செவ்வாய், 20 அக்டோபர், 2015

மதவெறியர்களுக்கு எதிராக திரண்ட உலக எழுத்தாளர்கள்...!



                இந்தியாவில் பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்திய மக்களின் அரசியல், கல்வி, உணவு, வழிபாடு, உடை, கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு ஆகிய அத்தனையும் இன்றைக்கு  பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கின்றன.  அவைகள் அத்துனையும் மக்களின் பழக்கவழக்கம், பொருளாதாரம், சிந்தனை, மரபு, குடும்பம், வளர்ப்பு போன்ற இவைகள் அத்தனையையும் உள்ளடக்கியன. அதுமட்டுமல்ல அவைகள் அத்தனையும் தங்களின் அடிப்படை உரிமைகள் என்பதை  முதலில் இந்திய மக்கள் உணரவேண்டும். இவைகளைத்தான் கடந்த அறுபத்தெட்டு ஆண்டுகளாக போராடி பாதுகாத்து போற்றிவருகிறோம். 
            இவைகளையெல்லாம் உணராத மக்களுக்கு தங்களது எழுத்துகள் மூலம் எடுத்துரைத்து அவர்கள் மூலையில் மாற்று சிந்தனையை விதைக்கும் அபாரமான பணிகளில்,  பல மாநிலங்களிலும் உள்ள  நம் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் அவரவர் தாய் மொழிகளில் பல ஆண்டுகளாக  ஈடுபட்டு வருகிறார்கள்.   அவர்களது  கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு, மரபு ஆகிய அனைத்தும்  உள்ளிட்ட முற்போக்கு சிந்தனைகளுடன் கூடிய அரிய எழுத்துப்பணிகளுக்காக மத்திய - மாநில அரசுகளின் விருதுகளையும், பெருமைகளையும், சிறப்புகளையும்  பெற்று  மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
              ஆனால் 2014ஆம் ஆண்டு பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து,  பாஜகவின் தலைமை  பீடமான ஆர்.எஸ்.எஸ் மதம் பிடித்து   சர்வாதிகாரத்துடன்  தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இந்திய மக்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், வழிபாடு, உடை, உணவு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்து மக்கள் சார்ந்த உரிமைகளிலும் ஆர்.எஸ்.எஸ்-இன் தலையீடு என்பது எல்லை மீறி சென்றுக்கொண்டிருக்கிறது.
#    இதை சாப்பிடக்கூடாது.... இதைத்தான் சாப்பிடவேண்டும்....
#    இதை செய்யக்கூடாது.... இதைத்தான் செய்யவேண்டும்.... இப்படித்தான்      
      செய்யவேண்டும்....
#    இந்த ஆடையை உடுத்தக்கூடாது.... இதைத்தான் உடுத்தவேண்டும்....
#    இந்த மாதிரியான திரைப்படத்தில் நடிக்கக்கூடாது....
#    அறிவியல் சார்ந்த முற்போக்கு கருத்துக்களை வெளியிடக்கூடாது....
#    மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடாது....
#    இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இந்தியாவில் இரு....
      இஸ்லாமியர்கள் என்றால் பாகிஸ்தானுக்கு ஓடு....

          ''இது கூடாது'' என்று சொன்னதை மீறி யார் செய்தாலும்,  சங் பரிவார் என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் துணை அமைப்பை சேர்ந்தவர்கள் சத்தம் போடாமல் அவர்களை தீர்த்துக்கட்டும் ''தேச நலப்பணிகளில்'' ஈடுபடுவார்கள். கடந்த ஓராண்டு காலமாக இது போன்ற ''உயிர் பலி பட்டியல்'' என்பது நீண்டுகொண்டே போகிறது. இதுபோன்ற  மனித உரிமைகளுக்கெதிரான பிரச்சினைகளையோ அல்லது கொலைகளையோ இந்த நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திரமோடியோ அல்லது உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய ராஜ்நாத் சிங்கோ கண்டிக்காமலும், கண்டுகொள்ளாமலும் இருக்கின்றார்கள் என்பது தான் இந்த நாட்டின் சாபக்கேடு.
             இப்படியாக கடந்த ஓராண்டுகளில் மூடநம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்துவந்த முற்போக்கு எழுத்தாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புர்க்கி போன்றோர்கள் மதவெறிக் கூட்டத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்கள். இதில் என்ன வேடிக்கையென்றால் இந்த மூவரையும் கொலை செய்த கயவர்களை காவல்துறை இன்றுவரை கைது செய்யவில்லை என்பது தான். ஆனால் நாட்டில் எங்கோ மூன்று மூலைகளில் நடைபெற்ற இந்த உயிர்பலிகளை கண்டித்தும், இதுவரையில் கொலையாளிகளை கைது செய்யாததை கண்டித்தும் நாடு முழுதும் உள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களும், ஜனநாயக அமைப்புகளும் கண்டனக்குரல் எழுப்பி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் இந்த போக்கைக் கண்டித்து நாடு முழுதும் பல்வேறு மூலைகளில் இருக்கும் மத்திய அரசின் சாகத்ய அகாடமி விருதுகளை பெற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை மத்திய அரசிடமே திருப்பித்தந்து வருகிறார்கள்.
           மேலும் அண்மையில் கனடாவில் PEN International என்ற உலக எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களை கொண்ட அமைப்பின் 81வது மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 150க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இந்தியாவில் எழுத்துரிமையும், கருத்து வெளியிடும் உரிமையும் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டித்தும், இந்த உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், மூன்று பெரும் எழுத்தாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புர்க்கி ஆகியோர் மதவெறியர்களால் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை கொலை செய்த கொலையாளிகளை இதுவரையில் கைது செய்யாததை கண்டித்தும், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் போன்ற படைப்பாளிகளின் உயிர்களுக்கு பாதுகாப்புத் தரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் மத்திய அரசின் மீது காரித்துப்பினர்.
               அதுமட்டுமல்ல, நீதிக்காக போராடும் இந்திய எழுத்தாளர்கள் பக்கம் தாங்கள் இருப்பதாகவும், அவர்களின் போராட்டத்திற்கு எண்களின் ஆதரவுக்கரங்களை நீட்டுகிறோம் என்றும் மாநாட்டிலேயே பிரகடனப்படுத்தியது என்பது மத்திய அரசின் முகத்தில் கரியை பூசியது போல் ஆனது.  உலக எழுத்தாளர்கள் இந்திய எழுத்தாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது என்பது இந்திய எழுத்தாளர்களின் போராட்டங்களுக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துவிட்டது. எழுத்தாளர்களின் போராட்டங்களை பொதுமக்களாகிய நாமும் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிராமல், போராடும் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பக்கம் நிற்போம். 

கருத்துகள் இல்லை: