தேவாரத்தில் தேனி நியுட்ரினோ நோக்குக்கூடம் பற்றிய அறிவியல் கூட்டத்தில் இந்திய விஞ்ஞானி திரு.த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் அளித்த பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதை முழுமையாக படிப்பதன் மூலம் அறியாமையினாலும், மேதாவித்தனத்தாலும் குழம்பிப்போனவர்களுக்கும், மற்றவர்களை குழப்புபவர்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.
கேள்வி : நியூட்ரினோ என்பது என்ன...?
பதில் : அணுவின் அடிப்படைத் துகளான புரோட்டான்,
நியூட்ரான், எலெக்ட்ரான் போல ஓர் அடிப்படைத் துகள் நியூட்ரினோ ஆகும். பல
கோடி கோடி நியூட்ரினோக்கள் நொடிக்கு நொடி நம்மை சுற்றிப் பாய்ந்து
ஊடுருவிச் சென்று கொண்டே உள்ளன. இவை எந்தப் பொருளையும் ஊடுருவிச்
செல்லக்கூடியவை. விண்ணிலிருந்தும் காலுக்கு அடியில் பூமியிலிருந்தும்
வெளிப்படும் நியூட்ரினோ துகள்கள் கோடி கோடியாக எந்நேரமும் நம்மைச் சுற்றிப்
பாய்ந்து கொண்டே உள்ளன. ஆனாலும் இந்தத் துகளை இனம் காண்பது எளிதல்ல.
இப்படி ஓர் அடிப்படைத்துகள் இருக்கிறது என்ற யூகம் தர்க்க ரீதியாக
1930களில் வெளிப்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில்தான் இந்தத் துகள் குறித்து
நுணுக்கமாக ஆராய கருவிகள் படைக்க முடிந்துள்ளது. இன்றும்கூட இந்தத் துகள்
குறித்த அறிவை விட அறியாமைதான் அதிகம்.
கேள்வி : இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு என்பது என்ன....?
கேள்வி : இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு என்பது என்ன....?
பதில் : ஜப்பான், கனடா, இத்தாலி மற்றும் பூமியின் தென்துருவம் ஆகிய இடங்களில் தற்போது நியூட்ரினோ ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் நடத்தப்படும் நியூட்ரினோ ஆய்வுக்கு ஐஎன்ஓ (India-based Neutrino Observatory - INO) என்று பெயரிடப்பட்டுள்ளது. நியூட்ரினோ துகளைக் குறித்த நுண் ஆய்வு தான் தேனியில் அமையவிருக்கிற இந்திய நியூட்ரினோ நோக்குக்கூடத்தின் பணி. இரும்பின் வழியே ஊடுருவும் நியூட்ரினோக்களை சென்சார் கருவிகள் மூலம் உணர்ந்து, ஆய்வு செய்யப் போகிறர்கள். இந்தப் புதிய முறையிலான ஆய்வுக் கூடம் உலகிலேயே இந்தியாவில்தான் முதன்முதலாக அமைக்கப்படுகிறது.
கேள்வி : இதை ஏன் சுரங்கம் அமைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்...?
பதில் : நியூட்ரினோவை தனியாக ஆய்வு செய்ய வேண்டுமானால், அதனுடன் வேறு எந்த துகளும் உணர்விக் கருவியில் படக்கூடாது. சூரியன் மற்றும் அண்டவெளியிலிருந்து வரும் நியூட்ரினோக்கள் தனியாக வருவதில்லை. காஸ்மிக் கதிர் போன்ற பல்வேறு துகள்கள் இணைந்து கலந்துதான் வருகின்றன. மலையைக் குடைந்து அதில் நியூட்ரினோவை உணரும் ஆய்வுக் கருவியை வைக்கும் போது, அந்த ஆய்வுக்கருவியில் நியூட்ரினோ மட்டும் வந்து விழும். மற்ற பொருட்களை எல்லாம் மலை வடிகட்டி விடும். காஸ்மிக் கதிர்களின் பாதிப்பு இல்லாமல் நியூட்ரினோ துகள்களை மட்டும் ஆய்வு செய்ய வேண்டுமானால், எல்லா திசைகளிலிருந்தும் குறைந்தது 1,000 மீட்டர் கற்களால் சூழப்பட்ட நிலையில், மலையின் உள்ளே அமைந்த குகைக்குள் மட்டுமே ஆய்வு நடத்த முடியும்.
கேள்வி : இதற்கு ஏன் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தேனியைத் தேர்வு செய்தார்கள்...? இந்தியாவின் வேறு மலைகளை ஏன் தேர்வு செய்யவில்லை....?
பதில் : நியூட்ரினோவை மட்டும் ஆய்வு செய்வதற்கு வேறு துகள்களை வடிகட்ட காலத்தால் மிகப்பழைய மலையாக இருக்க வேண்டும். இமயமலை உயரமானதுதான். ஆனால் கடினமானது அல்ல. பழைய மலைகள்தான் கடினமாக இருக்கும். இமயமலைப் பகுதி பெரும்பாலும் படிமப் பாறைகளால் ஆனது. சிறு சிறு பாறைகளால் ஆன தொகுப்பாக அந்த மலைப் பகுதி உள்ளதால், அங்குள்ள பாறைகளில் உறுதித்தன்மை மிகவும் குறைவு. மற்ற மாநிலங்களிலும் பாறைகளின் தன்மை இந்த ஆய்வுக்கு ஏற்றதாக இல்லை. ஆனால், தேனி மாவட்டத்தின் மேற்கு போடி மலையிலுள்ள பாறைகள் மிகவும் கடினமான சார்னோக்கைட் பாறைகளால் ஆனவை. அதுமட்டுமல்ல காடுகள் அடர்ந்த பகுதி என்றால் மரங்களை வெட்ட வேண்டிவரும். விவசாய நிலம் இருக்கும் பகுதி என்றால் விவசாய நிலத்தை கையகப்படுத்த வேண்டி வரும். அவ்வாறு விவசாய நிலமற்ற, மரங்கள் அடர்ந்து இல்லாத இடமாக தேடித் தேடித் தான் இந்த மலை இறுதிசெய்யப்பட்டது. நேரடியாக இந்தக் கருவியால் மனிதன், விலங்கு, பறவை எதற்கும் பாதிப்பு இல்லை. விவசாயம் போன்ற பயன்பாட்டில் உள்ள நிலத்தை கையகப்படுத்தக் கூடாது, மரங்கள் செறிவாக உள்ள பகுதிகள் தவிர்க்கப்படவேண்டும் என கவனத்தில் கொள்ளப்பட்டது. எனவே இறுதியில் தேனி மாவட்டத்தில் பயனற்ற தரிசுப் பகுதியாக உள்ள குறிப்பிட்ட மலைப் பகுதிதான் பொருத்தமானது எனத் தேர்வு செய்யப்பட்டது.
கேள்வி : கோலார் தங்கச்சுரங்கத்தில் நடந்த ஆய்வு குறித்து....?
பதில் : 1970களில் கோலார் தங்கச்சுரங்கத்தில் காஸ்மிக் கதிர்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. அங்கு காஸ்மிக் கதிர்களை உணரும் கருவிதான் வைக்கப்பட்டது. காஸ்மிக் கதிர்கள் குறித்த உலக அறிவுத் தொகுப்பில் இந்த ஆய்வுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. கோலார் தங்கச்சுரங்கம் சிதிலமடைந்து வெள்ளம் புகுந்த பின் அந்த ஆய்வுக் கூடம் மூடப்பட்டது. இன்று காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி விண்வெளியிலிருந்து செயல்படுகிறது. எனவே சுரங்கம் தேவையில்லை.
கேள்வி : நியூட்ரினோ திட்டத்தால் நீர்வளம் குறைந்து விவசாயம் பாதிக்குமா....? பாசனப் பற்றாக்குறை ஏற்படுமா....?
பதில் : இந்தத் திட்டத்திற்கு நீர் அவசியம்தான். அங்கு ஏற்படுத்தப்போகும் அலுவலர் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு நீர் தேவை. மின்காந்தத்தை குளிர்விக்க நீர் தேவை. ஆனால் இந்தத் திட்டத்திற்கு தேவைப்படும் நீர், முன்னூறு குடும்பங்களுக்கு குடிக்க, குளிக்க, சமைக்கத் தேவையான நீரின் அளவு மட்டுமே. இன்று இருக்கும் விவசாய நீருக்கு இந்தத் திட்டத்தால் எந்த பாதிப்பும் இருக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி : வெடிபொருள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறதே...?
பதில் : இந்த ஆய்வுக் காலம் முழுவதும் வெடிபொருள்கள் பயன்படுத்தப்போவது இல்லை. இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு மலையில் பக்கவாட்டில் சுரங்கப்பாதை அமைக்க மட்டுமே பயன்படுத்தப்படும். கல் குவாரிகளில் செய்வது போல வெடி வைத்து பாறைகளை வெடித்துத் தகர்ப்பது அல்ல. சுரங்கம் அமைப்பதுதான் இலக்கு. எனவே controlled explosions என்கிற முறையில் வெடிப்பு ஒரு சில நொடிகள் மட்டுமே இருக்கும். சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அதிர்வு உணர்வுகூட உணர முடியாது. ஆகவே சுரங்கம் தோண்டுவதால் சூழல் பாதிப்பு எதுவும் இருக்காது.
கேள்வி : குகையை உருவாக்க வெடி வைப்பதால் அணைகளுக்கு பாதிப்பு உண்டா....?
பதில் : சுரங்கம் தோண்டும்போது தினமும் இரண்டு முறை மட்டுமே வெடிபொருள் வெடிக்கப்படும். இதனால் ஏற்படும் இரைச்சல் மற்றும் அதிர்வுகள் வெளிப்பகுதியில் உணராத வகையில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடுக்கப்படும். இந்த அதிர்வுகளால் அணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. சென்னையிலும் தில்லியிலும் நிலத்தடி மெட்ரோ ரயிலுக்காக தினமும் சுரங்கம் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
கேள்வி : கதிர் வீச்சு ஆபத்து இருக்கிறது என்று சொல்கிறார்களே....?
பதில் : இது அறியாமை. உண்மையில் இங்கு எந்த உற்பத்தியும் நடக்கப்போவதில்லை. நியூட்ரினோவை பொறுத்தவரையில் கதிர்வீச்சு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் நியூட்ரினோ என்பது ஒரு அணுத்துகள் அல்ல, அடிப்படைத்துகள். இது எதிர்வினையாற்றாத ஒரு அடிப்படைத்துகள். எனவே இதனால் பாதிப்பு எதுவும் இல்லை. மேலும் இந்த நோக்குக் கூடத்தில் இயல்பாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் நியூட்ரினோவைப் பற்றிய ஆய்வுதான் நடக்கப் போகிறது. அந்த ஆய்வால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆய்வு நடந்தாலும் நடக்காவிட்டாலும் ட்ரில்லியன் ட்ரில்லியன் நியூட்ரினோக்கள் பூமியில் விழுந்து கொண்டுதானே இருக்கின்றன? இன்று நேற்றல்ல, பூமி பிறந்தது முதல் இவ்வாறு நியூட்ரினோ அடைமழை பெய்த வண்ணம்தான் உள்ளது.
கேள்வி : சுரங்கம் தோண்டுவதால் வெளியேறும் கழிவுகளை அந்தப்பகுதியில் கொட்டும்போது சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படாதா....?
பதில் : சுரங்கத்துக்காக வெட்டியெடுக்கப்படும் பாறைகளில் 90 சதவீதம் முழுப் பாறைகளாகக் கிடைக்கும். அவை அதிக தரமும், மதிப்பும் மிக்க கிரானைட் பாறைகளாகும். அந்த கிரானைட் பாறைகள் முழுவதும் தமிழக அரசுக்குச் சொந்தமானது என்பதால், அவற்றை வெளிச்சந்தையில் அரசு விற்பனை செய்யும். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே தூளாகக் கிடைக்கும். இந்தத் தூளில் 20 சதவிகிதம் கட்டுமானப் பணிகளில் பயனாகும். மீதமுள்ள கழிவு மட்டுமே நான்குபக்க சுவர் எழுப்பி அதற்குள் கொட்டி வைக்கப்படும். எனவே, பாறைகளை உடைப்பதால் தூசு மண்டலம் ஏற்படும் என்பதற்கோ, அண்டைப் பகுதிகள் பாதிக்கப்படவோ வாய்ப்பு இல்லை.
கேள்வி : ஏன் இரசியமாக குகைக்குள் ஆய்வு...? வெளிப்படையாக நடத்தவேண்டியதுதானே....? இந்த கருவியில் எதோ ஆபத்து இருப்பதால் தானே குகைக்குள் வைக்கப்படுகிறது...?
பதில் : குகை என்றதுமே இது ரகசிய ஆய்வு என்று சிலர் கற்பனை செய்ய துவங்கிவிட்டனர். உள்ளபடியே இந்த ஆய்வுத் திட்டம், நியூட்ரினோ என்ற அடிப்படையான துகளின் குணங்கள் குறித்தான ஆராய்ச்சியே தவிர, அணுசக்தி ஆராய்ச்சியோ, கதிரியக்கம், ராணுவம், பாதுகாப்புத் துறை தொடர்பான வேறு எந்த ஆராய்ச்சியோ இல்லை. அணு உலைக் கழிவுகளை சேகரித்து வைக்கும் இடமாக இந்த ஆய்வுக் கூடம் பயன்படுத்தப்படும் என்பதும் வதந்தியே. இந்தத் திட்டத்தால் மக்களுக்கு கதிரியக்க பாதிப்புகள் வரும் என்பதும் வதந்தியே. இயல்பாக, பூமியின் மேற்பரப்பில் துகள்களின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், அந்தச் சூழலில் நியூட்ரினோ துகள்களை ஆராய முடியாது. எனவேதான், ஏனைய துகள்களை வடிகட்டி அவற்றின் தாக்கம் இல்லாத வகையில் மலையைக் குடைந்து ஆய்வுக் கூடம் அமைக்கப்படுகிறது.
கேள்வி : இந்தக் கருவி அல்லது ஆய்வுக்கூடம் கதிர்களை வெளிப்படுத்துமா? அந்தபகுதியில் வெப்பத்தைக் கூட்டுமா....?
பதில் : Neutrino detector – அதாவது ‘நியூட்ரினோ உணர் கருவி’ என்பதுதான் இதன் பெயர். மழையை அளக்கும் மழைமானி வைப்பதால் மழை வந்து விடாது, வெப்ப மானி இருப்பதால் வெப்பம் ஏற்பட்டு விடாது அல்லவா? இந்தக் கருவி வெப்ப மானி, மழை மானி போல ஒரு உணர் கருவிதான். இதனால் எந்தவிதமான கதிர்வீச்சும் ஏற்படாது. புகை, கழிவு நீர் போன்ற சூழல் ஆபத்தும் இல்லை. வெப்பமும் ஏற்படாது. இரண்டு கிலோமீட்டர் உள்ளே சுரங்கத்தில் வைக்கப்படும் இந்தக் கருவியால் யாருக்கும் உயிர், பொருள், வாழ்வு, சூழல் ஆபத்து முற்றிலும் கிடையாது.
கேள்வி : வறுமை பஞ்சம் பசி, போன்ற பல பிரச்சனைகள் உள்ளபோது இவ்வளவு செலவு செய்து இந்த ஆய்வு தேவைதானா....?
பதில் : பசி, பட்டினி, வறுமை, போதிய மருத்துவ வசதியின்மை, கல்வியின்மை எனப் பல பிரச்சினைகளை இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் உள்ளபடியே பிரச்சினைகள்தாம். இந்த சமூக அவலங்களை களைவது நமது கடமைதான். ஆனால், இவை எல்லாவற்றையும் தீர்த்தபிறகுதான் நியூட்ரினோ போன்ற அடிப்படை ஆராய்ச்சி செய்யலாம் என்பதுதான் ஏற்க முடியாத வாதமாக இருக்கிறது. அல்லது நியூட்ரினோ ஆய்வு போன்ற “அத்தியாவசியமற்ற” ஆய்வுகளுக்கு பணம் செலவிடப்படுவதால்தான் வளர்ச்சித் திட்டங்களுக்கு காசு இல்லை என்பதும் உண்மைக்கு புறம்பான கூற்றுகள். கடந்த நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த செலவு 17,94,892 கோடி ரூபாய்கள். இதில் வெறும் 1,500 கோடி ருபாய் என்பது வெறும் தூசு. எனவே இந்தச் செலவால்தான் சமூக வளர்சிக்கு நிதியில்லாமல் போயிற்று என்பதில்லை. எனவே இந்த திட்டச் செலவை வறுமை - ஏழ்மை - வளர்ச்சியின்மைக்கு
குறிப்பிட்ட குளிர்பானம் மட்டும் ஆண்டுதோறும் ஈட்டும் வருவாய் 2,21,000 கோடி ரூபாய். இந்தியாவில் ஆண்டுதோறும் திரைப்படத் துறையின் வருவாய் 15,000 கோடி. தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் டாஸ்மாக் வருவாய் 23,401 கோடி. சிகெரட் பீடி போன்ற புகையிலைப் பொருள்களின் விற்பனையில் கிடைக்கும் கலால் வரி மட்டும் 10,271 கோடி. அவ்வளவு ஏன், நமது நாட்டில் வெடிக்கப்படும் தீபாவளி பட்டாசு 3,300 கோடி.
எது வீண் செலவு? அறிவைப் பெருக்குவது
செலவா, இல்லை முதலீடா? இந்த நிலையில், ஆய்வுகளுக்குச் செய்வது வீண் செலவு
என்பது போலவும், இதனால்தான் வளர்ச்சி ஏற்படவில்லை, ஏழ்மை ஒழியவில்லை என்பது
போலவும் வாதம் செய்வது வியப்பாகத்தான் இருக்கிறது. தகவல் தெரியாத சாதாரண
மக்கள், ஏழை விவசாயிகள், வீட்டுப் பெண்கள் ஆயிரத்து ஐநூறு கோடி என்றதும்
ஆவென வாயைப் பிளந்து ஆச்சரியத்துடன் இவ்வளவு செலவா என கருதுவதில்
வியப்பில்லை. ஆனால் இதையே சில அரசியல் அமைப்புகளும் சமூக நிறுவனங்களும்
வாதமாக முன்வைக்கும் போது வியக்கத்தான் தோன்றுகிறது.
கேள்வி : இத்திட்டத்தால் என்ன லாபம்? என்ன பயன்....?
கேள்வி : இத்திட்டத்தால் என்ன லாபம்? என்ன பயன்....?
பதில் : இந்த ஆய்வுத் திட்டம் அடிப்படை ஆய்வு. அடிப்படை ஆய்வு வழி உடனடி பொருளாயத லாபம் எதுவும் இராது. ஆயினும் அடிப்படை அறிவியல் ஆய்வு இல்லாமல் பயன்பாட்டு அறிவியல் – தொழில்நுட்பம் சாத்தியம் இல்லை. இன்று அடிப்படை ஆய்வு – நாளை பயன்பாடு என்பதே அறிவியல் வரலாறு.
நேரடி உடனடி லாபம் எதுவும் இத்திட்டத்தால்
விளையாது என்றாலும் மறைமுகப் பயன்கள் உண்டு. இத்திட்டத்திற்கு என உலகின்
மிகப்பெரிய மின்காந்தம் உருவாக்கப்படும். இதற்கு வேண்டிய தொழில்நுட்பம்
மற்றும் பொருட்கள் உட்பட எல்லா கருவிகளும் இந்தியாவில் தயாரிக்க
இருக்கிறார்கள். இந்தக் கருவிகளை, பொருட்களை இந்தியக் கம்பெனிகள் உற்பத்தி
செய்யும்போது அதன் வழி இந்நிறுவனங்களின் தொழில்திறன் கூடும். இவ்வாறு சில
மறைமுகப் பயன்கள் உள்ளன. அதுமட்டுமல்ல. இந்தக் கருவி வேலைசெய்ய பல
சென்சார்கள் – தரவு பதியும் கருவிகள், கணினி அமைப்புகள் போன்ற பல
மின்னணுவியல் கருவிகள் தேவை. இவை அனைத்தும் இந்தியாவில் செய்யப்படுவதால்
இந்தத் துறை மேலும் வளரும். சுமார் 20 ஆண்டுகள் நூற்றுக்கணக்கான
ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் முதலானோர் நோடிப்
பயன்பெறுவர். இதன் வழியாக நமது நாட்டில் அறிவியல் தொழில்நுட்ப மனித வள
மேம்பாடு காண முடியும்.
கேள்வி : இந்தத் திட்டத்தால் வேலை வாய்ப்பு உள்ளதா....?
பதில் :
இத்திட்டத்தின் விளைவாக வெகுவான வேலைவாய்ப்பு எதுவுமிராது. குறிப்பாக,
பகுதி வாழ் மக்களுக்கு வேலைவாய்ப்புத் தரவல்ல திட்டம் அல்ல. துப்புரவுப்
பணி, காவல் பணி, ஓட்டுநர் பணி, கட்டுமானப்பணி போன்ற ஒருசில பணிகளில்
மட்டுமே வாய்ப்பு உள்ளது. இத்திட்டம் ஆய்வுநோக்கம் கொண்டது, வேலை வாய்ப்பு
நோக்கம் கொண்டதல்ல. வேலைவாய்ப்பு இல்லை என்பதற்காக இத்திட்டம்
எதிர்க்கப்பட்டால் எல்லாவித ஆய்வுத் திட்டங்களையும் கிடப்பில்தான் போட
வேண்டும். எந்த அறிவியல் அடிப்படை ஆய்வையும் செய்ய இயலாது போகும்.
கேள்வி : ஆழ்துளைக் கிணறை அதிக ஆழமாகப் போடுவதால் நிலத்தடி நீர்வளத்திற்கு ஆபத்து உண்டா....?
பதில் : இந்தத் திட்டத்தில் ஆழ்துளைக் கிணறு போன்றவை இடுவதாக திட்டமே இல்லை. அப்படி அங்கு ஏதாவது ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு வந்தால் அதற்கும் இந்தத் திட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கேள்வி : கிராம மக்கள் வெளியேற்றப்படுவார்களா? ஆடு மாடுகள் மேய்ச்சல் செய்ய தடை உண்டா....?
பதில் : இந்தத் திட்டத்திற்கான இடத்தேர்வு செய்யும்போதே அடர்த்தியான காடுகளை வெட்டக் கூடாது, விவசாய-கிராம நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என கருதித்தான் இடத்தேர்வு செய்யப்பட்டது. எனவேதான் எந்த விவசாய நிலமும் குடியிருப்பும் அடர்ந்த காடும் இல்லாத பொட்டிபுரம் மலையும் அதில் உள்ள 66 ஏக்கர் புறம்போக்குத் தரிசு நிலமும் தேர்வு செய்யப்பட்டது. எனவே யாரையும் அப்புறப்படுத்த வேண்டியதே இல்லை. இந்த ஆய்வுக் கூடம், வெறும் அளவை மானி கொண்டது, ஆகவே ஆபத்து அற்றது. எனவே யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள்.
கேள்வி : நியூட்ரினோ ஆய்வுகள் உலகின் பல பகுதிகளில் தோல்வியில் முடிந்து மூடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் துவங்கப்படுவது ஏன்....?
பதில் : இது மிகவும் தவறான செய்தி. ஆய்வு தோல்வி என எந்த நியூட்ரினோ ஆய்வும் இதுவரை மூடப்படவில்லை. சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் புதிதாக மேலும் ஆய்வு மையங்கள் உருவாக இருக்கின்றன.
கேள்வி : இத்தாலியில் க்ரான் சாஸ்ஸோ மையத்தில் ரசாயனக் கசிவு ஏற்பட்டு மூடப்பட்டதாகச் சொல்கிறார்களே....?
பதில் : க்ரான் சாஸ்ஸோ மையத்தில் ஒருகாலத்தில் இராசயனங்கள் பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டது. ஊழியர் ஒருவரின் தவறால் 50 லிட்டர் ரசாயனம் கொட்டிவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் சுற்றுச்சூழல் விதிகள் மிகக் கடுமையானவை. உடனே இந்த ஆய்வு நிறுத்தப்பட்டது. இப்போதைய ஆய்வுகளில் இரசாயனங்கள் ஏதும் இல்லை. மின்காந்தம் பயன்படுத்தி ஆய்வு செய்யப்படுகிறது. தவிர, அதே க்ரான் சாஸ்ஸோ மையம் மீண்டும் செயல்பட்டு வருகிறது, கடந்த சில ஆண்டுகளில் நியூட்ரினோ துகள்களை தொடர்ந்து கண்டறிந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
தேனி.தே.சுந்தர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்