திங்கள், 19 டிசம்பர், 2011

அன்று ஜெயலலிதா செய்ததை இன்று சசிகலா செய்தார் - அபூர்வ நட்பு உடைந்து போனது...!

           சரியாக 24 ஆண்டுகளுக்கு முன் 1987 - ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களின்  மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஜெயலலிதா புதிய சக்தியாக உருவெடுத்தார். எம்ஜியாரால் ஆரம்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட  கட்சியை கைப்பற்றவும், அவர் விட்டுச்சென்ற ஆட்சியை கைப்பற்றவும் ஒரு தனி ஆளாக பல்வேறு முயற்சிகளை செய்த போது, மன்னார்குடியிலிருந்து வந்த  சசிகலாவை தன் உற்ற தோழியாக - நம்பிக்கைக்குரிய தோழியாக தனக்கு அருகிலேயே வைத்துக்கொள்ளத் தொடங்கினார்.  இவர்களது இந்த நட்பு என்பது  நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து  உச்சத்தை அடைந்தது. 
      
              இதற்கிடையில், ஜெயலலிதா எண்ணியபடி கட்சியும், பிறகு ஆட்சியையும் ஒவ்வொன்றாக அவரது கைக்கு வந்து சேர்ந்தது.    கடந்த  இரண்டு முறையும்  ஜெயலலிதா முதலமைச்சராக பணியாற்றிய போதும், தற்போது முதலமைச்சராக பணியாற்றும் போதும் சசிகலாவின் அறியுரையின்படியும் ஆலோசனையின்படியும் தான் ஆட்சியினை நடத்தி சசிகலா ஜெயலலிதாவிற்கு நெருக்கமானார்.     இப்படியாக ஆலோசகராகவும், ராஜதந்தரியாகவும்  விளங்கிய சசிகலாவின் நட்பு 30 ஆண்டுகளை கடந்துவிட்டன.
                இந்த முப்பது ஆண்டுக்காலங்களில் தான், சசிகலா தன்னுடைய உறவினர்களை ஒவ்வொருவராக  அதிமுக கட்சியிலும், ஜெயலலிதாவின் வீட்டிலும் திறமையாக சேர்த்துவிட்டார். அப்படித்தான் தன் அக்காள் மகன் சுதாகரை ஜெயலலிதாவின் வாயாலேயே வளர்ப்பு மகன் என்று அறிவிக்கச்செய்தது மட்டுமின்றி உலகமே திரும்பிப்பார்க்கும்படி ஒரு இளவரசரின் திருமணம் போல்  ஜெயலலிதாவாலேயே நடத்தவும் செய்தார். இந்தச் செயல்களால் இன்றைக்கு ஜெயலலிதாவை  நீதிமன்றத்திற்கும் நடக்கவைத்திருக்கிறார்.
                   இவைகளெல்லாம் எப்படியாவது போகட்டும். மேலே சொன்ன அனைத்தும் ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்டதும், ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரமும் ஆகும். 
                   இங்கே நாம் பார்க்கவேண்டியது என்னவென்றால், நட்பு என்பது வீட்டுவாசல் வரை தான். அது ஆட்சி செய்யும் கோட்டைக்கும்  வரக்கூடாது.
                             தற்போது மூன்றாவது முறையாக ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்து, ஆட்சி - அதிகாரத்தில் அவரது அன்புத்தோழி சசிகலாவின்  தலையீடு என்பது கட்டுக்கடங்காமல் வரம்புமீறி சென்றிருக்கிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட அல்லாத சசிகலா ஆட்சி - அதிகாரங்களில் தலையிடுவது  என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 
                  இப்படியாக  சசிகலாவின் தலையீட்டை தாக்குப்பிடிக்க முடியாதாது மட்டுமல்ல,  அன்று ஜெயலலிதா செய்தது போலவே கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற திட்டம் போட்டதாலும்     கோபமுற்ற  ஜெயலலிதா அவரையும் அவரது கணவர் உள்ளிட்ட  குடும்ப உறுப்பினர்கள்    அனைவரையும்  கட்சியிலிருந்து  நீக்கியுள்ளார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவின்றன. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக இருந்த அன்புத்தோழி சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேறிவிட்டார்.  
                     இனி ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் கொண்டாட்டம் தான் போங்கள். கொஞ்ச காலத்திற்கு இந்த செய்தியும், பட்டிமன்றமுமாகத் தான் இருக்கும். 

கருத்துகள் இல்லை: