நேற்று ஜப்பான் நாட்டிற்கு 5 நாள் பயணமாக நமது பிரதமர் நரேந்திரமோடி கிளம்பிச்சென்றார். இந்த முறை ஜப்பானுக்கு போகும் போது என்ன ''ஸ்டண்ட்'' அடிக்கப்போகிறார் என்பதை மிகுந்த ஆவலாய் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த அளவிற்கு நரேந்திரமோடி ஒரு ''நகைச்சுவை நாயகனாக'' ஆகிவிட்டார். இப்படித்தான் 16 வருஷத்திற்கு முன்னாடி இந்தியாவில் தொலைந்து போன நேபாள நாட்டு சிறுவனை இளைஞனாய் வளர்த்து சென்ற மாதம் நேபாள நாட்டிற்கு சென்ற போது அவனை அவனுடைய குடும்பத்தாருடன் சேர்த்துவைத்து செல்ஃபி-ல படமெடுத்து ட்வீட்டரில் எல்லாம் போட்டு அசத்தினார் அல்லவா...?
அதேப்போல், ஹீரோஷீமா - நாகசாகியில் அமெரிக்கா குண்டு வீசியபோது, அங்கிருந்து உயிருக்கு பயந்து இந்தியாவிற்கு தப்பி ஓடிவந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளை 72 ஆண்டுகளாய் வளர்த்து, இத்தனை ஆண்டுகளாக நாகசாகியில் தன் குட்டிகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் அம்மா ஆட்டிடம் ஜப்பானிய மொழியிலேயே பேசி சேர்த்து வைப்பார் என்று எதிர்ப்பார்த்தேன். நரேந்திரமோடி ஒரு இந்திய பிரஜையின் எதிர்ப்பார்ப்பை மதிக்காமல் ஏமாற்றிவிட்டார். ஆனால் அதற்கு பதிலாக வேறொரு தமாசை அரங்கேற்றியிருக்கிறார்.
தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த வாரணாசியை ''ஸ்மார்ட் சிட்டியாக'' மாற்றப்போகிறாராம். ஒரு ''ஹோலி சிட்டி'' ஸ்மார்ட் சிட்டியாகப்போகிறது. மதம், வழிபாடு, புண்ணிய ஸ்தலம், மூடநம்பிக்கைகள், சடங்குகள் என்ற பெயரில் ''புனித நகரமாக'' மதவாதிகளால் சொல்லப்படும் வாரணாசியை மாற்றுவதற்கு ஜப்பான் மூளை தான் வேண்டுமா...? இந்திய மூளை போதாதா...? உண்மையிலேயே இத்தனைக்காலமாக வாரணாசியை பற்றியிருக்கும் புரையோடிப்போன பழமைவாதம், வெறித்தனமான வழிபாட்டு முறைகள், புண்ணிய ஸ்தலம் என்ற பெயரில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட மூடநம்பிக்கைகள், வீணான சடங்குகள் - சம்பிரதாயங்கள் அனைத்தையும் துடைத்து தூக்கி எறிந்தாலே போதும் வாரணாசி நிச்சயம் ஸ்மார்ட் சிட்டியாக மாறிவிடுமே. அதை நாம் தானே செய்யவேண்டும். ஸ்மார்ட் சிட்டி என்றால் என்ன...? தமிழில் ''நுண்ணறி நகரம்'' அல்லது ''திறன் நகரம்'' என்று பொருள். இந்த வார்த்தைகளுக்கு பொருள்படும்படி மாறினால் தானே வாரணாசியை ''உண்மையான'' ஸ்மார்ட் சிட்டி என்று அழைக்கமுடியும்.
அதைவிடுத்து ஜப்பான்காரர்களை வைத்துக்கொண்டு அரிதாரம் பூசி அலங்காரம் செய்வதன் மூலம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றமுடியாது. நம் பாட்டன் பாரதி கூட வாரணாசிக்கு சென்ற போது தான் மனம் கிளர்ந்து மாறினான். ''வாரணாசி தான் என்னை மனிதனாக மாற்றியது'' என்று சொன்ன பாரதி, வாரணாசிக்கு சென்றபோது அங்கு மதம், வழிபாடு, மூடநம்பிக்கை, தீண்டாமை என்ற மனிதகுலத்திற்கெதிரான - பெண்களுக்கெதிரான தேவையில்லாத சடங்குகள் - சம்பிரதாயங்கள் என்ற பெயரால் நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் பார்த்த பிறகு தான் பிராமணிய அடையாளங்களான குடுமியையும், பூணூலையும் அறுத்தெறிந்து மனிதனாக மாறினான். சக மனிதர்களை மனிதனாக மதிக்கின்ற மனிதனாக மாறினான். பாரதி அன்று கண்ட அதே புரையோடிப்போன அக்கிரமங்கள் மதத்தின் பெயரால் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதையெல்லாம் துடைத்தெரியாமல் வாரணாசி ஒரு ஸ்மார்ட் சிட்டியாக மாறிவிடமுடியாது. அதுமட்டுமல்ல, வாரணாசியில் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் உடல் முழுதும் சாம்பலை பூசிக்கொண்டும் நரமாமிசங்களை சாப்பிட்டுக்கொண்டும் அநாகரீகமாக சுற்றித்திரியும் சாமியார்களை நரேந்திரமோடி என்ன செய்யப்போகிறார்....? ஜப்பானியர்கள் இங்கு வந்து அவர்களை பார்த்தால் இப்படித்தான் இருக்கிறது இந்திய தேசம் என்று கேலி செய்வார்கள். அப்படிப்பட்ட சாமியார்களையும், மதம் சார்ந்த நடவடிக்கைகளையும், மூடநம்பிக்கைகளையும் ஒழித்தலோழிய வாரணாசியை ''ஸ்மார்ட் சிட்டியாக'' மாற்றமுடியாது. இவைகளை வைத்து தானே மோடியும், பாரதீய ஜனதாக்கட்சியும் ஆட்சியையும், கட்சியையும் நடத்துகிறார்கள். அதனால் அவைகளை ஒழிக்க முன்வருவார்களா...?
இவைகளையெல்லாம் மாற்றாமல் ஜப்பானால் வாரணாசியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றமுடியாது மிஸ்டர்.நரேந்திரமோடி....! அதுமட்டுமல்ல உங்களின் இந்த திட்டம் என்பது வீண் செலவுகளுக்கும் ஊழலுகளுக்கும் தான் வழிவகுக்கும்.