சனி, 10 டிசம்பர், 2011

மேற்கு வங்கத்தில் மம்தா அரசின் அலட்சியம் - மனித உயிர்களைக் குடிக்கும் மருத்துவமனைகள் ...?







                நேற்று விடியற்காலையில்... ஏஎம்ஆர்ஐ என்ற தனியார் மருத்துவமனையில் தீ விபத்து... இப்போது வரை சுமார் தொண்ணூறு பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் அந்த மருத்துவமனையின் அலட்சியமும் கவனகுறைவுமே தான்  காரணம் என்று சொல்லப்படுகிறது. தீ விபத்தினை தடுக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் அங்கே இல்லாதும் இவ்வளவு உயிரிழப்புகளுக்கும் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இப்போதைக்கு உடனடியாகத் தெரியாவிட்டாலும், நகரின் முக்கிய பகுதியில் இருக்கின்ற மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் தீ விபத்துக்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை தடுப்பு ஏற்பாடுகள் கூட இல்லை என்பதை அந்த மாநில அரசு எப்படி கவனிக்க தவறியது. அது மட்டுமல்ல தீப்பிடித்ததோ விடியற்காலை மூன்று மணி என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஐந்து மணிக்குப் பிறகு தான்  - சுமார் இரண்டு மணி நேரம் கழித்து தான்  தீயணைப்புத்துறையிலிருந்து தீயணைக்கும் வாகனங்கள் தீயை அணைக்க வந்திருக்கிறது என்பதும் ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
              இப்படித்தான்  கடந்த ஜூன் மாதம் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 19 குழந்தைகளும், அக்டோபர் மாதம் 15 குழந்தைகளும் மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் இயிரிழந்தார்கள் என்பதை நாடு மறந்திருக்கமுடியாது.
             மேற்கு வங்கத்தில் குறிப்பாக கொல்கத்தாவில், மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த ஆறு மாதங்களாகவே மருத்துவமனைகளின் செயல்பாடுகள் என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றன.  மேற்குவங்க சுகாதாரத்துறை என்பது முதலமைச்சர் மம்தாவின் வசம் உள்ளது தான் இதற்கு காரணம். அம்மையாரின் கவனக்குறைவும் அலட்சியமும் தான் காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. மம்தா வைத்திருக்கும் துறைகளில் அவரது அலட்சியம் காரணமாக விபத்துக்களும் உயிரிழப்புகளும் நிகழ்வது  என்பது கடந்த கால அவரது சாதனைகளாகும். மத்தியில் ரயில்வே துறை  அமைச்சராக இருந்த போதும் கூட பல விபத்துக்களையும்,               உயிரிழப்புகளையும் இந்த நாடு பார்த்துக் கொண்டு தான் இருந்தது. மம்தா பானர்ஜி தான் சார்ந்த துறையில் மிகுந்த கவனத்தையும் ஈடுபாட்டையும் காட்டவேண்டும் என்பது தான் மாற்றத்தை விரும்பி வாக்களித்த மேற்குவங்க மக்களின் எதிர்பார்ப்புகளாகும்.      

கருத்துகள் இல்லை: