புதிய முயற்சி மட்டுமல்ல... புதிய அத்தியாயம்
தமிழக மக்களின் நலன்களை காப்பதற்கான போராட்டப் பாசறையாக மக்கள் கூட்டியக்கம் ஜூலை 27ம் தேதிஉருவாக்கப்பட்டது. தமிழகத்தில் மலிந்துள்ள ஊழல், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கு, அதிகரித்து வரும் மதவெறி, தமிழகத்தில் நடந்து வரும் சாதி ஆணவக் கொலைகள், தீண்டாமைக் கொடுமைகள் மற்றும் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைத்து வரும் நயவஞ்சகம், உலக மயம் என்ற பெயரில் திணிக்கப்படும் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என இந்த இயக்கம் சூல் கொண்ட போதே சூளுரை மேற்கொண்டது.தேர்தல் நேரத்தில் தொகுதிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூட்டணிகள் உருவாக்கப்படும் தமிழக அரசியல் கலாச்சார சூழலில்,போராட்டக் களத்திலேயே கட்சிகளிடையே ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தஅமைப்பு தொடர்ச்சியாக பல்வேறு மக்கள் நல இயக்கங்களை நடத்திவருகிறது.தமிழகத்தில் இடையறாது நடந்து வரும் மணல், கிரானைட், தாதுமணல் கொள்ளையை தடுக்க வேண்டும்; மதுவிலக்கு, ஊழலற்ற நிர்வாகம், சாதி, மதவெறி எதிர்ப்பு, தமிழக உரிமைகளை பாதுகாப்பது உள்ளிட்ட 15 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து ஆக. 13ம் தேதி ஐந்து மண்டலங்களில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம், செப்.2ம் தேதி அகில இந்திய அளவில் தொழிலாளி வர்க்கம் நடத்திய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுக் கூட்டம், இதன் தொடர்ச்சியாக காவிரி பாசனப் பகுதியை பாலைவனமாக்க முயலும் மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களை எதிர்த்து திருவாரூரில் அக்.5ஆம் தேதி பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.
குறைந்தபட்ச செயல்திட்டம் பற்றி ஆலோசனை
திருவாரூரில் அக்டோபர் 5 அன்று மக்கள் நலக்கூட்டியக்கத்தின் தலைவர்கள் கூடி, இயக்கத்தின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை தயாரிக்க குழு ஒன்றை உருவாக்கினர். இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செயல்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.இந்த இயக்கத்தின் தலைவர்கள் வரும் அக். 23ஆம் தேதி சென்னையில் கூடி தமிழக சட்டமன்ற தேர்தல் அணுகுமுறை குறித்தும், குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்தும் விவாதிக்க உள்ளனர். குறைந்தபட்ச செயல்திட்டத்தை நவம்பர் 2 ஆம் தேதி சென்னையில் வெளியிடுவது என்றும் விளக்கப் பொதுக் கூட்டத்தை நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.பல்வேறு தரப்பில் இருந்து வரும்அவதூறுகள், அலறல்கள், அங்கலாய்ப்புகளிலிருந்தே இந்தக் கூட்டியக்கம் தமிழக அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.இன்றைக்கு தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளும் கட்சியான அதிமுக, ஆண்ட கட்சியான திமுக ஆகிய இரண்டுமே பொறுப்பாகும். ஊழல், லஞ்சம், இயற்கை வளக் கொள்ளை, அனைத்திலும் கமிஷன் மயம் ஆகிய அனைத்து சீர்கேடுகளையும் உருவாக்கியதில், வளர்த்ததில் இரு கட்சிகளுக்கும் பங்கு உண்டு. பகுத்தறிவுப் பாரம்பரியம் மிக்க தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் நடப்பதும், சாதிய அணி திரட்டல் நடப்பதும் , தீண்டாமைக் கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் தொடர்வதற்கும் இரு கட்சிகளின் அணுகுமுறைக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிடமுடியாது. மத்தியில் ஆண்ட காங்கிரஸ், இப்போது ஆளும்பாஜக ஆகிய கட்சிகள் பின்பற்றிய அதே தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையைத்தான் தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் பின்பற்றுகின்றன. மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் இரண்டு கட்சிகளும் உறுதியாக இல்லை.
காலத்தின் தேவை; களத்தின் விளைச்சல்
அதிமுக, திமுக ஆகிய இரண்டுக்கும் மாற்றாக ஒரு புதிய மாற்று தேவையாகிறது. அந்த அடிப்படையில்தான் காலத்தின் தேவையாக, களத்தின் விளைச்சலாக, போராட்ட வானத்தில் உதயமான புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மக்கள் நலக் கூட்டியக்கம் உருவெடுத்துள்ளது. தேர்தல் அவசரத்தில், அப்போதைய தேவைக்காக மட்டும் அமைக்கப்படும் அணி அல்ல இது. மக்கள் நலனைப் பாதுகாப்பதற்காக திட்டவட்டமான திட்டத்தின் அடிப்படையில் உருவெடுக்கும் அணிவகுப்பு இது மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்க உள்ள குறைந்தபட்ச செயல்திட்டம் என்பது தமிழக அரசியலில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி என்பது மட்டுமல்ல; எழுச்சிமிகு வரலாற்றுக்கான புதிய அத்தியாயமும் ஆகும். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலவும் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் என்பது காங்கிரஸ், பாஜக அல்லாத; அதிமுக, திமுக இல்லாத புதிய அணி தேவை என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக