கட்டுரையாளர் : தோழர். பிரகாஷ் காரத்
பொதுச்செயலாளர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
சிரியா மீது தாக்குதலைத் தொடுக்க அமெரிக்க திட்டமிட்டு வருகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்த பின்னர், சிரியா மீதான ராணுவத்
தாக்குதல்கள் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்திருக்கிறார். இவ்வாறு தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில், அமெரிக்க-நேட்டோ படைகள்
சமீப ஆண்டுகளில் அரபு நாடு ஒன்றிற்கு எதிராக மேற்கொள்ளும் மூன்றாவது
ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக இருந்திடும்.
2003-ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ்
இராக்கின் மீது படை யெடுத்தார். அப்போது, சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை
வைத்திருக்கிறார் என்ற தவறான முறையில் போலிக் காரணம் ஒன்றைக் கூறி இவ்வாறு
படையெடுத்தார். அடுத்து, ஒபாமா 2011-ஆம் ஆண்டில் லிபியாவிற்கு எதிராக வான்
வழியாக ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தார். அப்போது அவர் பெங்காசியில்
ரத்த ஆறு ஓடுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். இப்போது சிரியா அமெரிக்காவின் குறியாகும். இதற்கு
அவர்கள் கூறும் சால்ஜாப்பு: சிரியா ராணுவம், அங்கே கலகம் செய்திடும் படையினருக்கு எதிராக ‘சரின்’ எனப்படும் நரம்புகளைப் பாதிக்கும் ரசாயன
ஆயுதத்தைப் பயன்படுத்துகிறதாம்.
அமெரிக்காவும் அதன் நேட்டோ
கூட்டாளிகளான பிரிட்டனும், பிரான்சும் ‘ ‘சரின்’ வாயுவை ஐ.நா. ஆய்வாளர்கள்
புலனாய்வுகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடங்களுக்குச் செல்வதற்கு முன்பேயே
சிரியா அரசாங்கம் பயன்படுத்தியது’ என்று முடிவு செய்துள்ளன. ரசாயன
ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று
தாங்கள் கூறிய ‘எச்சரிக்கை’யை சிரியா அரசாங்கம் மீறி விட்டது என்பதே ஒபாமாவின் கூற்றாகும். அமெரிக்காவின் ‘அறநெறி’ வேடம் உண்மையிலேயே அதிசயமான
ஒன்றாகும். வியட்நாமில் சண்டை நடைபெற்றபோது, அமெரிக்கப்படைகள் ‘ஏஜண்ட்
ஆரஞ்சு’ என்னும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலைப்
பேரழிவுக்கு உள்ளாக்கின. பிறக்கும் குழந்தைகளில் பல்லாயிரக்கணக்கான
குழந்தைகள் ஊனத்துடன் பிறப்பதற்கும் காரணமாய் அமைந்தன.
இராக்கில்,
சமீபத்தில்கூட, அமெரிக்கப் படையினர் செறிவு குறைந்த யுரேனியத்தையும், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளையும் பயன்படுத்தி மக்களுக்கு மிகவும் கொடூரமான
காயங்களை ஏற்படுத்தினார்கள். இப்போது இதே ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் தான்
சிரியா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும், எனவே அதனைத்
தாக்கப்போகிறோம் என்றும் தங்களுடைய சட்டவிரோத ஆக்கிரமிப்புக்குக்
காரணங்களாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். கற்பனையான ஒன்றை அல்லது அரைகுறை
உண்மையைத் தங்கள் ஆக்கிரமிப்புக்கான காரணமாக, ஏகாதிபத்தியம் காலங்காலமாகக்
கூறிவரும் உத்தியையே ஒபாமாவும் இப்போது கூறிக்கொண்டிருக்கிறார். கடந்த
இரண்டரை ஆண்டு காலமாகவே சிரியா தங்களுக்கு எதிராக சீறியெழுகிற எதிர்ப்பைப்
பார்த்துக் கொண்டிருக்கிறது.
சிரியாவில் இயங்கும் பல்வகைக் கலகக்
கும்பல்கள் தற்போதைய பஷார் அல்-அசாத் அரசாங்கத்திற்கு எதிராக சண்டை
புரிந்து கொண்டிருக்கின்றன. சவுதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய
நாடுகள் இக்கலகக் கும்பல்களுக்கு நிதி உதவி, ஆயுத உதவி மற்றும்
அனைத்துவிதமான உதவிகளையும் செய்து வருகின்றன. ஜபாட் அல்-நஸ்ரா மற்றும்
சலாஃபிஸ்ட்ஸ் போன்ற தீவிர இஸ்லாமியக் குழுக்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான குழுக்கள் பல இவற்றில் அடங்கும். இவ்வாறு கலகம்
புரிபவர்களில் சிலருக்கு அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏ ஆயுதங்களை வழங்கி
இருப்பதோடு பயிற்சியும் அளித்து வருகிறது.
ஆப்கானிஸ்தான், லிபியா,
துனிசியா, ஏமன் மற்றும் செசன்யா நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியக் குழுக்களும்
இப்போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளன. முப்பதாண்டுகளுக்கு முன்பு
ஆப்கானிஸ்தானத்தில் என்ன செய்ததோ அதைப் போன்றோ இப்போது சிரியாவிலும்
இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் படையினருக்கு அமெரிக்கா அனைத்து உதவிகளையும்
செய்து வருகிறது. அரபு உலகத்தில் இயங்கிடும் ஒரேயொரு மதச்சார்பற்ற அரசான
சிரியாவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் ஒரே குறிக்கோளாகும். சிரியாவில் கலகம் செய்துவரும் கும்பல் விரைவில் தன்னுடைய லட்சியத்தை எய்திடும் என்றும், சிரியா ஆட்சி தூக்கி எறியப்படும் என்றும்
அமெரிக்கா எதிர்பார்த்தது.
ஆனால் அது நடைபெறவில்லை. தற்போது
நடைபெற்று வரும் மோதல்களின் காரணமாக லட்சக்கணக்கானோர்
உயிரிழந்திருக்கிறார்கள், இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் அண்டை
நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். சிரியா அரசாங்கமும்,
அதன் ஆயுதப் படைகளும் கலகக் கும்பல்களை விரட்டி அடித்து, அவற்றால் கைப்பற்றப்பட்டிருந்த நகரங்கள் மற்றும் பகுதிகளை சமீப மாதங்களில் மீளவும்
கைப்பற்றியுள்ளனர். இத்தகு சூழ்நிலையில்தான் ரசாயன ஆயுதங்கள் பிரச்சனை
முன்னுக்கு வந்திருக்கிறது. இந்த ஆண்டு, ஜூன் மாதத்தில், ‘சிரியா ராணுவம்
சரின் வாயு பயன்படுத்துவதாகக் கூறி, அதனை எதிர்த்துப் போரிடுபவர்களுக்கு
அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கும்’ என்று அதிபர் ஒபாமா அறிவித்தார். அந்த
சமயத்தில், அமெரிக்காவின் கூற்று தவறானது என்று தக்க ஆதாரத்துடன் மெய்ப்பித்துக் காட்டப்பட்டது.
ஐ.நா. மன்றத்தின் ரஷ்யத் தூதர்,
சிரியாவில் அலெப்போ என்னுமிடத்தில் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள கலகக்
கும்பல்கள்தான் சரின் வாயுவை உபயோகப்படுத்துகின்றன என்பதை தக்க
ஆதாரத்துடன் நிரூபித்தார். கடைசியாக ஆகஸ்ட் 21 அன்று டமாஸ்கஸ் அருகில்
கௌதா என்னுமிடத்தில் நடைபெற்ற மோதலில் சரின் வாயு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அன்றைய தினம்தான் ஐ.நா. ஆய்வாளர்கள் டமாஸ்கஸ் போய்ச்
சேர்ந்திருந்தனர். சிரியா அரசாங்கம் மோதல்களில் வாயு பயன்படுத்தப்படுவதாக
எழுந்துள்ள புகார்களை விசாரணை செய்வதற்காக ஐ.நா. ஆய்வாளர்களை சிரியா அரசாங்கம் அனுமதித்த பின்னர் இச்சம்பவம் நடந்துள்ளது.
இத்தகைய குற்றம்
குறித்து ஆய்வு செய்வதற்காக ஐ.நா. ஆய்வாளர்கள் வந்திருக்கும் நாளன்று
சிரியா அரசாங்கம் இவ்வாறு ரசாயன ஆயுதங்ளைப் பயன்படுத்தும் என்பது
நம்பமுடியாததாக உள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் உட்பட சிரியாவில்
நடைபெற்று வரும் மோதல்களைக் கூர்ந்து கவனித்து வரும் நோக்கர்கள் பலர்
சுட்டிக்காட்டியிருக்கின்றனர். சிரியா அரசாங்கமும் அமெரிக்கா சுமத்தும்
குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. சரின் வாயுவை புகைபோக்கிக் குழல்களில்
கலகக் கும்பல்கள்தான் வைத்திருக்கின்றன என்றும் கூறியிருக்கிறது.
அமெரிக்கா,
பிரான்ஸ், பிரிட்டன் என அனைத்து நாடுகளும் ‘சிரியா அரசாங்கம்தான் ரசாயன
ஆயுதங்களை பயன்படுத்துகிறது’ என்று ஒரே குரலில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. மேலும் அமெரிக்கா, ஐ.நா. ஆய்வுக்குழு பாதிக்கப்பட்ட
இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதே மிகவும் காலங்கடந்தது
என்று கூறியிருக்கிறது. ஐ.நா. ஆய்வுக்குழு முடிவுகள் வெளிவருவதற்கு
முன்பே, அமெரிக்க அரசின் சார்பில் அமைச்சர் ஜான் கெர்ரி சிரியா அரசாங்கம்
ரசாயன ஆயுதங்களை உபயோகப்படுத்துவது கண்டனத்திற்குரியது என்றும் இதற்கு
அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்றும் அறிவித்திருக்கிறார்.
ஆயுதந்தாங்கிய ஐந்து அமெரிக்க கப்பல்கள் குருயீஸ் ஏவுகணைகளுடன் கிழக்கு
மத்தியத்தரைக்கடல் நோக்கி நகரத் துவங்கியுள்ளன. ராணுவத்தாக்குதல்கள்
நிச்சயம் நடைபெறவிருக்கிறது. ஐ.நா. ஆய்வாளர்கள் சிரியாவை விட்டுப் புறப்பட்டவுடனேயே இவை நடத்தப்பட இருக்கின்றன. அநேகமாக எந்த நிமிடமும் இது
நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரான்
மற்றும் பிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே ராணுவத் தாக்குதல்களில்
தங்கள் நாடுகளும் இணைந்து கொள்ளத் தயாராயிருப்பதாகப் பிரகடனம்
செய்திருக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் தான் ஒரு தடங்கல்
எழுந்துள்ளது. சிரியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல்
பெறுவதற்காக நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் அறிவித்திருந்தார். நாடாளுமன்றம் ஆகஸ்ட் 29 அன்று கூடியது. பிரிட்டிஷ் பிரதமருக்கு மரண அடி கொடுக்கும் விதத்தில் நாடாளுமன்றம் தன்னுடைய பெரும்பான்மை
வாக்கு வித்தியாசத்தில் அரசாங்கம் கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்தது.
யுத்தத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் உள்ள கடுமையான கருத்தை இது
பிரதிபலிப்பதாக அமைந்தது. குறிப்பாக, டோனி பிளேயர் ஈராக்கின் மீதான
ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது எடுத்த நெறிபிறழ்ந்த முடிவின்
அனுபவத்திற்குப் பின்னர் இவ்வாறு அமைந்துள்ளது. இவ்வாறாக, அதிபர் ஒபாமா, தன்னுடைய உடனடி ராணுவத் தாக்குதல் திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு
உள்ளாக்கப்பட் டிருக்கிறார்.
அமெரிக்க காங்கிரசின் ஒப்புதல்
கிடைத்தபின்னர் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.
அமெரிக்க காங்கிரஸ் வரும் செப்டம்பர் 9 அன்று மறுபடியும் கூட விருக்கிறது.
ஒபாமா, அதிபர் என்ற முறையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆளும் வர்க்க
நலன்களைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறார். அவர் மிகவும்
அரக்கத்தனமாகவும், வலதுசாரி சிந்தனைப்போக்கும் உடைய ரிபப்ளிகன்
கட்சியினரின்ஆதரவையே மிகவும் நம்பி இருக்கிறார். பிரான்ஸ், தன்னுடைய
முன்னாள் காலனியாக இருந்த சிரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில்
இணைந்திட இன்னமும் அறிவிக்கவில்லை.
அமெரிக்கா, அதன் மேற்கத்திய
கூட்டாளிகள் மற்றும் இஸ்ரேல் சிரியாவை பலவீனப்படுத்த விரும்புகின்றன.
இவ்வாறு செய்வதன் மூலம் ஈரானைத் தனிமைப்படுத்த அவை விரும்புகின்றன.
லிபியாவில் செய்ததைப்போல அல்லாமல், ராணுவத் தலையீட்டிற்கு ஐ.நா.வின் அனுமதியை இதற்கு அவர்கள் பெற்று விட முடியாது. ஏனெனில் ரஷ்யாவும் சீனாவும்
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. எனவே, அவர்கள் மனிதாபிமான
அடிப்படையில் ராணுவத் தலையீட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்று
சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ரசாயன ஆயுதங்களின்
தாக்குதலிலிருந்து அப்பாவி மக்களைப் பாதுகாக்க வேண்டுமாம்.
ஆயினும்,
மேற்கு ஆசியாவை அதன் எண்ணெய் மற்றும் வாயு இருப்புகளுக்காகத் தங்கள்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும், தங்கள் ஆதிக்கத்தை அங்கே
நிலைநிறுத்த வேண்டும் என்கிற ஏகாதிபத்தியத்தின் எண்ணத்தை அதனால் மூடி
மறைக்க முடியவில்லை. இராக்கிலும், லிபியாவிலும் அமெரிக்காவும் மற்றும்
மேற்கத்திய நாடுகளும் எண்ணெய் வளங்களைத் தற்போது தங்கள் கட்டுப்பாடுகளில்
கொண்டுவந்துவிட்டன. இரு நாடுகளுமே அமெரிக்க - நேட்டோ தலையீடுகளுக்குப்
பின்னால் ஏற்பட்ட விளைவுகளால் பிரிவினை சக்திகளின் மோதல்களை சந்தித்துக்
கொண்டிருக்கின்றன.
சிரியாவிலும் கூட, ஏகாதிபத்தியம் சன்னி - ஷியா
பிரிவுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்கி முட்டி மோதவிட்டுள்ளது.
அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்கள் மேலாதிக்கக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்நாடுகளின் தேசிய இறையாண்மையைக் காலில்
போட்டு மிதிக்கவும், அங்கே இயங்கிடும் இஸ்லாமிய அடிப்படைவாதப்
பிற்போக்கு சக்திகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றன. அமெரிக்கத்
தலையீட்டுக்கு எதிராக ஐமுகூட்டணி அரசாங்கம் வலுவாகக் குரல் கொடுக்க
முன்வரவேண்டும். அயல்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித், கூறியிருப்பது
போல ஐ.நா. மன்றத்தின் கட்டளைக்கிணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
கூறியிருப்பது போதுமானதல்ல.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் முடிவுகளை
மீறிட அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறது என்று தெளிவாகத் தெரிகையில்,
ராணுவத் தலையீட்டை இந்தியா வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும்.
இடதுசாரிக் கட்சிகள் சிரியாவில் ராணுவத் தலையீட்டு அச்சுறுத்தலுக்கு
எதிராக கிளர்ச்சிகள் நடத்திடத் தீர்மானித்திருக்கின்றன. ‘அமெரிக்காவே,
சிரியா மீது கை வைக்காதே’ என்ற கோரிக்கையுடன் உலக அளவிலான இயக்கம்
உருவாகிக் கொண்டிருக்கிறது.
- தமிழில்: ச.வீரமணி