வாராது வந்த மாமழை... எப்போது மழைக்காக ஏங்கி தவிக்கும் தமிழகம், கடந்த ஒரு வாரகாலமாக பொழிந்த மாமழையால் நீர் தேங்கி தவிக்கிறது. இயற்கைக்கு விரோதமாக குளம், குட்டை, ஏரிகளையெல்லாம் அழித்தொழித்து வீடுகளையும், மால்களையும், ரிசார்ட்டுகளையும், பஸ் ஸ்டாண்டுகளையும் கட்டியதால், மழை நீரெல்லாம் சென்றடைய இடமின்றி, தனக்கு சொந்தமான குளம், குட்டை, ஏரிகள் இருந்த பழைய இடத்தை நோக்கிப் பாய்ந்ததினால் இன்று தமிழகத்தின் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் புகுந்துவிட்டது. மக்கள் அல்லல்படுகிறார்கள்.
இன்னொரு பக்கம் ஆற்றங்கரை, ஏரிக்கரைகளில் எல்லாம் ஆக்கிரமித்து, தண்ணீர் போகும் பாதைகளை அடைத்து வீடுகளை கட்டியதன் விளைவு, மழைநீர் வெள்ளமாக மாறும் போது, தான் முன்பு ஒரு காலத்தில் சுதந்திரமாய் ஓடிய பாதைகளில் அடைத்து கட்டப்பட்ட வீடுகளில் புகுந்து அடித்து சென்றுவிட்டது. இயற்கைக்கு விரோதமாக செயல்படுபவர்களை ''ஓட்டு அரசியல்'' காரணமாக மாநில அரசும் தடுத்து நிறுத்தாமல் கண்டுகொள்வதில்லை.
எனவே இந்த மாமழையினால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் மரணமடைந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகளும், உடமைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்துவிட்டன. ஏராளமான சாலைகளும், பாலங்களும், சேதமடைந்திருக்கின்றன. அரசால் பராமரிப்பு செய்யப்படாமல் கிடந்த அணைகளும், ஏரிகளும் மழைநீரால் நிரம்பி வழிகின்றன. இவைகளை எல்லாம் நேரிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து தமிழக மக்கள் அச்சத்தில் வெளிவரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவதிப்படும் மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லவும், மீட்புப்பணிகளை முடுக்கிவிடவும் நேரில்வந்து களத்தில் இறங்கவேண்டிய ஒரு முதலமைச்சர் கொடநாட்டு உல்லாச பங்களாவில் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து முடங்கிக்கிடக்கிறார்.
இப்படியும் ஒரு முதலமைச்சர்... ஜனநாயகத்தில் இப்படியும் ஒரு கோளாறு...! மக்கள் தான் இந்த கோளாறுகளை எல்லாம் சரிசெய்யவேண்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தியன் வங்கியில் உதவி பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீராம் செல்வராஜ் அவர்கள் தன்னுடைய பதிவில் கல்கத்தா நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் கல்கத்தாவில் இந்தியன் வங்கி கிளையில் வேலை செய்த போது, சென்னையில் இப்போது பெய்துவரும் பெரும் மழை போல் அங்கும் பெய்திருக்கிறது. செல்வராஜ் சார் அவர்களும் தன் நண்பருடன் சாலையில் 2 அடி மழைநீரில் நடந்து இந்தியன் வங்கி கிளையை நோக்கி நடந்து சென்றுள்ளனர். அப்போது ஒரு லாரி அவர்கள் அருகில் வந்து நின்றதாம். நீங்கள் எங்கே போகவேண்டும்... சொல்லுங்கள்... அங்கே இறக்கிவிடுகிறேன் என்று லாரியில் இருந்தவர் சொல்லியிருக்கிறார். இவர்களோ ''பரவாயில்லை நாங்கள் போய்விடுகிறோம்'' என்று சொல்லிக்கொண்டே அழைத்தவர் யார் என்று பார்த்துள்ளார்கள். அவர் வேறு யாருமில்லை. மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு தான். அவரைப்பார்த்ததும் இவர்களால் நம்பவே முடியாமல் திகைத்து நின்றிருக்கிறார்கள். முதல்வரோ இவர்களைப் பார்த்து, ''நீங்கள் சவுத் இந்தியனா...?'' - ஆம்... ''சரி வாருங்கள்'' என்று அழைத்து சென்றிருக்கிறார்.
அளவுக்கு அதிகமான மழை என்பதால், முதல்வராகிய ஜோதிபாசு அவர்களே போர்க்கால நடவடிக்கை எடுத்து, லாரியில் வந்து சேதப்பகுதிகளில் அல்லல்படும் மக்களை நேரில் சந்தித்து உதவிகளை செய்துள்ளார்.
இதை படிக்கும்போதே மெய்சிலிர்க்கிறதே... நேரில் பார்த்தவர்களுக்கு எப்படியிருக்கும் என்று யோசித்துப்பார்க்கிறேன்.
23 ஆண்டு காலம் தொடர்ந்து முதல்வராக இருந்தவர். 1996 இல் பிரதமர் பதவிக்கு வரவேண்டியவர். 2000ஆம் ஆண்டு தமது உடல்நிலையைக் காரணமாக முதல்வர் பதவியிலிருந்து தானாக விலகியவர். இப்படிப்பட்ட மாமனிதர் அவ்வளவு சாதாரணமாக மக்கள் பணியில் இறங்கியது இந்த காலத்தில் நம்ப முடியாத ஒன்று.
அதுமட்டுமில்லாமல் அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மழைநீர் வடிய தொடங்கியதும் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் உருளைக்கிழங்கு, பல்லாரி விலையை ஏற்றாமல் இருக்க கேட்டுக்கொண்டு கடைக் கடையாக ஏறி இறங்கினார்களாம்.
இரயில்வே தொழிலாளர்கள் சங்கத் தலைவராக இருந்து சாமானிய மக்களிடம் பழகிய ஒரு மார்க்சிய போராளியான ஜோதிபாசு தலைமையில் இடதுசாரி அரசு அத்தனை ஆண்டுகள் நீடிக்க காரணம், மக்கள் மீது அவர் கொண்ட அக்கறை தான் என்று திரு. ஸ்ரீராம் செல்வராஜ் அவர்கள் மெய்சிலிர்க்கக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக