வியாழன், 25 பிப்ரவரி, 2016

மக்களை மறக்கடிக்கும் வேலையில் திமுகவும் அதிமுகவும்....!


      கடந்த இரண்டு நாட்களாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், வலைத்தளங்களிளும்  திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ''முதலமைச்சரை அங்க பார்த்திருப்பீங்க... இங்க பார்த்திருப்பீங்க...'' - ன்னு திமுகவும், பதிலுக்கு ''திமுக தலைவரை அங்க பார்த்திருப்பீங்க... இங்க பார்த்திருப்பீங்க...'' - அதிமுகவும் லாவணி பண்ணிக்கொண்டு திரிவதைப் பார்த்திருப்பீர்கள். 
         இதில என்ன விசேஷம் என்றால்.... இவிங்க ரெண்டு பேருமே ரொம்ப சர்வ ஜாக்கிரதையா அவரவர்கள்  செய்த ஊழல்களை மட்டும் சொல்லி லாவணி பண்ணவில்லை. அதில இரண்டு  பேருமே திரை மறைவில் ஒற்றுமையை கடைபிடித்திருக்கிறார்கள். கருணாநிதியும், ஜெயலலிதாவும் மிகப்பெரிய ஊழல் பேர்வழிகள் என்று உலகத்திற்கே நன்றாக தெரியும். பிறந்த குழந்தையை கேட்டால் கூட சரியா சொல்லும். அப்படிப்பட்ட உண்மையை சொல்லி இருவருமே குற்றம் சாட்டிக்கொள்ளவில்லை என்பது திரைமறைவு உண்மை. 
           நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் - கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் இரகசிய ஒப்பந்தம் இருக்கிறது என்பதும், இரகசிய கூட்டணி இருக்கிறது என்பதும் உண்மை. 
         ஊழலை ஒழிப்போம்... நல்லாட்சித் தருவோம்... என்ற முழக்கமிட்டு உதயமான மக்கள் நலக் கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று முன்னேறிச் சென்றுக்கொண்டிருக்கிற சூழ்நிலையில், வழக்கம் போல் தாங்கள் இருவர் மட்டுமே களத்தில் இருப்பதைப் போன்ற கருத்தாக்கத்தை மக்களின் புத்தியில் திணிப்பதற்காகவும், தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மறந்துவிடுவதற்காகவும் திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டு யோக்கியர்களைப் போன்று இதுபோன்ற விளம்பரங்களை போட்டிப்போட்டுக்கொண்டு வெளியிடுகின்றன என்பது தான் உண்மை. 
         மக்கள் தான் புரிந்துகொண்ட இவர்களை விரட்டியடிக்கவேண்டும். 

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

தியாகத்தின் மீது கல்லெறிகிறது துரோகம்...!


           ''அவர்கள் தேசபக்தி பற்றிப் பேசுகிறார்கள். மாற்றுக் கருத்து சொல்பவர்கள் எல்லாம் தேச விரோதி என்கிறார்கள். இந்திய அன்னை அடிமைத் தளையில் சிறைப்பட்டு உழன்று கொண்டிருந்த போது இவர்கள் சற்றும் மனம் கலங்காமல் கொண்டாடி திரிந்து கொண்டிருந்தனர். இப்போது அவர்களுக்கு ஆட்சி பீடம் கிடைத்திருக்கிறது. சுதந்திரப் போர் குறித்து அதில் தங்கள் பங்கு குறித்து சொல்லிக் கொள்வதற்கு அவர்களுக்கு ஏதும் இல்லை. அதை மீறி சொல்லத் துணிந்தால் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்''                    





கட்டுரையாளர் ​: 

தோழர்.க.கனகராஜ்        
தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி        



துரோகமே வாழ்க்கையாக...         

               அவர்கள் தங்களை தேச பக்தர்கள் என்கிறார்கள். சுதந்திரத்திற்கு முன்பாக சுதந்திரம் பெற்ற காலத்தையும் சேர்த்து ஆர்.எஸ்.எஸ்.சுக்கு இரண்டு பேர் தலைவர்களாக இருந்தார்கள். ஒருவர் ஹெட்கேவர். அவர் நிறுவனத் தலைவர். அதற்கு முன்பு காங்கிரசிலிருந்தார். காங்கிரசிலிருந்த போது, ஆர்எஸ்எஸ்-சை ஆரம்பிக்கும் முன் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆரம்பித்த பிறகு ஒருமுறை ஜெயிலுக்கு போனார். இந்த சிறைவாசத்திற்கான நோக்கத்தை அவரது சுயசரிதையை எழுதியவரிடம் “சிறைக்குப் போனால் உள்ளேயிருக்கும் காங்கிரஸ்காரர்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக மாற்ற முடியும்” என்பதற்காகவே போனதாகச் சொல்லியிருக்கிறார். இதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்.சின் எந்த ஒரு ஈ, காக்கையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதே கிடையாது. மாறாக, சுதந்திரப் போராட்டத்தின் நெடுகிலும் தேச பக்தர்களை, தியாகிகளை அவமானப்படுத்துவதும், அவதூறு செய்வதும், ஆங்கிலேயர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிப்பதுமாகவே அவர்களின் காலம் கழிந்திருக்கிறது.
        சுதந்திரப் போராட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக இருந்த கோல்வால்கர் (குருஜிதான்) ஒரு நாள், ஒரு பொழுது, ஒரு நிமிடம் கூட தப்பித் தவறிக் கூட கனவிலும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதும் கிடையாது; ஈடுபட்டவர்களை வாழ்த்திப் பேசியதும் கிடையாது, இன்னும் சொல்லப்போனால் ஒரு பேச்சுக்காகக் கூட ஆங்கிலேயர்களை விமர்சித்ததும் கூட கிடையாது. தங்களில் யாராவது ஒருவரை சுதந்திரப் போராட்ட வீரராகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாஜ்பாய் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி, அதை பத்திரிகைகள் விசாரிக்கும்போது அது உண்மையல்ல, மாறாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை சொல்லிவிட்டு அவர் வெளியே வந்துவிட்டார் என்கிற விஷயம் வெளியே வந்து, அவர்கள் அவமானப்பட்டு நின்றார்கள். சாவர்க்கர் பெரிய சாகசம் செய்து விட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் ‘வீர’ சாவர்க்கர் என்றழைக்கப்பட்டதாகவும் அவ்வப்போது அவர்கள் சொல்வதுண்டு. அவர் இங்கிலாந்தில் இருக்கும்போது ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராக பேசினார், எழுதினார் என்பதெல்லாம் உண்மை. ஆனால் அவர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மன்னிப்புக் கடிதங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால், கருணை மனு எப்படியெல்லாம் எழுத முடியும் என்பதற்கு இன்றுவரையிலும் ‘சிறந்த உதாரணமாய்’ திகழ்வது ‘வீர’சாவர்க்கர் ஆங்கில அரசாங்கத்திற்கு எழுதிய கடிதங்கள்தான்.
         அவர்களைப் பற்றி மற்றவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை விட அவர்களுடைய ஆவணங்களில் அவர்கள் சுதந்திரப் போராட்டம் குறித்து என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம், வரிக்கு வரி ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். இதோ அந்த விபரங்கள்:அவர்களது ஆவணங்களில் உள்ளபடி அவர்களின் எழுத்துக்களில்....

1. ஆங்கிலேயர்களை விமர்சித்து எழுதியது - ஜீரோ
2. ஆங்கிலேய ஆட்சியாளர்களைப் போற்றிப் புகழ்ந்து எழுதியது - 16 முறை
3. ஆங்கிலேய எதிர்ப்புச் சின்னமான வந்தே மாதரம் பாடியது - ஜீரோ
4. விடுதலைப் போராட்டத்தை அவதூறு செய்து எழுதியது - 16 முறை5. விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டி எழுதியது - ஜீரோ
6. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டுமென எழுதியது - ஜீரோ
7. ஜாலியன் வாலாபாக், ககோரி குண்டு வழக்கு, கதார் இயக்கம் போன்ற சுதந்திரப் போராட்ட முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பு - ஜீரோ
8. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தங்களின் உயிரை அர்ப்பணித்தவர்களைப் பாராட்டி எழுதியது - ஜீரோ
9. தியாகிகளின் தியாகத்தை கேவலப்படுத்தி எழுதியது - 10 முறை
10. சுதேசியைப் பாராட்டிய குறிப்புகள் - ஜீரோ - இப்படி அடுக்கிக் கொண்டே போக முடியும்.

         அவர்கள் விடுதலைப் போராட்டத்தை, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆதரித்தவர்கள் கிடையாது. அதைச் சிறுமைப்படுத்தியவர்கள். அதைச் சீர்குலைக்க முனைந்தவர்கள். இப்போது அதிகார பீடம் அவர்களுக்கு வாய்த்திருப்பதால் தேச பக்தி பற்றிப் பேசுகிறார்கள். தேச விடுதலை இயக்கத்தில் இருந்தவர்களை அப்போது அவமானப்படுத்தினார்கள்.  இப்போது தேச விரோதிகள் என்கிறார்கள்.

தேசப் பிரிவினையும் சங்பரிவாரமும்            


                     இந்தியா இரு நாடுகளாக பிரிக்கப்பட்டதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், 1942ம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போது இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பார்த்தால் இவர்களின் தேசபக்த முகமூடி மட்டுமல்ல, இவர்களது உண்மையான முகமே கூட அறுந்து தொங்கும். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாதது மட்டுமன்றி, 1942 இல் பல மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் அரசாங்கங்கள் ஆங்கிலேய கவர்னர்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது, இந்து மகா சபா அந்த அரசாங்கங்களில் பங்கெடுத்துக் கொண்டது.
          அவர்கள் எந்த முஸ்லிம் லீக்கை இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம் என்றார்களோ, அந்த முஸ்லிம் லீக்கோடு இணைந்து சிந்து, வங்காளம், வடமேற்கு மாநிலம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். இதுகுறித்து கான்பூரில் நடைபெற்ற இந்து மகா சபையின் 24 ஆவது கூட்டத்தில் தலைமை தாங்கிப் பேசிய வீர சாவர்க்கர் பின்வருமாறு பேசினார். “நடைமுறை அரசியலில் நாம் முன்னேற வேண்டும். அதற்காக இந்து மகா சபா நியாயமான சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டும். சமீபத்தில் சிந்து மாகாணத்தில் அந்த மாகாண இந்து மகாசபா, முஸ்லிம் லீக் அழைப்பின் பேரில் அவர்களோடு கைகோர்த்து கூட்டணி அரசை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. வங்காளத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். முஸ்லிம் லீக்கின் முரட்டுத்தனமான நபர்களோடு காங்கிரஸால் கூட எவ்வளவு பணிந்து போன பிறகும் ஒத்துப்போக முடியவில்லை. தற்போது இந்து மகா சபாவோடு தொடர்பு கொண்டு கூட்டணி அரசை அமைத்திருக்கிறார்கள். அதன் பிரதமராக பஸ்லூல் ஹக் விளங்குகிறார். அந்த அரசாங்கம் இந்து மகா சபையின் தலைவரான டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜியின் வழிகாட்டுதலோடு ஓராண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கி வந்திருக்கிறது. இதனால் இரண்டு சமூகங்களுமே பலன் பெற்றிருக்கிறார்கள்.” எந்த தேசப் பிரிவினையைச் சொல்லி, அதற்குக் காரணமான முஸ்லிம் லீக்கைச் சொல்லி இன்றைக்கும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களோடு கைகோர்த்துக் கொண்டவர்கள்தான் இவர்கள்.
            இதில் வேடிக்கை என்னவென்றால், வங்காள மாகாண சட்டமன்றத்தில் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சியாமா பிரசாத் முகர்ஜி அந்த அரசாங்கத்தில் நிதியமைச்சர். அதன் பிறகும் அந்தப் பொறுப்பில் ஒட்டிக் கொண்டிருந்தார். அவருக்குத் தான் சமீபத்தில் தபால் தலை வெளியிட்டு அவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அவரின் வாரிசுகள் தான், கடந்த ஜனவரி 30-ந் தேதியன்று காந்தியைக் கொன்ற கோட்சேயை, கோட்சேவின் பிறந்த நாளில் கூட அல்ல, காந்தி கொல்லப்பட்ட நாளன்று அவரை நினைவு கூர்ந்து இனிப்பு கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள். தேசப் பிதாவின் கொலையைக் கொண்டாடும் வக்கிரப்புத்திக்காரர்கள் தேசபக்தர்கள் என்றும், வாழ்நாள் முழுவதும் சுதந்திரப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களை தேச விரோதிகள் என்றும் சொல்லுகிற தைரியம் இவர்களுக்கு வந்திருக்கிறது.
           தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அவர்கள் தாக்கிவிட்டு பெயர்ப் பலகையின் மீது ‘பாகிஸ்தான் ஏஜெண்டுகள் அலுவலகம்‘ என்று எழுதிவைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். இந்த வக்கிரப்புத்திக்காரர்களுக்கு தேச பக்தியும் தெரியாது, தேச பக்தர்களை மதிக்கவும் தெரியாது. எந்த ஹபீஸ் சையதின் டுவிட்டர் பக்கத்திலிருந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து வந்தாகச் சொல்லி பாஜக எம்.பி.யான சாக்ஷி மகராஜ் அந்த பல்கலைக்கழகத்தில் இருக்கும் ‘தேச விரோதிகளை’ எல்லாம் தூக்கில் போட சாட்சி வேண்டுமென்கிறாரோ, அந்த ஹபீஸ் சையத்தோடு வைதீக் என்கிற ஒரு நபர் ரகசியமாக இந்தியாவிலிருந்து பயணம் செய்து பாகிஸ்தான் போய் சந்தித்து விட்டு வந்தார். அவர் யார் என்ற கேள்வி எழும்.
           அவரும் இப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜீத் தோவலும் பிரதமரின் முதன்மைச் செயலாளராக இருக்கும் நிருபேந்திர மிஸ்ராவும், பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலாளராக இருக்கும் பி.கே. மிஸ்ராவும் ஒரு டிரஸ்ட்டின் உறுப்பினர்களாக இருந்தார்கள். மூலம் எதுவென்பது தெரிந்திருக்கும். இவர்கள் தான் போலி டுவிட்டர் பக்கத்தில் தாங்களே உருவாக்கிய செய்திகளை வைத்துக் கொண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்கிறார்கள். அது தவறு என்று சொன்ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது கல்லெறிகிறார்கள்.
          1340 வருடங்கள் சுதந்திரப் போராட்டத்தில் அதன் துவக்கம் முதல் இறுதி வரை துரோகமிழைத்து மட்டுமே வந்த ஒரு கூட்டம், மார்க்சிஸ்ட் கட்சியை தேச விரோதிகள் என்றும், பாகிஸ்தான் ஏஜெண்டுகள் என்றும் கூவித் திரிகிறது.
        அவர்கள் கல்லெறிந்த அந்த அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள், நடமாடியவர்கள் பெருமை இவர்களுக்குத் தெரியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் 422 பேர். இவர்கள் ஒட்டுமொத்தமாக சிறையில் இருந்த காலம் 1340 வருடங்கள் 2 மாதங்கள் 20 நாட்கள். நாட்டு விடுதலையின் போது 20 வயதிற்கும் குறைந்தவர்களை விட்டு விட்டால் ஒவ்வொருவரும் சராசரியாக சிறையில் இருந்த காலம் 5 ஆண்டுகள். ஆங்கில ஆட்சியிலும், அதற்குப் பின்னர் காங்கிரசின் அடக்குமுறை காலத்திலும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலம் 348 வருடங்கள், 10 மாதங்கள், 15 நாட்கள். இத்தகைய மகத்தான தலைவர்களின் இயக்க அலுவலகத்தின் மீதுதான் அவர்கள் கல்லெறிந்திருக்கிறார்கள். சுதந்திரம், தேசபக்தி, போராட்டம், தியாகம் என்கிற கற்பூர வாசனைக்கும் தங்களுக்கும் காததூரம் என்பதை மீண்டும் ஒருமுறை மதவெறி சங் பரிவாரம் நிரூபித்திருக்கிறது.

நன்றி : தீக்கதிர்