டி.எம்.கிருஷ்ணா,
கர்நாடக இசைப் பாடகர், எழுத்தாளர்
மதிப்பிற்குரிய நரேந்திரமோடி அவர்களே,
பிஹார் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நீங்கள் பேசியதைக் கேட்டேன். உங்கள் பேச்சு நான் இக்கடிதத்தை எழுதுவதை கட்டுப்படுத்தியிருக்கவேண்டும்! ஆனால், மாறாக அந்தப் பேச்சு இக்கடிதத்தை நான் உங்களுக்கு எழுதியே ஆக வேண்டும் என்ற உறுதியை என்னுள் மேலும் வலுப்படுத்தியது.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நாம் ஒரு காட்சியை கண்டு வருகிறோம். அக்காட்சியை 'மனித சோகத்தின் மானபங்கம்' என்றே வர்ணிக்க முடியும். குற்றத்தை செய்தவர்கள் காவி, பச்சை இல்லை.. வேறு ஏதோ நிறம் சார்ந்த அரசியல் பின்புலம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு எந்த களங்கமும் இல்லை. தனி மனிதர்களாக, கட்சித் தொண்டர்களாக, ஆளுங்கட்சி உறுப்பினர்களாக, எதிர்கட்சியினராக அனைவரும் இணைந்து இரக்கம், பச்சாதாபம் போன்ற உணர்வுகளின் ஆன்மாவை சிதைத்துவிட்டனர். இருந்தாலும், இவை, முற்றிலும் புதிதான நிகழ்வு அல்ல. நாம் யார் என்பதை உணர்த்தும் மற்றுமொரு அடையாளம். அவ்வளவே.
பிரதமர் அவர்களே! உங்கள் மீது நான் உரிய மரியாதை கொண்டுள்ளேன். இவ்விவகாரத்தில் உங்கள் மவுனம் மட்டுமே என்னை வியப்படையச் செய்யவில்லை. எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களைப் போன்றோரிடம் இப்பிரச்சினையில் மவுனம் கலைக்குமாறு கேட்டதாலேயே நாங்கள் கிண்டல் செய்யப்பட்ட விதமும், சிறுமைபடுத்தப்பட்ட விதமும்தான் என்னை பன்மடங்கு வியப்படையச் செய்துள்ளது.
ஒரு மிகப் பெரிய துயர சம்பவத்தில் மக்கள் பிரதிநிதிகள் மவுனம் கலைக்க வேண்டும் என்ற இந்த கோரிக்கை ஏதோ அரசியல் அமைப்பினால் முன்வைக்கப்பட்டது அல்ல. சாமானிய மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கை. அது அவ்வளவு பெரிய நியாயமற்ற கோரிக்கையா என்ன? எங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லையா? சமூக-கலாச்சார ரீதியாக மிக முக்கியமான பிரச்சினையை உங்களிடம் நேரடியாக எடுத்துரைத்து விளக்க முயற்சித்ததால் எங்களை குற்றவாளிகளாக பார்ப்பது நியாயமா?
இத்தகைய சூழலில், உங்களுக்கு நான் தேர்தலில் வாக்கு அளிக்காமல் இருக்க அனைத்து உரிமையும் எனக்கு இருக்கிறது என நான் நினைக்கிறேன். அதேவேளையில், ஒரு பிரதமராக நீங்கள் என் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
இன்றளவில் கோடிக்கணக்கான இந்திய மக்களின் மனதில் பிரளயத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சர்ச்சை என்னவென்பதை நீங்கள் அறிவீர்களா?- அது வேறு எதுவுமில்லை 'இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையின் எதிர்காலம் என்னவாகும்' என்பதே அது. 'அனைவரும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சியை ஏற்படுத்துவோம்' என்பதே உங்கள் நிலைப்பாடு என நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இதை ஒரு தாரக மந்திரம் போல நீங்களும், உங்களைச் சேர்ந்தவர்களும் பலமுறை பயன்படுத்துகிறீர்கள். ஆனால், பிரதமர் அவர்களே தாரக மந்திரத்தை சொற்பிரயோகம் செய்தால் மட்டும்போதாது.
உங்களிடம் நேரடியாக, தெளிவுபட கேட்பதற்கு எங்களிடம் பல கேள்விகள் இருக்கின்றன. கடந்த சில மாதங்களாக நிறைய துக்க சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் பின்னணியிலேயே நாங்கள் இந்தக் கேள்வியை கேட்கிறோம். நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கூறப்பட்டாலும், தபோல்கர், பன்சாரே, கல்புர்கி கொலைகளுக்கும், முகமது இக்லாக அடித்தே கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் இடையே ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை எங்களால் உணர முடியாமல் இல்லை. இந்நிலையில், இவ்விவகாரத்தில் உங்கள் நேரடியான பதில் வெளிவர வேண்டும். நேற்று நீங்கள் பேசியதில் ஒரு தெளிவற்ற நிலை நிலவியதால் இக்கடிதத்தை நான் எழுதுகிறேன். எனவே, உங்களது உண்மையான தலையீடு தேவை. இது வெற்றுரைகளுக்கான நேரமல்ல. இது உங்களிடமிருந்து கடும் கண்டனம் வர வேண்டிய தருணம். உங்களது கண்டனம் எந்தவகையில் இருக்க வேண்டும் என்றால், அதை கேட்கும் பொதுமக்களுக்கு இனி இந்திய தேசத்தில் யாரும் அவரது நம்பிக்கைக்காக, அவரது பார்வைகளுக்காக, அவரது உணவு பழக்கவழக்கங்களுக்காக கொல்லப்படமாட்டார்கள் என்ற தீர்க்கமான நம்பிக்கையை விதைப்பதாக இருக்க வேண்டும்.
பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி தடையும், அதை அரசியல் கட்சியினர் பகுப்பாய்வு என்ற பெயரில் துஷ்பிரயேகம் செய்ததுமே தாத்ரியில் நடந்த சம்பவத்துக்கு காரணம் என்று கூறினால் அதில் என்ன தவறு? சிலர் சிந்திக்காமல் செய்யும் காரியங்களுக்கு நாங்கள் அதீத விலை கொடுக்க வேண்டியிருக்க்கிறது. இது இன்னமும் தொடரலாம். ஆனால், இவை எதுவுமே உங்களை கோபப்படுத்தவில்லை, உங்களை சலனமடையச் செய்யவில்லை என்பதே இந்த விவகாரத்தில் உங்கள் அணுகுமுறை மீதான மிகப் பொருத்தமான பார்வையாக இருக்கும்.
இத்தகைய சூழலில், இந்து அடிப்படைவாத சக்திகள் சில 'இந்துக்களே தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்' என்ற வாதத்தை முன்வைப்பது சலிப்படையச் செய்கிறது. கடும் கண்டனத்துக்குள்ளாக வேண்டிய ஒரு சம்பவம், இனிமேல் நடைபெறவிடாமல் தடுக்கப்பட வேண்டிய ஒரு சம்பவம்தான் தாத்ரியில் நடைபெற்றுள்ளது என்பதே நிதர்சனம். ஆனால், அதை எங்கேயாவது எப்போதாவது எதேச்சையாக நடைபெற்ற சம்பவம் போல் சித்தரிக்கும் முயற்சி நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டும் அல்லாமல், ஊடகங்களே தாத்ரி சம்பவத்தை மிகைப்படுத்திவிட்டன என்ற விமர்சனம் வெறுக்கத்தக்கது.
இன்று, உள்நாட்டிலும் சரி உலக அரங்கிலும் சரி உங்கள் மீதான பார்வை, "நீங்கள் ஓர் அமெரிக்க அதிபர் பாணி இந்தியப் பிரதமர்" என்பது மாதிரியாக இருக்கிறது. நீங்கள் அமெரிக்க அதிபரின் பாணியில் நடந்து கொள்கிறீர்கள் என்பது உண்மையானால் அவரைப்போலவே, இன, மொழி, மத பேதங்களால் நடைபெறும் வன்முறைகளுக்கு அது எங்கு, யாரை குறிவைத்து நடைபெற்றிருக்கிறது என்ற பாகுபாடு எல்லாம் பார்க்காமல் அவர் எப்படி உடனடியாக அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுகிறாரோ அதேபோல் நீங்களும் செயல்பட வேண்டும் அல்லவா? அமெரிக்க குடிமக்கள் அனைவருமே அந்நாட்டு அதிபரின் கருத்துகளை ஆதரிப்பர் எனக் கூற முடியாது, ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்வர். ஆனால், உங்களிடம் இருந்து பொத்தாம்பொதுவான பேச்சு மட்டுமே வருகிறது.
குடியரசுத் தலைவர் நம் நாட்டின் அடையாளம். அவரது வார்த்தைகள் நம்மை வழிநடத்திச் செல்கின்றன. ஆனால், உண்மையில் தேசத்தை செலுத்துவது நீங்களே. எனவே தேசத்தில் நிகழும் எல்லா வினைகளுக்கு, எதிர்வினைகளுக்கும், நல்லிணக்கத்துக்கும், மேம்பாட்டுக்கும், வலிமைக்கும் நீங்களே காரணமாக இருக்க முடியும்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நீங்கள் எதையெல்லாம் தீமை என பார்த்தீர்களோ அதை எல்லாம் அழித்தொழிப்பதே உங்கள் ஆட்சியின் கடமையாக இருக்கும் என்றீர்கள். அது உண்மையென்றால், குழப்பவாதிகள் தெளிவாகப் பேசுங்கள். அவர்களிடம் கோரிக்கைகளை வையுங்கள், இல்லையேல் அவர்களை கட்டுப்படுத்தவாவது செய்யுங்கள். ஆனால், தயவுசெய்து வாக்குவங்கியை வைத்து விளையாடாதீர்கள். நீங்கள் அத்தகைய அரசியல் விளையாட்டை விளையாடுவதாகவே தெரிகிறது.
அதுமட்டுமல்ல பிரதமர் அவர்களே, முந்தைய பிரதமரைப் போல் நீங்கள் மவுன பார்வையாளர் அல்ல. நீங்கள் பேசவும், பேச்சு மூலம் வசீகரிக்கவும் விரும்புகிறீர்கள். லால் கிலா, மேடிசன் சதுக்கம், துபாய், சிலிகான் வேலி, கூகுள், ஃபேஸ்புக் தலைமையகம் என நீங்கள் பல இடங்களிலும் பேசியதை நாங்கள் கேட்டிருக்கிறோம். உங்கள் தாய் சந்தித்த துன்பங்களை பகிர்ந்துகொண்டு நீங்கள் கலங்கியதை பார்த்திருக்கிறோம்.
வார்த்தைகள், வலுவானது முதல் உருக்கமானதுவரை மிக எளிதாக உங்கள் வசப்படுகின்றன. எனவே, மாட்டிறைச்சி சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்ட ஒரு மனிதருக்காக குரல் கொடுங்கள் என உங்களிடம் இருந்து ஒரு சில வார்த்தைகளை பெற நாங்கள் ஏன் கோஷமிட வேண்டியிருக்கிறது?
ஒரு துக்க சம்பவம் நடந்த பிறகும்கூட உங்கள் ஆட்சியின் மூத்த அமைச்சர்களும், சில முக்கிய பிரமுகர்களும் மனிதநேயமற்ற வார்த்தைகளை சர்வ சாதாரணமாக கூறிவருகின்றனர். தாத்ரி சோக சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்காக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் நீங்கள் பேசிவிட்டதாக அவரே கூறுகிறார். ஆனால், மோடி அவர்களே, இது உங்கள் இருவர் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. நீங்கள் தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்வதற்கு. இது இந்தியர்கள் அனைவர் சார்ந்த விஷயம். எனவே நீங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரடியாக கண்டிக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளையும், எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் விமர்சிக்கும்போது நீங்கள் அஞ்சானாக இருக்கிறீர்கள். அதே அஞ்சாமையையும், அது போன்ற வார்த்தை ஜாலத்தையும் உங்கள் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்களை கண்டிக்க நீங்கள் ஏன் பயன்படுத்துவதில்லை?
ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து மக்களை அந்நியப்படுத்திவருகின்றன. இந்நிலையில், பிரதமராகவும், பாஜக-வை இயக்கும் மாபெரும் சக்தியாகவும் இருக்கும் மோடி அவர்களே, இந்துத்துவா அமைப்புகளுக்கும், கட்சிக்கும் நீங்களே பொறுப்பு. அதற்குமட்டுமல்ல சங்பரிவார்கள் அமைப்புகள் தூண்டிவிடும் சில அநாகரிக நிகழ்வுகளுக்கும்தான்.
நீங்கள் ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்பதில் எப்போதுமே பகிரங்கமாக பெருமைப்பட்டுள்ளீர்கள். சங்பரிவார் அக்குடும்பத்தின் ஓர் அங்கம். எனவே, சங்கத்தை எப்போது கொண்டாடவேண்டும்; அதிலிருந்து எப்போது விலகி நிற்க வேண்டும் என்ற முடிவை நீங்கள் எடுக்க முடியாது. இரண்டுவிதமான நிலைப்பாடுகளுக்கு இங்கு இடமில்லை.
உங்கள் கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள், "எதைப்பற்றி பகிரங்கமாக பேச வேண்டும். அதை எங்கு பேச வேண்டும் என்ற முடிவு முற்றிலும் உங்களுடையது" என்று. அதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அதேவேளையில் மக்களின் மகிழ்ச்சிக்கு உலைவைக்கும் இத்தகைய நிகழ்வுகள் குறித்து பேசுவது அவசியம் என உங்களுக்கு தோன்றவில்லை என்றால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கூட கடவுளிடம் நீதி கேட்டு முறையிடும் சூழல் உருவாகும்.
ஏனெனில், இது மதுச்சார்பின்மை பற்றிய விவகாரம் அல்ல, இது மனிதம் சார்ந்த விவகாரம். உண்மையான, உணர்வுப்பூர்வமான விவகாரம்.
நீங்கள் சமூகவலைதளங்களை கையாள்வதில் தேர்ந்தவர். அதை மார்க் ஸக்கர்பக்கரிடம் பகட்டாக காட்டியிருக்கிறீர்கள். எனவே, நடைபெற்ற பல்வேறு சோக சம்பவங்கள் தொடர்பாக சைபர் உலகில் பதிவான கருத்துகளை நிச்சயமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைக் கண்ட பிறகுகூட அவற்றிற்கு நேரடியாக பதிலளிக்க வேண்டும் என உங்களுக்கு தோன்றவில்லையா?
இறுதியாக ஒரு கேள்வி. "இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள விரும்புகிறார்களா? அல்ல... இருவரும் இணைந்து வறுமைக்கு எதிராக சண்டையிட விரும்புகிறார்கள் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்" என்று நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள். இது என்னை பொருத்தவரை உங்களிடம் இருந்து வந்த மற்றுமொரு வெற்று கோஷம்.
ஏனெனில், வறுமை என்பது மதம், இனம் ஆகியவற்றில் இருந்து பிரிக்க முடியாத அளவுக்கு பிண்ணிப் பிணைந்திருக்கும் ஒரு பிரச்சினை. எனவே, இந்த சவால்களை நாம் பெருத்த நேர்மையோடும், மிகுந்த துணிவோடும் அணுகாவிட்டால், வறுமை மட்டுமல்ல நமது தேக்கநிலையும் என்றைக்குமே குணமாகப்போவதில்லை.
தமிழில்: பாரதி ஆனந்த்
நன்றி : தி இந்து (தமிழ்)