''ஏழாம் அறிவு'' படத்தின் முடிவில் கதாநாயகன் சூர்யா சொல்வார்: “தமிழர்களுக்கு வரலாறு தெரியாததால், அறிவியல் கண்டுபிடிப்புகளை இழந்து விட்டார்கள்.” உண்மை தான். தமிழர்களுக்கு வரலாறு தெரியாததால் தான், ''ஏழாம் அறிவு'' போன்ற வரலாற்றை திரிக்கும் பிரச்சாரப் படங்களை எடுத்து வியாபாரம் செய்ய முடிகின்றது. போதி தர்மர் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் சரி தானா, என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும்.
படத்தின் முக்கிய கதைக்கரு, ''உயிரியல் யுத்தம் (Biological warfare)'' பற்றியது. 6 ம் நூற்றாண்டில் “தமிழனான” போதி தர்மர், சீனா சென்றிருந்த சமயத்தில், அங்கு பரவிய வைரஸ் தொற்று நோயை தடுக்கும் மருந்தை கண்டுபிடித்துக் கொடுத்திருந்தார். இன்றைய சீனர்கள், அதே வைரசை இந்தியாவில் பரப்பி, இந்திய மக்களை கொல்வதற்கு முனைகின்றனர். இதுவரை நடக்காத கற்பனைக்கதை தான் இது. இருப்பினும், “வரலாற்றின் முக்கியத்துவம்” உணர்ந்த இயக்குனர், உண்மையான வரலாற்றுக் கதையை எடுத்து படமாக தயாரித்திருக்கலாம். “உயிரியல் யுத்தம், இருபத்தியோராம் நூற்றாண்டிற்கான நவீன போரியல் முறை” என்று இயக்குனரே நினைத்துக் கொண்டிருக்கலாம். “பயங்கரவாத எதிர்ப்பு போர்” குறித்து அமெரிக்கா பிரச்சாரம் செய்த மிகைப் படுத்தப் பட்ட அச்சமூட்டல்களின் பாதிப்பில் அவ்வாறு நினைக்கிறார் போலும். சீனாவும், இந்தியாவும் ஏற்கனவே உயிரியல் போரினால் பாதிக்கப் பட்ட நாடுகள் தான். இவை பற்றிய தகவல்களை வரலாற்று நூல்களில் இருந்து எடுத்து படமாக தயாரித்திருந்தால், “ஏழாம் அறிவின்” உயரிய நோக்கத்தை நாம் பாராட்டலாம்.
ஏழாம் அறிவை தயாரித்தவர்களின், முதலாம் அறிவில் உள்ள அரசியல் சார்புத் தன்மை, கடந்த நூற்றாண்டின் வரலாற்றை கூட பின்னோக்கிப் பார்க்க விடாது தடுக்கின்றது. இன்றைய நவீன உலகில் மட்டும் தான், பரிசோதனை சாலைகளில் உருவாக்கப்படும் நோய்க் கிருமிகள் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது, என்று நினைப்பது தவறு. பண்டைய காலங்களில், நச்சுப் பாம்புகளை பிடித்து விடுவதும் உயிரியல் போர் முறைக்குள் அடங்கும். இருப்பினும், ஐரோப்பிய காலனிய காலகட்டத்தின் பொழுது தான், பெருந்தொகையான மக்களை அழிக்கும் நோய்க் கிருமிகள் வேண்டுமென்றே பரப்பப் பட்டன. அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த செவ்விந்திய பூர்வகுடிகளின் அழிவுக்கு காரணம், ஐரோப்பியர் காவிக் கொண்டு சென்ற கிருமிகள் என்பது வரலாற்றுத் தகவல். வெளி உலகில் இருந்து தனிமைப் படுத்தப்பட்ட கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு, அந்த நோய்களை எதிர்க்கும் சக்தி இருக்கவில்லை. ஆரம்பத்தில் தற்செயலாக அந்த கிருமிகள் தொற்றியிருந்தாலும், பிற்காலத்தில் இனவழிப்பு செய்யும் நோக்கில் வேண்டுமென்றே பரப்பப் பட்டன.
நம்மில் பலருக்கு, சின்னம்மை என்ற நோய் தொற்றியிருக்கலாம். அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத காலத்தில், பாமர மக்கள் அதனை “அம்பாளின் சீற்றத்தால் தொற்றும் நோய்” என்று நம்பியதால் தான், அதற்கு “அம்மை நோய்” என்று பெயர் வந்தது. சின்னம்மை பண்டைய தமிழர் சமுதாயத்தில் இல்லாத நோய். காலனிய காலத்தில் ஆங்கிலேயரால் கொண்டு வந்து பரப்பப் பட்டது. இந்த உண்மை இன்று எத்தனை தமிழருக்கு தெரியும்? ஏழாம் அறிவு திரைப்படத்தின் கதை அதுவாக இருந்திருந்தால், தமிழர்களுக்கு ஒரு வரலாற்று உண்மையை எடுத்துச் சொன்ன பெருமை கிடைத்திருக்கும். “ஆங்கிலேயர்கள் அதனை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தவில்லை.” என்று சப்பைக் கட்டு கட்டலாம். இந்தியாவில் அம்மை நோயை வேண்டுமென்றே பரப்பியதற்கான வரலாற்று ஆவணம் எதுவும் இது வரை கிடைக்கவில்லை. அமெரிக்க கண்டத்தை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அங்கே அம்மை நோயை பரப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
1763 ம் ஆண்டு, அதாவது இந்தியாவை காலனிப் படுத்திக் கொண்டிருந்த அதே காலத்தில், வட அமெரிக்காவில் காலனிய போர் நடந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், பிரெஞ்சு ஏகாதிபத்தியமும், இன்று கனடா என்று அறியப்படும் நிலத்திற்காக போரிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அங்கே வாழ்ந்த செவ்விந்திய பழங்குடி மக்களை இனவழிப்பு செய்வது ஆங்கிலேயரின் நோக்கமாக இருந்தது. வடஅமெரிக்காவில் பிரிட்டிஷ் படைகளின் தலைமைத் தளபதியான Sir Jeffrey Amherst, இவ்வாறு கூறினார்:”… சின்னம்மை நோய்க் கிருமிகளை ஏவி விட்டாவது, இந்த செவ்விந்திய இனங்களை குறைக்க வேண்டும்.” அவரின் உத்தரவின் பேரில், சின்னம்மை நோய்க் கிருமிகள் உள்ள போர்வைகள், செவ்விந்திய மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் வீசப் பட்டன. அதனால், பல ஆயிரம் செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க சுதந்திரப்போர் காலத்திலும் சின்னம்மை நோய் வேண்டுமென்றே பரப்பப் பட்டது. ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற புதிய அமெரிக்க அரசு, உயிரியல் ஆயுதத்தை மேலும் விரிவாக்கியது. 1942 ம் ஆண்டு, அமெரிக்காவில் 400 கறுப்பின கைதிகள் பரிசோதனை எலிகளாக பயன்படுத்தப் பட்டனர். அவர்களுக்கு தெரியாமலே, மலேரியா நோய்க் கிருமிகள் தொற்ற வைக்கப் பட்டன. பிற்காலத்தில், ஜெர்மனியில் நியூரன்பேர்க் போர்க்குற்ற நீதிமன்றத்தில், நாஜி வைத்தியர்கள் அதனை தமது தரப்பு சாட்சியமாக முன் வைத்தார்கள்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானின் உயிரியல் ஆயுத விஞ்ஞானியாக இருந்தவர் Dr. Shiro Ishii. அவர் ஜப்பான் சக்கரவர்த்தியின் படைகளின் ஆக்கிரப்பில் இருந்த சீனாவின் மஞ்சூரியா மாநிலத்தில் பணியாற்றினார். அங்கிருந்த சீன, ரஷ்ய, அமெரிக்க கைதிகளின் மீது உயிரியல் கிருமிகளை தொற்ற வைத்து பரிசோதனை நடத்தினார். 1931 ம் ஆண்டு, ஜப்பான் மஞ்சூரியா மாநிலத்தை ஆக்கிரமித்ததில் இருந்து, 580000 சீனர்கள் உயிரியல் ஆயுதங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது, Dr. Shiro Ishii யின் குழுவினால் பாக்டீரியா தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கையாகும். அமெரிக்கர்களிடம் ஜப்பான் சரணடைந்த பின்னர், Dr. Shiro Ishii க்கு மன்னிப்பு வழங்கப் பட்டது.
இலட்சக்கணக்கான சீன மக்களை படுகொலை செய்த கொலைகாரன், சுதந்திரமாக திரிய விடப்பட்டான். அநேகமாக, அமெரிக்காவின் உயிரியல் ஆயுத திட்டத்திற்கு, அவரின் உதவி பெறப் பட்டிருக்கலாம். Dr. Shiro Ishii வின் குழுவை சேர்ந்த சிலரை, சோவியத் இராணுவம் கைது செய்திருந்தது. உயரியல் ஆயுத பரிசோதனையால் பாதிக்கப்பட்ட சீன மக்களின் சாட்சியங்களை ஆதாரமாக கொண்டு, அவர்கள் மேல் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால், அமெரிக்காவின் அன்றைய தூர கிழக்காசிய கட்டளைத் தளபதி மக் ஆர்தர், இவையெல்லாம் “கம்யூனிசப் பொய்கள்” என்று கூறினார். சில வருடங்களின் பின்னர், மக் ஆர்தரின் படைகள், கொரியாப் போரின் போது உயிரியல் ஆயுதங்களை பிரயோகித்தன. சீனாவில் கம்யூனிசப் புரட்சியின் பின்னர், இரகசியமாக ஊடுருவிய அமெரிக்க விமானங்கள் விசிறிய கிருமிகள், பயிர்களை அழித்து நாசமாக்கின. நிச்சயமாக, அமெரிக்கா இன்று வரை இந்த உண்மைகளை மறுத்து வருகின்றது.
1971 ம் ஆண்டு, கியூபாவில் பன்றிக் காய்ச்சல் என்ற புது வகை நோய் பரவியது. பல தசாப்தங்களுக்குப் பின்னர், பல உலக நாடுகளில் அந்த தொற்று நோய் பரவியிருந்ததை பலர் அறிந்திருப்பீர்கள். அன்று, பனாமாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த காஸ்ட்ரோ எதிர்ப்பு கியூபர்களிடம், பன்றிக் காய்ச்சல் கிருமிகளை கொடுத்ததாக, ஒரு சி.ஐ.ஏ, அதிகாரி பின்னர் ஒத்துக் கொண்டார். 1981 ம் ஆண்டு, கியூபாவிலும், (சோஷலிச) நிகராகுவாவிலும் ஒரு புதிய வகை தொற்று நோய் பரவியது. கியூபாவில் 188 பேர் மரணமடைந்தனர். நிக்கராகுவாவில் சுமார் 50000 பேருக்கு நோய் தொற்றி இருந்தது. 1988 ல், கியூப எதிர்ப்புரட்சியாளரான Eduardo Arocena , சி.ஐ.ஏ.யின் பணிப்பின் பேரில் நோய்க் கிருமிகளை கியூபாவினுள் கடத்திச் சென்றதாக தெரிவித்தார். 1996 ம் ஆண்டு, கிருமிநாசினி தெளிக்கும் அமெரிக்க விமானங்கள், கியூப வான்பரப்பில் தென்பட்டன. இதன் விளைவாக, உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை பாதிக்கப் பட்டது. இந்த சம்பவம் குறித்து, கியூபா ஐ.நா. மன்றத்தில் முறையிட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர், இந்தியாவிலும், இலங்கையிலும் பரவியிருந்த சிக்கின்குனியா போன்ற மர்மமான தொற்று நோய்கள் கூட, உயிரியல் போரினால் ஏற்பட்டிருக்கலாம். இவை குறித்த தகவல்களை, ஏழாம் அறிவு போன்ற திரைப்படத்தில் எடுத்துக் கூறியிருந்தால், அது தமிழ் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஊட்டியிருக்கும். மாறாக, அமெரிக்க அரசின் வெளிவிவகார கொள்கைக்கு இசைவாக எடுக்கப்படும் ஹாலிவூட் படங்களின் பாணியில் எடுக்கப் பட்டுள்ளது. தமிழனுக்கு, இந்திய தேசிய வெறி ஊட்டுவதற்காக தயாரிக்கப் பட்டது தான், ஏழாம் அறிவு. அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்த அரசியல் பிரச்சாரத்தை, வரலாறு என்று கற்றுத் தருகின்றது. ஆறு அறிவும் இல்லாதவர்களுக்கே, ஏழாம் அறிவு தேவைப்படுகின்றது.
- நன்றி: கலையகம் வலைப் பூ
2 கருத்துகள்:
எதோ தெரியாத்தனமாய் அவர் எடுத்திட்டார்,குறை சொல்வதை விட்டுவிட்டு உங்களுக்கு தெரிந்ததை எழுதினால் நாங்களும் அவரும் தெரிந்து கொள்வோம்.இப்படி குறை கூறினால் சப்பைப்ப்படங்கல்தான் எடுப்பாங்க,நீங்களும் பார்த்திட்டு நூறு பேரை அடிச்சு அந்தப் பெண்ணை அவர் காப்பாற்றினார்.அந்த நேரம் மட்டும் அவர் வராட்டி என்று சப்புக்கொட்டவேண்டியதுதான்.ஏண்டா நல்ல வரலாறுகளை நீங்களும் எடுக்காமல் ஓரளவு தறிந்து எடுப்பவனையும் விடாமல்,உங்கட காசை மட்டும் வங்கியில பூட்டி வச்சிட்டு ஓசியில அடுத்து வரப்போகிறவனையும் தடுக்கிற முயற்சியில் நிற்கிறீங்க.இப்பட வெற்றிதான் அடுத்த முயற்சிக்கு எடுத்துக்காட்டு.தமிழனை அழிக்க சிங்களவன்,இந்திக்காரன் தேவையே இல்லை.நீங்கள் மட்டும் போதும்.ஆனால் உங்களைபோல கனபேர் இருக்காங்க!!
ippo neenga enna solla vareenga sir.. ithu oru karpanai kathai thane.. avaru china ipdi pannichi nu solli padam edukkalaye..
ungala madiri aalungalaala dhan tamilanum tamil cinema-vum innum seriyaana mariyadhai illama irunthutu irukkom.. Ithuve vettru mozhi padama irunthirundha nammallam aaha, oho nu solluvom. tamilan-ndrappo porukkala la..
ungalukku thaan varalaaru theriyum nu pesadhinga. Vidhyasamaa try panna rasikka mudiyalanaalum, amukka nenaikaadhinga sir.. ungalukkelam VELAYUDHAM, KURUVI, JANA, ALAI, KAALAI KUSELAN madiri uyarvaana padangal thaan pidikkum...
கருத்துரையிடுக