வெள்ளி, 19 ஜூன், 2015

எல்.ஐ.சியை காப்பாற்ற முகவர்களை காப்பாற்றுங்கள்...!


                 இன்றைக்கு நாட்டில் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக எல்லா வகையான தொழிலாளர்களும் குடும்பம் நடத்த முடியாமல் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். அனைத்து வகையான மக்களும் வரவு எட்டணா... செலவு பத்தணா... என்ற கடுமையான சூழ்நிலையில் தான் தங்கள் குடும்பத்தை தினமும் ஓட்டுகிறார்கள் என்பதை நாம் நேரடியாக பார்க்கிறோம். வாழ்க்கை நடத்துவதற்கே தடுமாறி  சிக்கித் தவிக்கும் இந்த வகையான தொழிலாளர்களில் எல்.ஐ.சி முகவர்கள் மட்டும் விதிவிலக்கல்ல.  
              நான் பணிபுரியும் எல்.ஐ.சி - யில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் அலுவலக நேரத்தில் என் கண் எதிரே பார்க்கும் தொழிலாளர்கள் எல்.ஐ.சி முகவர்கள் தான். மேலாளர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்கள் போன்ற அலுவலகத்திற்குள்ளேயே வேலைபார்ப்பவர்களும், முகவர்கள் என்ற பெயரில் வெயில் - மழை என்று பாராமல் அலுவலகத்துக்கு வெளியில் களத்தில் வேலைபார்ப்பவர்களும் இணைந்த ''இன்சூரன்ஸ் தொழிற்சாலை'' தான் எல்.ஐ.சி ஆப் இந்தியா என்ற பொதுத்துறை நிறுவனம். இன்சூரன்ஸ் துறை தனியார்மயத்திற்கு பின்னும், இன்றைக்கு ஆலமரமாய் விரிந்து பரந்து உயர்ந்து வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முகவர்களின் எல்லையில்லா உழைப்பும் காரணம் யாராலும் மறுக்கமுடியாது. நேற்றைக்கு கூட எல்.ஐ.சி நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிபரத்தில் கடந்த 2014-15 ஆம் ஆண்டில் எல் ஐ சி-யின் வளர்ச்சியை பற்றி சொல்லும் போது, அந்த ஆண்டில் மட்டும் எல்.ஐ.சி சேர்த்த உபரித்தொகை என்பது 10.33 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று பெருமையுடனும், பெருமிதத்துடனும் சொல்லியிருக்கிறது. ஆனால் முகவர்களோ இவ்வளவு வளர்ச்சியும் தங்களால் தான் நிகழ்ந்தது என்ற உண்மையை கூட அறியாதவர்கள். யானையின் பலம் யானைக்கே தெரியாது என்பது போல் தான், முகவர்களது நிலையும் பரிதாபகரமானது.
      எல்.ஐ.சி-யில் மொத்தம் 14 இலட்சம் முகவர்கள் பணியாற்றுகிறார்கள். எல்.ஐ.சியின் வளர்ச்சியில் இவர்கள் உழைப்பு மிக மிக அதிகம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால் இன்றைக்கு இவர்களில்  90 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாழ்க்கையில் வளர்ச்சி என்பதே இல்லாத நிலையே உள்ளது. இவர்கள் தினமும் உழைக்கின்ற  நேரம் என்பது அதிகம். அனால் இவர்களுக்கு வருகின்ற வருமானம் என்பது மிக மிக சொற்பமே. இவர்களின் உழைப்பிற்கேற்ற வருமானம் இவர்களுக்கு கிடைப்பதில்லை. இவர்களும் பல வாய்ப்பாளர்களை பார்க்க தவறுவதில்லை. வீடு வீடாக, கடை கடையாக, அலுவலகம் அலுவலகமாக, தெருத்தெருவாக அலைந்துகொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் இன்சூரன்ஸ் வணிகம் மந்தமாக இருக்கிறது என்பது தான் உண்மை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
          1) இன்சூரன்ஸ் தனியார் மயத்திற்கு பின் - 2000 ஆண்டுக்கு பின் எல்.ஐ.சிக்கு போட்டியாக 24 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள்.  இன்னும் பல கம்பெனிகள் உள்ளே நுழைவதற்கு தயாராக இருக்கின்றன.
        2) நாட்டில் நிலவும் பணவீக்கம் - மக்களிடம் பணம் இல்லை - மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துவிட்டது என்பதும் மிக முக்கிய காரணம். அதனால் புதிதாக காப்பீடு செய்வதற்கு மறுப்பது மட்டுமல்ல, ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் பாலிசிக்கு தொடர்ந்து கட்டவேண்டிய பிரிமியத்தை கட்டுவதற்கும் தயங்குகிறார்கள்.  
         3) உலகிலேயே வேறு எங்குமில்லாத - கடந்த 55 ஆண்டுகளாக மக்களிடம் பிரசித்திபெற்ற 50க்கும் மேற்பட்ட அற்புதமான திட்டங்களை திரும்பப்பெற்று, தனியாரை வாழவைக்கும் முட்டாள்தனமான செயல்.(இது யாருடைய வில்லங்கமோ...?)
      4) திரும்பப்பெறப்பட்ட அத்தனை திட்டங்களுக்கும் இணையான திட்டங்கள் இன்றில்லாதது மட்டுமல்ல, பத்துக்கும் குறைவான திட்டங்களே எல்.ஐ.சியின் கைவசம் உள்ளது என்பது மிகப்பெரிய குறை. 
       5) புதிதாக அறிமுகம் செய்த திட்டங்களும் மக்களை கவருவது போலில்லை என்பது மட்டுமல்ல, பிரிமிய தொகையும் முன்பை விட அதிகம். இதில் சேவை வரி வேறு கூடுதலாய் வசூலிக்கப்படுகிறது. அதனால் பாலிசிதாரர்கள் கட்டவேண்டிய தொகை என்பது முன்பை விட அதிகம். தொகையை கேட்டவுடன் பாலிசி எடுக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் ஓடிப்போய்விடுகிறார்கள்.     
             இவைகளெல்லாமே தனியார் கம்பெனிகளை ஊக்குவிக்க எல்.ஐ.சிக்கு எதிராக மத்திய அரசு செய்த வில்லத்தனமான செயல் என்பதை மக்களும் முகவர்களும் புரிந்துகொள்ளவேண்டும். மேலே சொல்லப்பட்டவைகள் தான் முகவர்களின் புதுவணிகம் பாதிக்கப்பட்டதற்கும், தொடர் வருமானம் பாதிக்கப்பட்டதற்குமான காரணங்கள். புதிதாகவும் மக்கள் காப்பீடு செய்வதுமில்லை, ஏற்கனவே வைத்திருக்கும் பாலிசிகளுக்கும் பிரியத்தொகையும் கட்டுவதில்லை. அதனால் முகவர்களின் வருமானம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது என்பதை நான் நேரிடையாக பார்கிறேன். அதனால் பல முகவர்கள் மனநிலையில் பாதிப்படைந்திருக்கிறார்கள். 
        பல முகவர்கள் ஏமாற்றத்தின் காரணமாக இந்த முகவர் தொழிலையே விட்டுவிட்டு வேறு தொழிலை பார்க்க சென்றுவிட்டார்கள். சில பேர் இந்த தொழிலை விட்டு செல்ல மனசில்லாமல், இதையும் செய்கிறார்கள். கூடுதலாக வேறு தொழிலையும் செய்கிறார்கள். பல எல்.ஐ.சி முகவர்கள் ஓட்டல்களிலும், மளிகைக்கடைகளிலும் வேலை செய்கிறார்கள். ஆட்டோ ஓட்டுகிறார்கள். இரவு நேர செக்யூரிட்டியாகவும் கூட வேலை செய்கிறார்கள் என்பது கொடுமையான உண்மை.  
         இப்படியாக மத்திய அரசின் தேச விரோத கொள்கைகளின் காரணமாக எல்.ஐ.சி தன்னுடைய முகவர்களை இழந்து, புது வணிகம் பெறுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருக்கிறது. எல்.ஐ.சியின் வளர்ச்சிக்கு காரணமாய் இருக்கும் முகவர்களை பாதுகாப்பது என்பது எல்.ஐ.சியின் தலையாய கடமை. முகவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தையும்  உறுதி செய்வதன் மூலம் தான் முகவர்களை எல்.ஐ.சியால் தக்கவைக்க முடியும். முகவர்களை காப்பாற்றுவதன் மூலம் தான் எல்.ஐ.சி-யை காப்பாற்று முடியும் என்பதை உணர்ந்து செயலபடவேண்டும்.

கருத்துகள் இல்லை: