தோழர். பிரகாஷ் காரத்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கொல்கத்தாவில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கட்சி அமைப்பு குறித்த சிறப்பு மாநாட்டை (ஸ்தாபன பிளீனம்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திட உள்ளது. தேசத்தில் நிகழ்ந்து வரும் வலதுசாரி சக்திகளின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக கட்சியை எவ்வாறு வலிமை மிக்க அமைப்பாக மாற்றுவது என்பது குறித்து விவாதிப்பது தான் இந்த சிறப்பு மாநாட்டின் நோக்கம். நவீன தாராளமயமாக்கல் மற்றும் வகுப்புவாதம், எதேச்சதிகாரம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வலதுசாரி சக்திகளின் தாக்குதல்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டில் உருவாக்கப்பட்ட அரசியல், நடைமுறை உத்தி அழைப்பு விடுத்தது. இத்தகைய சக்திகளை எதிர்த்து வலுவுடன் போராட கட்சி அமைப்பை வலிமை மிக்கதாக கட்டமைப்பது அவசியமாகும்.
கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் நடைமுறை உத்தியானது, இடது மற்றும் ஜனநாயக முன்னணியை உருவாக்கும் கடமையை முன்னிறுத்தியது. கட்சியின் சுயேட்சையான வலிமையை பெருமளவில் அதிகப்படுத்துவது இதற்கு அவசியமாகிறது. கட்சி அமைப்பை ஆற்றல் மிக்கதாக உருவாக்கினால்தான் வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டத்தை முனைப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பின்னடைவுகளை சந்தித்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அதன் வெகுஜன செல்வாக்கு குறைந்துள்ள நிலையில் கட்சியின் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சியை வெகுமக்கள் அடித்தளத்துடன் வலிமைமிக்கதாக கட்டமைப்பது எப்படி என்பது குறித்து சிறப்பு மாநாடு விவாதிக்க உள்ளது. ‘மாஸ் லைன்‘ (வெகு மக்களுடன் நெருக்கமான தொடர்பு) என்பதை நிறைவேற்றுவதற்கு வெகு மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு மற்றும் வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களை வளர்த்தெடுப்பது அவசியமான ஒன்றாகும்.
‘மாஸ்லைன்’
‘மாஸ்லைன்’ என்ற கோட்பாட்டை நிறைவேற்ற கட்சியின் அடி முதல் நுனி வரை செயல்படும் விதத்தில் பெருமளவு மாற்றம் தேவைப்படுகிறது. மக்களிடம் செல்வது, மக்களிடமிருந்து கற்றுத் தேர்வது, அந்த அனுபவ திரட்சியுடன் மீண்டும் மக்களிடம் செல்வது என்பதை போதனையாக கொண்டு பணியாற்றுகிற விதத்தில் பெருமளவு மாற்றம் தேவைப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால் சலிப்பூட்டுகிற, மாற்றம் இல்லாத, ஒரே மாதிரியான வேலை முறை மற்றும் பழக்கமாக மாறிவிட்ட பணிமுறை என்பதை விட்டொழிப்பது என்பதாகும். நவீன தாராளமயமாக்கல் கொள்கை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டதால் பல்வேறு வர்க்கப் பிரிவுகளின் சமூகப் பொருளாதார நிலையில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. உழைக்கும் வர்க்கம், விவசாயிகள், கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆய்ந்தறிந்து அதற்கேற்ப புதிய முழக்கங்களும் நடைமுறை உத்திகளும், அமைப்பின் போராட்ட வடிவங்களும் உருவாக்கப்பட்டு வர்க்க, வெகுஜன இயக்கங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். கட்சியின் சிறப்பு மாநாடு இது குறித்து விவாதிக்கும்.
மிகப் பெரிய இடதுசாரிக் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவின் மிகப்பெரிய இடதுசாரி கட்சியாகும். 10லட்சத்து 48 ஆயிரம் பேர் கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். அடிப்படை அலகுகளாக 90 ஆயிரம் கிளைகள், 285 மாவட்டக் குழுக்கள், 23 மாநிலக் குழுக்கள் மற்றும் மூன்று மாநில அமைப்புக் குழுக்கள் என கட்சி விரிந்து பரந்து காலூன்றி உள்ளது. 10ஆயிரத்து 350 பேர் கட்சியின் முழுநேர ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். இது கட்சியின் அமைப்பு ரீதியான சொத்தாகும். அமைப்பின் வலிமை மற்றும் பலவீனங்களை சிறப்பு மாநாடு ஆய்வு செய்து, கட்சி அமைப்பை மேலும் சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை தீர்மானிக்கும். குறிப்பாக, கட்சி உறுப்பினர்களின் தரம் மற்றும் அரசியல் - தத்துவார்த்த நிலையை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அரசியல் - தத்துவார்த்த நிலையை உயர்த்துவது மட்டுமின்றி, கட்சியின் புரட்சிகர குணத்தை நிலைநிறுத்தவும் வேண்டியுள்ளது. இதற்கு அடிப்படை வர்க்கங்களிலிருந்தும், பெண்கள் மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்தும் ஊழியர்களை உருவாக்கி கட்சி அமைப்புகளுக்கு உயர்த்த வேண்டியுள்ளது. கட்சிக்குள் இளைஞர்களை ஈர்க்கும் பணிக்கு சிறப்பு மாநாடு தனித்த கவனம் செலுத்துவதோடு கட்சி உறுப்பினர்களில் இளைஞர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பது குறித்தும் விவாதிக்க உள்ளது.
லெனினியக் கோட்பாடே வழிகாட்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது லெனினிய கோட்பாட்டு அடிப்படையிலான ஸ்தாபன விதிகளின்படி செயல்படுவதாகும். அதாவது ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு மையமானதாக இருக்கும். ஜனநாயக மத்தியத்துவம் என்பது மத்தியத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் கலவையாகும். இதை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியான போராட்டம் தேவைப்படும். இப்போது உள்ள ஸ்தாபன முறையில் தேவைப்படுவது என்னவென்றால், உள்கட்சி ஜனநாயகத்தை பலப்படுத்துவதன் மூலம் ஜனநாயக மத்தியத்துவத்தை முறையாக செயல்பட வைப்பதாகும். ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு கட்சிக்குள் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து சிறப்பு மாநாடு விவாதித்து, திரிபுகளை சீர்செய்யவும் ஜனநாயக மத்தியத்துவம் மீறப்படுவதை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கும்.
தத்துவார்த்தப் போராட்டம்
கட்சியின் ஸ்தாபனப் பணியில் தத்துவார்த்த போராட்டம் என்பது முக்கியமான பகுதியாகும். மார்க்சிய - லெனினியக் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட கட்சி என்ற முறையில், நம்முடைய சமூகத்தில் நீடித்திருக்கும் முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய சித்தாந்தங்களின் தாக்கங்களை எதிர்த்து அயர்வற்ற போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மற்றும் நவீன தாராளமயமாக்கல் நம்முன் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. 1990களில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்ட பின்னணியில் இத்தகைய போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது. நவீன தாராளமயமாக்கல் மதிப்பீடுகள் சமூகத்தில் மேலோங்கியுள்ள நிலையில், பெரும் கார்ப்பரேட் ஊடகங்கள் இதை மேலும் பரவலாக்குகின்றன. எனவே கட்சி தனது ஊழியர்களை தத்துவார்த்த ரீதியாக மேலும் வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. கட்சிக்குள் தத்துவார்த்த ரீதியிலான பணிகளை மேற்கொள்ள கட்சிக் கல்விமுறையை மேம்படுத்தி புத்துயிரூட்ட வேண்டியுள்ளது. தத்துவார்த்த
நகர்ப்புற ஏழைகளை நோக்கி...
சிறப்பு மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ள மற்றொரு முக்கியமான பகுதி வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள் சுயேட்சையாகவும், ஜனநாயக ரீதியிலும் இயங்குவதற்கான நடைமுறைகளை வலுப்படுத்துவது ஆகும். வெகுஜன அமைப்புகளுக்குள் கம்யூனிஸ்ட்டுகள் அரசியல் ரீதியிலான பணிகளை மேற்கொள்வது என்பது, அந்த அமைப்புகளுக்குள் அணிதிரளும் மக்களை அரசியல்படுத்துவது என்பதாகும். சமூகப் பிரச்சனைகளை கையில் எடுப்பதிலும் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சங்களுக்கு எதிராக போராடுவதிலும் கட்சி முனைப்பாக பங்காற்ற வேண்டும். பழங்குடியின மக்கள், தலித் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் பணியாற்றத்தக்க வகையில் அமைப்புகளை உருவாக்குவதற்கு முன்முயற்சி எடுக்கப்பட வேண்டும். நகர்ப்புற பகுதிகளில் குறிப்பாக, நகர்ப்புற ஏழை மக்கள் மத்தியில் பணியாற்ற புதிய முன்முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியதிலும், உழைக்கும் மக்களுக்கான அமைப்புகளை கட்டமைத்ததிலும் கம்யூனிஸ்டுகளுக்கு பெருமைமிகு பாரம்பரிய வரலாறு உண்டு. மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்ததற்காக பல்வேறு காலகட்டங்களில் கொடூரமான அடக்குமுறைகளை கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்டுள்ளனர். ஆயினும், நவீன தாராளமயமாக்கலுக்கு எதிராகவும் வகுப்புவாதத்திற்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டுவது என்பது தடைபடவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்திற்கு வலுவான அடித்தளத்தைக் கொண்ட மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் கொடூரமான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்களை எதிர்கொண்டவாறு மக்களுடன் ஜீவிதமான தொடர்பை பேணிக்கொண்டு அவர்களுக்காக கட்சி போராடி வருகிறது.
ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் கொல்கத்தா சிறப்பு மாநாடு ஒரு மைல்கல்லாக திகழும். வலிமை மிகுந்த, நாடு தழுவிய வெகுஜன அடித்தளத்துடன் அகில இந்திய அளவில் ஆற்றல் மிகுந்த கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கான தெளிவான திசை வழியை கொல்கத்தா சிறப்பு மாநாடு வகுத்துத்தரும்.
தமிழில்: மதுக்கூர் இராமலிங்கம்
நன்றி :
தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக