாகும்.   அதனால் மத்திய அரசுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறதாம். இதுபோல் பொது மக்கள் பயன்படுத்தும் எரிவாயுக்கும், பெட்ரோல் - டீஸல் - மண்ணெண்ணைக்கும், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை பொது மக்களுக்கு அள்ளி அள்ளித்தருவதால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறதாம். அதுமட்டுமல்ல, பொருளாதாரமும் வளர்ச்சியடையவே சிரமமாக இருக்கிறதாம். 
          அதனால் கசாப்புக்கடையில் ஆட்டை வெட்டுவது போல, நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தொடங்கி, வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி மற்றும் தற்போதைய மன்மோகன்  சிங் ஆட்சி வரை உரம், பூச்சி மருந்து, மண்ணெண்ணெய், டீஸல், பெட்ரோல், சமையல் எரிவாயு போன்றவற்றின்  மீதான மானியங்களை படிப்படியாக வெட்டப்பட்டு வந்தன. 
               இந்த சூழ்நிலையில் தான், ''பொருளாதார மேதாவிகள்'' அடங்கிய பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அரசுக்கு நீண்ட நாட்களாக சொல்லப்பட்ட ஒரு பரிந்துரையை கொடுத்துள்ளது.  இந்தியாவில் சுமார் 29% குடும்பத்தினர் ஒரு ஆண்டுக்கு 4 எரிவாயு  சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று  ஒரு புள்ளி விவரம் சொல்லுகிறதாம். அதனால் இதனை அடிப்படையாக வைத்து இனி அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 4 எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டும் மானிய விலையை அரசு வழங்கலாம் என்று பிரதமரின்  ''பொருளாதார மேதாவிகளின் குழு''     அதிமேதாவித்தனமாக ஆலோசனை வழங்கியிருக்கிறது. 
              அதன்படி, ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தது 12 எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்படுகிறது என்றால்,  அந்த குடும்பங்கள் முதல் 4 சிலிண்டர்களை  மட்டும் 400 ரூபாய் கொடுத்தும், அடுத்து வரும் மீதம் உள்ள 8 சிலிண்டர்களை 800 ரூபாய் கொடுத்தும் வாங்க  வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்போது 4 சிலிண்டருக்கு மட்டும் கொடுக்கப்போகும் மானியத்திற்குக் கூட அற்ப ஆயுள் தான். இதை நாம் அனுமதித்தால், எதிர்காலத்தில் எரிவாயுவிற்கு கொடுக்கப்படும் மானியம் முழுமையாக  வெட்டப்படும் அபாயம் ஏற்படும் 
             இப்படியாக 4 எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டும் அரசு மானியம் வழங்கினால், சமையல் எரிவாயு  சிலிண்டர் விநியோகத்துக்கு மட்டும் மத்திய  அரசு வழங்குகிற மானியத்தின் அளவு என்பது ரூ.18 ஆயிரம் கோடியாகக் குறையும் என்றும், அதனால் பல இலட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் அந்த பொருளாதார மேதாவிகள் கூசாமல்   சுட்டிக்காட்டுகின்றார்கள்.   சென்ற பட்ஜெட்டில் இந்தியாவில் மிக சொற்பமான எண்ணிக்கையில் உள்ள பெருமுதலாளிகளுக்கு 5,00,000 கோடி ரூபாய் மானியமாகவும், வரிச்சலுகையாகவும் கொடுத்த போது  பல்லை இளித்துக்கொண்டு வேடிக்கைப்பார்த்த இந்த மேதாவிகள் தான், மக்களுக்கு கொடுக்கப்படும் மானியத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது என்று வாய்க்கூசாமல் பேசுகிறார்கள். 
               சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு சுவையான - பரப்பரப்பான தகவல் என்ன தெரியுமா...?               நமது நாட்டின்  குடியரசு துணைத்தலைவர் 
திரு. ஹமீது அன்சாரி, சென்ற ஆண்டில்  மட்டும், 176 சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தியிருக்கிறார் என்ற சூடான தகவல் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் மாதமொன்றுக்கு     சராசரியாக 14 சிலிண்டர்களை பயன்படுத்தும்  இவருக்கு மட்டும் பதவியில்  உள்ள போதும், பதவியை விட்டு சென்ற பின்னும் மானியம் வழக்கப்படும்  என்பது இந்திய போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் தான் நடைபெறும். 

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

தொடர்ந்து குழந்தைகளின் உயிரைக் குடிக்கும் பணவேட்டையாடும் தனியார் பள்ளிகள்....!

               இதுவரை பணவேட்டையாடி வந்த தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் - குறிப்பாக தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியிலேயே படிக்கும்  குழந்தைகளின்   உயிர்களைக் குடிப்பது என்பது தொடர்கதையாகிவிட்டது. 
          அண்மையில் தான் ''சீயோன்'' என்ற பள்ளியின் பேருந்தில் அதேப்  பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பஸ்ஸில் அலட்சியமாய் விடப்பட்டிருந்த ஓட்டையின் வழியாக சாலையில்  விழுந்து அதே பஸ்ஸின் பின்பக்க சக்கரம் ஏறி உயிரிழந்தது.  கோரக்காட்சியை பார்த்து தமிழகமே அழுதது. 
             அந்த கண்ணீரே இன்னும் காயவில்லை. அதற்குள் இன்று அதே சென்னை  - கே. கே. நகரில் உள்ள பத்மா செஷாத்திரி பால பவன் சீனியர் செகண்டரி ஸ்கூலில் இன்று காலை பள்ளியின் உள்ளேயே இருக்கும் நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி இறந்திருக்கிறான்.
             என்றைக்கு கல்வி கடைச்சரக்கானதோ அன்றையிலிருந்தே குழந்தைகளின் உயிருக்கு உத்திரவாதமில்லை  என்றாகிவிட்டது. கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 92 குழந்தைகளில் ஆரம்பித்து, இன்று உயிரிழந்த குழந்தைகள் வரை அரசின் அலட்சியப் போக்கும், பணம் பறிப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் தனியார் பள்ளிகளுமே காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
              தங்களுக்கு குழந்தை பிறந்தவுடனேயே அதை டாக்டர் ஆக்க வேண்டும்... இஞ்சினியர் ஆக்கவேண்டும் என்றெல்லாம் துடித்து, தங்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்று தெரிந்தும், ஒரு குறிப்பிட்ட  பள்ளியிலேயே முட்டி மோதி இடம் வாங்கி தன்  ஆசைக் குழந்தைகளை படிக்கவைக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களை கண்காணிக்கத் தவறிவிடுகிறார்கள். பெரும்பாலான விபத்துக்களுக்கு இதுவும் ஒரு காரணம் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.  
            அதுவும் இதுபோன்ற தண்ணீர் சம்பந்தப்பட்ட ஆபத்தான விளையாட்டுகளும், பயிற்சிகளும் குழந்தைகளின் பெற்றோர்களின் கண்காணிப்பில் தான் நடத்தப்படவேண்டும் என்பதை அரசு கட்டயமாக்கவேண்டும். அதனால் பள்ளிகளில் பாடநேரத்தில் இதுபோன்ற விளையாட்டுகளை நடத்த அரசு அனுமதிக்கக்கூடாது. விடுமுறை நாட்களில் பெற்றோர்களின் கண்காணிப்பில் மட்டுமே நடத்த அனுமதிக்கவேண்டும்.  ஒரே நேரத்தில் நிறைய குழந்தைகள் பயிற்சியில் ஈடுபடுவதால் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களை நியமிக்க அரசு வற்புறுத்தவேண்டும். நீச்சல் விளையாட்டுக்கென்றே வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை  தனியார் பள்ளிகளும்,  தனியார் பயிற்சி நிறுவனங்களும் பின்பற்றுகின்றனவா என்பதை அரசும், தமிழக நீச்சல் கழகமும் கண்காணிக்கவேண்டும். 
           நம் வீட்டு குழந்தைச்செல்வங்கள் பள்ளியிலும், சாலைகளிலும், வீட்டிலும், போழுதுபோக்கும் இடங்களிலும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை பெற்றோர்கள் அவ்வப்போது உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்போது தான் குழந்தைகளின் பாதுக்காப்பை உறுதி செய்ய முடியும்.

நீதித்துறையின் மீது மம்தாவிற்கு ஏனிந்த கொலைவெறி....!

             மேற்குவங்க சட்டசபையின் ஆண்டுவிழாவையொட்டி, நேற்றுமுன் தினம் சட்டசபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசிய  முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, நீதித்துறையை தாறுமாறாக தாக்கிப் பேசியது என்பது நீதித்துறையை சார்ந்தவர்கள்  மட்டுமன்றி, அனைத்துப் பொதுவான மக்களையும் முகம் சுளிக்கச் செய்திருக்கிறது என்பது தான் உண்மை. 
         மம்தா அப்படி என்னா தான் கேட்ட வார்த்தையில பேசியிருப்பார்...? இதோ கீழே...?
''இன்று ஒரு சில தீர்ப்புகள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. பணம் வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படுகிறது. சட்டசபையில் இதை கூறுவதற்கு எனக்கு வருத்தமாக உள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்கு விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. இதுபோன்ற விசாரணை கமிஷன்களால் எந்த பயனும் இல்லை''
            இதை சொல்லுறதுக்கு ரொம்பத் தான் வருத்தபடுகிறார்களாம்..! மேற்குவங்கத்தில் அடாவடித்தனமான ஆட்சியை நடத்திகினு, இந்த அம்மணி நீதித்துறையை குறை சொல்லுவது என்பதும்,  குற்றம் சொல்லுவது என்பதும் நமக்கெல்லாம் சிரிப்பைத் தான் வரவழைக்கிறது. 
            அப்படி என்ன நீதித்துறையின் மீது அப்படியொரு கோபம்...? கொலைவெறி...? இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் மனித உரிமை கமிஷன் மம்தாவின் தலையில் ஒரு இடியை தூக்கிப்போட்டது. நான்கு மாதத்திற்கு முன்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரும், அவரது நண்பரும், மம்தாவை விமர்சித்து வலைத்தளங்களில் கார்ட்டூன்  போட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதை யாராலும் மறந்திருக்கமுடியாது. 
                இந்த நிகழ்வுகளை விசாரித்த மேற்குவங்க மனித உரிமை கமிஷன், இரண்டு நாட்களுக்கு முன்னர் தான், பாதிக்கப்பட்ட இருவருக்கும் தலா 50,000 ரூபாய் இழப்பீடாகத் தரவேண்டும் என்று மேற்குவங்க மாநில அரசை பணித்தது.
           மனித உரிமை கமிஷன் மாநில அரசுக்கு அனுப்பிய இந்த கட்டளை   என்பது தான்தோன்றித்தனமாகவும் அடாவடித்தனமாகவும் நடந்து கொள்ளும்  மம்தாவின் தலையில் பேரிடியாக விழுந்தது. அதனால் எரிச்சலடைந்த  மம்தா அடுத்த நாளே மாநில சட்டசபையிலேயே - முதலமைச்சர் என்கிற முறையில் தான் இப்படிப் பேசுவது தவறு என்று தெரிந்திருந்தும், அவ்வாறு பேசியிருப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. விஷமத்தனமானது. மேலும் இந்த செயல் என்பது நீதித்துறையை மிரட்டும் செயலாகும். அதுமட்டுமல்ல, ஒரு மாநில முதலமைச்சரே இதுபோல்  விமர்சிப்பதன் மூலம் மாநில மக்களுக்கு நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையையும் மரியாதையையும்  இழக்கச் செய்யும் என்கிற குறைந்தபட்ச அறிவுக்கூட இல்லாமல் மம்தா நடந்து கொண்டிருப்பது என்பது முதலமைச்சர் பதவிக்கே லாயக்கற்றவர் என்பதையே காட்டுகிறது.

ஆப்பிரிக்காவின் 'சே' - தாமஸ் சங்கரா (Burkina Faso Film)

         மனித இனம் இன்று பல இனங்களாகவும், நாடுகளாகவும் மற்றும் இன்னபிற குழுக்களாகவும் பிரிந்து கிடக்கிறது... இப்படி பல தேசங்களை உருவாக்கி எல்லைக் கோடுகளுக்குள் புகுந்துகொண்டிருக்கும் மனித இனம், முதன்முதலில் தோன்றி வளர்ந்த பூர்வீக பூமியாக இன்றளவும் கருதப்படுவது ஆப்பிரிக்க மண்ணைத்தான்...
அந்த ஆப்பிரிக்க மண்ணின் தேசங்கள், பல நூற்றாண்டுகளாக காலனிய நாடுகளாக அடிமைப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன... பிரெஞ்சு, பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், போர்ச்சுகல், ஜெர்மனி என ஆப்பிரிக்காவை ஆண்டு அடிமைப்படுத்தி சுரண்டிக்கொழுத்த மேற்குலக நாடுகளின் எண்ணிக்கை அதிகம்... இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான காலகட்டத்தில், ஒவ்வொரு ஆப்பிரிக்க நாடாக விடுதலை பெற்றுவந்தன. ஆனால் அவையெல்லாம் உண்மையான விடுதலையல்ல. ஆப்பிரிக்க நாடுகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டோம் என்று உலகிற்கு அறிவித்துவிட்டு, அங்கே போலியாக ஒரு பொம்மை ஆட்சியை/ஆட்சியாளர்களை அமர்த்தி, தன்னுடைய காலனிய ஆட்சியினை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திவந்தன ஆதிக்க நாடுகள்... தப்பித்தவறி தங்களின் கட்டளைகளை ஏதேனும் ஒரு ஆப்பிரிக்க பொம்மை ஆட்சியாளர் மீறினால், அங்கே உடனடியாக ஆட்சிக்கவிழ்ப்பு நடைபெறும்... இப்படித்தான் கடந்த 50 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பெரும்பாலான ஆப்பிரிக்க கண்டத்தினை தொடர்ந்து மறைமுகமாக ஆட்சி நடத்திவருகின்றன ஆதிக்க நாடுகள்.
             இதனை எதிர்த்து ஓரிருவர் ஆங்காங்கே குரல் கொடுத்திருக்கிறார்கள்... அவர்களில் மிக முக்கியமான ஒருவர், மேற்குல ஆதிக்க நாட்டினை தூக்கி எறிந்ததோடு மட்டுமல்லால், மக்களுக்கான ஒரு மாற்று அரசையும் அமைத்தார்... உலகின் ஏழ்மையான நாடாக சோற்றுக்கே வழியின்றி இருந்த அவரது நாட்டினை, மிகச்சிறிய காலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றி, உலகையே திரும்பிப்பார்க்க வைத்தார். அவரது பெயர் தாமஸ் சங்கரா. அந்நாட்டின் பெயர் புர்கினா பாசோ. தாமஸ் சங்கராவின் வாழ்க்கையினை 'The Upright Man' என்கிற பெயரில் ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் 'Robin Shuffield'.
  
புர்கினா பாசோ - ஒரு வரலாற்றுப் பார்வை

         "அப்பர் வோல்டா" என்கிற நாடு மேற்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் ஒரு சிறிய நாடு. அந்நாட்டின் மேற்கே மாலியும் தெற்கே ஐவரி கோஸ்டும் சூழ்ந்திருக்கிற, கடலில்லா நாடுதான் "அப்பர் வோல்டா". 1896 இல் அப்பர் வோல்டாவினை ஆக்கிரமித்து, காலனிய நாடாக அடிமைப்படுத்தியது பிரெஞ்சு அரசு. அன்றிலிருந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பர் வோல்டாவினை தொடர்ந்து ஆண்டுவந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான அழுத்தத்தில், மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே 1960 இல் பிரெஞ்சு அரசிடமிருந்து அப்பர் வோல்டா நாடும் விடுதலை பெற்றது. ஆனாலும் பிரெஞ்சு அரசிற்கு தலையசைக்கும் பொம்மை இராணுவ ஆட்சிகள்தான் மாறிமாறி அப்பர் வோல்டாவினை ஆண்டுவந்தன. நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரெஞ்சு காலனியாக இருந்துவந்த அப்பர் வோல்டாவில் சொல்லிக்கொள்ளும்படி கனிவளங்களோ கடலோ இல்லாமையால், அப்பர் வோல்டா மக்களை அண்டைய நாடுகளில் கூலி வேலை பார்ப்பதற்கு பயன்படுத்திவந்தன பிரெஞ்சு அரசும், பொம்மை இராணுவ அரசுகளும்.
           அவ்வப்போது ஆட்சிக்கவிழ்ப்புகளும், சதிப்புரட்சிகளும் நடந்துகொண்டே இருந்தன. 1983 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சியினை கவிழ்த்து, மக்கள் புரட்சியின் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தின் இளம் அதிபராக ஆட்சிக்கு வருகிறார் தாமஸ் சங்கரா. பிரெஞ்சு காலனிய நாடாக இருந்தபோது வைக்கப்பட்ட "அப்பர் வோல்டா" என்கிற பெயரினை 
"புர்கினா பாசோ" என்று பெயர்மாற்றம் செய்கிறார். தன்னுடைய சுய இலாபத்திற்காகவும் மேற்குலக நாடுகளின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டும் தன்னுடைய சொந்த நாட்டுமக்களையே சுரண்டும் ஆப்பிரிக்காவின் மற்ற பெரும்பான்மையான ஆட்சியாளர்களைப்போல அல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார் தாமஸ் சங்கரா.
                       
புரட்சியின் பாதையில் மக்கள் நலத் திட்டங்கள்...

                புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில், ஒரு இராணுவ வீரனாக இருந்தபோது, மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார் தாமஸ் சங்கரா. ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே நடக்கும் போர்களினால் மக்களுக்கு எவ்விதப் பயனுமில்லை என்பதையும் மக்கள்நலத்திட்டங்களை செயல்படுத்தும் ஒரு புரட்சிகர அரசுதான் எல்லாவற்றையும் புரட்டிப்போடமுடியும் என்றும் புரிந்துகொண்டார்.
              அப்பாடங்களை அதிபரானபோது, ஒவ்வொன்றாக செயல்படுத்தினார் தாமஸ் சங்கரா. நாட்டின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் மிக அதிகமான ஊதியத்தினை குறைத்ததோடல்லாமல் தன்னுடைய ஊதியத்தையும் குறைத்து சட்டமியற்றினார் சங்கரா. அமைச்சர்களும், உயரதிகாரிகளும் வளம் வந்துகொண்டிருந்த அரசுக்கு சொந்தமான மெர்சிடிஸ் கார்களை விற்றுவிட்டு, புர்கினா பாசோவின் மிக மலிவான கார்களையே பயன்படத்தவேண்டுமெனவும் உத்தரவிட்டார். அதனை தன்னிலிருந்தே துவங்கினார்.
தாமஸ் சங்கரா: "அரசு அலுவல் காரணமாக விமானத்தில் பயணிக்கும் அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல்வகுப்பில் செல்லாமல் சாதாரண வகுப்பில்தான் பயணிக்க வேண்டும். நீங்கள் முதல் வகுப்பில் சென்றாலும், சாதாரண வகுப்பில் சென்றாலும் விமானம் தரையிறங்குகிறபோது ஒன்றாகத்தானே இறங்கப்போகிறீர்கள்? விமானம் கிளம்பும்போதும் ஒன்றாகத்தானே பயணிக்கப் போகிறீர்கள்? பிறகு எதற்கு முதல் வகுப்பு? அதனால் சொகுசாக பயணம் செய்வதற்காக, மக்களின் வரிப்பணத்தை இனி விரயம் செய்யக்கூடாது."
              விவசாயிகளுக்கு சுமையாக காலனியாட்சிக்காலத்திலிருந்து வசூலிக்கப்பட்டுவந்த விவசாயவரி இரத்து செய்யப்பட்டது. விவசாயத்தினை உற்சாகமாக தொடர்ந்த நடத்த, இச்சட்டம் ஊக்கமாக அமைந்தது. பன்னிரண்டு வயதுக்கு கீழுள்ள சிறுவர்களுக்கு மக்களுக்கான அரசியலைக் கற்றுக்கொடுக்கிற திட்டமும் உருவாக்கப்பட்டது. எதிர்காலத்தில் புர்கினா பாசோ நாட்டினை ஆளப்போவதே அவர்கள்தான். எனவே அவர்ளுக்கு நாட்டின்மீதும், மக்களின்மீதும் பற்றினை உருவாக்குவதும், தன்னலமற்ற குடிமக்களாக வளர்க்கவேண்டியதும் ஒரு அரசின் கடமையென தாமஸ் சங்கரா நினைத்தார்.
தாமஸ் சங்கரா: "தேசியக்கொடியின் கீழ்நின்றுகொண்டு, மனிதவுயிர்களைக் கொல்லும் ஆயுதங்களைக் கையில் ஏந்திக்கொண்டு, தமக்குப் பிறப்பிக்கப்படுகிற உத்தரவுகளை அப்படியே பின்பற்றி அவ்வாயுதங்களை பயன்படுத்துவதால் யார் பயனடைவார்கள் என்றுகூட அறியாத நிலையில் இருக்கிற இராணுவ வீரனும் தீவிரவாதிதான்."
 
பெண்ணுரிமைக்காக...
 
          ஆட்சியின் முதலாண்டில் பல்வேறு பொருளாதார மாற்றங்களைக்கொண்டு வந்த தாமஸ் சங்கரா, மக்களிடையே மாற்றுக் கலாச்சாரத்தையும் முன்னெடுத்துச் செல்லவேண்டுமென எண்ணினார். ஆப்பிரிக்க சமூகத்தில் பெண்களை எப்போதும் ஆண்களே மேலாதிக்கம் செலுத்திவந்தனர். இதனை மாற்றவேண்டுமென்று மக்களிடையே வலியுறுத்தினார்.
தாமஸ் சங்கரா: "நம் நாட்டிலிருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் வேலை கிடைக்க நாம் உதவவேண்டும். சுயமாக சம்பாதித்து நல்லதொரு வாழ்க்கையினை அமைத்துக்கொள்வதற்கான வழிவகைகளை நம் நாட்டுப் பெண்களுக்கு நாம் அமைத்துத்தரவேண்டும்."
           அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்படவேண்டுமென்று பேசி ஆப்பிரிக்க கண்டத்தில் அதிர்வலைகளை உண்டாக்கினார்.
               பள்ளிகளில் பெண்களுக்கான சமவுரிமையும் சுதந்திரமும் எந்த அளவில் சாத்தியமென்று நினைக்கிறீர்கள்? என்கிற கேள்விக்கு பதிலளிக்கையில்,
தாமஸ் சங்கரா: ''பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு கீழ்தான்' என்று காலம் காலமாக நமக்கு சொல்லித்தரப்பட்டு வருகிறது. அந்த எண்ணத்திலிருந்து நாம் வெளியே வர வேண்டும். குறிப்பாக, பள்ளிகளில் ஒரு பெண் கருவுற்றுவிட்டால், உடனே அப்பெண்ணை பள்ளியிலிருந்து நீக்கிவிடுகிற பழக்கமிருக்கிறது. ஆனால் அதற்கு காரணமான ஆண் அதே பள்ளியில் அதே வகுப்பில் இருந்தாலும், அவனுடைய படிப்பு பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறோம். ஆக, எத்தனை பெண்கள் கருவுறக் காரணமாக ஒரு ஆண் இருந்தாலும், அவனுக்கு எவ்வித இழப்புமில்லை. ஆனால், பெண்ணோ கல்வியை இழந்து, சமூகத்திலிருந்து விடுபட்டு, வாழ்க்கையைத் தொலைக்கிறநிலைதான் தொடர்கிறது. இந்நிலையினை மாற்ற வேண்டும்."
            புரட்சிக்கு பின்னான காலகட்டத்தில், நாட்டின் அரசியல் நடவடிக்கைகளில் பெண்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். ஆண்களுக்கு நிகராக, பெண்களும் தேச வளர்ச்சிக்கு உதவ பெண்கள் வருவதைக் காணமுடிந்தது. பல பெண்கள் தேசிய இராணுவத்தில் சேர்ந்தனர். ஆயுதங்களைக் கையாள்வது, இராணுவ சீருடை அணிவது, அணிவகுப்பு நடத்துவது போன்ற ஆண்கள் செய்கிற இராணுவ வேலைகள் அனைத்தையும் பெண்களும் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பெண்களை அமைச்சர் பதவிக்கு நியமித்த முதல் ஆப்பிரிக்க அதிபர் தாமஸ் சங்கராவாகத்தான் இருக்கமுடியும்.
லிடியா டிரவோரே (பள்ளி ஆசிரியை): "உலக பெண்கள் தினமான மார்ச் 8 இல், பெண்கள் அனைவரும் வீட்டில் இருக்கவேண்டுமென்றும், ஆண்கள்தான் அன்றையதினம் வீடு வேலைகளையும் வெளியே சென்று காய்கறிகள் வாங்குவதையும் செய்யவேண்டுமென்று வேண்டுகோள்விடுத்தார். அன்றைய தினம், ஆண்களே கடைக்கு சென்று தக்காளி வாங்குவதும், வீட்டிற்குவந்து சமைப்பதையும் பார்க்க அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது."

பொருளாதார மாற்றங்கள்...
 
        புர்கினா பாசோ மக்களனைவருக்கும் உணவு, வீடு, மருத்துவ வசதி ஆகியவையே கிடைக்கச் செய்யவேண்டுமென்பதே தாமஸ் சங்கரா அரசின் தலையாய கடமையாக இருந்தது. 
                பல்வேறுவிதமான நோய்கள் ஆப்பிரிக்க கண்டம் முழுக்க பரவிக்கொண்டிருந்த சமயத்தில், புர்கினா பாசோவில் ஒரே வாரத்தில் 25 லட்சம் மக்கள் போலியோ உட்பட பல நோய்களுக்கான தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. இந்நடவடிக்கை, உலக சுகாதார அமைப்பின் பாராட்டுதலையும் பெற்றது.
              விளையாட்டுத் துறையிலும் நாட்டினை முன்னேற்ற வேண்டுமென்று முன்னுதாரண நடவடிக்கையாக, சங்கராவும் அவரது அமைச்சர்களுமே நேரம் கிடைக்கிறபோதெல்லாம் கிராம மக்களோடு இணைந்து விளையாடி வந்தனர்.
           ஆப்பிரிக்க நிலங்கள் பாலைவனமாக மாறுவதனை தடுக்க, நாடுமுழுக்க விரவிக்கிடந்த தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை நாடும் திட்டத்தினையும் துவங்கிவைத்தது சங்கராவின் அரசு. கிராமத்து இளைஞர்களை வைத்து, ஆங்காங்கே தோப்புகளை உருவாக்கினர்.
                 நகரங்களில் வீடில்லாமல் வாழ்ந்த மக்களுக்கு, அரசு செலவிலேயே ஆங்காங்கே வீடுகளமைத்து கொடுக்கப்பட்டன. நகரங்களோடு கிராமங்களை இணைக்க பெரும்பாலும் சாலைகளே இல்லாதகாரணத்தால், அதே திட்டத்தினை கிராமங்களுக்கும் கொண்டுசெல்ல முடியாமற்போயிற்று. கிராமங்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்குமுன், சாலைகளையும் இரயில் தண்டவாளங்களையுமே முதலில் அமைக்கவேண்டுமென்று முடிவெடுக்கிறது சங்கராவின் அரசு. ஆதாயமின்றி உதவ உலகவங்கியோ மேற்குலக நாடுகளோ முன்வராது என்பதனை நன்குணர்ந்த சங்கரா, நாட்டு மக்களையே உதவிக்கு அழைக்கிறார். அதன்படி, புர்கினா பாசோவின் தென்கோடியையும் வடகோடியையும் இணைக்கும் இரயில் பாதையினை எந்தவொரு நாட்டின் உதவுமின்றி சொந்த மண்ணின் மக்களுடைய உழைப்பிலேயே சாத்தியமாக்கிக்காட்டினர்.

வேளாண்துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக...
 
         புர்கினா பாசோவினை ஒரு தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றவேண்டுமென்பதே தன்னுடைய அடுத்த குறிக்கோளாக இருந்தது புரட்சி அரசிற்கு. தங்களுடைய நாட்டில் தயாரித்த பொருட்களையே வாங்கிப் பயன்படுத்துமாறு, நாட்டுமக்களுக்கு அறிவுறுத்தினார் சங்கரா.
தாமஸ் சங்கரா: "தற்போது நம்மால் நமக்கு தேவையான அளவிற்கு உணவு உற்பத்தி செய்யமுடிகிறது. நம்முடைய தேவைக்கு அதிகமாகவும், நம்மால் உற்பத்தி செய்ய முடியும். முறையான ஒருங்கிணைப்பு இல்லாமையால், இன்றும் நாம் அயல்நாடுகளிடம் கையேந்த வேண்டியிருக்கிறது. ஆனால் அவ்வுதவிகள் யாவும், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி, உதவிக்காக பிச்சையெடுக்கிற நிலையில்தான் இருக்கிறோம் என்கிற எண்ணத்தினை நம்முடைய மனதில் ஆழமாக பதியவும் வைத்துவிட்டன. ஏகாதிபத்தியம் எங்கிருக்கிறது என்று என்னிடத்தில் சிலர் கேட்கிறார்கள். நீங்கள் சாப்பிடுகிற தட்டினை பார்த்தாலே அதற்கான பதில் கிடைக்கும். நாம் சாப்பிடுகிற அரிசி, சோளம், தினை என அனைத்துமே இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்தான். அக்கேள்விக்கான பதிலினை இதற்கு மேலும் வேறெங்கும் தேடவேண்டிய அவசியமில்லை"
            இதனை மனதில் வைத்துக்கொண்டு காலம்காலமாக நிலத்தின்மீது ஒட்டுமொத்தமாக உரிமைகொண்டாடிவந்த நிலக்கிழார்களிடமிருந்து விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு உழுபவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. நிலச்சீர்திருத்தம், விவசாயவரி நீக்கம் உட்பட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டமையால், இரண்டு ஆண்டிற்குள் வேளாண் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றநாடாக புர்கினா பாசோ மாறியது. சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 1700 கிலோ கோதுமை பயிர்செய்யும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளை ஒப்பிடுகையில், ஒரு ஹெக்டேருக்கு 3800 கிலோ கோதுமையினை உற்பத்தி செய்யும் திறன்வாய்ந்த நாடாக உருவெடுத்தது புர்கினா பாசோ. பசி, பஞ்சம் போன்ற வார்த்தைகளை நாட்டேவிட்டே விரட்டிவிட்டனர்.
           உள்நாட்டு நெசவுத்தொழில் நசிந்துகிடக்கிற நிலையினை மாற்ற, மிகப்பெரிய சமூக இயக்கம் துவங்கப்பட்டது. அரசு ஊழியர்கள் அனைவரும், சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆடைகளையே அணியவேண்டுமென்று உத்தரவு போடப்பட்டது. உள்ளூர் தொழிலாளர்கள் தயாரித்த ஆடைகளையே அணியுமாறு நாட்டு மக்களிடையே கோரிக்கை வைக்கப்பட்டது. தாமஸ் சங்கராவும் உள்ளூர் நெசவாளர்கள் தயாரித்த ஆடையினையே எப்போதும் அணிந்தார்.
                  தாமஸ் சங்கராவின் திட்டங்கள் அனைத்தும், கானா போன்ற அண்டைய ஆப்பிரிக்க நாடுகளையும் ஈர்த்தன. இதனைக் கண்டு அஞ்சிய பிரெஞ்சு அரசு, தன்னுடைய முன்னாள் காலனிய நாடுகளனைத்தையும் அழைத்து மாநாடொன்று நடத்தியது. ஆப்பிரிக்க நாடுகளனைத்தும் மேற்குலகிற்கு அடிபணிந்துதான் நடக்கவேண்டுமென்று அம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரெஞ்சு அதிபர் மறைமுகமாக எச்சரிக்கையும் விடுக்கிறார். தாமஸ் சங்கரா அதனை நேரடியாகவே மறுக்கிறார்.
              
ஆப்பிரிக்க நாடுகளின் கடனை இரத்து செய்யும் கோரிக்கை...
                       ஆப்பிரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தாமஸ் சங்கரா,"இன்றைக்கு நமக்கு யாரெல்லாம் கடன் கொடுக்கிறார்களோ, அவர்கள்தான் நம்முடைய நாடுகளை முன்பு அடிமைப்படுத்தி ஆண்டுவந்தார்கள். கடன்பெற்று வாழ்கிற நிலைமைக்கு நம்முடைய நாடுகள் சென்றதற்கு, அவர்களின் சுரண்டலே காரணம். இங்கிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டே இருந்தார்கள், ஆனால் எதையும் செய்யவில்லை நமக்கு. நம்மை ஆண்டுவந்த அவர்கள்தான் கடன்வாங்குவதை துவக்கியும் வைத்தார்கள். நமக்கு இந்த கடனுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. அதனால் நம்மால் இந்தக்கடன்களையெல்லாம் திருப்பிச்செலுத்தமுடியாது. கடன் என்பதே மறு காலனியாதிக்கத்தின் ஒரு பகுதிதான். நம்மை அவர்களது காலனிகளாகவே தொடர்ந்து வைத்திருப்பதே கடனின் நோக்கம். கடனை வாங்கிவிட்டு, அடுத்த 50-60 ஆண்டுகள் அவர்களது பேச்சினை கேட்டுக்கொண்டே, நம்முடைய மக்களின் தேவைகளை புறக்கணிக்க வேண்டுமென்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. கடனின் தற்போதைய வடிவமானது, ஆப்பிரிக்க கண்டத்தினை திட்டமிட்டு கைப்பற்றுவதற்குதான் வழிவகுக்கும். அதன்மூலம் நாம் அவர்களுடைய பொருளாதார அடிமைகளாக மாறிவிடுவோம்.
              கடனை நம்மிடமிருந்து வசூலிக்கமுடியாமற்போனால், நம்மை ஆண்ட ஐரோப்பிய நாடுகள் உயிரிழந்துவிடமாட்டார்கள். ஆனால், நம்மீது சுமத்தப்பட்டிருக்கிற அளவுக்கதிகமான கடனை திருப்பிக்கொடுக்க நாம் முற்பட்டால், நம்முடைய மக்கள் உயிர்வாழ்வதே கடினமான ஒன்றாகிவிடும். நம்மைவைத்து பொருளாதார சூதாட்டம் விளையாடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்தக்கடனுக்கு நாம் பொறுப்பல்ல என்பதோடுமட்டுமல்லாமல், திருப்பிச் செலுத்தும் நிலையிலும் நாம் இல்லை. நம்முடைய நிலத்தையும் மக்களையும் இத்தனை ஆண்டுகளாக் சுரண்டியதற்கான கடனை அவர்கள்தானே திருப்பிச்செலுத்தவேண்டும்? 
            இம்மாநாட்டின் மிகமுக்கியமான தீர்மானமாக இது இருக்க வேண்டும். எங்களது நாடான புர்கினா பாசோ மட்டுமே இக்கோரிக்கையினை வைக்கிறதென்றால், அடுத்த மாநாட்டில் நாங்கள் கலந்துகொள்ளமாட்டோம். ஆனால் இதுவே எல்லோருடைய கோரிக்கையாக மாறினால், நாம் ஒன்றுகூடி போராடி வெல்லலாம்.
 
  வீழ்ச்சியை நோக்கி...
 
             புர்கினா பாசோ வளர்ச்சிப் பாதையினை நோக்கி சென்றுகொண்டிருந்தாலும், ஏற்கனவே இருக்கிற அரசு நிர்வாகமானது ஊழல்மலிந்த ஒன்றாகத்தான் இருந்தது. காலம் காலமாக தன்னால் இயன்றவரை மக்களை சுரண்டியே கொழுத்து வாழ்ந்து கொண்டிருந்த உயர் அரசு நிர்வாகம், திடீரென தாமஸ் சங்கராவின் மக்கள்சார்ந்த திட்டங்களால் எரிச்சலடையத்தான் செய்தன. இதனால், ஆங்காங்கே அவர்கள் கிளர்ச்சிகள் செய்யத்துவங்கினர். ஒரு கட்டத்தில், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசிற்கு எதிராக குரல் கொடுக்கத்துவங்கினர். அவர்களையெல்லாம் பணியினைவிட்டு வெளியேற்றுவதைவிட வேறுவழியில்லாமல் போயிற்று தாமஸ் சங்கராவிற்கு.
          இதனையே ஒரு காரணமாகக்காட்டி, புரட்சிக்கு எதிரானவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசு ஊழியர்களிடம் சங்கராவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யத்துவங்கினர். ஒரு கட்டத்தில் ஆசிரியர்களின் போராட்டத்தினை பேசித்தீர்க்கமுடியாமல், போராடிய ஆசிரியர்கள் அனைவரையும் வேலையைவிட்டு அனுப்பப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக வேறுவழியின்றி அதிக அனுபவமில்லாத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
             இது ஒருபுறமிருக்க, புர்கினா பாசோ மக்களுக்கு சிறந்த வாழ்க்கையினை அமைத்துக்கொடுக்கவேண்டுமென்கிற தாமஸ் சங்கராவின் கனவினை அவருடன் இருந்த பலராலும் சரியாக புரிந்துகொள்ளமுடியவில்லை. புதிதாக இராணுவத்தில் சேர்ந்த இளைஞர்களும், புரட்சி அரசினை கவிழ்க்க நடக்கிற சதிகளை முறியடிக்க அமைக்கப்பட்ட புரட்சிக்குழுக்களின் உறுப்பினர்கள் சிலரும், தாமஸ் சங்கராவையும் மக்கள் நலன் சார்ந்த அரசியலையும் விளங்கிக்கொள்ளவில்லை. அவர்களால் இங்கொன்றும் அங்கொன்றுமாக மக்களுக்கு பிரச்சனைகள் வரத்துவங்கின. இதனை தாமஸ் சங்கராவும் அறிந்து வைத்திருந்தார். தன்னால் இயன்றவரை எல்லோரிடமும் இதுகுறித்து பேசியும் வந்தார்.
                    1986 இல் பிரான்சில் நடந்த தேர்தலில், தீவிர வலதுசாரிக்கொள்கையுடைய கட்சியான 'ரேலி பார் தி ரிபப்ளிக்' நிறைய இடங்களில் வெற்றிபெற்று கூட்டணியாட்சி அமைத்தது. அக்கட்சியைச் சேர்ந்த ஜேக் சிராக் பிரெஞ்சு பிரதமராக பொறுப்பேற்றார். தீவிர வலதுசாரி ஆட்சியமைந்ததும், பிரெஞ்சு அரசு ஆப்பிரிக்காவில் தனக்கான ஆதரவு நாடுகளைவைத்து எதிர்ப்பு நாடுகளையும் முன்னெப்போதையும்விட துரிதமாக செயல்பட்டு தன்வலையில் விழவைக்க முயற்சியெடுத்தது. பிரெஞ்சு அரசிற்கு மிகவும் விசுவாசமாக இருந்துவந்த ஐவரி கொஸ்டின் அதிபர் பெளிக்சின் உதவியுடன், புர்கினா பாசோவிலிருக்கும் தாமஸ் சங்கராவின் ஆட்சியினை கவிழ்க்க திட்டம் தீட்டப்பட்டன. தாமஸ் சங்கராவின் மிக நெருங்கிய நண்பரும் புர்கினா பாசோ அரசில் அதிபருக்கு அடுத்தபடியான பொறுப்பிலிருந்தவருமான ப்ளேயிஸ் கம்பேரோவை தங்களது சதித்திட்டத்தில் விழவைத்தனர்.
                  தாமஸ் சங்கராவின் கட்டளைக்கிணங்க எளிமையான வாழ்க்கைக்கு திரும்பிய அமைச்சர்கள் சிலர், மீண்டும் பழைய வசதியான வாழ்க்கை கிடைக்கவேண்டுமென்பதற்காக ப்ளேயிஸ் கம்பேரோவிற்கு உதவிசெய்ய முன்வந்தனர்.
             என்ன நடக்குமோ! ஏது நடக்குமோ! என்று நாட்டில் குழப்பமான சூழல் உருவாகியது. சே குவேராவின் இருபதாவது ஆண்டு நினைவுநாள் விழாவில் கலந்துகொண்டபிறகு, "சே குவேரா 39 வயதில் உயிரிழந்தார். நான் அந்த வயது வரைகூட இருப்பேனா எனத்தெரியவில்லை" என்றும்  "புரட்சியாளர்களை படுகொலைசெய்தாலும், அவர்களது இலட்சியங்களை அழிக்கமுடியாது" என்றும் சுவிசர்லாந்து சோசலிஸ்டான ஜீன் சீக்லரிடம் சொல்லியிருக்கிறார்.
                 1987 அக்டோபர் 17 இல், அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அரசின் ஆதரவுடன் ப்ளேயிஸ் கம்பேரோ தன்னுடைய குழுவினருடன், தாமஸ் சங்கரா மற்றும் 12 உயரதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். தாமஸ் சங்கராவின் உடலை பல துண்டுகளாக வெட்டி யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டனர். சங்கராவின் மரண செய்தி நாடுமுழுக்க பரவியது. புர்கினா பாசோவின் மக்கள் தெருவெங்கும் நின்றுகொண்டு அழுதனர். அவர் இறந்தபோது, அவரது வீட்டினில் ஒரு கிதாரும், மோட்டார் சைக்கிளும் தான் அவரது சொத்துக்களாக இருந்தன.
 
புர்கினா பாசோ - இன்றைய நிலை...
  
          தாமஸ் சங்காராவை கொன்றுவிட்டு, மறுநாளே அதிபராக பதவியேற்றுக்கொண்டார் ப்ளேயிஸ் கம்பேரோ. தாமஸ் சந்காரவின் ஆட்சியில் தேசியமயமாக்கப்பட்ட அனைத்தும் அரசிடமிருந்து விடுவிக்கப்பட்டன. ஐ.எம்.எப்.உடனும் உலக வங்கியுடனும் மீண்டும் நட்புறவை புதுப்பித்துக்கொண்டது ப்ளேயிஸ் கம்பேரோவின் அரசு. மிகச்சிறந்த அதிபராகத் திகழ்கிறார் என்று பிரெஞ்சு அரசாங்கத்தின் பாராட்டையும் பெற்றுவிட்டார் ப்ளேயிஸ் கம்பேரோ. அதற்குப் பின்னால் நடைபெற்ற தேர்தலை, புர்கினா பாசோவின் 75 % மக்கள் ஒட்டுபோடாமல் புறக்கணித்தும், தன்னையே அதிபராக அறிவித்துக்கொண்டு ஆட்சியினைத் தொடர்ந்தார் ப்ளேயிஸ் கம்பேரோ. இன்றுவரை அவரே புர்கினா பாசோவின் அதிபராக இருக்கிறார்.
           தாமஸ் சங்கராவின் ஆட்சியில், இரண்டே ஆண்டுகளில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றநாடாக மாறியிருந்த புர்கினா பாசோ, கடந்த 25 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய கடனாளி நாடுகளின் பட்டியலிலும், மிக மோசமான வறுமையிலிருக்கும் நாடுகளின் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்தின் வளங்களையும், மனித உழைப்பினையும் சுரண்டுவதற்கு ஏதுவாக, இப்படியொரு பொம்மை ஆட்சியும் ஊழல்மிகுந்த ஆட்சியாளர்களும் ஆப்பிரிக்காவினை ஆளவேண்டுமென்பதுதான் ஆதிக்க நாடுகளின் விருப்பம்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல், உலகளவில் உரக்க ஒலிக்கவேண்டியதன் அவசியத்தை புர்கினா பாசோ போன்ற நாடுகளின் வரலாறு நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றன...
தகவல் : இ.பா.சிந்தன்
நன்றி : சிந்தன் - வலைப்பூ 

புதன், 15 ஆகஸ்ட், 2012

தானாக கிடைத்ததல்ல சுதந்திரம்...!


          பள்ளி  வரலாற்றுப் பாடத்தில்  இந்திய சுதந்திர போராட்டத்தை பற்றிப் படிக்கும் போது ''கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி, யுத்தமின்றி காந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்'' என்கிற வரியை எல்லா வகுப்பிலும் நாம் படித்திருப்போம். அதை படிக்கும் போது, ஏதோ காந்தி மட்டுமே  வெள்ளைக்காரனிடம் கெஞ்சிக்கேட்டு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது போன்ற  ஒரு கருத்தை தான் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தும். இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் - குறிப்பாக காங்கிரஸ்காரர்கள் பள்ளிப் பாடப்புத்தகத்தை தங்கள் கட்சிப் பிரச்சாரத்திற்காகவே பயன்படுத்திக்கொண்டார்கள். அதனால் தான், இந்த தேசத்திற்கு கிடைத்த சுதந்திரத்திற்கும், அதற்காக நடத்தப்பட்ட போராட்டத்திற்கும் சொந்தக்காரர்களாக காங்கிரஸ்கட்சியையும், காந்தியையும் மட்டுமே காட்டுகின்றனர். அதுவும் வடநாட்டு காங்கிரஸ் தலைவர்களைத் தான் குறிப்பிட்டிருப்பார்கள். தென்னிந்தியத் தலைவர்களை - குறிப்பாக காமராஜர், திருப்பூர் குமரன், பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்ற  தமிழகத்தலைவர்களை பற்றி ஒரு சிறு குறிப்புக்கூட காட்டியிருக்கமாட்டார்கள். 
                  நாம் வரலாற்றுப் பாடத்தில் படிப்பது போல் '' ஏதோ  கேட்டுப்பெற்றதல்ல சுதந்திரம்... தானாக வந்ததுமல்ல சுதந்திரம்...''
           ஜாலியன் வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் உயிர்த்தியாகம் செய்து, ரத்தம் சிந்தி பெற்றச் சுதந்திரம் இது...
           பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், உத்தம்சிங் போன்ற இளைஞர்கள்  தூக்குமேடை   ஏறிப் பெற்றச் சுதந்திரம் இது...
           திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் போன்ற  இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துப் பெற்றச் சுதந்திரம் இது. 
            பாரதி தன்  பாட்டுத்திறத்தாலே விடுதலைத்தீயை மூட்டி இந்திய மக்களிடையே எழுச்சியை உண்டாக்கி பெற்றச் சுதந்திரம் இது. வ. உ. சி மற்றும் சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் சிறைகொடுமைகளை அனுபவித்து, செக்கிழுத்துப் பெற்றச் சுதந்திரம் இது. 
           நேதாஜி மற்றும் கேப்டன் லட்சுமி போன்றவர்கள் இந்திய தேசியப் படை அமைத்து வெள்ளையனுக்கு எதிராகப்போராடிப் பெற்றச் சுதந்திரம் இது. 
            தோழர். ஜீவானந்தம், தோழர். ஹர்கிஷன்சிங் சுர்ஜித் போன்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராடி, சிறைக்கொடுமைகளை அனுபவித்து, தலைமறைவு வாழ்க்கையை நடத்தி பெற்றுத் தந்த சுதந்திரம் இது. 
         1806 - ஆம் ஆண்டு தொடக்கி 1947 - ஆம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கான  ஆண்களும், பெண்களும், முஸ்லிம்களும், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும் போராடி - ரத்தம் சிந்தி - உயிர்த்தியாகம் செய்து நமக்கு பெற்றுத் தந்த சுதந்திரம் இது. 
          அனால் கடைசி இந்தியன் வரை அந்த சுதந்திரம் பொய் சேர்ந்ததா என்று கேட்டால்... அது கேள்விக்குறிதான். 
          உண்மையான சுதந்திரம் என்பது, இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே சொன்னானே மாவீரன் பகத்சிங் அது தான்.                   
         ''பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு எங்கும் மாணவன், வேலை தேடும் இளைஞன், வறுமையில் வாடும் தாய் - இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா'' 
இது தான் மாவீரன் பகத்சிங் கனவுகண்ட இந்தியா.
         அன்று வெள்ளையர் கையில் இருந்த இந்தியா... இன்று கொள்ளையர் கையில் சிக்கி மேலே சொன்ன அத்தனை பேரையும் கொண்ட ''வாடும் இந்தியா''வில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
           இது மாறவேண்டுமென்றால், ''முப்பது கோடி ஜெனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை'' வேண்டினானே பாரதி, அந்த பொதுவுடைமை இந்த தேசத்தில் மலரவேண்டும். அதுதான் இந்தியாவில் உண்மையான சுதந்திரத்தை மணக்கச் செய்யும். 
அதற்காக போராடுவோம்.... 
பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்... 
தேசத்தை காத்தல் செய்வோம்.

          

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

மம்தாவின் சர்வாதிகாரம் இன்னும் அடங்கவில்லை...!

        விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை தன்னிடம் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி. மம்தாவின் ஆணவமும், அடாவடித்தனமும், சர்வாதிகார போக்கும் இன்னும் அடங்கியப்பாடில்லை. மேற்குவங்கத்தின் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் பெல்பூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் பேசிய மம்தா தன் சாதனையை அடுக்கிக்கொண்டே இருந்தார். அந்த கூட்டத்திலிருந்த விவசாயி ஒருவர் மம்தாவின் பேச்சில் எரிச்சலடைந்து, மம்தாவை நோக்கி “கடன் பிரச்சனையால் விவசாயிகள் பணம் இல்லாமல்  மடிந்து கொண்டிருக்கிறார்கள். வெறும் வாக்குறுதிகள் போதாது. எங்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்” என்று கேட்டிருக்கிறார். அதை கேட்டதும்  உடனே மம்தாவிற்கு வந்ததே கோபம். ''பிடி சாபம்'' என்று கொதித்தெழுந்தார். அந்த விவசாயியை அப்புறப்படுத்துமாறு காவலர்களுக்கு மேடையில் இருந்தபடியே மம்தா ஆணையிட, காவலர்களும் அந்த விவசாயியை அங்கிருந்து அப்புறப்படுத்தி நன்றாக ''கவனித்து'' அனுப்பியிருக்கிறார்கள். 
            அப்படியும் மம்தாவிற்கு ஆத்திரம் அடங்கவில்லை. அதை புரிந்துகொண்ட காவலர்கள் மறுநாளே அந்த விவசாயியை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் என்பது நேற்று முன் தினம் தான் நடைபெற்றது. 
             தனக்கெதிரான விமர்சனங்கள் எங்கிருந்து வந்தாலும், யாரிடமிருந்து வந்தாலும் தாங்கிக்கொள்ள முடியாமல் ''இம்மென்றால் சிறைவாசம்... ஏனென்றால் வனவாசம்'' என்ற சர்வாதிகாரப்போக்கு என்பது மம்தாவை விட்டு அகலவில்லை. கருத்துச்சுதந்திரம் என்பது மம்தாவின் ஆட்சியில் கேள்விக்குறியாய் போனது. கருத்துரிமை கொண்ட ஜனநாயகம் என்பது மேற்குவங்கத்தில் மம்தாவின் ஆட்சியில் செத்துப்போய்விட்டது என்பதை தான் இது போன்ற தொடர் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.