வாலில் தீ....
ஆற்றுப் படுகையில் யாரோ முன் தோண்டி வைத்திருந்த ஊற்றுப் பள்ளத்தை ஒரு கடுங்கோடை மாலையில் தாகத்துடன் பார்த்தபடி நிற்கின்றேன், குப்புறப்படுத்துத் தோண்டி வைத்த குழியில் ஆசையாய் மேலும் ஐந்து கையளவு மண்ணைக் கோதி எடுக்கிறேன். மூன்றாம் கோதலில் என் புறங்கையில் சற்றே ஈரம், ஆறு, ஏழு, எட்டு, நீர் எட்டிப் பார்க்கிறது. நாவறண்ட என் முகத்தை பிம்பமாய்ப் பிடித்துக் காட்டி விட்டு தாகம் தணிக்கிறது. மூக்கில் ஒட்டிய ஈர மணலையும் முன் சட்டையில் ஒட்டிய காய்ந்த மணலையும் தட்டி விட்டு எழுகிறேன் கனவு கலைகிறது - அத்தனையும் கனவுதான்.
பரமக்குடிக்கார ஆள் என் நினைவில் தற்போது இது நடக்க வாய்ப்பில்லை.
பரமக்குடி கடக்கும் ஆற்றுப் படுகைக்கே மூடு விழா நடத்தத் துவங்கி பல
மாமாங்கங்கள் ஆகிவிட்டன. கரையோர வீடுகள் கள்ளழகர் போல் தம் களம் விட்டிரங்கி
ஆற்றுப்படுகையில் புது மனைகள் புகுந்து தம் கழிவுகளை ஆற்றுப்படுகையில்
கலக்க விட்டு ஓரிரு மாமாங்கங்கள் ஆகிவிட்டன. பன்றிகள் போல் மனிதர்கள் நாமும்
சர்வாஹாரிகள் (omnivore) தான் எனினும் கழிவு பொருட்களையும் களை பொருட்களையும்
நாம் நித உணவுகளாக்கிக் கொண்டு, திட உணவுகளை மெதுவாய் அப்புறப்படுத்தி
வருகிறோம்.
மேற்சொன்னவற்றிற்கும் வால் மார்ட் (Wall Mart)
இந்தியாவிற்குள் நுழைவதற்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேட்டால் விவரம்
சொல்ல நிறைய இந்தியர்கள் ஆதாரங்களோடு கடும் வாதம் புரியக்
காத்திருக்கிறார்கள். தமிழகத்தின் நுழைவாயிலை தற்காலிகமாகத் தமிழக முதல்வர்
தாழிட்டு வைத்திருக்கிறர். அதற்கு என் போன்ற ஆட்களின் தற்காலிகமான நன்றி
தமிழக முதல்வருக்கு உரித்தாகும். இந்த வைராக்கியத்தை அவர் கடைப் பிடித்தால்
எங்கள் நன்றி என்றென்றும் உண்டு. எதிர் காலச் சந்ததிகளின் விவரமறிந்த
நன்றியும் கூட.
என்ன செய்து விடப் போகிறது இந்த வால் மார்ட் (Wall Mart)...
இப்படிப் பதறுகிறீர்கள்...? என்று கேட்டால்; வால் மார்ட் (Wall Mart) என்ற
அமெரிக்க பல் பொருளங்காடி கிராமவாசிகளையும் வாடிக்கையாளர்களாக்கிக்
கொண்டு, அவர்களே அறியாமல் அவர்கள் பிடரியில் கையை வைத்துத் தள்ளிக் கொண்டு
போய் தம் கல்லாவில் காசு போட வைக்கும். ஊற்று நீரை பாட்டிலில் நிரப்பி
விற்கும். பதனி பருக ஆசை என்று என் போன்ற பழைய ஆட்களுக்கும் பாட்டிலில்
அடைத்து விற்றாலும் விற்கும் வால் மார்ட் (Wall Mart) சொல்லமுடியாது.
மீனுக்கு வாலும் பாம்புக்குத் தலையும் காட்டி மயக்கும் விளாங்குத்தனம் உள்ள
அமெரிக்க வியாபாரக் குழுமங்கள் கிராம உத்யோக பவனின் காதியுக்திகளையும்
அனுமதியின்றி அபகரித்துத் தனதாக்கிக் கொள்ளும். பனம்பழமும் கிழங்கும்
என்னவென்றே தெரியாத இந்தியப் பிள்ளைகள் பிட்சாவே தன் பாரம்பரிய உணவு என
மயங்கும். மயங்கட்டுமே, இதில் என்ன கெட்டுப் போகிறது? எனச் சிலர் கேட்கலாம்.
யோசித்துப் பார்த்தால் ஒன்றும் கெட்டுப் போகாதுதான் .கம்யூனிசமோ ஜனநாயகமோ செத்தாலும் பனைமரம் உயிரோடு நிற்கும். ரோம் ராஜ்யம் துளிர்த்தெழும். பல்லாயிரம் வருடங்களுக்கும் முன்னால் மஹாவீரரின் முந்தைய தீர்த்தங்கரர்களுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுட்கு முன்னால் இந்நாட்டை வளமாக்கிய மண்ணும் மரமும் சரியாது சாயாது. ஆளெல்லாம் மடிந்து சில நூறு வருடங்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து தோப்புகள் சூழும். ஆற்றுப்படுகையில் இன்றைய வீடுகள் நிர்மூலமாகி மண்ணோடு கலந்து புதிய கரடு முரடான ஆற்றுப்படுகையாகும். இதெல்லாம் முன் வீடுகளும் மனிதர்களும் இருந்த இடம் என்று நினைவு கூற ஒரு மனம்கூட மிஞ்சாது.
நாம் அழிவோம்... உலகழியாது. நாம் உலகத்தின் அச்சாணியல்ல.
சுழலும் அச்சக்கரத்தின் சரித்திரப் புத்தகத்தின் நடுவில் ஒரு சிறிய வாக்கியத்தின் கடைசியில் வரும் முற்றுப் புள்ளி.

நன்றி : ஆனந்த விகடன்