வியாழன், 29 அக்டோபர், 2015

நேபாள நாட்டு மக்களை வாழ்த்திப் பாராட்டுவோம்....!


             நேற்றைய தினம்  ஜனநாயக மதசார்பற்ற நேபாள நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக CPN(ML) ~ நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும் பெண்ணியவாதியுமான  தோழர் விந்தியதேவி பண்டாரி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முதலில் புதிய ஜனாதிபதி தோழர்.விந்தியதேவி அவர்களுக்கு புரட்சிகர நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம். 
              நாட்டின் உயரிய பதவிக்கு ஒரு பெண்மணியை தேர்ந்தெடுத்ததன் மூலம் தெற்காசிய நாடுகளிலேயே இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வரிசையில் ஐந்தாவதாக நேபாளமும் இணைந்துள்ளது. பெண்மையை உயர்த்திய நேபாள மக்களை நெஞ்சார பாராட்டுவோம். 
              அதுமட்டுமல்ல நேபாள நாடு பல்வேறு இடையூறுகளுக்குப் பின்னும் தன்னை ஒரு ''மதசார்பற்ற'' நாடாக முடிசூட்டிக்கொண்ட பின், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்   இந்த  மாத தொடக்கத்தில் தான் தங்கள்  நாட்டின் புதிய பிரதமராக CPN(ML) ~ நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த  தோழர்.கே.பி.சர்மா ஒளி அவர்களை தேர்ந்தெடுத்தார்கள். அதேப்போல் நேற்று  நடந்த புதிய ஜனாதிபதிக்கான தேர்தலிலும், அதேக்கட்சியை சேர்ந்த இன்னொருவரை தங்கள் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தங்கள் நாட்டுக்கான - மக்களுக்கான புதிய சிந்தனையோடு புதிய பாதையில் பயணிக்கும் நேபாள நாட்டு மக்கள்  உலகத்திற்கே வழிகாட்டுகிறார்கள். அதற்காக நேபாள நாட்டு மக்களை நெஞ்சார வாழ்த்துவோம்... பாராட்டுவோம்...! 
             ஆனால் இனிமேல் தான் நேபாள நாட்டு அரசும், மக்களும் மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்கவேண்டும்.  ஏனென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியமும், மதவெறி பிற்போக்குவாதிகளும் இனி அந்நாட்டை நிம்மதியாக விடமாட்டார்கள். இடது வழியே சரியான வழி என்று பயணிக்கும் நேபாள நாட்டு இடதுசாரி அரசைப் பார்த்து சகித்துக்கொள்ள முடியாத அவர்கள், அரசை  எப்படியாவது கவிழ்த்துவிடவும், மக்களிடம் அரசின் மீது   கெட்டப்பெயரை உருவாக்கவும், மக்களிடையே  கலகங்களை செய்து நாட்டினுள் அமைதியின்மையை உருவாக்கவும் இனிமேல் தான் சூழ்ச்சிகள் செய்வார்கள்.
         இமயத்தின் உச்சியிலிருந்து   செங்கொடியை  மேலும் மேலும் உயர்த்திக் காட்டிய நேபாள மக்களுக்கு துணை நிற்போம்...!

கருத்துகள் இல்லை: