மேடவாக்கம் காயிதமில்லத் கல்லூரி சார்பில் 2016ஆம் ஆண்டுக்கான "பொதுவாழ்வில் தூய்மையாளர்" விருது விடுதலைப்போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத்தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. விழாக்குழுவினர் விருதுடன் ரூ.2.50 இலட்சம் ரொக்கமும் சேர்த்து அவருக்கு வழங்கியிருக்கிறார்கள்.
விருதினை பெற்றுக்கொண்டு வழக்கமான சிம்மக்குரலில் பேசிய தோழர் சங்கரய்யா, ''நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியன். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அரசின் பென்ஷன் மற்றும் சலுகைகளை நான் பெறுவதில்லை. எனவே நீங்கள் கொடுத்த ரூ.2.50 இலட்சம் பணத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பணத்தை காயிதேமில்லத் கல்லூரியில் படிக்கும் தலித் மற்றும் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று விழாக்குழுவினர் மனம் நோகாதவண்ணம் எடுத்துரைத்து கொடுத்தப் பணத்தை திருப்பி அளித்தார்.
ஆட்சியிலிருக்கும் போது கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை கூச்சப்படாமலும், தைரியமாகவும் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் திமுக மற்றும் அதிமுக கட்சித்தலைவர்கள் வாழும் இந்த மண்ணில் தான், விருதாக கொடுத்தப் பணத்தின் மீது ஆசைகொள்ளாமல், நல்ல காரியத்திற்காக திருப்பிக்கொடுத்த தன்னலமற்ற கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரும் வாழ்கிறார் என்பதும், அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று எண்ணும்போது பெருமையாய் இருக்கிறது.
தோழர் சங்கரய்யா அவர்கள் சுதந்திரப்போராட்டக் காலத்தில் எட்டு ஆண்டுகள் சிறைச்சாலையிலும், 3-1/2 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தவர். மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியவர்.
உதாரணமாய் வாழும் உயர்ந்த உள்ளத்தை உவப்புடன் வணங்குவோம்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக