பிரதமர் நரேந்திரமோடி இன்று நாடு முழுதும் ''யோகா தினம்'' என்று சொல்லி யோகாசனத்திற்கு சம்பந்தமே இல்லாத - யோகாசனமே தெரியாத குழந்தைகளை எல்லாம் வருத்தெடுத்துவிட்டார். அதுமட்டுமல்ல புதுடெல்லியில் இன்று காலை ''ராஜபாதை'' என்ற முக்கிய சாலையில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடன் நடுரோட்டில் வித்தை காட்டுவது போல் யோகாசனம் செய்து நாட்டு மக்களுக்கு வேடிக்கைக்காட்டினார். இதை நாடு முழுதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் செய்தார். ஒரு நாட்டின் பிரதமர் எந்த அளவிற்கு வேலையில்லாமல் இருக்கிறார் என்பதை வெளிநாட்டு மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்திருப்பார்கள். அதுமட்டுமல்ல அவர் வித்தைக்காட்டிய அதே நேரத்தில் விடுமுறை நாளான இன்று, நாடு முழுதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் பள்ளிக் குழந்தைகளை யோகாசனம் செய்யும்படி மத்திய அரசால் கட்டாயப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது.
பள்ளிக்குழந்தைகளுக்கு ஏன் யோகா தினம் என்ற பெயரில் யோகாசனம் திணிக்கப்படுகிறது....? காரணம் என்ன...? நரேந்திரமோடி - ஆர்.எஸ்.எஸ் கூட்டாளிகளின் பல செயல் திட்டங்களில் இதுவும் ஒன்று.
யோகாசனத்தில் அப்படி என்ன இருக்கிறது...?
இந்தியாவில் யோகாசனம் என்பது ஆரம்பத்தில் ஒரு உடற்பயிற்சி மட்டுமே. நம் உடலில் உள்ள தசைகளையும், எலும்புகளையும் நெகிழ்வு தன்மை வாய்ந்ததாக - வளைவு தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு இந்த உடற்பயிற்சி பயன்படுத்தப்பட்டது. சீனா, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் பிரபலமாக செய்யப்படும் ''ஜிம்னாஸ்டிக்'' என்ற உடற்பயிற்சியினை போன்றது தான் யோகாசனமும் ஒரு உடற்பயிற்சியாகும். நம் நாட்டு மக்கள் அந்தக் காலத்திலிருந்தே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், உடல் திறனை காட்டவும் ஒரு சிலர் யோகாசனம் செய்தார்கள், ஒரு சிலர் எடை தூக்கி பழகினார்கள், ஒரு சிலர் சிலம்பம் கற்றார்கள், ஒரு சிலர் கபாடி போன்ற விளையாட்டுகளை விளையாடினார்கள், ஒரு சிலர் மைதானத்தில் உடற்பயிற்சி செய்தார்கள், ஒரு சிலர் நடனம் கற்றார்கள், ஒரு சிலர் மால்கம் - கூட்டமாக கம்பத்தில் வளைந்து உடற்பயிற்சி செய்து காட்டினார்கள். இவை அத்தனையுமே நம் நாட்டில் அவரவர் விருப்பத்திற்கேற்ப செய்து தேர்ந்த விளையாட்டுகள். பின்பு அவைகள் ஒரு கலையாக மாறிப்போனது.
இந்த சமயத்தில் தான் சுவாமி விவேகானந்தருக்கு பின்னாளில் வந்த இந்தியாவில் உருவான இந்துமத சாமியார்கள் மேலே சொன்ன விளையாட்டுக் கலைகளில் வித்தியாசமானதும், வேறு எந்த உபகரணங்களும் தேவையில்லாததுமான யோகாசனத்தை கைப்பற்றினார்கள். தங்களின் பிழைப்பிற்காகவும், ''சாமியார் தொழிலை'' பிரபலப்படுத்தவும் யோகா என்ற உடற்பயிற்சியை பயன்படுத்தினார்கள். வெறும் உடற்பயிற்சியாக மட்டுமல்லாமல் தியானம், சூரிய நமஸ்காரம், சமஸ்கிருதம் போன்ற மசாலாக்களை சேர்த்து இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாடினார்கள். இந்து மதத்தை பரப்பவும், ஆன்மிகம், பூஜை புனஸ்காரங்களை மக்களிடையே வளர்க்கவும் யோகாவை பயன்படுத்திக்கொண்டார்கள். இன்றைக்கு பல்வேறு நோய்களோடும், மன அமைதியில்லாமலும் அலைந்துகொண்டிருக்கும் மக்களை ஈர்ப்பதற்கு, யோகாசனம் செய்தால் அனைத்து நோய்களும் தீரும் என்றும், மனதில் அமைதி கிடைக்கும் என்ற வார்த்தை ஜாலங்களின் மூலம் மக்களை வரவழைத்து இந்துத்துவ கொள்கைகளை திணிக்கிறார்கள். இந்த யோகாவின் மூலம் சம்ஸ்கிருத மந்திரங்கள், தேவையில்லாத பூஜை - வழிபாட்டு முறைகள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை வெகு சுலபமாக இவர்களை நாடி வரும் மக்களின் புத்தியில் ஏற்றிவிடுகிறார்கள்.
இப்படிப்பட்ட யோகாசனத்தை தான் இந்த அறியா சனங்களின் மத்தியில் இந்த நாட்டின் பிரதமர் வித்தைக்காட்டி வேடிக்கை காட்டியிருக்கிறார். பிரதமர் மோடி அவர்களே, யோகாசனம் செய்தால் நோய் தீரும் என்கிறீர்களே... 98கோடி மக்களை பற்றியிருக்கும் கொடிய நோயான பசி தீருமா...? அமைதி கிடைக்கும் என்கிறீர்களே... படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்குமா...? யோகாசனத்தால் இதெல்லாம் சாத்தியமென்றால் சொல்லுங்கள் நாங்களும் உங்களோடு சேர்ந்து யோகா செய்கிறோம். நாட்டில் பசியும், பட்டினிச்சாவும், வேலையின்மையும் பெருகிவிட்டாதால் தான், இது மாதிரியான ''வித்தைகளை'' காட்டி திசைத்திருப்புகிறீர்கள் என்பதையும், இதன் மூலம் ''வேறு எதையோ'' சாதிக்க நினைக்கிறீர்கள் என்பதையும் இந்த நாட்டு மக்கள் உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை.
இன்னுமொன்று மோடிஜி இன்று யோகா தினம் என்று சொல்லி நடுரோட்டில் வித்தைக்காட்டியது போல், வேறொரு நாளை ''காமசூத்திரா தினம்'' என்று அறிவித்து நடுரோட்டில் ''வித்தை'' காட்டிவிடாதீர்கள். சொல்லமுடியாது செய்தாலும் செய்வீர்கள். காமத்திலும் மதத்தை கலந்தவர்கள் தானே நீங்கள். கோயில் கோபுரங்களும், சிற்பங்களும் அதைத்தானே சொல்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக