சனி, 30 ஏப்ரல், 2011

புருலியாவில் ஆயுதம் வீசிய பயங்கர சதி அம்பலம் !


             1995ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்தா பகுதியில் மர்மமான முறையில் ஆகாய மார்க்கமாக குவியல் குவியலாக ஆயுதங்கள் வீசப்பட்டன. மறு நாள் காலை ஆயுதக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் செய்தியை யாரும் மறந்திருக்க முடியாது. அன்றைய தினமே நாடு முழுவதும் இடதுமுன்னணி அரசுக்கு எதிராக அவதூறுச்  செய்திகள் பரப்பப்பட்டன. பெருமளவு ஆயுதங்களை மர்மமான முறையில் இறக்குமதி செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் அந்த  ஆயுதங்களைப் பயன்படுத்தி  எதிர்க்கட்சியினரை கொன்று குவிக்க திட்டமிட்டு வருகிறார்கள் என்றெல்லாம்  பொய்ப்பிரச்சாரங்கள்  நாடு முழுவதும் பரப்பப்பட்டன.
          இந்த ஆயுதம் வீசிய சம்பவத்தில், புருலியா உட்பட பல்வேறு பகுதிகளில் இயங்கிய ஆனந்த மார்க்கிகள் என்ற அமைப்பை சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. ஆனந்த மார்க்கிகள் அமைப்பிற்காக தீவிரவாத குழுவைச் சேர்ந்த கிம் டேவி என்ப வரும் பீட்டர் பிளீச் என்பவரும் இந்த காரியத்தை செய்தார்கள் என்பதும்  விசாரணையில் தெரிய வந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் முதன்மை குற்றவாளிகளான மேற்கண்ட இருவரும் இந்தியாவிலிருந்து தப்பிப்பதற்கு மத்திய அரசே  ஏற்பாடு செய்தது என்பது தான் மிகப்பெரிய பயங்கரமானதும் வேட்கக்கேடாதுமாகும். 
             
இந்த சம்பவத்தின் பல்வேறு உண்மைகளை சமீபத்தில்  டைம்ஸ் நவ் என்ற தொலைக்காட்சிக்கு அளித்த  பேட்டியில் புருலியா ஆயுத வீச்சு சம்பவத்தின் முதன்மைக் குற்ற வாளியான நீல்கிறிஸ்டியன் நீல்சன் என்ற கிம் டேவிட் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
           இந்த வழக்கில் தற்போது  தன்னை மீண்டும் 
இந்தியாவுக்கு கொண்டு வர அரசு முயற்சி செய்கிறது என்றும்,  அதே மேற்கு வங்கத்தில் மீண்டுமொரு  நாசகாரியம் செய்வதற்கு சிலர் தன்னை நாடுவதாகவும்  கிம் டேவி குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும்.

         
கிம் டேவி மேலும்  தனது பேட்டியில், புருலியாவில் ஆயுதம் வீசுவதன்   மூலம், இடதுமுன்னணி அரசு ரகசியமாக ஆயுதக்குவிப்பில் ஈடுபடுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து , அதன்மூலம் இடது முன்னணி அரசைக் கவிழ்த்து  குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவரலாம்  என்ற எண்ணத்துடன்,  ஆனந்த மார்க்கிகள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தன்னை கூலிக்கு அமர்த்தி இந்த நாசகர வேலையை செய்யத் தூண்டின  என்று கூறிஇருப்பது மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். இது ஜனநாயத்தையே கேலிக்கூத்தாக மாற்றத்துணிந்த சம்பவமாகும்.
            புருலியாவில் ஆயுதம் வீசப்பட உள்ள நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் உளவுத்துறையின் தகவல் மூலம் இந்திய அரசுக்கு முன்கூட்டியே தெரியும் என்றும்,  அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் அப்போதைய மத்திய ஆட்சியிலிருந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு உண்டு என்றும் போன்ற அடுக்கடுக்கான அதிர்ச்சியூட்டும் தகவல்களை  அவர் வெளியிட்டுள்ளார்.
         ஆப்பிரிக்கா, மத்திய அமெ ரிக்கா உள்பட பல்வேறு பகுதி களில் கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற பல காரியங்களுக்கு பணியாற்றி இருப்பதாகவும், கத்தோலிக்க தேவாலயம், கிரீன் பீஸ் போன்ற அமைப்புகள், இந்தியாவில் ஆனந்த மார்க்கிகள் போன்ற அமைப்புகள் என உலகம் முழுவதும் ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்காக பணியாற்றி இருப்பதாகவும் கிம் டேவி கூறியுள்ளார்.
          மேற்குவங்கத்தில் தான் செய்த பணியின் நோக்கம், இடதுசாரி அரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே கிம் டேவியின்  ஒப்புதல் வாக்குமூலமாகும்.

               இப்படியாக தான்  பல ஆண்டுகளாக இன்று வரை மேற்குவங்க இடது முன்னணி அரசை வீழ்த்தவேண்டுமேன்றே அரசியல் ரீதியாக எதிர்கொள்ள துணிவில்லாத  மத்தியில் ஆண்ட  காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் பல்வேறு பயங்கரமான வழிகளில் முயற்சி செய்துகொண்டே வருகின்றன என்பது தான் அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். 

கருத்துகள் இல்லை: