புதன், 31 அக்டோபர், 2012

முதலாளித்துவத்திற்கு ஓர் எச்சரிக்கை..!

கட்டுரை : விக்னேஷ் சேரல்         
        
        “வெனிசுலா இனி ஒருபோதும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்குத் திரும்பிச் செல்லாது; மாற்றத்தை நோக்கிய நமது மகத்தான பயணம் தொடரும்; 21ம் நூற்றாண்டின் சோசலிசத்தை நோக்கிய வெனிசுலாவின் பயணம் உறுதியுடன் தொடரும்” என்று உணர்ச்சிமிகு முழக்கங்களோடு நான்காவது முறையாக ஜனாதிபதி பணியைத் தொடர்கிறார் ஹியூகோ சாவேஸ்.
          80 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் - 55.11 சதவீதம் - பெற்று, தலைநகர மாவட்டமான காரகாஸிலும், மொத்தமுள்ள 23 மாநிலங்களில் 21 மாநிலங்களிலும் மிகப்பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார் ஹியூகோ சாவேஸ்.

‘சோசலிசமே எதிர்காலம்’ என்ற முழக்கத்திற்கு கிடைத்த வெற்றி இது.

       இத்தேர்தலில் அமெரிக்க ஆதரவோடு, சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்களின் பலத்தோடு சாவேஸூக்கு எதிராக களமிறங்கிய ஹென்ரிக் கேப்ரிலஸ் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் (44.27 சதவீதம்) பெற்றிருக்கிறார் என்ற போதிலும், அவரும் ஊடகங்களும் இந்த தேர்தலை, ‘மோசடித் தேர்தல்’ என்று குற்றம் சாட்டக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாவேசுக்கு மக்கள் அளித்த பேராதரவையும், அவரது வெற்றி நாடு முழுவதும் திருவிழா போல கொண்டாடப்படுவதையும் பார்த்து, “சாவேஸின் வெற்றியை முழுமையாக ஏற்கிறேன்; அங்கீகரிக்கிறேன்” என்று சொல்ல வைத்திருக்கிறது.
         உலகத்திலேயே தாங்கள் தான் மிகச்சிறந்த ஜனநாயக நாடு என்றும், உலகம் முழுவதும் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்யவேண்டிய பணி தங்களுக்குக் காத்திருக்கிறது என்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மார்தட்டிக் கொண்டிருக்கிறது.
            ஆனால், வெனிசுலா என்கிற லத்தீன் அமெரிக்க நாடு அமைதியாக, ஆரவாரமின்றி, அற்புதமாக ஜனநாயகத்தை நிலைநாட்டியிருக்கிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு, மொத்த வாக்காளர்களில் 80.9 சதவீத மக்கள் அக்டோபர் 7 ஞாயிறன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார்கள். தாங்களாகவே முன்வந்து மகிழ்ச்சியோடும், சீரிய உணர்வோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் வாக்களித்தார்கள்.
           மக்களின் முழுமையான பங்கேற்புடன் கூடிய ஜனநாயகம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது வெனிசுலா. தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், பகிரங்க மாகவும் நடந்திருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது வெனிசுலா.
           சோசலிசத்தை நோக்கிய சமூகத்தை கட்டி அமைத்துக்கொண்டிருக்கிறோம் என சாவேஸ் கூறுகிறபோது, அவர் சர்வாதிகார ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் என அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் பிரச்சாரம் செய்தவண்ணம் இருக்கின்றன. அத்தகைய ஊடகங்களுக்கு, தேர்தல் ஜனநாயகம் என்பதன் உயர்ந்த பொருளை உணர்த்தியிருக்கிறது வெனிசுலா.
             முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறபோது, எப்படியேனும் தன்னைக் காத்துக்கொள்ள உலகெங்கிலும் உழைக்கும் மக்கள் மீது வரலாறு காணாத தாக்குதல்களை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிற போது, சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடிக்கிற சாவேஸ் மீண்டும் வெற்றிபெற்றிருப்பது, முதலாளித்துவ உலகிற்கு ஓர் எச்சரிக்கையே!

செவ்வாய், 30 அக்டோபர், 2012

ஜெய்பால் ரெட்டி மாற்றப்பட்டது ''ரிலையன்ஸ்'' முகேஷ் அம்பானியின் நிர்ப்பந்தமா?

          மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளது. இந்த மாற்றம் மூலம் மக்களிடம் ஏற்பட்டுள்ள அவப்பெயரை அகற்ற முடியும் என கணக்குப் போடுகிறது காங்கிரஸ் அரசு. தலையணையை மாற்றினால் தலைவலி தீராது என்பார்கள். என்னதான் அமைச்சரவை மாற்றம் எனும் சாகச செயல்களை செய்தாலும் மக்களின் கோபத்தை திசை திருப்ப முடியாது. எனினும் ஒரு அமைச்சரின் மாற்றம் சில விவாதங்களை கிளப்பியுள்ளது. பெட்ரோலிய அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டியின் மாற்றம் தான் அது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஜெய்பால் ரெட்டியிடமிருந்து பெட்ரோலிய அமைச்சகம் பறிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதற்கு முன்பு மணிசங்கர அய்யரிடமிருந்து பெட்ரோலிய அமைச்சகத்தை பறித்த பொழுதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன. அவர் ஈரான் எண்ணெய் குழாய்கள் மூலம் இந்தியாவிற்கு எண்ணெய் வாங்கிட முனைப்பாக இருந்ததாகவும் அதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இறுதியில் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் வென்றது. மணிசங்கர அய்யர் பெட்ரோலிய அமைச்சகத்தை இழந்தார். அன்று வெளிநாட்டு நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்த மன்மோகன் அரசாங்கம் இன்று உள்நாட்டு பெரும் முதலாளிக்கு அடிபணிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெய்பால்ரெட்டி செய்த ‘தவறு’ தான் என்ன?

        தான் நினைத்தபடியெல்லம் பெட்ரோலிய அமைச்சகத்தை ஆட்டுவித்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்வாக்கை கட்டுப்படுத்தினார். அரசிடமிருந்து ரிலையன்ஸ் நிறுவனம் பெற்ற எண்ணெய் வயல்களில் ஒப்பந்தப்படி இல்லாமல் எண்ணெய் உற்பத்தி குறைந்தது. இதனால் 2011-12ம் நிதியாண்டில், திட்டமிட்டு ரூ. 20,000 கோடி நட்டம் அரசுக்கு ஏற்படுத்தப்பட்டது. 2012-13ம் ஆண்டில் இந்த நட்டம் ரூ.45,000 கோடியாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இது பற்றி கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி. தான் கொள்ளை லாபம் அடிக்க இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்திட ரிலையன்ஸ் நிறுவனம், பெட்ரோலிய அமைச்சகத்தின் மீது நிர்ப்பந்தம் செலுத்தியது. ஒப்பந்தப்படி 2014 - ஆம் ஆண்டுதான் விலை உயர்வு பற்றி பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொள்ளை லாபம் உடனே வேண்டும். அவ்வாறு விலை உயர்த்தினால் சுமார் ரூ. 35,000 கோடி அளவிற்கு மக்கள் மீது சுமை ஏற்றப்படும். அந்த அளவிற்கு ரிலையன்சுக்கு லாபம் ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளரின் ஆய்வுக்கு உட்படுத்தினார் ஜெய்பால் ரெட்டி. தான் ஒரு தனியார் நிறுவனம், தனது செயல்பாடுகளை ஆய்வு செய்திட தலைமை தணிக்கையாளருக்கு உரிமை இல்லை என ரிலையன்ஸ் வாதிட்டது. ஆனால் எண்ணெய் உற்பத்தி அளவு குறித்து அரசுடன் ஒப்பந்தம் இருப்பதால் ரிலையன்ஸ் செயல்பாடுகளை தலைமை தணிக்கையாளர் ஆய்வு செய்வதில் தவறு இல்லை என ஜெய்பால்ரெட்டி கூறினார்.
ரிலையன்ஸ் செய்த தகிடு தத்தங்களை தலைமைத் தணிக்கையாளர் அம்பலப்படுத்தினார். இவையெல்லாம் ரிலையன்சுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தின. தான் ஒரு ஏகபோக நிறுவனம்; அதுவும் மன்மோகன்சிங் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் ஒரு நிறுவனத்தை கேள்வி கேட்பது எனில் எவ்வளவு தைரியம் ஜெய்பால் ரெட்டிக்கு? இதனை எப்படி ஏற்றுக் கொள்வது? எனவே, ஜெய்பால் ரெட்டியை மாற்றியே தீரவேண்டும் என ரிலை யன்ஸ் நிறுவனம் மன்மோகன் அர சாங்கத்திற்கு நிர்ப்பந்தம் அளித்தது.இதன் விளைவாகவே ஜெய்பால் ரெட்டியிடமிருந்து பெட்ரோலிய அமைச்சகம் பறிக்கப்பட்டது. தொலைத்தொடர்புத் துறைக்கு யார் அமைச்சராக இருக்க வேண்டும் என மிட்டல் குழுமமும் டாடா குழுமமும் கார்ப்பரேட் போரில் ஈடுபட்டன என்பது பழைய செய்தி. இப்பொழுது ஜெய்பால் ரெட்டி மாற்றம் என்பது மன்மோகன்சிங் அரசாங்கம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு அடிபணிந்து போகிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. மன்மோகன்சிங் அரசாங்கம் செயல்படுவது மக்களுக்காக அல்ல! உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே என்பதையே இந்த மாற்றம் பறைசாற்றுகிறது.

நன்றி :

திங்கள், 29 அக்டோபர், 2012

பதினைந்தே வயதான இளம் பெண் மேயர் - பாலஸ்தீனம் வழிகாட்டுகிறது...!




      
     சோவியத் யூனியன் சிதறுண்டு போன பிறகு, சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கு திணறிக்கொண்டிருக்கும் பாலஸ்தீன நாடு இன்றைக்கு உலகத்திற்கே வழிகாட்டும் அளவிற்கு ஓர் அரசியல் புரட்சியை செய்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கு காசா ஸ்டிரிப் எனப்படும் பகுதியும், மேற்குக் கரை எனப்படும் பகுதியும் சேர்த்து ஒரு சிறு பகுதி மட்டுமே பாலஸ்தீன நாடாக கருதப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக விளங்கும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் பக்கத்து நாடு.  பாலஸ்தீனம் இஸ்ரேலின் பக்கத்து   நாடு என்பதால் தினசரி பாலஸ்தீனத்தை எட்டிப்பார்ப்பது தான் இஸ்ரேலின் வேலையாக இருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து பாலஸ்தீனத்தின் மீது இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதும், இராணுவ தாக்குதல் நடத்துவது தான் இன்றைய அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன. பாலஸ்தீனத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடைகள் அந்த தேசத்தை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
        இந்த சூழ்நிலையில் தான் மேற்கு கரை பகுதியில் உள்ள அல்லார் என்ற 9000 பேர்கள் மக்கள் தொகை கொண்ட சிறு நகரத்தின் நகராட்சி மேயராக பதினைந்தே வயதான பள்ளிக்கூடம் செல்லும் இளம் பெண் பஷீர் ஒத்மான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது பாராட்டுதற்குரியது - போற்றுதற்குரியது. மத அடிப்படைவாதமும், மூடநம்பிக்கைகளும் பரப்பப்பட்டு வரும் ஒரு நாட்டில் ஒரு இளம் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது,  இளைஞர்கள் மத்தியில் ஆளுமை குணத்தையும், தலைமைப் பண்பையும் வளர்க்கும் கூடிய முற்போக்கான  சிந்தனையாகும்.
         இந்தியாவில் ஒரு பெண்ணிற்கு பதினைந்து வயசு ஆகிவிட்டால் சடங்கு - சம்பிரதாயம் என்ற பெயரில் மூலையில் கிடத்திவிட்டு, பின்  அந்த பெண்ணை இந்த சமூகம் சும்மா விட்டு வைக்காது. வீட்டை பெருக்க சொல்வதும், கோலம் போடக் கற்றுத் தருவதும், சமையல் பயிற்சி தருவதுமாக நடக்கின்ற இந்த காலக்கட்டத்தில் - சமூகம், கலாச்சாரம், பண்பாடு என்ற பெயர்களில் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே பெண்களை வளர்க்கும் இந்த காலக்கட்டத்தில்,  பாலஸ்தீன மக்களின் இந்த முற்போக்கான சிந்தனையை பாராட்டாமல் இருக்க முடியாது. மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பஷீர் என்ற அந்த பெண்ணை வெறும் சம்பிரதாயமாகவோ அல்லது பெயரளவிலோ மேயராக அலங்கரித்து அழகு பார்க்காமல், நகராட்சி அதிகாரங்களை அந்தப்பெண்ணின் கையில் கொடுத்திருப்பது என்பது பாராட்டுதற்குரியது. அந்த பெண்ணே தன்னிச்சையாக நகராட்சி அலுவல்களை கவனிக்கிறார். கோப்புகளில் கையெழுத்திடுகிறார். நகராட்சிக் கூட்டங்களை தலைமை  தாங்கி நடத்துகிறார். மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். மக்கள் கூட்டங்களில்  சுதந்திரமாக பேசுகிறார். பொது விழாக்களில் கலந்துகொள்கிறார். இவைகளுக்கு நடுவில் இந்த பெண் படிப்பதற்கு பள்ளிக்கும் சென்று வருகிறார்.  
          மிகப்பெரிய மக்கள் பணியை செய்யும் பஷீர், மக்களை கவர்ந்திழுக்கும் பலம் வாய்ந்த தலைவராக திகழ்கிறார் என்று மேற்கு கரை பகுதி மக்கள் சொல்கிறார்கள். அந்த மக்கள் இவரை பெரிதும் விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் தன் நாட்டை ஆளக்கூடிய பெரிய தலைவராக வரவேண்டும் என்பதே பஷீரின் ஆவலும், கனவும், இலட்சியமும் ஆகும். உலகத்திலேயே சிறு வயது மேயரான பஷீர் ஒத்மான் தனது இலட்சியத்தில் வெற்றிபெற நாமும் வாழ்த்துவோம்.

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

கருணாநிதியை எதிர்கட்சித்தலைவர் ஆக்க ஆசைப்படுகிறார் ஜெயலலிதா...சபாஷ்...!

         
           தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில்  அதிமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. மக்களை மயக்கும் விலையில்லா பொருட்களெல்லாம் தேர்தல் சமயத்தில் சொன்னது போல் கொடுத்தாகிவிட்டது.  மக்கள் மயக்கத்தில் இருப்பார்கள்  என்று ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எப்போதுமே ஐந்தாண்டுக்கு ஒரு முறை சட்டமன்றத்தேர்தலில் திமுக - விற்கும், அதிமுக - விற்கும் மாறி மாறி வாக்களிக்கும் மக்கள், ஒவ்வொரு முறையும் தாம் நிம்மதியாய் அமைதியாய் வாழ்வோம் என்று எதிர்ப்பார்க்கும் மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.
               அப்படித்தான் சென்ற ''தாத்தா'' ஆட்சியில் தான் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட்டோமே, ''அம்மா'' ஆட்சிக்கு வந்தா அதெல்லாம் சரியாகிவிடுமே என்றுநினைத்து ''அம்மாவிற்கு'' ஒட்டு போட்டா, ''தாத்தா'' ஆட்சியை விட மிக மோசமான ''மின்சார தடை'' என்பது இன்றைக்கு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனையாக மாறி உள்ளது. ஒரு வருஷத்திற்கு மேலாக அம்மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிபட்டுகிட்டு இருக்காங்க. மின்சாரம் இல்லாமல் தமிழகம் முழுதும் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பையும், வருமான இழப்பையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பண்டிகைகள் எல்லாம் வந்துகிட்டும் போய்கிட்டும் இருக்கு. இவர்களின் ஆசை குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கக் கொடுக்கமுடியாமல் திண்டாடுகிறார்கள். மின்சாரம் இல்லாமல் பள்ளிக்கும், கல்லூரிக்கும் போகும் மாணவ- மாணவிகள் பாடங்களை படிக்க முடியாமல் விழி பிதுங்கி போகிறார்கள். நோயாளிகளும், வயதானவர்களும், சிறு குழந்தைகளும் மின்விசிறி இல்லாமல் சிரமப்படுகிறார்கள்.  
          இவைகளை எல்லாம் சரி செய்வது எப்படி என்று தன்  நேரத்தை செலவழிக்காமல் - இந்த பிரச்சனைகளை சமாளிக்க மாற்று வழி என்ன என்றெல்லாம் யோசனை செய்யாமல், தமிழக முதலமைச்சர் இப்போது ஆள் பிடிக்கும் வேலையில்  இறங்கியுள்ளார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக விளங்கும் தே . மு. தி. க. - வின் பலத்தை குறைத்து பலவீனப்படுத்தி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கச் செய்யும் ஒரு வேலையை தான் இப்போது செய்துகொண்டிருக்கிறார்.
          முதலமைச்சர் ஜெயலலிதாவின்  இந்த செயலை தமிழக மக்கள் பாராட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறாரோ அல்லது நினைக்கிறாரோ என்று தெரியவில்லை. ஆனால் அவரை சுற்றுயிருக்கும் ''தலையாட்டி பொம்மைகளே...!'' முதலமைச்சரின் இந்த ''கீழ்த்தரமான'' செயலைப்பார்த்து தமிழக மக்கள் எரிச்சல் தான் அடைந்திருக்கிறார்கள் என்பதை எடுத்து சொல்லுங்கள். நீங்க சொல்லவில்லை  என்றால், அப்புறம் ஜெயலலிதா இதெல்லாம் யாரும் என்னிடம் சொல்லவில்லை என்று சொல்லிவிடுவார்.
         முதலமைச்சரின் ஆள் இழுக்கும் இந்த செயல் என்பது அநாகரீகமானது. எதிர்கட்சிகள் எல்லாம் ''எதிரிகட்சிகள்'' அல்ல என்பதை முதலில் ஜெயலலிதா புரிந்துகொள்ளவேண்டும். அப்படி நினைத்து செயல்படுவது  என்பதும் பெருமையளிக்காது. சென்ற கருணாநிதி தலைமையிலான ஆட்சியிலேயே தமிழக மக்கள்  இது மாதிரியான ஆள் பிடிக்கும் அநாகரீக செயலை பார்த்ததில்லையா...?  ஜெயலலிதாவின் விசுவாசிகளை எல்லாம் கருணாநிதி தன்  பக்கம் இழுத்து அரசியல் பண்ணவில்லையா...? ஆனால் அது மாதிரியான செயல்களெல்லாம் மக்களிடம் வரவேற்பை பெறவில்லையே. அதை பார்த்து சகித்துக்கொள்ளாத மக்கள் தான் தன்னை முதலமைச்சராக உட்கார வைத்திருக்கிறார்கள் என்பதை ஜெயலலிதா உணரவேண்டும்.
      ஜெயலலிதாவின் இந்த ஆள் இழுக்கும் வேலையின் மூலம் என்ன தான் சாதிக்கப்போகிறார்...? எனக்கு மூன்று சந்தேகங்கள் எழுகின்றன.

      ஒன்று :     இது மாதிரியான பரப்பரப்பான சம்பவங்களின் மூலம் தமிழக மக்களை மின்சாரப் பிரச்சனைகளிலிருந்து திசைத்திருப்பிவிடலாமென்று நினைக்கிறாரோ...?

   இரண்டு : சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் மக்கள் பிரச்சனைகளுக்காக தன்னோடு வாக்குவாதம் செய்த விஜயகாந்தை அந்த பொறுப்பிலிருந்து இறக்கிவிட   நினைக்கிறாரோ...?
      
   மூன்று :   சட்டமன்றத்தில் திமுக எதிர்கட்சியாகவும், கருணாநிதி எதிர்கட்சித் தலைவராகவும் வரவேண்டும் என்று ஜெயலலிதா ஆசைப்படுகிறாரோ...?

    இந்த கேள்விகளை நான் மட்டும் கேட்கவில்லை. தமிழக மக்கள் அனைவருமே கேட்கிறார்கள். மேற்சொன்னவற்றில் காரணம் எதுவாக இருந்தாலும்,  ஏமாற்றம் என்பது ஜெயலலிதாவிற்கு தான் என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.  

சனி, 27 அக்டோபர், 2012

பழையன கழிதலும், புதியன புகுதலும் காங்கிரஸ் கட்சியின் சித்து விளையாட்டுகள்..!

எழுதுகிறேன்..

அமெரிக்க நாய்க்கு சிவலிங்கத்திற்கும், குட்டிச்சுவருக்கும் வித்தியாசம் தெரியாது...!

        
            வேலையின்மை, மனித உரிமை மீறல், நேர்மையற்ற நிர்வாகம், ஊழல், சொத்து சேர்ப்பு, பொருளாதார சீர்குலைவு போன்ற முடை நாற்றமெடுக்கும் பிரச்சனைகள் வளர்ந்திருக்கும் இந்தியா போன்ற அமெரிக்கவிசுவாச முதலாளித்துவ நாடுகளை விட்டுவிட்டு,  சோஷலிச மழையில் நனைந்து சமதர்மம், சமத்துவம், உணவு, உடை, வீடு, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம், மனித உரிமை, நேர்மையான - தூய்மையான நிர்வாகம் என அனைத்தும் செழுமையாய் வளர்ந்து எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்கும் தேசங்களை பற்றியும், அந்த தேசத்தின் ஆட்சியாளர்களைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும்  அவதூறுகளை பரப்புவது என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கைவந்த கலை.
        கியூபா, வடகொரியா, வியட்நாம், சீனா போன்ற சோஷலிச நாடுகளைப் பற்றியும், அதன்
தலைவர்களைப் பற்றியும் ஏதாவது அவதூறுகளைப் பரப்புவதே அமெரிக்காவிற்கு ஒரு தொழிலாக போய்விட்டது. ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கு - அவைகளை வாழ வைப்பதற்கு இதுபோன்ற  சித்து விளையாட்டுகளை  செய்யவேண்டிய நிர்பந்தத்தில் அமெரிக்கா இருக்கிறது என்பது தான் மிக கேவலமான ஒன்றாக இருக்கிறது.
        அமெரிக்காவின் இப்படிப்பட்ட வழக்கமான   அவதூறு அர்ச்சனையில் தான் சமீபத்தில்
கியூபா நாட்டின் மாபெரும் தலைவர் தோழர் பிடல் காஸ்ட்ரோ இறந்துவிட்டதாக ஆராதனை
செய்யப்பட்டு அமெரிக்கா மூக்குடைப்பட்டது.
       இப்போது அமெரிக்கா மக்கள் சீனத்தின் உள்விவகாரத்தில் மூக்கை நுழைத்திருக்கிறது.
சீன பிரதமர் வென் ஜியாபோ குடும்பம் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்து விட்டதாம். 
''தி நியூயார்க் டைம்ஸ்’' என்ற அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டு சோஷலிச மக்கள்
சீனத்தின் மீது அமெரிக்கா சேற்றை வாரி வீச முயற்சி செய்திருக்கிறது. வென் ஜியாபோவின்
பதவிக்காலம் குறித்து தாங்கள் அந்த நாட்டில் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்திருகிறதாம்.
          வென் ஜியாபோ பிரதமராக இருக்கும் இந்த  காலகட்டத்தில், அவரும், அவர் மனைவி,
மகன், மகள், தம்பி, மைத்துனர் உள்ளிட்ட குடும்பத்தினர் பெரும் பணக்காரர்களாக ஆகிவிட்டார்களாம். அந்த குடும்பம், 2.7 பில்லியன் டாலர் (ரூ.14 ஆயிரத்து 850 கோடி) சொத்து குவித்து இருக்கிறார்களாம்.
        ''இந்த செய்தி சீனாவுக்கு எதிரான அவதூறு பிரசாரம். உள்நோக்கம் கொண்டது’' என்று கூறி இந்த  செய்தியை சீன அரசு மறுத்துள்ளது என்பது வேறு விஷயம்.
        என்னாங்கடா டேய்... முதலாளித்துவ ஆட்சியில் புரையோடி நாற்றமெடுத்துக் கொண்டிருக்கும் நேர்மையற்ற நிர்வாகம், மெகா ஊழல், சொத்து சேர்ப்பு, பொருளாதார சீர்குலைவு  போன்ற மலை போல் குவிந்திருக்கும் குப்பைகளை உலக மக்களின் பார்வைகளிலிருந்து மறைப்பதற்கு, அப்பழுக்கற்ற தெளிந்த நீரோடையில் தான் இந்த அமெரிக்க நாய் சிறுநீர் கழிக்கவேண்டுமா...? என்பது தான் நமது கேள்வி.

வியாழன், 25 அக்டோபர், 2012

தந்தையின் அன்னை தேசத்தை விற்கும் சோனியா - மன்மோகன் கூட்டத்திற்கு யோக்கியதை இல்லை தான்...!


           கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தான் உத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா என்ற மாணவி,  '' மகாத்மா காந்திக்கு 'தேசத்தந்தை' என்ற பட்டத்தை வழங்கியது யார்..?'' என்ற கேள்வியை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி மனு ஒன்றை பிரதமர் அலுவலகத்திற்கு  அனுப்பியிருந்தார். பிரதமர் அலுவலகத்திற்கு அதற்கான சரியான பதில் தெரியாததால், அந்த மனு உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்களுக்கும் விடை தெரியாததால், பின் அந்த மனு இந்திய தேசிய ஆவண காப்பகத்திற்கு அனுப்பப்பட்டது.
            இதற்கு பதில் தெரிந்திருந்தால் இவனுங்க நாட்டை இப்படி கூறுபோட்டு விற்க மாட்டானுங்களே பாவிங்க...?
        கொஞ்சம் கூட அதைப்பற்றிய ஒரு ஆராய்ச்சி அறிவு கூட இல்லாமல், பல மாதங்கள் கழித்து ஒரு வழியாக உள்துறை அமைச்சகமே அந்த குழந்தைக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், "மகாத்மா காந்திக்கு அதுபோன்ற பட்டம் எதுவும் வழங்கப்படவில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டது என்பது தான் ஆச்சரியமானது.
        ஆனால் அந்த பெண் அத்தோடு விடவில்லை. "மகாத்மாவை தேசத் தந்தை என்று முறைப்படி அறிவிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் ஐஸ்வர்யா தனித்தனியே கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு பதிலே சொல்லாமல் மத்திய அரசு மௌனமாய் இருந்தது.
         அப்போதும் அந்த பெண் விடவில்லை. தனது கோரிக்கை மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மீண்டும் ஒரு மனு அளித்தார்.          அந்த மனுவும் கடைசியில்  மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து உள்துறை அமைச்சகம் பதில் கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி என்னவென்றால்,
        ''மகாத்மா காந்தியை தேசத்தந்தை என குடியரசுத்தலைவர் அறிவிப்பது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனில், அரசியல் சாசன சட்டம் பிரிவு 18(1)-ன்படி யாருக்கும் எந்தவிதமான பட்டத்தையும் அளிக்க இயலாது. கல்வித் துறை மற்றும்
ராணுவத்தைச் சார்ந்தோருக்கு மட்டுமே பட்டங்களை அளிக்க முடியும்'' என்று விளக்கம் அளிக்கப்பட்டு அந்தப்பள்ளி மாணவியின் ஆவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
          தேசத்தந்தையின் அன்னை தேசத்தையே கூறுபோட்டு விற்றுக்கொண்டிருக்கிற சோனியா காந்தி - மன்மோகன் சிங் கூட்டத்திற்கு, இந்த தேசத்தை அந்நியர்களிடமிருந்து மீட்டுக்கொடுத்த மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்று பட்டம் சூட்டுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது...? அதனால் இப்படியொரு பதிலை பதிலை அனுப்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.   

சன் குழுமம் கிரிக்கெட்டிலும் புகுந்து விளையாடப்போகிறது....!

                இந்தியாவில் எந்தத் தொழில்களில் இலாபம் கொழிக்கிறதோ அந்த தொழில்களில்
கூச்சமில்லாமல் நுழைந்து கொள்ளை இலாபம் பார்ப்பது என்பது இந்தியாவின் பெருமுதலாளிகளான அம்பானி சகோதரர்களும், மாறன் சகோதரர்களும்  சளைத்தவர்கள் அல்ல. உழைக்காமலேயே இலாபம் கொழிப்பது எப்படி என்பதை இவர்களிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்.
         சமீபத்தில் ஐதராபாத்தை மையமாகக் கொண்ட ஐபிஎல் அணியான ''டெக்கான் சார்ஜர்ஸ்'' அணி நீக்கப்பட்டதை அடுத்து புதிய அணிக்கான ஏலம் மும்பையில் நடைபெற்றதில் மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான ''சன் டிவி'' குழுமம் ஏலம் எடுத்தது. இந்த ஏலத்தில் வருடத்திற்கு ரூ.85.5 கோடிக்கு புதிய அணி சன் டிவி குழுமத்தால் வாங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
          இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என்பது இந்திய மாணவர்களின், இளைஞர்களின்  
படிப்பையும், நேரத்தையும், பணத்தையும் குறிவைத்து அவர்களின் மனதில் கிரிக்கெட் வெறியை தூண்டி,  அவர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை உறிஞ்சும் ஒரு சூதாட்டக்களம். ஒருவரின் இழப்பு என்பது இன்னொருத்தரின் இலாபம்.  இதை சரியாக பயன்படுத்திக்கொள்பவர்கள்  தான் இந்த வட இந்திய மற்றும் தென்னிந்திய  சகோதரர்கள் என்றால் அது மிகையாகாது.
            
               இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் பொது எனக்கொரு கதை தான் நினைவுக்கு வருகிறது.

         இப்படி தான் ஒரு நாளு  கோவிலுக்கு வெளியில ஒரு பிச்சைக்காரன் ''ஓ''ன்னு அழுதுக்கிட்டு இருந்தான். அப்போ அத பாத்துகிட்டு இருந்த இன்னொரு பிச்சைக்காரன் ''என்னப்பா நானும் பாத்துகிட்டு இருக்கேன் ரொம்ப நேரமா  நீ பாட்டுக்கு அழுதுகிட்டே இருக்கியே..ஏம்பா...?'' என்று கேட்டான்.         
               அதுக்கு அந்த அழுமூஞ்சி  பிச்சைக்காரன் சொன்னான்  ''போற போக்கை பாத்தா.. சன் டிவி குழுமம் நம்ப தொழிலேயும் வந்துடுவாங்கலோன்னு பயமா இருக்கு'' என்று சொன்னானாம்.

          அது போலத்தான் இலாபம் கிடைக்கும் என்றால் இவர்கள் எந்தத் தொழிலையும் செய்யத் தயங்கமாட்டார்கள்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

பாலில் நச்சுப் பொருளைக் கலக்கும் ''பாக்கெட் பால் தயாரிப்பாளர்கள்''...!

             குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினசரி உபயோகிக்கும் ஒரு பொருள் பால். தாய்ப்பால் கிடைக்காத பல குழந்தைகளுக்கு தாய்ப்பாலாக இருப்பது கடைகளில் விற்கப்படும் ''பாக்கெட் பால்'' மற்றும் வெளியிலிருந்து வாங்கப்படும் பசும்பால். ஆனால், இந்த பாலில் சலவைக் கட்டி, யூரியா, சோடா போன்றவை கலக்கப்படுவது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்தியா முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சுவாமி அச்சுதானந்த் டிர்த் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலவழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், கடைகள் மற்றும் பண்ணைகளில் விற்கப்படும் பால்களில் தண்ணீருடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுப்பொருள்கள் கலக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் விநியோகிக்கப்படும் பால்களில் அரசின் ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆராய்ந்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கக் கூறி மத்திய அரசு உள்ளிட்டு இந்தியாவின் பல்வேறு மாநில அரசாங்கங்களுக்கு உத்தரவிட்டது.
         இதனையடுத்து, மத்திய அரசின் சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்தியா முழுவதும் ஆய்வு மேற்கொண்டது. இதற்காக நாடு முழுவதுமிருந்து பால் மாதிரிகள் சோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், பாக்கெட் சாரா பால் மாதிரிகளில் 63 சதவிகிதமும், கடைகளில் விற்கப்படும் பாக்கெட் பால் மாதிரிகளில் 33 சதவிகிதமும், உடலுக்கு தீங்கி விளைவிக்கக் கூடிய நச்சுத்தன்மை நிறைந்த சலவைக் கட்டி, யூரியா, சோடா போன்றவற்றின் சாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பால் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பது குறித்த சில ஒழுங்குமுறைகளை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வகுத்துள்ளது. அதேபோல், பாலுக்கான ரகங்களையும் இந்த ஆணையம் நிர்ணயித்துள்ளது. இதனடிப்படையிலேயே பால் விற்பனை செய்யப்படும். ஆனால், சில விற்பனையாளர்கள், லாபத்தை ஈட்டுவதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உபயோகப்படுத்தக்கூடிய பாலில் நச்சுத்தன்மையை கலந்து விடுகின்றனர். இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய உதவி இயக்குநர் கமல் குமார் உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2011 அடிப்படையில், பல்வேறு பால் வகைகளுக்கான தரங்களை அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதிலுமிருந்து 1,791 பால் மாதிரிகள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், வெறும் 565 மாதிரிகள் மட்டும் அரசின் தர நிர்ணயச் சட்டத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,226 மாதிரிகளில் மனிதர்களுக்கு பல்வேறு உபாதைகளை விளைவிக்கக் கூடிய நச்சுத்தன்மை நிறைந்த பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் தான் இதுபோன்ற தயாரிப்பாளர்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு சோதனை செய்யப்பட்ட 136 மாதிரிகளில் 83 சதவிகித மாதிரிகள் அரசின் தரத்திற்கு கீழ் உள்ளதாகும். மேலும், இதுகுறித்த முழுமையான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.முன்னதாக, நாட்டின் பல பகுதிகளில் ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் பாலில் நச்சுத்தன்மை மற்றும் கோலிபார்ம் எனும் பாக்டீரியா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. பொதுவாக, பாலில், தண்ணீர், குளுக்கோஸ், வெண்ணெய் எடுக்கப்பட்ட பால் பவுடர் ஆகியவை கலக்கப்படும்.
          இதில், நச்சுத்தன்மை நிறைந்த தண்ணீரை கலந்தாலே பால் கெட்டுப் போய் விடும். மேலும், பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்து போய்விடும். பிறகு, அதனை குடிக்கும் குழந்தைகளுக்கு எந்தவித சத்தும் கிடைக்காது. இதுகுறித்து முன்னாள் தேசிய பால் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த நிபுணர் டாக்டர் வினோத் கன்சால் தெரிவிக்கையில், பாலை உற்பத்தி செய்து, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவற்றில் வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்படும். ஆனால், பண்ணைகள் மற்றும் வெளியிடங்களிலிருந்து விற்கப்படும் பால் அரசின் சோதனைக்கு உட்படுத்தப்படாததால், விற்பனையாளர்கள் அதிக லாபம் சம்பாதிப்பதற்காக பாலில் நச்சுப் பொருட்களை கலந்து விற்பனை செய்து விடுகின்றனர். அதேபோல், விற்பனையாளர்களிடமிருந்து பெறப்படும் பாலானது உயர்தரத்தில் இருக்காது. இதனால் அவை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்கப்படும். இது, பாலின் தரத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, நச்சுத்தன்மை நிறைந்த பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. மேலும், கோடைகாலங்களில் பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக, யூரியா மற்றும் சோடா போன்ற நச்சுத்தன்மை நிறைந்த பொருட்களை சேர்த்துவிடுகின்றனர். இதனை அறியாத மனிதர்கள் அவற்றை வாங்கி அருந்துவதால், பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகின்றனர் என்றார். இதுபோன்ற நடைமுறைகளை முற்றிலும் ஒழிப்பதற்காக, அனைத்து பால் உற்பத்தியாளர்களையும் ஒழுங்குப்படுத்தும் வகையில் அரசு கட்டாய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006ன் படி, பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் மாதிரிகளை ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்து பார்க்க அரசு அதிகாரமளித்துள்ளது. ஆனால், போதிய விழிப்புணர்வின்மையால் பெரும்பாலான மக்களுக்கு, தங்களை பாதுகாத்துக் கொள்வதாக உள்ள இதுபோன்ற சட்டங்களே தெரிவதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடத் தேவையாக உள்ள பல்வேறு பொருட்களில் முக்கியமானது பால். அதையும், சில தயாரிப்பாளர்கள் லாப நோக்கத்தோடு கலப்படம் செய்து விற்பனை செய்து வருவது மிகப்பெரிய வேதனையே. இத்தகையோரை ஒடுக்க அரசு கட்டாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

ஏன் பால் ஊட்டச்சத்து நிறைந்தது?

           மாட்டுப் பாலில் உள்ள சத்தானது கன்றுக்குட்டியின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், கொழுப்புச் சத்து, புரதச் சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் உள்ளன. அதேபோல், வளர்ச்சிக்குத் தேவையான இம்யூனோகுளோபுளின், ஹார்மோன்கள் மற்றும் உயிர் செயல் புரதக் கூறுகள் ஆகியவை மாடு / எருது பாலில் உள்ளன.

நன்றி :

வெள்ளி, 19 அக்டோபர், 2012

அப்பழுக்கற்ற மனிதர் - இப்படியும் ஒரு மனிதர் இந்தியாவிலா...?

           இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவிற்கு திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார் விளங்குகிறார். ஊழல்மயமான இக்காலச் சூழ்நிலையில் தான் அணிந்துள்ள வெள்ளை நிற குர்தாவைப்போல் அப்பழுக்கற்ற மனிதராக திகழ்கிறார் மாணிக்சர்க்கார். இவருக்கு சொந்தமாக வீடு கிடையாது. கார் கிடையாது. குறிப்பிடத் தக்க அளவிற்கு வங்கியில் இருப்பு ஏதுமில்லை. பாரத ஸ்டேட் வங்கியில் இவருடைய கணக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதியன்று இருப்பில் இருந்த தொகை ரூ.6,500 மட்டுமே! இவர் தனது சம்பளம் ரூ.12,500 - ஐ தனது கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு கொடுத்துவிடுகிறார். பின்னர் அக்கட்சியிடமிருந்து தனக்காக மாதம் ரூ.5000 மட்டும் திரும்ப பெற்றுக்கொள்கிறார். முதல்வராக உள்ள ஒருவருக்கு இந்த தொகை எப்படி போதும் என்று வினா எழுப்பினால், தனது மனைவியின் மாதாந்திர ஓய்வூதியமே தங்கள் இருவருக்கும் போதுமானது என்றும், தனக்கு ஒரு நாள் தேவை என்பது ஒரு பாக்கெட் சார்மினார் சிகரெட் என்கிறார்.
             இவருக்கு பிடித்தமான ரசமாலவும் முந்திரியுமே இவருடைய காலை உணவாகும். இவருக்கு பீம்சென் ஜோஷியின் இசை மிகவும் பிடிக்கும். தினசரி காலை 10 மணிக்கு அரசு தமக்கு அளித்த காரில் அலுவலகத்திற்கு செல்கிறார். னது மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யாவைக் கூட இந்த அரசு வாகனத்தில் அவர் ஏற்றுவது கிடையாது. அவரது மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யாவின் வயது 61. இவர் மத்திய சமூகநலத்துறை வாரியத்தில் பணியாற்றி கடந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவர் வாடகை ஆட்டோ ரிக்ஷாவில் இன்றும் அகர்தலா தெருக்களில் சென்றுவருவதைப் பார்க்கலாம். இவர் தனது கணவரின் அலுவலக விஷயங்களில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ தலையிடுவது கிடையாது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை மாணிக்சர்க்கார் முதலமைச்சராக இருந்த போது காலையில் நடைபயணம் மேற்கொள்ள விருப்பப்பட்டார். அவருடன் துணை சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவருடடைய பாதுகாப்பு கருதி, அவர் சக்கரம் அணிந்த காலணியை அணிந்துகொள்ள சொல்லும்படி அவரது மனைவியிடத்தில் தெரிவித்தனர். அவரது மனைவியும் தனது கணவருக்காக ஒரு காலணியை வாங்கிக்கொடுத்தார். இதுவே அவர் அரசு விவகாரங்களில் தலையிட்ட நிகழ்வாகும். இதை ஒப்புக்கொண்ட மாணிக்சர்க்கார் சக்கர காலணியில் செல்வது நடைபயணத்திற்கு ஒப்பாகாது என தெரிவித்து விட்டார். 
         2013 பிப்ரவரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இவரது நேர்மை இவருக்கு வெற்றி பெற்று தருமா ? இந்தியாவில் கம்யூனிசத்தின் இறுதித்தளமான திரிபுராவில் வெற்றி கிடைக்குமா என்று இவரிடம் வினவினால் இவர் கம்யூனிசத்தின் கடைசித்தளம் திரிபுரா என்பதை மறுக்கிறார். மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அங்கு 41 விழுக்காடு வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம் என்று உறுதியுடன் சொல்கிறார் திரிபுராவின் நீண்ட நாள் முதலமைச்சராக உள்ள மாணிக்சர்க்கார்.
1998 - ம் ஆண்டிலிருந்து முதலமைச்சராக உள்ள மாணிக்சர்க்கார் இந்தமுறை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சமீர்ராய் பர்மனின் மகன் சுதீப்ராய் பர்மனின் சவாலை எதிர் நோக்கியுள்ளார். 
             சுதீப் திரிபுரா அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள 40,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதையும், கடந்த 14 ஆண்டு காலமாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளதையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார். மாணிக்சர்க்கரின் மனைவி காலிப்பணியிடங்கள் குறித்தும் வேலையின்மை குறித்தும் குறிப்பிடுகையில், இது திரிபுராவின் பிரச்சனை மட்டுமல்ல, இந்தியாவின் பிரச்சனையாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். திரிபுரா போன்ற ஊரக மாநிலங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற கொள்கை ஏதும் மத்திய அரசிடம் இல்லாததால்தான் இந்த நிலைமை என்று சொல்லும் மாணிக்சர்க்கர், இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 20,000 பணியிடங்களை தமது அரசு உருவாக்கி கொடுத்துள்ளது என்று தெரிவிக்கிறார். இவரது நேர்மை குறித்து சுதீப் குறிப்பிடுகையில், எச்சரிக்கையுடன் திட்டமிட்டு நேர்மையாக மாணிக் சர்க்கார் உள்ளார் என்றும் இவரால் எப்படி 100 குர்தா பைஜாமா வாங்க முடிந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அது மட்டுமல்ல, அவரது ஓரா கண் கண்ணாடி ரூ.60,000 எனவும் அவரது காலணி ரூ.6,000 எனவும் குற்றம் சாட்டியுள்ளார். ஊழல் அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம், அவர்களை தவறு செய்ய அனுமதித்துவிட்டு, பின்னர் தனக்கு எதிராக அவர்கள் செயல்படாமல் பார்த்துக்கொள்ளும் நடவடிக்கை என்று சுதீப் தெரிவித்துள்ளார். இதற்கு மாணிக்சர்க்கார், தான் எப்பொழுதும் சுத்தமாக இருக்க ஆசைப்படுபவர் என்றும் ஆனால் அதற்காக அதிகமாக செலவு செய்பவன் கிடையாது என்றும் தனது கண் கண்ணாடியின் விலை ரூ.1800 என்றும், காலணி மிகவும் மலிவானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனது அமைச்சரவை சகாக்களின் மீது எதிர்க்கட்சியினர் ஊழல் புகார்களை சொல்லி வருகின்றனர் என்றும், இது குறித்து தக்க ஆதாரங்கள் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க தயார் என்றும் கூறியுள்ளார். தனது அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடிந்தாலும் நேர்மை குறித்து எழுப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.
             மாணிக்சர்க்கார் குறித்து திரிபுரா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் குறிப்பிடுகையில், மாணிக்சர்க்கார் நேர்மையானவராக இருக்கலாம். ஆனால் உறுதியற்ற அரசியல்வாதி. தன்னை யாராவது மிரட்டுகிறார்கள் என்றால் தன்னுடைய சிறகுகளை மூடிக்கொள்வார் எனவும், தற்போது காங்கிரசுக்கு மாணிக்சர்க்காரை வீழ்த்த வாய்ப்பு இருந்தாலும் அதன் உட்பூசல்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். மாணிக்சர்க்கார் இது குறித்து குறிப்பிடுகையில், அதிகாரம் ஏது? அனைத்தும் மத்திய அரசிடம் இருக்கிறது. திரிபுரா போன்ற மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொன்றிற்கும் நாங்கள் போராட வேண்டியுள்ளது என்கிறார். மாணிக்சர்க்கார் கிரிக்கெட் பிரியர். இவர் கல்லூரியில் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி. முகமது அசாரூதீன் ஆகியோரின் விசிறி. தற்போது இந்திய அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விராத் கோஹ்லி தனக்கும் பிடிக்கும் என்கிறார்.

நன்றி: “இந்திய டுடே” 10-10-2012

புதன், 17 அக்டோபர், 2012

மதவெறி அரசியலுக்கு முடிவு கட்டுவோம்...!

கட்டுரை : நீதிபதி மார்கண்டேய கட்ஜு
                    ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி
                    உச்ச நீதிமன்றம், புதுடெல்லி   
   
     

    நம் நாட்டில் இன்றைய தினம் ஏராளமான இந்துக்களும் முஸ்லிம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் பீடிக்கப்பட்டிருந்த போதிலும், 1857 - க்கு முன்னர் அத்தகையதொரு நிலைமை நாட்டு மக்கள் மத்தியில் அநேகமாக இருந்ததில்லை என்பதே உண்மையாகும். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சிற்சில வேறுபாடுகள் இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் நிச்சயமாக இந்த அளவிற்கு வெறுப்புணர்வு இருந்தது கிடையாது. முஸ்லிம்கள் கொண்டாடும் ஈத்பெருவிழாக் கொண்டாட்டங்களில் இந்துக்கள் கலந்துகொள்வதும், அதேபோன்று இந்துக்களின் ஹோலி, தீபாவளித் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கலந்துகொள்வதும் வழக்கமாக இருந்து வந்தன. அவர்கள் சொந்த சகோதர, சகோதரிகளைப் போல ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து வாழ்ந்து வந்தார்கள்.
           150 ஆண்டுகளுக்குப் பின்னால், இத்துணைக்கண்டத்தில், ஒருவருக்கொருவர் இடையே சந்தேகம் மற்றும் வெறுப்பை உமிழக்கூடிய விதத்தில், எப்படி இது மாறிப்போனது? இன்றைய தினம், நாட்டில் உள்ள முஸ்லிம்கள் இந்துக்களிடமிருந்து வாடகைக்கு வீடுகள் பெறுவதில் கூட சிரமம் ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் எங்காவது குண்டுவெடிப்பு நடைபெற்றால், காவல்துறையினர், அதற்குக் காரணமான உண்மையான குற்றவாளிகளைப் பிடித்திடாமல், (ஏனெனில் அவர்களுக்கு அறிவியல் பூர்வமான புலனாய்விற்குப் பயிற்சி அளிக்கப்படவில்லை), அரை டஜன் முஸ்லிம்களைக் கைது செய்வதன் மூலம் குற்றத்திற்குத் ‘தீர்வு’ கண்டு விடுகிறார்கள். அவர்களில் பலர், நீதி மன்றத்தின் முன் அப்பாவிகள் என்று இறுதியில் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அதற்கு முன் பல ஆண்டுகள் அவர்கள் சிறைக்கொட்டடியில் இருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் விளைவாக நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அந்நியமாதல் வளர்ந்து வருகிறது. பாகிஸ்தானிலோ, நிலைமைகள் இன்னும் மோசம். அங்குள்ள சிறுபான்மையினர், தீவிரவாதிகள் மற்றும் மதவெறியர்களின் தாக்குதலுக்கு ஆளாவோமோ என்ற அச்சத்துடனேயே எப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். திருப்புமுனைஇந்தியாவில் மதங்களுக்கு இடையிலான உறவுகள் வரலாற்றில் 1857 - ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாகும்.
       1857 - க்கு முன்னர் நாட்டில் மதத்துவேஷம் இருந்ததில்லை, மதக்கலவரங்கள் நடைபெற்றதில்லை. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சிற்சில கருத்து வேறுபாடுகள் இருந்தது என்பது உண்மை. ஆனால் அவை ஒரே தந்தைக்குப் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வரும் வேறுபாடுகள் போன்றதேயாகும். இந்துக்களும், முஸ்லிம்களும் அமைதியுடன் வாழ்ந்தார்கள். இடுக்கண் வந்த காலங்களில் உடுக்கை இழந்தவன் கைபோல ஒருவருக்கொருவர் நட்புடன் உதவிக் கொண்டார்கள்.இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த முஸ்லிம் மன்னர்கள், எண்ணற்ற கோவில்களை இடித்தார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்களின் வழித்தோன்றல்கள், நாட்டில் முஸ்லிம் ஆட்சியாளர்களாக மாறியவர்கள், அநேகமாக அனைவருமே மத நல்லிணக்கத்தைப் பேணி வளர்த்தார்கள். இதனை அவர்கள் தங்கள் சொந்த நலனின் அடிப்படையிலேயே செய்தார்கள். ஏனெனில், தங்களின் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்களாக இருந்தார்கள். இந்தக் கோவில்களை இடித்தால் அது அவர்கள் மத்தியில் ஆவேசத்தையும் கலக உணர்ச்சியையும் தூண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இதனை எந்த ஆட்சியாளரும் விரும்பமாட்டார்கள். எனவே, நம் நாட்டில் ஆட்சி புரிந்த அநேகமாக அனைத்து முஸ்லிம் ஆட்சியாளர்களுமே - மொகலாயர்கள், ஆவாத், முர்ஷிதாபாத், ஆற்காடு நவாப்புகள், திப்பு சுல்தான் அல்லது ஹைதராபாத் நிஜாம் போன்று அனைவருமே - மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்தார்கள். பிரித்தாளும் சூழ்ச்சி 1857- இல், இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் வெடித்தது, இப்போரில் பிரிட்டிஷாருக்கு எதிராக இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து சமர் புரிந்தார்கள். இக்கலகத்தை அடக்கியபின் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டுமானால் இவர்கள் மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.
            இவ்வாறு, இந்தியாவிற்கான அரசுச் செயலாளர் ( the Secretary of State for India ), சர் சார்லஸ் வுட், வைஸ்ராய் எல்ஜின் பிரபுவுக்கு 1862 - இல் எழுதிய கடிதத்தில், ‘‘நாம் இந்தியாவில் ஓர் இனத்தினரை, மற்றோர் இனத்திற்கு எதிராக மோத விடுவதன் மூலமே நம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். இதனை நாம் தொடர்ந்து மேற்கொண்டிட வேண்டும். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், இருவரும் ஒன்றுபடாதிருப்பதற்கான அனைத்துக் காரியங்களையும் செய்திடுங்கள்’’ என்று எழுதினார். 1887 ஜனவரி 14 அன்று அரசுச் செயலாளராக இருந்த விஸ்கவுண்ட் கிராஸ்  கவர்னர் ஜெனரல் டஃபரினுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘‘இவ்வாறு மக்களை மத அடிப்படையில் பிரித்து வைத்திருப்பது நமக்குப் பெரிய அளவில் அனுகூலமாயிருக்கிறது. இந்தியக்கல்வி மற்றும் போதிக்கும் முறை தொடர்பான தங்களின் விசாரணைக்குழுவின் அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,’’ என்று அதில் அவன் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவிற்கான அரசுச் செயலாளராக இருந்த ஜார்ஜ் ஹாமில்டன், கவர்னர் ஜெனரலுக்குக் கீழ்க்கண்டவாறு எழுதினார்: ‘‘இந்தியாவில் நம் ஆட்சிக்கு உண்மையான ஆபத்தாக நான் கருதுவது, மேற்கத்திய சிந்தனைகளை இங்கே நாம் படிப்படியாக ஏற்றுக்கொண்டு விரிவாக்குவது என்பதாகும். எக்காரணம் கொண்டும் நாம் அளித்திடும் நுண்ணிய கல்வி அவர்களை நமக்கு எதிராகத் திருப்பிவிடக்கூடிய விதத்தில் அமைந்து விடக்கூடாது. நாம் இந்தியாவில் கல்வி அறிவு பெற்றவர்களை இரு பிரிவாக  இந்துக்களாகவும் முஸ்லீம்களாகவும்  உடைக்க முடியுமானால், அவ்வாறு உடைத்து, அத்தகைய பிரிவினை மூலமாக, நாம் நம்முடைய நிலையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும், நாம் வெளியிடும் பாடப்புத்தகங்கள் இரு இனத்தினருக்கும் இடையிலான வேறுபாடுகளை மேலும் அதிகரிக்கக்கூடிய விதத்தில் திட்டமிடப்பட்டு, வெளியிடப்படவேண்டும்’’ இவ்வாறு, 1857 - க்குப் பின்னர், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பை உமிழ்ந்திடும் விதத்தில் ஒரு நச்சுக்கொள்கையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் துவக்கினார்கள்.
          இதனைப் பல வழிகளிலும் அவர்கள் செய்தார்கள். மதத் தலைவர்களுக்கு, மற்ற மதத்தினருக்கு எதிராகப் பேசுமாறு, லஞ்சம் தரப்பட்டது. ஆங்கில கலெக்டர், ரகசியமாக பண்டிட்ஜிகளை (கோவில் குருக்கள்) அழைத்து, பணம் கொடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராகப் பேச வைத்தார். அதேபோன்று, அவன் முஸ்லிம் மௌலவிகளுக்கும் பணம் கொடுத்து, இந்துக்களுக்கு எதிராகப் பேச வைத்தார். மதத் துவேஷத்தை வளர்த்திடும் வகையில் வரலாற்று நூல்கள் திரித்து எழுதப்பட்டன. நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ஆரம்ப காலத்தில் படையெடுத்த முஸ்லிம் மன்னர்கள் ஏராளமான இந்துக் கோவில்களை இடித்தனர். ஆயினும், பாபரின் வழித்தோன்றலான அக்பர் போன்றவர்கள் கோவில்களை இடிக்கவில்லை, மாறாக, இந்துக் கோவில்களுக்கு மானியங்கள் அளித்தனர். ராம் லீலா போன்றவற்றிற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அதேபோன்று ஆவாத், முர்ஷிதாபாத், ஆற்காடு நவாப்புகள் போன்று ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைகளிலும் கலந்து கொண்டார்கள். வரலாற்றின் இரண்டாம் பகுதி, அதாவது நம் நாட்டிற்கு படையெடுத்து வந்த முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள், அநேகமாக அனைவருமே, மதநல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்த விஷயங்கள், முழுமையாக வரலாற்று நூல்களிலிருந்து கிழித்து எறியப்பட்டன. நம்முடைய குழந்தைகள், கஜினி முகமது, சோம்நாத் கோவிலைக் கொள்ளையடித்தான் என்று மட்டுமே போதிக்கப்பட்டார்கள். திப்பு சுல்தான் போன்று மொகலாயர்கள் இந்துக் கோவில்களுக்கு மானியங்கள் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்பதோ, இந்துப் பண்டிகைகளை அவர்களும் கொண்டாடினார்கள் என்றோ சொல்லிக் கொடுக்கப்படவில்லை (பி.என். பாந்தே எழுதி, இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள, ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்திடும் வரலாறு என்பதைக் காண்க).
             மதக்கலவரங்கள் திட்டமிட்டுத் தூண்டப்பட்டன. நாட்டில் நடைபெற்ற அனைத்து மதக் கலவரங்களுமே 1857 - க்குப் பின்தான் தொடங்கின. அதற்குமுன் ஒருபோதும் மதக்கலவரங்கள் நடைபெற்றதில்லை. கலவரத்தைத் தூண்டுபவர்கள் ( Agent Provocateurs ) பல வழிகளில் மதத் துவேஷத்தை உருவாக்கினார்கள். மசூதிக்கு முன் அவர்கள் தொழும் சமயங்களில் இந்து சமய சாமிகளைப் பூஜித்துப் பதிவு செய்யப்பட்டுள்ள பாடல்களை ஒலிபரப்புதல் அல்லது இந்து விக்கிரகங்களை உடைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடு பட்டார்கள். இத்தகைய நஞ்சு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நம்மிடையே விதைக்கப் பட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வோராண்டும் விதைக்கப்பட்டு, பெரும் விருட்சமாக வளர்ந்து 1947 - இல் நாடு பிரிவினைக்காளாகும் வரை நடந்தது. 
             இன்றும் நம்மத்தியில் மதத் துவேஷத்தைப் பரப்பும் நச்சுக்கிருமிகள் போன்ற பலரை நாம் பெற்றிருக்கிறோம். எங்கேனும் குண்டு வெடிப்புகள் நடைபெற்றால், நம்முடைய தொலைக்காட்சி அலைவரிசைகளில் பல, இந்திய முஜாஹிதீன், ஜைஸ் -இ-முகமது, அல்லது ஹர்கட்-உல், ஜெய்ஷ்-அல்-இஸ்லாமியா போன்ற அமைப்புகளிடமிருந்து மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி வந்ததாகக் கூறத்தொடங்கிவிடும். இக்காலத்தில் தீங்கிழைக்க வேண்டும் என்று நினைக்கிற எவனும்கூட மிகவும் எளிதாக ஒரு மின்னஞ்சலையோ அல்லது குறுஞ்செய்தியையோ அனுப்பிட முடியும். இவ்வாறு பெறப்படும் செய்தியை தொலைக்காட்சியில் காட்டுவதன் மூலமும், அடுத்தநாள் அதனைப் பத்திரிகைகளில் பிரசுரிப்பதன் மூலமும் இந்துக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள், குண்டு வீசுபவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றனர். (உண்மையில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களிலும் 99 விழுக்காட்டினர் அமைதியை நாடுபவர்கள், நல்லவர்களாவர்.) இவ்வாறு மிக நுணுக்கமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக விஷத்தினை இந்துக்கள் மத்தியில் பரப்புகின்றனர். பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், ஊடகங்களில் ஒருசில (குறிப்பாக இந்தித் பத்திரிகைகள்) கர சேவகர்களாகவே மாறியிருந்தன. 
              சமீபத்தில், பெங்களூரிலும் அதனைச் சுற்றியும் வசித்து வந்த வடகிழக்கு மாநில மக்களுக்கு அசாமில் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும், எனவே அவர்கள் பெங்களூரை விட்டு உடனே காலி செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் அனைவரும் படுகொலை செய்யப்படுவீர்கள் என்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய அழிம்பு ( mischief ) குறித்து பெங்களூர் முஸ்லிம்களுக்குத் தெரிய வந்தபோது, வடகிழக்கு இந்தியர்களுக்காக அவர்கள் பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
         யாரோ தீயவர்கள் இத்தகு செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும், முஸ்லிம்கள் வடகிழக்கு இந்தியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அவர்கள் மத்தியில் கூறினார்கள். சில பிற்போக்குவாதிகளின் வெறுக்கத்தக்க இழிவான செயல்களே இவைகள் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் பண்பு கொண்ட மாபெரும் நாடு இந்தியா. நாட்டில் ஒற்றுமைக்கும் வளமைக்கும் ஒரே வழி, சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களையும் சம அளவில் மதிப்புடன் நடத்துவதேயாகும். நம்நாட்டை ஆண்ட மாமன்னர் அக்பர் நமக்குக் காட்டிச் சென்றுள்ள வழி இதுவேயாகும். இவரும், அசோகருடன் இணைந்து, உலகம் கண்டுள்ள மிகச்சிறந்த ஆட்சியாளர் என்பதே என் கருத்து.
           (ஹின்சா விரோதக் சங் (எதிர்) மிர் சாபூர் மொட்டி குரேஷ் ஜமாத் என்னும் வழக்கில் நான் அளித்துள்ள நீதிமன்றத் தீர்ப்பை இணையத்தில் காண்க).
         1947 - இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது, மதவெறி உணர்ச்சிகள் கொழுந்து விட்டெரிந்தன. பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது சகாக்களிடம் இந்தியாவை ஓர் இந்து நாடு என்று பிரகடனம் செய்ய வேண்டும் என்று கடுமையான நிர்ப்பந்தம் அளிக்கப் பட்டது. ஏனெனில் பாகிஸ்தான் தன்னை ஓர் இஸ்லாமிய நாடு என்று அறிவித்துவிட்டதாம்.ஆயினும் நம் தலைவர்களின் பெருந்தன்மை காரணமாக, அவர்கள் அவ்வாறு அறிவிக்கவில்லை. ‘‘இந்தியா ஓர் இந்து நாடு அல்ல, மாறாக அது ஒரு மதச்சார்பின்மை நாடு’’ என்று கூறினார்கள். அதனால்தான், ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, நம் அண்டை நாட்டார்களைவிட நாம் அனைத்து விதங்களிலும் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறோம். மதச்சார்பின்மை என்பதன் பொருள், ஒருவர் தன் மதத்தைப் பின்பற்றக்கூடாது என்பது அல்ல. மதச்சார்பின்மை என்பதன் பொருள், மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. அரசுக்கு மதம் கிடையாது. என் கருத்தின்படி, மதச்சார்பின்மை ஒன்றே நம் நாட்டை ஒற்றுமையுடன், வளமான இந்தியாவிற்கான பாதையில் முன்னோக்கிச்செல்ல, சிறந்த கொள்கையாகும்.   
தமிழில் : ச. வீரமணி 
நன்றி : 

செவ்வாய், 9 அக்டோபர், 2012

வெனிசுலா : உலக நாடுகளுக்கு வழிகாட்டுகிறது...!

            வெனிசுலாவின் சோஷலிச ஜனாதிபதியான சாவேஸ், மூன்றாவது தடவையாக பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவேசின் வெற்றியின் இரகசியம் என்ன? அவரது கடந்த கால சாதனைகள் என்ன?
                    1. எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடான வெனிசுலாவில், எண்ணை  விற்பனையில் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதி மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டுள்ளது. சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் செலவிட்ட அளவை விட, சாவேசின் பதவிக் காலத்தில் நானூறு மடங்கு அதிகமாக, அதாவது அரசாங்க பட்ஜெட்டில் 43 % சமூக நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டுள்ளது.
(ஆதாரம்: Financial Timeshttp://www.ft.com/)
                 2.  வெனிசுலாவின்  பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் தேசியமயமாக்கப் பட்டன. நானூறுக்கும் அதிகமான நிறுவனங்கள் அரசாங்கத்தினால் நடத்தப் படுகின்றன.
(Venezuela's economy Towards state socialism, http://www.economist.com/node/17527250)  
                        3. சாவேசின் சோஷலிச அரசியலுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. அவரது பதவிக் காலமான 1996 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட காலத்தில், வறுமை பெருமளவு ஒழிக்கப் பட்டுள்ளது. 71 % இலிருந்து 27 % மாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சாவேசின் ஆட்சிக் காலத்தில், குழந்தைகளின் இறப்பு விகிதம் அரைவாசியாக குறைந்துள்ளது. எழுத்தறிவின்மை விகிதாசாரம் பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது.
(POBREZA Y DESARROLLO SOCIAL EN VENEZUELA: Balance 2011 y perspectivas para el 2012 por Jesse Chacón (GISXXI), http://www.gisxxi.org/noticias/pobreza-y-desarrollo-social-en-venezuela-balance-2011-y-perspectivas-para-el-2012-por-jesse-chacon-gisxxi/#.UHNeV5hg8fU)
( Pourquoi Chavez ?, http://www.legrandsoir.info/pourquoi-chavez.html)                      
             4. உங்களுக்குத் தெரியுமா? உலகிலேயே திருப்திகரமான வாழ்க்கை வாழும் மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலா தெரிவு செய்யப் பட்டுள்ளது. பணக்கார நாடுகளான கனடா, மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கு அடுத்ததாக, வெனிசுலா ஆறாவது இடத்தில் இருக்கிறது. (High Wellbeing Eludes the Masses in Most Countries Worldwide, http://www.gallup.com/poll/147167/High-Wellbeing-Eludes-Masses-Countries-Worldwide.aspx#2)
                    5. மேற்கத்திய ஊடகங்கள் சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்றும், அவரது ஆட்சியில் ஜனநாயகத் தன்மை கிடையாது என்றும் கூறி வருகின்றன. ஆனால், 13 வருட ஆட்சிக் காலத்தில், 14 தேர்தல்கள் அல்லது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள்  நடைபெற்றுள்ளன. அனைத்திலும் சாவேசும், அவரது கட்சியும் வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து தேர்தல்களையும் கண்காணித்து வந்த  Carter Centrum   ஐ  சேர்ந்த  Jennifer McCoy , தேர்தல்கள் யாவும் ஜனநாயக முறைப்படி நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
(Venezuelan Electoral System one of the Most Automated in the World, http://venezuelanalysis.com/analysis/7177)
                   6. வெனிசுலா நாட்டு ஊடகங்கள் எல்லாம் சாவேசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனால் அவருக்கு ஆதரவான பிரச்சாரம் மூலம் மக்களை மூளைச் சலவை செய்வதாக, மேற்கத்திய நாடுகள் குற்றஞ் சாட்டுகின்றன. உங்களுக்குத் தெரியுமா? வெனிசுவேலாவின் 116 தொலைக்காட்சி நிறுவனங்களில், 61 தனியார் நிறுவனங்கள். தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்தும் சாவேசுக்கு எதிராகத் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வெறும் 13 தொலைக்காட்சி நிறுவனங்களை மட்டுமே அரசு நடத்துகின்றது. மீதியுள்ள 37 ம், ஒன்றில் பிரதேச அரசாங்கத்தினால், அல்லது மக்களின் கூட்டுறவு நிறுவனமாக  நடத்தப் படுகின்றன. ஆனால்.... ஆனால்... தனியார் தொலைக்காட்சி சேவைகள், மொத்த சனத்தொகையில் 61 % மான பார்வையாளர்களை சென்றடைகின்றன. தினசரி பத்திரிகைகளில் 80 % தனியார் கைகளில் இருக்கின்றன. நாட்டில் அதிகமாக விற்பனையாகும், பிரபலமான முன்னணி பத்திரிகைகள் எப்போதும் சாவேசுக்கு எதிராகவே எழுதிக் கொண்டிருக்கின்றன.
(Television in Venezuela: Who Dominates the Media?, http://www.cepr.net/documents/publications/2010_12_venezuela_media.pdf)
                             7. உலக நாடுகளின் ஜனநாயக செயற்பாடுகளை கணிப்பிட்டு வரும் கனடிய நிறுவனமான   Foundation for Democratic Advancement (http://www.slideshare.net/FDAdvancement/2011-fda-electoral-fairness-report-on-venezuela)(FDA), நேர்மையான முறையில் ஜனநாயக தேர்வு நடக்கும் நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலாவை தெரிவு செய்துள்ளது.  அவர்களின் கணிப்பின் படி, வெனிசுலாவில்  83 % நேர்மையான ஜனநாயக தெரிவு இடம்பெறுகின்றது. மற்ற நாடுகளையும் ஒரு தடவை பார்ப்போமா? பின்லாந்து 30 %, அமெரிக்க 30 %, எகிப்து 0 %. 
                                          8. இந்த தடவை, சாவேசை எதிர்த்து தேர்தலில் குதித்த வேட்பாளர்  Henrique Capriles பற்றி மேற்கத்திய ஊடகங்கள் புகழ்ந்து பேசின. மாபெரும் ஜனநாயகவாதி என்றெல்லாம் பாராட்டின. அந்த வேட்பாளரின் கடந்த கால ஜனநாயக சாதனைகளை பார்ப்போமா? 2002 ம் ஆண்டு, வெனிசுலாவில் சதிப்புரட்சி நடந்தது. மியாமியில் (அமெரிக்கா) இருந்து வந்த ஆயுதக் குழுவொன்று கியூப தூதுவராலயத்தை முற்றுகையிட்டது. அப்பொழுது அந்தப் பிரதேச ஆளுநராக இருந்த  Henrique Capriles அந்த ஆயுதக் குழுவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமல்ல, சர்வதேச சட்டங்களுக்கு முரணாக, தூதுவராலயத்திற்கு சென்று கொண்டிருந்த மின்சார, நீர் விநியோகத்தையும் துண்டித்திருந்தார். 
(Ex embajador de Cuba en Venezuela: Capriles violó leyes internacionales, http://www.telesurtv.net/articulos/2012/04/12/ex-embajador-de-cuba-en-venezuela-capriles-violo-leyes-internacionales)  
                      இந்த தேர்தலில் ஹுகோ சாவேஸ் 54 % வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  Henrique Capriles 45 % வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
நன்றி : கலையகம் - வலைப்பூ 

வெனிசுலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்...!


          "தாய்நாடு, சோஷலிசம் இல்லையேல் மரணம்", வெனிசுவேலா நாட்டு மாணவர்கள், பாடசாலைகளிலும், அதற்கு வெளியிலும் சொல்லும் கோஷம் இது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் சேர், மேடம்" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிர்யர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். லத்தீன் அமெரிக்க புரட்சியாளர் சேகுவேராவின் படம் வகுப்பறைகளை அலங்கரிக்கின்றது. மாணவர்கள் சே போன்று வாழ வேண்டுமென சபதமேற்கின்றனர்.
                            பெரும்பான்மை வாக்கு பலத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆட்சிக்கு வந்த அதிபர் சாவேஸ், அண்மைக்காலமாகவே தன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்த காலத்தில் இருந்து, அந் நாட்டில் கலாச்சார பொருளாதார மாற்றங்கள் மெதுவாக நடைமுறைக்கு வருகின்றன. ஜனநாயக பொதுத்தேர்தல், ஜனநாயக வழியில் நடந்தால், உலகம் முழுவதும் சாவேஸ் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் பெரும்பாலான வறிய(மூன்றாம் உலக நாடுகளில்) பெரும்பான்மை மக்கள் வறியவர்களாக இருப்பதால், அவர்கள் தமது நலன் குறித்து பேசும் ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமென்ன? பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள், குறிப்பாக வெனிசுவேலா, ஈகுவடோர், பிரேசில், பராகுவை, ஆர்ஜென்டீனா, பொலிவியா, நிகரகுவா.... இப்படி நீண்டு கொண்டே போகும் பட்டியலில் உள்ள நாடுகளில் எல்லாம், சோஷலிசம் பேசுபவர்களையே பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவைகளில் வெனிசுவேலா, பொலிவியா தவிர பிற நாடுகள் சோஷலிச சீர்திருத்தங்களை(கவனிக்கவும், ஜனநாயக வழியில்) நடைமுறைப்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன.
               வெனிசுலாவில் சாவேஸ் துணிவுடன் நடந்து கொள்வதற்கு, அந்நாட்டின் எண்ணை வளம் முக்கிய காரணம். எண்ணை ஏற்றுமதி செய்யும் ஒபெக் அங்கத்துவ நாடான வெனிசுவேலாவின் அதிகளவு எண்ணை அமெரிக்காவிற்கே இன்றுவரை ஏற்றுமதியாவது முரண்நகை. வெனிசுவேலா, அமெரிக்காவிற்கு இடையில் கசப்பான உறவே தொடர்கின்றது. 2002 ம் ஆண்டு சாவேசை ஓரிரு நாட்கள் பதவியகற்றிய சதிப்புரட்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு, மக்கள் ஆதரவுடன் மீண்ட சாவேசை நிரந்தர அமெரிக்க எதிரியாக மாற்றவே வழிவகுத்தது. அதன் பின்னர், ஐ.நா.சபையில் உரையாற்றிய சாவேஸ், அமெரிக்கா அதிபர் புஷ் ஒரு பிசாசாக சித்தரித்து கலகலப்பூட்டினார். அமெரிக்க அரசுக்கு எரிச்சலூட்டும் விதமாக, கியூபா, ஈரான், ஆகிய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார். ஒரு காலத்தில் "சர்வதேச பயங்கராவாதி" என்று பெயரெடுத்த, தற்போது பிரெஞ்சு சிறையில் தண்டனை அனுபவிக்கும், வெனிசுவேலாவை சேர்ந்த கம்யூனிச புரட்சிக்காரன் கார்லோஸ் தேசிய நாயகன் என்று கௌரவித்தார்.
                இன்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள சாவேஸ், தனது நாட்டில் சோஷலிச சீர்திருத்தங்களை மிக மிக மெதுவாகவே நடைமுறைக்கு கொண்டு வருவதாக விமர்சனங்கள் உள்ள அதே நேரம், அந் நாட்டின் பணக்கார மத்தியதர வர்க்கம் சாவேசை பதவியை விட்டகற்ற, பேயோடு கூட்டுச்சேரவும் தயாராக உள்ளது. இருப்பினும் அவர்கள் நலன் காக்கும் கட்சிகள், ஊடகங்கள், தனியார் கல்விநிறுவனங்கள் என்பன தொடர்ந்தியங்க சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் வர்த்தக நிலையங்கள், பெற்றோலிய நிறுவனங்கள் என்பன அரசியல்-பொருளாதாரத்தை தீய நோக்கத்துடன் பயன்படுத்த நினைத்த போது மட்டும் தான், அவை தேசியமயமாக்கப் பட்டன.
              தற்போது பணக்கார பிள்ளைகள் மட்டுமே படிக்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் அரசாங்கத்தினால் தடைசெய்யப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அதற்கு காரணம் இந்த வருடம் வந்துள்ள புதிய கல்வித்திட்டம். ஆர்ஜென்டீன புரட்சியாளர் சே குவேரா கூறியதை போல, "ஒரு புதிய மனிதனை உருவாக்கும்" சோஷலிச அடிப்படையில் அமைந்த கல்வி, தற்போது அனைத்து அரச பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் படி பிள்ளைகள், "வெனிசுவேலா சரித்திரம் பற்றி, பூர்வீக செவ்விந்தியர் பற்றி, எண்ணை வளம் இருந்தும் அபிவிருத்தியடையாத காரணம் பற்றி, சர்வதேச விடுதலை இயக்கங்கள் பற்றி...", இன்ன பிறவெல்லாம் கவனம் செலுத்தி கற்க வேண்டும்.  நிச்சயமாக, மத்தியதர வர்க்கம் இதுகுறித்து மகிழ்ச்சியடைய போவதில்லை. "அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தங்களை எங்கள் பிள்ளைகள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்." என்று கூப்பாடு போடுகின்றனர். மொத்த சனத்தொகையில், மிகச் சிறுபான்மையான பணக்கார மத்தியதர வர்க்கம், மக்கள் ஆதரவின்றி நலிந்து போய்க்கொண்டிருக்கின்றது. "உலகில் அனைத்து நாடுகளிலும் போதிக்கப்படும் கல்வியில் அரசியல் கலந்துள்ளது. சுயநலம், தனியார்மயம், முதலாளித்துவம் சார்பான சிந்தனைகள் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றன. அது பற்றி கண்டுகொள்ளாதவர்கள், சோஷலிசம் கற்பது பிழை என்று சொல்ல என்ன அருகதை உள்ளது?" இவ்வாறு கேட்கின்றனர் பல அரச பாடசாலை அதிபர்கள்.
               புதிய கல்வித்திட்டம் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் சேர், மேடம்" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிர்யர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். அதிபரிடம் சென்று முறையிடுவதானால், கதவை தட்டாமலே நேரே போகலாம். இதையெல்லாம் பல பெற்றார்கள் வரவேற்கும் அதே வேளை, ஒரு சில மத்தியதர வர்க்க பெற்றோர் மட்டும், "எங்கள் பிள்ளைகளை கெடுக்காதே!" என்று பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் கூச்சல் போடுகின்றனர்.
                 ஜனாதிபதி சாவேஸ், சோஷலிச புரட்சி பாடசாலைகளில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும், என்று கூறி வருகின்றார். "ஒரு சமூகத்தின் நெறிகளை தீர்மானிக்கும் நிறுவனங்களை பொறுப்பெடுத்து, அவற்றில் முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு மாற்றீடாக சோஷலிச ஆதிக்கத்தை கொண்டுவருவதன் மூலமே, சமூகத்தை மாற்ற முடியும்." என்று மார்க்சிய அறிஞர் அன்டோனியோ கிராம்சியின் கூற்றை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.
நன்றி : கலையகம் - வலைப்பூ