மூத்த திரைப்படநடிகர் திரு.சிவகுமார் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அந்த முகநூலினால் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை கோபத்துடனும், வேதனையுடனும் குறிப்பீட்டு ''இத்துடன் எனது முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன்'' என்று பதிவிட்டுவிட்டு முகநூலை விட்டே வெளியேறிவிட்டார். அவர் சொல்வது போல் சில கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கலாம். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும், திரைப்படத்துறையில் இருப்பவர்களுக்கும் இது போன்ற தளங்களில் இடையூறுகளும், சங்கடங்களும் ஏற்படுவது சகஜம் தான்.
இதுவரையில் மக்கள் ''ஒரே பக்க ஊடகங்களை'' தான் பார்த்திருக்கிறார்கள். சினிமாவாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சிப் பெட்டியாக இருந்தாலும் சரி, செய்தித்தாள் மற்றும் இதழ்களாக இருந்தாலும் சரி... அனைத்தும் ஒரே பக்க ஊடகங்களே. இவைகளை தான் இதுவரையில் அனுபவித்து வந்திருக்கிறார்கள். இத்தனை ஊடகங்களும் என்ன சொல்கிறதோ அதை அப்படியே மக்களால் பெற்றுக்கொள்ளத்தான் முடியும். அவர்களால் தங்களின் விருப்பு வெறுப்புகளை அவைகளிடம் திரும்ப செலுத்தமுடியாது. இதுவரையில் எதிர்பக்கத்திலிருந்து வந்த தகவல்களை பெற்றுக்கொள்பவர்களாக மட்டுமே இருந்தவர்களுக்கு, பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகள் எதிர்வினையும் செயலாற்றக்கூடிய இரு பக்க ஊடகங்களாக இருக்கின்றன. பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் அவைகள் தருகின்ற தகவல்களை வெறும் பெற்றுக்கொள்பவர்களாக மட்டும் இல்லாமல், தருகின்ற தகவல்களுக்கு சுதந்திரமாக எதிர்வினை செய்யக்கூடிய ஒரு ''சுதந்திர தளமாக'' அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த சுதந்திரத்தின் எல்லை மீறும் போது திரு.சிவகுமார் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. இந்த தளங்களில் உலாவரும் அனைவருமே நல்லவர்கள் தான். அவர்களின் குணாம்சம் தான் மாறுபடும். அடுத்தவர்களை சீண்டிப்பார்த்து சந்தொஷப்படுபவர்களும் அந்த கூட்டத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் ஒதுங்கிச் சென்றுவிட வேண்டியது தான். நாம் செல்லும் பாதையில் ''அசிங்கம்'' இருந்தால் தாண்டிச் செல்வது இல்லையா அல்லது ஒதுங்கிச் செல்வது இல்லையா...? அதேப் போல் தான் இந்த பேஸ்புக் தளங்களிலும் நடந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து தொல்லைக்கொடுப்பவர்களாக இருந்தால் அவர்களின் பேஸ்புக் கணக்கை ப்ளாக் செய்யும் வசதியும், உரிமையும் உங்களிடம் இருக்கிறதே. அதை பயன்படுத்தலாமே...!
திரு.சிவகுமார் அவர்கள் வெறும் திரைப்பட நடிகர் மட்டுமல்ல. ஒரு தலைசிறந்த ஓவியர். ஒரு தேர்ந்த பேச்சாளர், எழுத்தாளர், கட்டுரையாளர்... இப்படியாக எல்லாம் கலந்த மதிப்புமிக்க கலைஞர். மற்ற எந்த நடிகர்களிடமும் பார்க்கமுடியாத சிறந்த மனிதர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இவர் ஒரு மனிதநேயம் உள்ள பண்பாளர். வசதியற்ற மாணவ - மாணவியர்களுக்கு அவர்கள் படிப்பதற்கு நிதியுதவி செய்யும் மாண்பு கொண்டவர். இப்படிப்பட்டவரின் அனுபவங்களும், தகவல்களும் வளரும் கலைஞர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதற்காகவாவது அவர் முகநூலில் மீண்டும் பதிவிடவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் உங்களின் அனுபவப்பாடங்கள் அடுத்தவர்களுக்கு கிடைக்காமல் உங்களோடே அழிந்து போகும். அப்படியாக வீண்போக நீங்கள் அனுமதிப்பீர்களா...? என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். பின் முடிவெடுங்கள்.
எனவே திரு.சிவகுமார் அவர்களே...! உங்களின் இந்த முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் முகநூல் பக்கத்திற்கு வருவீர்கள் என்று நம்புகிறேன்.