சனி, 30 மே, 2015

கடனை வசூல்பண்ண துப்பில்லாத இந்திய வங்கிகள்...!


                 விஜய் மல்லையாவின் கிங்க்பிஷ்ஷர் நிறுவனத்திற்கு கொடுத்தக் கடனை திரும்ப வசூல் பண்ணமுடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்று  ஒரு இந்திய அரசு வங்கி United Bank of India பொறுப்பில்லாமல் சொல்கிறது. இந்த வங்கி மல்லையாவிற்கு கொடுத்தது 400  கோடியாம். இது போல் மற்ற இந்திய அரசு வங்கிகள் எல்லாம் அவருக்கு கடன் கொடுத்ததை சேர்த்தால் 7000 கோடிகளை தாண்டும்.
                 இதே அரசு வங்கிகளிடமிருந்து  ஒரு ஏழை விவசாயியோ அல்லது ஒரு சில்லறை வியாபாரியோ சில ஆயிரங்களை மட்டுமே  வாங்கிவிட்டு திருப்பிகட்டவில்லை என்றால் சும்மா விடுவார்களா...?

 இன்னும் எழுதுகிறேன்    

டாஸ்மாக்கில் தள்ளாடும் தமிழகம்...!




             அண்மையில் விகடனில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் செய்தி. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டிருக்கிறது.   கடந்த 2013-14 ஆம் ஆண்டில் தமிழக அரசு தன்னுடைய ''இலட்சிய திட்டமான'' டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்காக எந்தெந்த மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களிலிருந்து எவ்வளவு தொகைக்கு மதுபான பாட்டில்களை கொள்முதல் செய்திருக்கிறார்கள் என்ற விபரங்களை பெற்று வெளியிட்டிருக்கிறார்கள். இதில் பீர் கொள்முதல் கணக்கைப் பற்றி தரப்படவில்லையாம். அதையும் சேர்த்தால் இன்னும் பலகோடிகளை தாண்டும்.  இது கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டின் நிலைமை தான். கடந்த ஆண்டின் கொள்முதல் என்பது இன்னும் அதிகமாக இருக்கும். நடப்பு ஆண்டிற்கான கொள்முதல் ''மடை திறந்து ஓடும்'' அபாயம் இருக்கிறது. ஏனென்றால் நடப்பு தமிழக அரசின் பட்ஜெட்டே டாஸ்மாக்கை நம்பித்தான் போடப்பட்டிருக்கிறது. அன்றைய முதலமைச்சரும், இன்றைய நிதியமைச்சரும் சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும்போது, டாஸ்மாக்கிற்கு ரூ.30,000 கோடி அளவிற்கு இலக்கு வைத்து, இந்த மதுபான விற்பனையிலிருந்து வரும் வருவாயை வைத்து தான் பட்ஜெட்டில் ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையை ஈடுசெய்யவேண்டும் என்று கணக்கை நேர் செய்து பேசினார். அப்போதே பட்ஜெட்டிலுள்ள தள்ளாட்டம் நமக்கு புரிந்தது. டாஸ்மாக்கில் தானடா தமிழக அரசே செயல்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.   
             ஓட்டுகள் பொறுக்குவதற்கு இந்த விஷயத்தில் திமுகவும், அதிமுகவும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. இதில் மட்டும் மாற்றுக் கருத்தில்லாமல் ஒத்துப்போகிறார்கள். தமிழகத்தின் குடி கெடுத்தவர்கள் இவர்கள் தான் என்பதை டாஸ்மாக்கினால் பாதிப்படைந்த குடும்பம் நிச்சயம் மறந்திருக்காது.  ''குடி குடியை கெடுக்கும்'' என்று போதனை செய்துகொண்டே ''குடி கொடுத்து எங்கள் குடியை கெடுக்கும் அரசே'' என்று கொதிக்கவேண்டாமா தமிழக மக்கள்...?  அந்த குடியின் வருமானத்தில் அரசு வாங்கிக்கொடுக்கும் இலவசங்களை மறுக்கவேண்டாமா தமிழக மக்கள்...? சிந்தித்து பாருங்கள்.

மநுதர்ம சூழ்ச்சியும் பார்ப்பனிய தந்திரமும் இணைந்த சென்னை ஐ.ஐ.டி .,..!


                 ஒரு காலத்தில் பார்ப்பனிய கோட்டையாய் திகழ்ந்த மத்திய அரசு நிறுவனங்களெல்லாம் தகர்ந்துவிட்ட நிலையில், உயர்சாதியை சேர்ந்தவர்களும், வசதிப்படைத்தவ்ர்களும் மட்டுமே படிக்கக்கூடிய சென்னை ஐ.ஐ.டி-யில் குறிப்பிட்ட சில மாணவர்களால் நடத்தப்பட்டு வந்த ''அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டம்'' என்ற அமைப்பை மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் ஐ.ஐ.டி நிர்வாகம் தடை செய்திருக்கிறது.  அந்த வாசிப்பு வட்டத்திலும், அவர்களது முகநூலிலும் மோடியைப் பற்றியும், அவரது ஆட்சியைப் பற்றியும் விமர்சனம் செய்கிறார்களாம். அதை தாங்கிக்கொள்ள முடியாத ஆட்சியாளர்களும், நிர்வாகமும் கூட்டு சேர்ந்து ஜனநாயகத்தின் குரல்வலையை நெரித்திருக்கிறது. விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு எதற்கு ஆட்சியையும், பதவியும்...? தூக்கியெறிந்து விட்டு ஓடவேண்டியது தானே...! ஆட்சியாளர்களின் அவலங்களை பார்த்து முணுமுணுத்தல் கூட ஆகாதென்றால் அரசியல் அமைப்பு சட்டம் அளித்துள்ள கருத்து சுதந்திரத்தை  குப்பைத்தொட்டியில் தூக்கிப் போடவேண்டியது தானா...?   இதற்கு பேர் தான் மோடியின் தூய்மை இந்தியா திட்டமா...?
              ஐ.ஐ.டி நிர்வாகத்தின் இந்த செயல் என்பது, மநுதர்ம சூழ்ச்சியும், பார்ப்பனிய தந்திரமும் இணைந்த பாசிச குணத்தின் வெளிப்பாடு என்பதையும், சுதந்திரமான கல்விச் சூழலை தடை செய்யும் சர்வாதிகார போக்கு என்பதையுமே காட்டுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும், பொருளாதார மேதைகளும், வரலாற்று ஆய்வாளர்களும் மாணவர்களோடு சேர்ந்து நாட்டிலுள்ள சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகளை ஆய்வு செய்யும் களமாக இருந்துவரும் அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டத்தையும் அதனுடைய முகநூல் செயல்பாட்டையும் தடை செய்வதென்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
                மாணவர்களின் கருத்து சுதந்திரம் என்பது அறிவை விசாலமாக்கி அகண்டமாய் சுடர்விடும் பாரதியின் அக்னி குஞ்சு... அது அவலநிலையில் இருக்கும் சமூகத்திற்கு நல்வழிகாட்டும் கலங்கரைவிளக்கம்... அதன் செயல்பாடுகளை தடை செய்வதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. மத்திய அரசும், நிர்வாகமும் தன்னுடைய போக்கை கைவிடவேண்டும். இல்லையேல்... அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை... அச்சமில்லை அச்சமென்பதில்லையே... என்ற பாரதி கற்றுத்தந்த பாடத்தை மறவாதவர்கள் எங்கள் வீட்டுப்பிள்ளைகள் என்பதை இவர்களுக்கு  நினைவூட்ட விரும்புகிறோம்.              

ஞாயிறு, 24 மே, 2015

இது தான் மோடியின் ஓராண்டு சாதனை...!


                    காங்கிரஸ் கட்சியின் மெகா ஊழல்களிலிருந்து  நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் ''வளர்ச்சி நாயகனாகிய''  நான் ஆட்சிக்கு வரவேண்டும். நான்  ஆட்சிபொறுப்புக்கு  வந்துவிட்டால்  நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடும்.  சாதாரண டீக்கடை வைத்து அரசியலில் முன்னுக்கு வந்த  நான் அரசியலில் நேர்மையானவன். நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பது மட்டுமல்ல. இந்திய பணக்காரர்கள் வெளிநாட்டு வங்கிகளில்  பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தையெல்லாம் மீட்டுவந்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் பதினைந்து இலட்சம் ரூபாயினை போடுவேன்'' என்றெல்லாம் வார்த்தை ஜாலங்களை மக்களிடம் உதிர்த்து, தன்னுடைய  வார்த்தை ஜாலங்களை மக்கள் நம்புவதற்காக  இந்திய கார்ப்பரேட் ஊடகங்களையும், அதற்கு ஆகிற செலவுகளை கோடிக் கோடியாய் கொட்டுவதற்கு பெருமுதலாளிகளையும் பயன்படுத்திக்கொண்டு, 31 சதவீத மக்களை தன் வலையில் விழச்செய்து அவர்களின் வாக்குகளை மட்டுமே பெற்று  எண்ணிக்கை அடிப்படையில்  நரேந்திரமோடி மத்தியில் ஆட்சியில் அமர்ந்து ஓராண்டு நிறைவுபெறுகிறது. 
            இவர் ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து 30 நாள், 100 நாள், 200 நாள், 300 நாள், 365 நாள் என ஒரு சினிமா படத்தை ஓட்டுவது போல் தான் ஆட்சியை ஒட்டினாரே தவிர, தேர்தல் நேரத்தில் இவர் உதிர்த்த  வார்த்தை ஜாலங்கள் என்பது மாயாஜாலங்களாகவே போய்விட்டன. அவர் சொன்னது போல் தேனாறும் பாலாறும் ஓடவில்லை. மக்கள் பதினைந்து இலட்சத்தை எதிர்ப்பார்த்து ஏமார்ந்தது தான் மிச்சம். விலைவாசி  கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே போய்கொண்டிருக்கிறது. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில்லை. வேலையிலிருப்பவர்களுக்கு வருமான உயர்வு இல்லை. மக்கள் விழி பிதுங்கி, நாக்கு வெளியே வந்து சாகிறார்கள். வருமானமின்மையால் விவசாயிகள் மட்டுமல்லாமல், இப்போது தொழிலாளர்கள், ஊழியர்களும்  தற்கொலை சாவில் பங்குப் போட்டுக்கொள்கிறார்கள். 
                நாட்டில் இப்படி எல்லாம் பிரச்சனைகள் இருக்க  மோடியின் அமைச்சர்களும், எம்பிக்களும், அவரது   கட்சிக்காரர்களும்   திட்டமிட்டே இஸ்லாமிய  மக்களையும், தலித் மக்களையும்  வம்புக்கு இழுத்துக்கொண்டும், கலவரங்களை நடத்திக்கொண்டும், அமைதியை குலைத்துக்கொண்டும் இந்த பிரச்சனைகளை மக்களின் பார்வைகளிலிருந்து திசைத்திருப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. ''இஸ்லாமியர்களுக்கு ஓட்டுரிமையை ரத்து செய்யவேண்டும்... விரும்பி மதம் மாறிய இந்துக்கள் மீண்டும் இந்து மதத்திற்கு வரவேண்டும்... இந்து பெண்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.... இஸ்லாமிய பெண்களுக்கு கருத்தடை செய்யவேண்டும்... தலித் மணமகன் குதிரை ஊர்வலம் சென்றால் அடி-உதை... தலித் இளைஞன் தன்னுடைய செல்லிடபேசியில் அம்பேத்கர் ''ரிங்டோன்'' வைத்திருந்தால் கொலை... இஸ்லாமியர்களோ தலித் மக்களோ மாட்டிறைச்சி சாப்பிட தடை... சாப்பிட்டால் சிறை தண்டனை... மாட்டிறைச்சி சாப்பிட வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்...'' இப்படியெல்லாம் நாளொரு மேனியும்,  பொழுதொரு வண்ணமுமாக மோடியின் ஆட்கள் விஷத்தை கக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மோடியோ இதுவரையில் அதை கண்டித்ததே இல்லை என்பதும்  தான் உண்மை.   இது தான் மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக்கட்சியின் ஓராண்டு சாதனையாக பொதுமக்கள் பார்க்கிறார்கள். 
               இது மட்டுமா மோடியின் சாதனைகள்...? இன்னும் இருக்கின்றனவே...! அந்நிய பயண மோகம் கொண்ட பிரதமர் மோடி கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை செலவு செய்து கடந்த    பன்னிரெண்டு மாதங்களில் பத்தொன்பது நாடுகளுக்கு பயணம் செய்து வரலாறு படைத்திருக்கிறார். வெளிநாடுகளுக்கு சென்று இரு நாடுகளுக்கான நல்லுறவுகளைப் பற்றி பேசுகிறாரா...? என்றால் இல்லை. அந்த நாடுகளில் வாழும் இந்தியர்களையும், அந்த நாட்டு மக்களையும் கவருவதற்காக வகைவகையான ஆடை அலங்காரங்கள், போட்டோவிற்கு ''போஸ்'' கொடுப்பது, இளைஞர்களோடு ''செல்ப்பி'' எடுத்துக்கொள்வது போன்ற கோமாளித்தனங்களையும் மோடியின் ஓராண்டுகால சாதனைகளில் சேர்த்துக்கொள்ளவேண்டும். 
             இவைகள் தவிர நாட்டின் வளர்ச்சி... மக்களின் பொருளாதார வளர்ச்சி அனைத்தும் பூஜ்ஜியம் தான்.  பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியம் நடத்தும் ''போஸ் பாண்டி'' மோடியின் ஆட்சியின் மீது மக்களுக்கு ஏமாற்றமும், வெறுப்பும், கோபமும் தான் உள்ளது என்பதும் யாராலும் மறைக்கமுடியாத உண்மை. 

108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை தமிழக அரசு உயர்த்தவேண்டும்...!


              புதுச்சேரி தோழர்கள் நாங்கள் நான்கு பேர் சென்ற வாரம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்று நாள் மாநில மாநாட்டில் பிரதிநிதியாக  பங்கேற்க விருதுநகர் சென்றிருந்தோம். புதுச்சேரி தோழர் ஒருவரின் கார் சென்ற சனிகிழமை விடியல் காலை அவரே ஓட்டிவர நாங்கள் மாநாட்டு அரங்கை சென்றடைந்தோம். சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என மூன்று நாட்கள் மாநாட்டிலேயே கரைந்துபோனோம். இறுதி நாள் திங்களன்று இரவு விருதுநகரிலிருந்து புதுச்சேரி சென்றடைய இரவு முழுதும் பயணம் செய்யவேண்டியிருக்கும் என்பதால், நாங்கள் மாலையில் நடைபெற்ற பேரணியை முடித்துக்கொண்டு, பொதுக்கூட்டம் ஆரம்பித்தவுடன் இரவு ஏழு மணிக்கே காரில் ஊருக்கு கிளம்பிவிட்டோம். 
                கார் ஓட்டும் தோழருக்கு தூக்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் பேசிக்கொண்டே வந்தோம். வழியில் திருச்சியை கடந்து ஓரிடத்தில் இரவு உணவு அருந்தினோம். அதன் பிறகு நல்லிரவை நெருங்குவதால் நிதானத்துடனும், விழிப்புடனும் பொறுமையாக வந்துகொண்டிருந்தோம். அப்போது திருச்சி - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் வேப்பூருக்கு அருகில் இறைஞ்சி என்ற கிராமத்தில், எங்களுக்கு முன் சிறிது தூரத்தில் சென்றுகொண்டிருந்த மாருதி ஆம்னி கார் ஒன்று முன்னே சென்றுகொண்டிருந்த அளவுக்கு அதிகமாக பஞ்சு மூட்டைகளை அடுக்கிக்கொண்டு சென்ற மினிலாரி மீது பலமாக மோதி இடது பக்கத்திலிருந்த பள்ளத்தில் இருந்த புதரில்  இறங்கிவிட்டது.  உள்ளே இருப்பவர்களோ  வெளியே வரமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்னே  இரண்டு கார்களில் சென்றவர்கள் கார்களை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி ஓட, நாங்களும் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினோம். 
            அதற்குள் காரிலிருந்து  தலையிலும், முகத்திலும் அடிப்பட்டு இரத்தம் வழிய வழிய ஒவ்வொருவராக சாலையோரத்திற்கு வந்தார்கள். இரத்தவெள்ளத்தில் மயக்கநிலையில் இருந்த ஒரு பெண்மணியை இரண்டுபேர் தூக்கிக்கொண்டு வந்து சாலையில் போட்டார்கள். குழந்தை, பெரியவர் என நான்கு, ஐந்து பேர்களுக்கு தலையில் அடிப்பட்டு இரத்தம் வழிய நின்றிருந்தார்கள். அந்த காரை ஓட்டிவந்த ஓட்டுனர் கார் நசுங்கி வெளியே வரமுடியாமல் உள்ளேயே தவித்துக்கொண்டிருந்தார். 
                  இதெல்லாம் நடந்து கொண்டிருந்த போதே அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவேண்டும் என்பதற்காக நான் 108 ஆம்புலன்ஸை அழைப்பதற்காக 108-க்கு மிகுந்த பதற்றத்துடன் செல்லிடபேசியின் மூலம் போன் செய்தால் அதை எடுப்பதற்கே நீண்டநேரம் ஆனது. இந்த இடத்தில் விபத்து ஏற்பட்டிருக்கிறது உடனடியாக ஆம்புலன்ஸை அனுப்பிவையுங்கள் என்று சொன்னால், அந்த பக்கத்திலிருந்து விபத்து நடந்த இடம் எந்த ஊரு, எந்த மாவட்டம், எந்த தாலுக்கா என ஒவ்வொரு கேள்வியாக நிதானமாக கேட்கிறார்கள். என்னாங்க கேட்கிறீங்க...? நாங்க விபத்தை பார்த்துவிட்டு உங்களை அழைக்கிறோம். எந்த ஊரு என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. மாவட்டம், தாலுக்கா என்று கேட்டால் எப்படி தெரியும் என்று கேட்டாலும் மீண்டும் மீண்டும் அதையே தான் கேட்கிறார்கள். அதற்குள் அந்த ஊரிலிருந்த சிலபேர் கூடிவிட்டார்கள். அப்போது தான் எங்களுக்கே தெரிந்தது. அந்த ஊர் வேப்பூருக்கு பக்கத்தில் உள்ள இறைஞ்சி என்பதும், உளுந்தூர்பேட்டையிலிருந்து பதினாறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்றும் சொன்னாலும் அவர்கள் பதட்டமே இல்லாமல் கொஞ்சம் இருங்க என்று சொல்லிவிட்டு பேசாமல் அமைதியாகவே இருந்தார்கள். பிறகு தொலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டு மீண்டும் கூப்பிட்டேன். மறுபடியும் முதலிலிருந்து எந்த ஊரு, எந்த தாலுக்கா, எந்த மாவட்டம் என்று கேட்டார்கள். இப்ப தானே சொன்னேன் அதே இடந்தாங்க... சீக்கிரமா ஆம்புலன்சை அனுப்பி வையுங்க என்று நான் சொன்னதும், அவர்கள் ''ஆம்புலன்ஸ் இப்போ ஒன்னு கூட இல்லைங்க... எல்லாம் பிஸியா இருக்கு... கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க''  என்று பொறுப்பில்லாமல் பதில் சொன்னார்கள். அதற்குள் வந்திருந்த எங்கள் தோழர், தேசிய நெடுஞ்சாலை துறையின் அவசர உதவி எண்ணை வழியில் பார்த்தேன். அதற்கு போட்டுப்பாருங்கள் என்று சொன்னார். அந்த எண்ணை போட்டு அழைத்து வைப்பதற்குள் அங்கே வேகமாக வந்து சேர்ந்தது.
           அவசர உதவிக்கு 108 - ஐ அழையுங்கள் என்று விளம்பரம் செய்திருக்கிறார்களே தவிர அவசர உதவி என்பதற்கே பொருள் இல்லாமல் செய்துவிடுகிறார்கள். இப்போதெல்லாம் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்தின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல்  மாநில அரசு ஆம்புலன்ஸ் வாகனத்தின் எண்ணிக்கையை உயர்த்தாமல் இருப்பது நியாயம் தானா...? இனியாவது தமிழக அரசு இதை கவனிக்கவேண்டும். விபத்தில் சிக்கும் பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு போதுமான எண்ணிக்கையில்  ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கி இயங்கச்செய்யுங்கள்.  

வியாழன், 21 மே, 2015

எதிர்பாராத பணிமாற்றமும் இடமாற்றமும்...!


            உங்களுக்கு எதிர்பாராத பணிமாற்றமும், இடமாற்றமும் உண்டாகும் என்று சோதிடத்தில் சொல்வது போல நான் சற்றும் எதிர்பாராத பணிமாற்றமும், இடமாற்றமும் என் விருப்பத்தைக் கேட்காமலேயே இன்று மிகுந்த அவசரத்துடன் என்னை நாடி வந்தது. மாறும் என்பதை தவிர அனைத்தும் மாறக்கூடியது தான் என்ற விதி எனக்கும் பொருத்தமானது தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. கடந்த 2003 -ஆம் ஆண்டில் நான் எல்.ஐ.சி திண்டிவனம் கிளையிலிருந்து மாற்றலாகி புதுச்சேரி முகவர் பயிற்சி மையத்திற்கு, மையத்தின் அலுவலகப் பணிகளுக்கும், கூடுதலாக பயிற்சி ஆசிரியர் பணிக்காகவும் புதுச்சேரி முகவர்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்ததிலிருந்து 12 ஆண்டுகள் இன்சூரன்ஸ் கல்விப்பணி நேற்றோடு முடிவுற்றது. எதிர்பாராமல் திடீரென்று நிர்வாகம் பயிற்சி மையத்திலிருந்து சாரம் கிளை அலுவலகத்திற்கு என் விருப்பமில்லாமல் மாற்றம் செய்துவிட்டது. வகுப்பை முடித்துவிட்டு மாலையில் தான் அதே கட்டிடத்தில் இருக்கும் கிளை அலுவலகத்தில் கனத்த மனத்துடன் சேர்ந்தேன்.
               எனது 28 ஆண்டுகால எல்.ஐ.சி பணியில் 12 ஆண்டுகால முகவர் பயிற்சி பணியென்பது மகத்தானது... நிறைவானது. இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் 15 நாட்கள், 8 நாட்கள் மற்றும் 4 நாட்கள் என மொத்தம் 378 பயிற்சி வகுப்புகளில்  சுமார் 4000க்கும் மேற்பட்டவர்களுக்கு தடையின்றி இன்சூரன்ஸ் பாடம் நடத்தியிருக்கிறேன். என் வகுப்பு என்பது வெறும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட வகுப்பாக மட்டுமில்லாமல், பள்ளிப் பாடங்களையும், கல்லூரிப் பாடங்களையும் மட்டுமே படித்துவிட்டு வருகின்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள், வேறு வேலையில் இருப்பவர்கள், வேலையிலிருந்து  ஓய்வுபெற்றவர்கள் என அனைவருக்கும் அவர்கள் விரும்பி ஏற்கும்படியான தேசபக்தி, சமூக அக்கறை, மனிதநேயம், விழிப்புணர்வு, எல்.ஐ.சி பாதுகாப்பு, நேர்மை, தனிமனித ஒழுக்கம்   இவைகளோடு அறிவியல், வரலாறு, பொருளாதாரம், அன்றாட நிகழ்வுகள் ஆகிய பாடங்களையும்  இன்சூரன்ஸ் பாடத்தோடு கலந்து நடத்தும் வகுப்பாகத்தான் இருக்கும். என்னுடைய பாடம் நடத்தும் இந்த பாணி வகுப்பிலுள்ள அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்கும். ஆனால் இந்த பாடம் என்பது  வெளியிலிருக்கும் பல பேருக்கு வயிற்றெரிச்சலையும் தந்திருக்கிறது. வெறும் இன்சூரன்ஸ் மட்டும் நடத்தவேண்டியது தானே ஏன் தேவையில்லாமல் இதையெல்லாம் நடத்துகிறார் என்று எனக்கு பின்னால் எதிர்த்தவர்கள் பலர் உண்டு. அதேப்போல் பல இடங்களில் உள்ளதை  போல் நான் அவர்களுக்கு தகுந்தாற்போல் நேர்மை தவறி   வளைந்து கொடுப்பதில்லை. இதெல்லாம் அவர்களுக்கு எரிச்சலை ஊட்டியது.  வகுப்பிற்கு வருகின்ற முகவர்களுக்கு பலவிதமான செய்திகளை கொடுத்து விழிப்புணர்வை உண்டாக்கினேன். இதுவும் பலபேருக்கு எரிச்சலை உண்டாக்கியது. ஊழியர் - முகவர் என்ற வித்தியாசம் பாராட்டாமல் அனைத்து முகவர்களோடு பழகுவேன். அதனால்  அனைத்து முகவர்களும் தோழமையோடு என்னோடு தோளோடு தோள் சேர்த்து நிற்கிறார்கள். அவர்களின் உரிமைக்கான போராட்டத்தில் அவர்களோடு வீதியில் நின்று போராடுவேன். இதுவும் பலபேருக்கு எரிச்சலையும், கோபத்தையும் உண்டாக்கியது. அதனால் அவர்கள் தங்கள் உரிமைகளுக்கு போராடினார்களோ இல்லையோ, என்னை அங்கிருந்து தூக்குவதற்கு கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக போராடி தோற்றுத்தான் போனார்கள் என்பது தான் உண்மை.
              ஆனால் அண்மையில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய இன்சூரன்ஸ் திருத்த மசோதாவின் மூலம் முகவர் பயிற்சி வகுப்பிற்கான தேவையும், அவசியமும் குறைக்கப்பட்டுவிட்டதால், பயிற்சி மையத்தில் என்னுடைய பணியும் குறைந்து போய்விட்டபடியால் எனக்கு இந்த கட்டாயப்பணி மாற்றம் என்பது பலபேருக்கு சாதகமாகிவிட்டது. புதிய சட்டம் வென்றுவிட்டது. என்றாலும் இடமாற்றமும், பணிமாற்றமும் எனக்கு எந்தவித மனமாற்றத்தையும் உண்டு பண்ணாது. எல்.ஐ.சி பணியோடு தொடர்ந்து முகவர் சேவையும், மக்களை பணியும் ஆற்றுவேன் என்ற நெஞ்சுறுதி  எனக்கு இருக்கிறது. இனி மக்கள் சேவை என்பதும், உழைப்பாளி மக்களுக்கான போராட்டம் என்பதும்  அலுவலகப்பணியாக  என்  இருக்கையிலிருந்து தொடங்கும். 

வெள்ளி, 15 மே, 2015

ஓட்டுகளை கவர மோடியின் புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள்..!

                 
        ஒரு வாரகாலமாக நீங்கள் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் வங்கிகளிலிருந்து மத்திய அரசின் குறைந்த பிரிமியத்தை கொண்ட  புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி உங்கள் கைபேசியில் குறுஞ்செய்தியாக வந்துகொண்டேயிருக்கிறது பார்த்தீர்களா...? மோடி தலைமையிலான மத்திய அரசு நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டில் செய்யப்பட்ட அறிவிப்பு தான் தற்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஓட்டுகளை குறிவைத்து நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமிது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மோடியின் அரசியல் வித்தைகளில் இதுவும் ஒன்று. 
             என்றாலும் நான் பணிபுரியும் நிறுவனம் சம்பந்தப்பட்ட திட்டம் என்பதற்காக மட்டுமல்லாமல், இத்திட்டம் அனைத்து பயனாளிகளையும் சென்று அடையவேண்டும் என்ற அடிப்படையில் இதை எழுதுகிறேன். 
                   பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் திட்டமும்,  பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு திட்டமும்  நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளிலும் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. 
     #  பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) என்ற இத்திட்டத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ.12/-ம்,  பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்ற இத்திட்டத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ.330/-ம் அவரவர் வங்கிக் கணக்கிலிருந்து கழித்துக்கொள்ளப்படும். 
                # 18 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு மேற்கண்ட இரண்டு திட்டங்களும் பொருந்தும். அவர்களின் கணக்கிலிருந்து மொத்தமாக ரூ.342/- கழித்துக்கொள்ளப்படும். 
                 # 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது திட்டம் மட்டுமே பொருந்தும். அதற்காக ரூ.12/- மட்டுமே கழித்துக்கொள்ளப்படும். 
              # இதற்கான விண்ணப்பத்தை உங்கள் அருகில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்திலோ அல்லது நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலோ பெற்றுக்கொள்ளலாம். இரண்டு திட்டங்களுக்கும் தனித்தனியே விண்ணப்பங்கள் உள்ளன. விண்ணப்பங்களுக்கு ''கண்டிப்பாக'' கட்டணமில்லை.  
              # இத்திட்டங்களில் 2015-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதிக்குள் சேரவேண்டும். அதன் பிறகு ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 க்குள் இத்திட்டங்களில் சேர விரும்பினால் தங்கள் உடல்நலம் சம்பந்தமான ஹெல்த் டிக்ளரேஷன் கொடுத்து தான் சேரவேண்டும். இக்காலங்களை தவறவிட்டால் பின் எப்போதும் சேரமுடியாது. 
                #  இத்திட்டங்களில் சேருவதற்கு சேமிப்பு வங்கி (SB) கணக்கு வைத்திருக்கவேண்டும். இதைத்தவிர வேறு கணக்குகளை வைத்திருப்போர் இத்திட்டங்களில் சேரமுடியாது. அதேப்போல் எத்தனை வங்கிகளில் செமிப்புவங்கிக் கணக்கு இருந்தாலும், ஏதாவது ஒரு வங்கி கணக்கை  வைத்து மட்டுமே இத்திட்டங்களில் சேரவேண்டும். 
             #  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திற்கு முன்னரே ஆட்டோ டெபிட் மூலம் இத்திட்டங்களுக்கான பிரிமியங்கள் பிடித்தம் செய்துகொள்ளப்படும். 
               # ஒவ்வொரு முறையும் வங்கி பிடித்தம்  செய்த பிரிமியத்திற்கான ரசீதை வழங்கும். அந்த ரசீது தான் இந்த திட்டத்தில் சேர்ந்ததற்கான சான்று ஆகும். எனவே பத்திரமாக வைத்திருக்கவேண்டும். 
             # இவ்விரு திட்டங்களும் ஜூன் 1 முதல் மே 31 வரையிலான காலத்திற்குட்பட்டது. இந்த காலத்தில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டம் வைத்திருப்பவர்களுக்கு இயற்கை மரணம் என்றால் ரூ.2 இலட்சம் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்படும். அதேபோல் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தை வைத்திருப்பவர்களுக்கு விபத்தினால் மரணம் ஏற்பட்டால் மட்டுமே ரூ.2 இலட்சம் அவரது வாரிசுதாரருக்கு அளிக்கப்படும். இந்த இரண்டு திட்டங்களையும் வைத்திருப்பவர்களுக்கு விபத்தினால் மரணம் ஏற்பட்டால் 2 இலட்சம் + 2 இலட்சம் = ரூ 4 இலட்சம் கிடைக்கும். 

நீங்கள் செய்யவேண்டியது :
(1) உங்கள் வங்கியிலோ அல்லது அருகிலுள்ள எல்.ஐ.சி அலுவலகங்களிலோ இத்திட்டங்களுக்கான தனித்தனி விண்ணப்பங்களை பெற்று வருகிற மே 31-ஆம் தேதிக்குள் வங்கியில் சேர்ப்பிக்கவேண்டும்.  தவறினால் ஆகஸ்ட் 31-க்குள் கொடுக்கவேண்டும். அதன் பிறகு திட்டங்களில் சேரமுடியாது.  

(2)  ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இத்திட்டங்களுக்கான பிரிமியம் பிரிக்கப்படுகிறதா என்பதை பார்த்துக்கொள்ளவேண்டும். பிடித்தம் செய்யப்படவில்லை என்றால் இத்திட்டங்களிலிருந்து வெளியேற்றப்படுவீர். பின் எப்போதும் சேரமுடியாது.

(3)  இத்திட்டங்களைப் பற்றி அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடமும், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் அவசியம் தெரியப்படுத்தி இத்திட்டங்களில் சேரும்படி அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

புதன், 13 மே, 2015

நீதிமன்றம் மீதான நம்பிக்கை குலைந்துவிடும்...!

              
           நேற்று முன் தினத்திலிருந்து ஜெயலலிதாவும் அவரது கட்சிக்காரர்களும் நிம்மதியாக உறங்கியிருப்பார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக எழுதப்பட்டுவிட்டது. அதற்காக அவர்கள் என்ன விலை கொடுத்திருப்பார்கள் என்றெல்லாம் மக்கள் யூகித்துப் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஏனென்றால் தேர்தலில் வெற்றிக்கே கோடிக்கணக்கில் பணத்தை இறைத்தவர்கள் தானே இவர்கள் என்ற அனுபவம் மக்களுக்கு இருக்கிறது. அதனால் அவர்கள் யூகிப்பது சரியாகத்தான் இருக்கும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். 
           தீர்ப்பின் நகல் வெளியானப்பிறகு இரண்டு விதமான சந்தேகங்கள் நமக்கு எழுகிறது. 
              ஒன்று... நீதிபதி அவர்கள் ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளின் வரவு -செலவு கணக்குகளை போட்டு கடைசியில் என்ன சொல்கிறார் என்றால், ''வருமானத்தில் பத்து சதவீதம் வரையில் வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்க்கலாம். அதை அனுமதிக்கலாம்'' என்ற வாதத்தையும் வைத்து, அதற்கான  இரண்டு ஆதாரங்களையும் சுட்டிக்காட்டி 919 பக்க தீர்ப்பின் மூலம் ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார். 
          நமக்கு என்ன கேள்வி எழுகிறது என்றால், வருமானமே இல்லாதவன் வறுமையின் காரணமாக, பசியின் காரணமாக பிக்பாக்கெட் அடித்தாலோ அல்லது  வீடு புகுந்து அண்டா திருடினாலோ அவனுக்கு தண்டனையளிக்கிற நீதிமன்றம், அதிகாரத்திலிருப்பவர்கள் - மக்களுக்கு சேவை செய்ய என்று வந்தவர்கள் தங்கள் வருமானத்தை விட அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்கிறார்கள் என்றால் அந்த கோடி என்பது பத்து சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் தவறில்லை. பாவம் அப்பாவி பிழைக்கத் தெரியவில்லை என்ற பொருளில் அவர்களை தண்டிக்காமல் விடுதலை செய்வது என்பது எந்தவகையில் நியாயம்...? அது நீதி ஆகுமா...? அனைவருக்கும் சமமான நீதி என்பது இது தானா...? சாமானியனுக்கு ஒரு நீதியும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நீதியும் வழங்கும் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்...?
      ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என   ஏராளமான கணக்கு வழக்குகளை எல்லாம் போட்டுக்காட்டி, பாவம் அந்த அம்மா  சொத்து சேர்த்தது என்னவோ  8.12% தான். பத்து சதவீதம் வரை சேர்க்கலாமென்று சட்டம் சொல்லுது. அதனால அவங்கள விடுதலை செய்கிறேன். நான்கு ஆண்டுகள் தண்டனையும் கிடையாது. 100 கோடி தண்டமும் கட்டவேண்டாம். அதுமட்டுமல்ல அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த அத்தனை பொருட்களையும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்றும் 919 பக்கத் தீர்ப்பில் ஜட்ஜ் அய்யா குறிப்பிட்டிருக்கிறார். 
         எனக்கு என்ன கேள்வி எழுகிறது என்றால் பத்து சதவீதம் வரையில் திருடினால் அது திருட்டு இல்லையா...? பத்து சதவீதம் என்பது குறைவாக தெரியலாம்,  ஆனால் அதன் மதிப்பு பல கோடிகள் ஆச்சே...! கோடிகளை திருடினால் அது பரவாயில்லையா...? இது  என்ன அளவுகோல்...? சாமானியர்களுக்கு ஒன்றும், அதிகாரத்திலிருப்பவர்களுக்கு வேறோன்றுமான அளவுகோல். நீதிமன்றத்தில் இருக்கும்  நீதி தேவதை இரண்டு விதமான தராசுகளையா வைத்திருக்கிறாள்...? இப்படிப்பட்ட தன்மை கொண்ட நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்...? 

             இரண்டு... கடந்த நான்கு மாதகாலமாக ஒரு நீதிபதி ஒரு நீண்ட நெடிய பக்கங்களை கொண்ட தீர்ப்பை எழுதுகிறார் என்றால் அதில் கவனக்குறைவாக இருக்கலாமா...? தவறான கணக்கைப் போட்டு அதைக்காட்டி விடுதலை செய்வது என்பது எந்தவகையில் தர்மமாகும். அப்படி செய்வது என்பது எதிர்காலத்தில்  தவறான முன்னுதாரணம் ஆகி விடாதா...?  அப்படியென்றால் நீதிபதி குற்றவாளியை விடுதலை செய்வதில் காட்டிய  வேகத்தில் கணக்கு போடுவதில் தவறு செய்துவிட்டார் என்று பொருள்கொள்ளலாமா...?  இப்படியான தீர்ப்பு என்பது வருங்கால தலைமுறைக்கு தவறான பாடமாக அமைந்துவிடக்கூடாது. எதிர்காலத்தில் இது தவறு செய்யும் ஆட்சியாளர்களும் தண்டனை இல்லாமல் தண்டனை இல்லாமல் தப்பிப்பதற்கு முன்னுதாரணமாக காட்டும் நிலை வரும். எனவே கர்நாடக அரசு தாமதிக்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனையை பெற்றுத்தரவேண்டும் என்பது நடுநிலையான மக்களின் எதிர்பார்ப்பாகும். 

செவ்வாய், 12 மே, 2015

ஜெயலலிதா விடுதலை - நாணல் போல வளைவது தான் சட்டமாகுமா...?





                 இந்தியா விடுதலை அடைந்தபோது கூட தமிழகத்தில் இவ்வளவு கொண்டாட்டம் இருந்திருக்காது. அனால் இன்று காலை ஜெயலாலிதாவின் விடுதலை பற்றிய செய்தியை கேட்டதும் அதிமுகவினரின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எல்லாம் பட்டாசுகளோடு சேர்த்து வெடித்து சிதறியது. 
                நீதியரசர் குமாரசாமி இன்று அளித்த தீர்ப்பை  மட்டுமல்ல, அந்த தீர்ப்பை ஒட்டி அதிமுகவினரால் நடத்தப்பட்ட இந்த முட்டாள்தனமான கொண்டாட்டங்களையும் யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த தீர்ப்புக்கு பிறகு தான் ''நீதிமன்றம் யாருக்கானது...?'' என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. பசியின் காரணமாக வாழைப்பழத்தையோ, ரொட்டியையோ திருடிவிட்டால் அவனுக்கு கடுமையான  சிறை தண்டனை நீதிமன்றம்... தண்டனை முடிந்து அவன் சிறையிலிருந்து வெளியே வரும்போது திருந்துவதற்கு பதிலாக முன்பை விட பெரிய திருடனாக மாற்றப்பட்டு வெளியே வருகிறான். ஆனால் ஆட்சியிளிருப்பவர்களோ அல்லது அதிகாரிகளோ அதிகாரத்தில் இருக்கும் போது மக்கள் பணத்தை திருடினால், ''மொத்த வருமானத்தில் இத்தனை சதவீதம் திருடலாம்... அதற்கு சட்டம் அனுமதி அளிக்கிறது'' என்று சொல்லி விடுதலை அளிக்கிறது அதே நீதிமன்றம். சட்டமும், நீதியும் அனைவருக்கும் சமம் என்ற வாதம் பக்கவாதம் ஆனதா என்ற சந்தேகம் தான் நமக்கு எழுகிறது. 
        கடந்த பதினெட்டு ஆண்டு காலமாக  இழுத்தடிக்கப்பட்டு ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அண்மையில் தான் ஒரு நீதிபதி நீண்ட நெடிய பக்கங்களை கொண்ட தீர்ப்புகளை படித்து தண்டனைகளை வழங்கி ஜெயலலிதாவை சிறைக்குள் தள்ளினார். ஆனால் மேல்முறையீடு என்ற பெயரில் அதே வழக்கில்  வேறொரு  நீதிபதி  இன்னொரு  நீண்ட நெடிய பக்கங்களோடு புதிய தீர்ப்பை எழுதி  சென்ற நீதிபதி அளித்த தீர்ப்புகளையும், தண்டனைகளையும்   ரத்து செய்து ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார்.  ஒரே மாநிலம், ஒரே நீதிமன்றம், ஒரே வழக்கு, அனால் இரு மாதிரியான தீர்ப்பு. முன்பு தீர்ப்பு சொன்னவர் ஜெயலலிதா நடத்திய கொள்ளைகளை  எடைபோட்டு தீர்ப்பு சொன்னார். ஆனால் இப்போது தீர்ப்பு சொன்னவரோ கணக்கு போட்டு தீர்ப்பு சொல்லியிருக்கிறார். அவர் எழுதிய 919 பக்கத் தீர்ப்பின்படி, செய்கூலி, சேதாரம் போக 10 சதவீதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கலாமா..! பாவம் இந்த அம்மாவோ 8.12 சதவீதம் தான் தன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து செர்த்திருக்காங்களாமா...! அதனால இதெல்லாம் பெரிய குற்றமா...? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... என்று  கணக்கு போட்டு விடையை கண்டுபிடிச்சி பழைய தீர்ப்பை மாத்தி எழுதி ஜெயலலிதாவை புனிதமாக்கிவிட்டார். 
           இந்த இரண்டு தீர்ப்புகளில் எது தான் ''சரியான'' தீர்ப்பு என்று புரியாமல் மக்கள் மாபெரும் குழப்பத்தில் கிடக்கிறார்கள். முன்னவர் சொன்ன தீர்ப்பு சரியானதா...? அல்லது நேற்று பின்னவர் சொன்ன தீர்ப்பு சரியானதா...? நேற்று சொன்னவரின் தீர்ப்பு தான் சரியானது  என்றால், முன்னவர் தவறான தீர்ப்பு சொன்னாரா...? என்ற கேள்வி எழுகிறது. அப்படி தவறான தீர்ப்பு வழங்கியிருந்தால் அவர் தண்டிக்கப்படவேண்டியவரா...? என்ற கேள்வியும் எழுகிறது. சட்ட வல்லுனர்கள் சட்டத்திலுள்ள ஓட்டையை கண்டுபிடித்துவிடுகிறார்கள், பணம் படைத்தவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அவர்களுக்கு தகுந்தாற்போல் சட்டத்தை வளைத்துக் கொள்கிறார்கள். 
           அதிகாரத்திலிருப்பவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் தண்டனை இல்லை என்ற பாடத்தை தான் எதிர்கால தலைமுறைக்கு இன்றைய நீதிமன்றம் பாடம் சொல்லித்தருகிறது என்பது நமக்கு நன்றாக புரிகிறது.  

ஞாயிறு, 10 மே, 2015

புதுச்சேரியில் வளர்ந்துவரும் தீண்டாமை வன்கொடுமைகள்...!


               இந்தியா அரசியல் விடுதலை பெற்று 67 ஆண்டுகளை கடந்த பிறகும், தீண்டாமை நீங்கி சமத்துவ சமநிலை கொண்ட சமூகவிடுதலை என்பதற்காக நாளுக்கு நாள் போராடிக்கொண்டே தான் இருக்கவேண்டியிருக்கிறது. தீண்டாமையின் வடிவங்கள் மாறாமல் இடத்திற்கு இடம் பலவகைகளில்   விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. தலித்  மக்களின் பொருளாதார வளர்ச்சிகளை பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்கசாதியினர், தீண்டாமை ஒழிந்துவிடாமல் திட்டம்போட்டு தீனிப்போட்டு வளர்த்துகொண்டு வருகிறார்கள் என்பது தான் உண்மை. 
          புதுச்சேரியின் மேற்குப் பகுதியில் உள்ள நெட்டப்பாக்கம் சட்டமன்ற (தனி) தொகுதியில் மடுகரை என்ற ஆதிக்கசாதியினர்  ஆதிக்கம் செலுத்தும் கிராமம் ஒன்று உள்ளது. இங்குள்ள கூத்தாண்டவர் கோயிலில் கடந்த ஒரு வார காலமாக கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மூன்று நாட்களுக்கு முன்பு சென்ற ஆறாம் தேதியன்று தேர்த்திருவிழா நடைபெற்றது. கூத்தாண்டவர் சாமியும் தேரோட்டம் காண தேரில் அமர்ந்துவிட்டார், தேரை இழுக்க வடமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கே அந்த தேரை வடம்பிடித்து இழுப்பதற்கு அந்த தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு.பெரியசாமி அங்கு வந்தார். அவர் வடம் பிடிக்க அதன் அருகில் வரும்போதே ஆதிக்கசாதியை சார்ந்த ஒருவன்  ''பறையன் எல்லாம் வடம் பிடிக்க அனுமதிக்கமாட்டோம்'' என்று வெறித்தனத்துடன் கூவியிருக்கிறான். அந்த கோயில் அலுவலரோ ''நாங்க தான் உங்களுக்கு அழைப்பே தரவில்லையே. நீங்க ஏன் இங்க வந்தீங்க...?'' என்று கொக்கரித்திருக்கிறான். ''நான் இந்த தொகுதி எம்.எல்.ஏ'' என்று சொல்லி அவர்கள் தடையையும்  மீறி அவரும் அவரோடு  வந்த மற்ற  தலித் நண்பர்களும்  சேர்ந்து வடம் பிடிக்க முயற்சித்தபோது, அங்கு கூடியிருந்த ஆதிக்கசாதியினர் அந்த சட்டமன்ற உறுப்பினரை தாக்கி கீழே தள்ளிவிட்டிருக்கின்றனர்.
              அமைதிப்படுத்த வேண்டிய அங்கிருந்த காவல்துறையினரோ சட்டமன்ற உறுப்பினரோடு வந்திருந்த தலித் மக்கள் மீது தடியடி நடத்தி கலைத்திருக்கின்றனர். அதிமுகவை சேர்ந்த அந்த சட்டமன்ற உறுப்பினர் ஒரு தலித்  என்பதாலேயே அவருக்கு அழைப்பு வழங்கப்படவில்லை என்பதும்,  அழைப்பு இல்லாமலேயே கோயிலுக்கு வந்தும் வடம் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டார் என்பதும் யாராலும் மறைக்கமுடியாத  உண்மை. ஆனால் சட்டமன்றத்தில் இந்த பிரச்சனையை பாதிக்கப்பட்ட அந்த எம்.எல்.ஏ சார்ந்த கட்சியான அதிமுகவோ சட்டமன்றத்தில் இப்பிரச்சனையைப் பற்றி எழுப்பிய போது பேரவைத்தலைவரும் அரசும் இதை தலித்க்கு எதிரான  ஒரு   தீண்டாமை பிரச்சனை என்பதை மறைத்துவிட்டு  ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரசுக்கும், அதிமுகவுக்குமான அரசியல் பிரச்சனை, அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்று பதிலளித்திருக்கிறார்கள். அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே, இந்த பிரச்சனை என்பது இவர்கள் இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் என்பது போல் தான் சித்தரிக்கப்படுகிறதே தவிர தீண்டாமையை கொழுந்துவிட்டு எரியச்செய்யும் சாதிய மோதல் என்பதை இருக்கட்சிகளுமே திட்டமிட்டு மறைக்கிறார்கள்.
          புதுச்சேரியில் இது ஏதோ ஒரு பிரச்சனை தானே என்று எண்ணாதீர்கள். புதுச்சேரி சட்டமன்றத்தேர்தல் நெருங்க நெருங்க, தீண்டாமையை மையப்படுத்திய இது போன்ற சாதிய பிரச்சனைகள் புதுச்சேரி கிராமப்புறங்களில் புற்றீசல்கள் போல் கிளம்பிக்கொண்டே தான் இருக்கிறது.
            அண்மையில் மதகடிப்பட்டு கலிதீர்த்தால்குப்பத்தில் திரௌபதையம்மன் கோயிலில் அங்குள்ள தலித் மக்கள் நுழைவது தடுக்கப்பட்டது. அதை எதிர்த்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்   தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மறுக்கப்பட்ட தலித் மக்களுடன்     ஆலய நுழைவு போராட்டம் என தேதி குறிப்பிட்டு அறிவித்தார்கள். அதை கேட்டு  ஆத்திரமடைந்த ஆதிக்கசாதியினர் கோயிலுக்கு அருகிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை  
தீயிட்டு கொளுத்தினர் என்பதை யாராலும் மறக்கமுடியாது. இங்கே சாதிய வெறுப்புணர்ச்சி இன்னும் புகைந்துகொண்டு தான் இருக்கிறது.
                 அதேபோல் இன்னொரு சம்பவமும் வேறொரு இடத்தில் அரங்கேறியிருக்கிறது. ஒவ்வொரு  மாசிமகத் திருவிழாவின் போதும், திருக்காஞ்சியை  சுற்றியுள்ள கிராமத்து கோயில்களிலிருந்து சாமிகள் எல்லாம் புறப்பட்டு தலித் மக்கள் வாழும் சேரியை கடந்து தான் ஆற்றுக்கு செல்வது என்பது பல ஆண்டுகளாக  எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒரு மரபாக -  வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அனால் இந்த ஆண்டு மட்டும் சேரி வழியாக செல்ல முடியாது என்று சாமிகள் சொல்லவில்லை. சாமியை தூக்கிச்செல்லும் ஆசாமிகள் சொன்னார்கள்.  சென்ற மாசிமகத் திருவிழாவின் போது இந்த மரபு மீறப்பட்டு, சாமி ஆற்றில் இறங்குவதற்கு சேரி வழியாக செல்வதற்கு பதிலாக இடையிலேயே மாற்றுப்பாதை போடப்பட்டு சேரியை புறக்கணித்துவிட்டு சாமியை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த தேவையற்ற மரபு மீறலை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் போர் குரல் எழுப்பியிருக்கிறது. என்றாலும்  அங்கு இந்த பிரச்சனையும்  இன்னும்  புகைந்துகொண்டு இருக்கிறது.
               இப்படியாக புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இது போன்று சாதிய தீயை ஊதிவிட்டு, மக்களை உசுப்பேற்றி வருகிறார்கள்  என்பதையும் புதுச்சேரி  மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். மக்களின் ஒற்றுமையை குலைத்து அதன் மூலம் ஓட்டுகளை பெற்றுவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். அந்த கனவு ஒரு போதும் பலிக்காது.

வியாழன், 7 மே, 2015

மக்கள் இணையம் – மக்களால், மக்களுக்காக...!



கட்டுரையாளர் : பிரசன்னா, கணினி மற்றும் இணைய வல்லுநர்            
                  
                வெகுஜன ஊடகங்களான தினசரி நாளிதழ்வானொலிதொலைக்காட்சி போன்றவற்றிற்கும், இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இணையத்துக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உள்ளதுஇந்த வேறுபாடு காரணமாகத்தான் இணையத்தில் நாம் அனைவரும் நேரத்தைக் கணக்கில் கொள்ளாமல் அதனைச் செலவிடுகிறோம்வேறுபாடு என்று நாம் குறிப்பிடுவது எதனை...?
  நாளிதழில் நாள்தோறும் வெளிவரும் செய்திகளைப் படிக்கின்றோம்வானொலியில் செய்திகள்பாடல்கள்வர்ணனைகளைக் கேட்கிறோம்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைக் காண்கிறோம்இந்த மூன்றிலும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், மக்களாகிய நாம் வெறும் பார்வையாளராக படிக்கவோகேட்கவோ அல்லது பார்க்கவோ ) மட்டுமே இருக்கிறோம்நம்மால் நேரடியாக உடனுக்குடன் அதில் பங்குக் கொள்ள முடியாதுதொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளலாமே என்று நீங்கள் கூறலாம்ஆனால் இவை மூன்றுக்கும் அது ஒரு துணைக்கருவிதான்.
        அவற்றுக்கு முரணாக, இணையம் என்பது அடிப்படையிலேயே மக்களை இணைக்கும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டதுஇதில் மக்கள் பங்கெடுத்தால் தான் இணையமே உயிர்ப்புடன் இருக்கும்இணையத்தில் ஒரு செய்தியினை படிக்கும் அதே நேரத்தில் நம்மால் அதில் நம் கருத்துக்களை பதிய முடிகிறதுஇங்கே ஒரு குட்டி விவாதம் நடத்தவோ அல்லது அரட்டை அடிக்கவோ முடிகிறது. அதனை உடனடியாகப் பலருடன் பகிர்ந்துக் கொள்ளவும் முடிகிறதுஅதாவது நம்மைப் பலவற்றோடு இணைத்து நமது பங்களிப்பை உறுதி செய்வது தான் அந்த மாபெரும் வேறுபாடு.
            யூடியூப் (youtube)விமியோ (vimeo) போன்ற வலைதள சேவைகள்மூலம் இன்று பலர் தங்கள் படைப்பாற்றல்களை காணொளிகளாகப் பதிவு செய்து, அவற்றை உலகில் உள்ள எவரும் காணும் வகையில் பதிவேற்றம் செய்ய முடிகிறதுவேர்ட்ப்ரெஸ் (WordPress) போன்ற மென்பொருட்கள் அல்லது வலைப்பதிவுகள்மூலம் தங்கள் கருத்துக்களை எழுத்து வடிவில் கட்டுரையாகவோகவிதையாகவோ மக்களிடம் கொண்டு சேர்க்க முடிகிறதுசமூக வலைதளங்களில் நண்பர்கள்உறவினர்கள், அன்பர்கள் என அனைவரோடும் நேரத்தைச் செலவிட முடிகிறதுஇணையம் என்கிற ஊடகமே, வெறும் பார்வையாளராக இருந்த மக்களை பங்கேற்கவைத்தும், அவர்களுக்கு பிடித்தவற்றை உருவாக்கவைத்தும் ஊடகத்தின் ஒரு அங்கமாக அவர்களை மாற்றியிருக்கிறது.
          இதைத்தான் ''மக்களுக்கான இணையம்'' என்று நாம் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாதுஏன் என்று பார்ப்போம்ஒருவரின் படைப்புகளையும்கருத்துக்களையும் பலரோடு இணைக்கும் இந்த இணையத்தில் பல சிக்கல்கள் உள்ளன.
  • பலதரப்பட்ட மக்கள் ஒன்றுகூடும் இந்த மாயவுலகில்அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அவர்களின் இலாபத்திற்காகவும்அடக்குமுறைக்காகவும் வெகுஜன மக்களை இதில் உலவு (Mass Surveillance) பார்த்து வருகின்றனர்விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சேமுன்னாள் அமெரிக்க துறை அதிகாரியான எட்வேர்ட் ஸ்னோடன் ஆகியோர் இவற்றை அம்பலப்படுத்தியுள்ளனர். இணையத்தில் கருத்துச் சுதந்திரம் உண்டு என்றாலும்கூட, தொடர்ந்து யார் யார் என்ன செய்கிறார்கள்பேசுகிறார்கள் என்பதை அந்நிறுவனங்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன என்பது எவ்வகையிலும் சுதந்திரமாகாதல்லவா? இப்படி கண்காணிக்கப்படுவது தெரிந்தாலே மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும்பிறகு எப்படி கருத்துக்களை சமூகத்தில் தைரியமாக ஒருவரால் சொல்ல முடியும்?

  • அதையும் மீறி ஒரு சிலர் சொன்னாலும் கூடஇன்டெர்நெட் சென்ஸார்ஷிப் (Internet Censorship) எனப்படும் வழிமுறையை அதிகாரங்கள் கையில் எடுக்கின்றனஅதாவது குறிப்பிட்ட தளங்களைத் தடை செய்வதுஅவற்றை இணையத்தில் கிடைக்கவிடாமல் செய்வது போன்று, மக்கள் இணையத்தில் எதைப் பார்க்க வேண்டும்எதைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் சுதந்திரம் மக்களிடமிருந்து பறிக்கப்படுகிறதுசமீபத்தில் ‘IT ACT 66A’ என்னும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு சட்டப்பிரிவு உச்சநீதிமன்றத்தால் செல்லாது என்றே தீர்ப்பளிக்கப்பட்டதுஇந்தச் சட்டப்பிரிவை பயன்படுத்தித்தான் இணையத்தில் மக்களின் கருத்துக்களை தடை செய்யவோ அல்லது அதற்காக அவர்களைக் கைது செய்யவோ முடிந்ததுஉச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க இத்தீர்ப்பிற்காக, பல இணைய ஆர்வலர்கள் கடுமையாகப் போராடவேண்டியிருந்தது.

  • அரசு அதிகாரத்தையெல்லாம் தாண்டி வந்தால்முதலாளிகளும்தனியார் நிறுவனங்களும் இணையம் மூலம் மக்களின் நேரத்தைத் திருடிதகவல்களை விற்று பணமாக்கி சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்நாம் இணையத்தை பயன்படுத்துகிறோம் என்றால்அதற்கான உள்கட்டுமான வசதிகளை வழங்குபவர்களைத்தான் நாம் இணைய சேவை வழங்கும் BSNL, Airtel, Vodafone, Aircel, Idea, Reliance போன்ற நிறுவனங்களை ஐ.எஸ்.பி. (Internet Service Provider – ISP) என்று அழைக்கிறோம்இவர்களிடம் உள்ள இந்த உள்கட்டுமான அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் எந்தெந்த தளங்களைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பார்க்கிறார்கள். சில தளங்களை இலவசமாகவும்சிலவற்றை அதிக கட்டணம் செலுத்தி பெறுமாரும், இணையத்தின் ஆணிவேரையே அசைக்கப்பார்க்கிறார்கள். அதன் மூலம் தங்கள் இலாபத்தைப் பெருக்கவும் திட்டமிடுகின்றனர்இதைத்தான் சமீபத்தில் நெட் நியூட்ராலிடி (Net Neutralityமீறுதல் என்று சமூக வலைதளங்களில் பலரும் பேசுவதை நீங்கள் தொடர்ந்து பார்த்திருக்கக்கூடும்சமச்சீரான இணையத்தை உடைக்கும் முயற்சி இது.
            இவ்வாறு பல வகைகளில் அவரவர் அதிகாரத்தைப் பயன்படுத்திஜனநாயகம் என்று மார்த்தட்டிக்கொள்ளும் பல நாடுகளில் (இந்தியா உட்படமக்களின் கைகளில் அதிகாரமும்உரிமையும் சென்றுவிடாமல் தடுக்கப்படுகிறதுஇப்பொழுது கூறுங்கள்இது மக்களின் இணையமாக இருக்கிறதாஇல்லை அதிகார வர்கத்தின் இணையமாக இருக்கிறதா என்று?
            இதுதான் பிரச்சனைஇதுதான் சிக்கல் என்று நாம் கண்டறிந்துவிட்டோம்இந்தப் பிரச்சனையை தீர்க்கவோ அல்லது ஒரு மாற்று பாதையைக் கண்டறிவதோதான் இப்போதைய அவசர வேலைமாற்றுப் பாதையை நோக்கி நாம் செல்லாவிட்டால் ஏற்கனவே சிக்கலாய் இருக்கும் அமைப்புக்குள் இருந்துக் கொண்டு அதை வசைப்பாடுவது யாருக்கும் பயன்தராது. அது தீர்வை நோக்கியும் செல்லாதுமாறாக அது அதிகார வர்க்கத்தைப் பலப்படுத்தத்தான் செய்யும்.
     உண்மையான மக்கள் இணையம் என்பதில் அதிகாரமும்உரிமையும் மக்களிடமிருக்கும்அரசிடமோ அல்லது ஆளும் வர்க்கத்திடமோ இணையத்தின் அதிகாரம் இருப்பதன் முக்கியக் காரணமே அதன் உள்கட்டுமானத்தினால் (Internet Infrastructure) தான்இவர்கள் அமைத்திருக்கும் இந்த உள்கட்டுமானத்தை நாம் பயன்படுத்துவதால் தான் அதிகாரம் தொழில்நுடபரீதியாக அவர்கள் கைகளில் ஓங்கியுள்ளதுஇதைத்தான் ஆங்கிலத்தில் “Centralized Infrastructure” (மத்தியமயப்படுத்தப்பட்ட உள்கட்டுமானம்என்பார்கள்.
        அதாவது ஒரு நாட்டின் இணைய இணைப்பே Internet Service Provider (ISP) எனப்படும் இணைய இணைப்புகளை வழங்கும் நிறுவனங்கள் கைகளில் இருப்பதுதான்இப்படி இருக்கும் இந்தக் கட்டமைப்புக்குப் பதிலாக மாற்று கட்டமைப்பை உருவாக்க வேண்டிய காலத்தில் நாம் உள்ளோம்
மக்கள் இணையம் – மக்களால், மக்களுக்காக!                     
            பழைய இணையத்திற்கு பதிலாக ஒரு புதிய மாற்று இணையத்தை உருவாக்க வேண்டும்இதில் மத்தியில் ஒட்டுமொத்த அல்லது பெரும்பான்மையான இணையத்தை கட்டுப்படுத்தும் ISP என்பவர் இருக்கவே மாட்டார்மாறாக மக்கள் குழுக்களாக இணைந்துநமக்கு நாமே இணைய உள்கட்டுமானத்தை உருவாக்க வேண்டும்இப்படி ஆங்காங்கே உருவாக்கப்படும் கட்டுமானத்தை ஒன்றோடொன்று இணைத்து முதலில் ஒரு வட்டாரத்தைபிறகு ஒரு மாநிலத்தைபிறகு ஒரு நாடு முழுவதும் பரவச் செய்தால் மக்களின் மாற்று இணையம் சாத்தியமே.
           படிப்பதற்கும்கேட்பதற்கும் நன்றாக இருக்கிறதுஇது உண்மையில் சாத்தியம் தானா...நிச்சயமாக சாத்தியந்தான். இதைத்தான் ஆங்கிலத்தில் Meshnet‘ (மெஷ்நெட்) என்று அழைப்பார்கள்இன்று மக்கள் கைகளின் மிகச்சாதாரணமாகப் புழங்கும் ஸ்மார்ட்ஃபோன்களையும், மடிக்கணினிகளையும்அவற்றில் உள்ள வைஃபை (Wi-Fi) வசதியையும் பயன்படுத்தி கம்பியற்ற (Wireless) மெஷ்நெட்வொர்க்குகளை உருவாக்கிஅவற்றை ஒன்றோடொன்று இணைக்க முடியும்சிந்தித்துப் பாருங்கள்புதிதாகச் சாதனங்கள் வாங்கத் தேவையில்லைஉள்கட்டுமானத்திற்காகச் சாலையைப் பிளந்து மண்ணை வாரிஒயர்கள் இடத்தேவையில்லைஒயர்லெஸ் மூலமே இவற்றைக் கட்டமுடியும் என்பது இதன் சிறப்பம்சம்இவ்வாறு உலகெங்கும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு நெட்வொர்க்கிற்கு Hyperboria என்று பெயரிடப்பட்டுள்ளதுஇணையத்தில் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘TCP/IP’ எனப்படும் வரைமுறைக்குப் பதிலாக, cjdns‘ எனப்படும் வரைமுறை Hyperboria-வில் பயன்படுத்தப்படுகிறது.
                இன்னமும் உங்களுக்கு இது சாத்தியம் என்று தோன்றவில்லை என்றால் இதோ தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் இணைய வல்லுநர்கள்ஆர்வலர்கள்ஹேக்கர்கள் அனைவரும் இணைந்து மெஷ்நெட்வொர்க்குகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
         இந்தியாவில்நான் அங்கம் வகிக்கும் தழிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (Free Software Foundation TamilNadu) தவிரவேறு யாரும் இதைப் பற்றிப் பேசுவதாகத் தெரியவில்லைபேசுவதோடு மட்டும் நில்லாமல்இணைய ஆர்வலர்களின் உதவியோடு விரைவில் மெஷ்நெட்வொர்க்குகளை ஒரு சில இடங்களிலாவது உருவாக்க முயற்சிப்போம்.
          Hyperboria வளர்ந்து தற்போதுள்ள பழைய இணையத்திற்கு மாற்றாக வருவது என்பது உடனடியாக நடைபெறும் செயல் அல்ல என்பதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும்எனினும்அதற்கான தொடர் முயற்சிகள் மூலமும்குழுக்களாக மக்கள் ஆங்காங்கே இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு முதலில் மெஷ்லோக்கல்ஸ் (Mesh Locals) அமைத்துச் செயல்படுத்துவதே தற்போதைய பணியாக இருக்கும்.
           இவ்வாறு அமைத்துவிட்டால்இந்த புதிய இணையமானது ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிஅதிகாரமும்உரிமையும் மக்கள் கைகளுக்கு வரும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லைஇதுவே மக்களால்மக்களுக்காகமக்களே உருவாக்கிக்கொள்ளும் இணையமாகும்.
         இப்போதைக்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்இந்த மாற்று செயல்பாட்டினை உங்கள் நண்பர்களிடம்உறவினர்களிடம் எடுத்துரைப்பதுதான்ஒருவேளை நீங்கள் ஒரு கணினித்துறை வல்லுநராகவோ, ‘Computer Networks’-இல் விருப்பமுள்ளவராகவோ இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ள்வும்அனைவரும் இணைந்து செயல்பட்டால் தான் ஒரு மாற்று சாத்தியமாகும்.
நன்றி : மாற்று - இணைய இதழ்