நல்லவர்களை உலகறிய செய்வோம்.....
அம்மா உணவகத்தில் மட்டுமல்ல, செல்வியம்மா உணவகத்திலும் ஒரு இட்லியின் விலை ஒரு ரூபாய் மட்டுமே! தொட்டுக்கொள்ள இரண்டு வகை சட்னியும் சாம்பாரும் தந்து அம்மா உணவகத்தையும் விஞ்சிவிட்டார் செல்வி. திருச்சி, கமாராஜர் நகர், ஜீவானந்தம் தெருவில் இருக்கும் செல்வியின் வீட்டு வாயிலில் தினமும் காலை சுடச்சுட தயாராகிறது இட்லி. ஆண்களும் பெண்களுமாகக் கையில் கிண்ணங்களுடன் இட்லி வாங்கக் காத்திருக்கிறார்கள்.
வாழ்க்கையையும் வறுமையையும் சமாளித்து மீள வேண்டும் என்பதற்காகவே ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார் செல்வி.
“எல்லாப் பொண்ணுங்க மாதிரிதான் நானும் நிறைய கனவுகளோட என் வாழ்க்கையைத் தொடங்கினேன். அடுத்தடுத்து ரெண்டு பொண்ணுங்க பொறந்தாங்க. ஆனா எங்களைத் தனியா தவிக்க விட்டுட்டு என் கணவர் 16 வருஷத்துக்கு முன்னால வேறொரு பெண்ணோட போயிட்டார். வீடு தவிர எனக்கு வேற எதுவுமே தெரியாது. அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம மலைச்சு போய் நின்னேன்” என்று சொல்லும் செல்வி, வருமானத்துக்காகத் தயிர் விற்றிருக்கிறார்.
பசி போக்கிய இட்லி வியாபாரம்....
“தயிர் பானையைத் தூக்கிட்டு தெருத்தெருவாக அலைந்தேன். தயிர் வித்த காசு கைக்கும் வாய்க்குமே சரியா இருந்தது. அதனால இட்லி சுட்டு விற்கலாம்னு முடிவு செய்தேன். அப்படி எட்டு வருஷத்துக்கு முன்னால ஆரம்பிச்சதுதான் இந்த இட்லி கடை. எங்க ஏரியா குழந்தைகளுக்கு நான் சுடுற இட்லினா அவ்வளவு இஷ்டம். அதனால லாபத்தை பெருசா எதிர்பார்க்க மாட்டேன். ஒரு நாளைக்கு காலையில் 200 இட்லி வியாபாரம் ஆகும்” என்று சொல்லும் செல்வி, மாலை வேளையில் தோசை விற்கிறார். ஒரு தோசை இரண்டு ரூபாய் ஐம்பது காசு. பத்து ரூபாய் இருந்தால் போதும், இரவு டிபனை முடித்துவிடலாம். கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தின் தேவை போக தினமும் ஐம்பது ரூபாய் கையில் நிற்கிறதாம்.
“500 இட்லி சுட்டால் கூட வித்துடும். ஆனால் 5 கிலோ அரிசி மாவுதான் தினமும் அரைக்க முடியும். ரேஷன் அரிசியோட இட்லி குருணையை சரி பாதியா போட்டு அரைக்கிறேன். எங்க ஏரியாக்காரங்களே இட்லியோட விலையை உயர்த்த சொன்னாங்க. என் புருஷன் விட்டுட்டுப் போன பிறகு, அரவணைக்க சொந்தக்காரங்க இல்லாம நானும் என் குழந்தைகளும் பசிக் கொடுமையால வாடியிருக்கோம். பசிக்கொடுமை தெரிஞ்சதாலதான் இன்னைக்கும் ஒரு ரூபாய்க்கு மேல் இட்லி விலையை உயர்த்த மனசு வர மாட்டேங்குது” என்கிறார் செல்வி.
சோதனையில் மலர்ந்த சாதனை....
சத்துக் குறைபாடு காரணமாக மூத்தமகள் லோகாம்பாளுக்குக் கண் பார்வை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இளைய மகள் கனகவல்லிக்கு ரத்தசோகை ஏற்பட்டு போதிய வளர்ச்சியின்றி இருக்கிறாள்.
“சத்தான ஆகாரம் கொடும்மான்னு டாக்டருங்க சொல்றாங்க. ஒருநாள் சாப்பாடே கேள்விக்குறியா இருக்கறப்போ சத்தான சாப்பாட்டுக்கு எங்கே போறது?” என்கிற செல்வியின் கேள்வியில் வலியும், வேதனையும் நிறைந்திருக்கிறது.
செல்விக்கு ஒவ்வொரு நாளும் போராட்டத்துடன் விடிந்து, போராட்டத்துடனேயே முடிகிறது. வாழ்க்கையின் இத்தனை நெருக்கடிகளுக்கு இடையேயும் செல்வியின் மூத்த மகள் லோகாம்பாள் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் அரசு பள்ளியில் படித்து 463 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.
“சம்பாதிக்கறோம், சாப்பிடறோம். பிரச்சினை வந்தா எப்படியாவது அதை சமாளிச்சு நிமிர்ந்துடறோம். வேற என்ன இருக்கு இந்த வாழ்க் கையில? பணம் சேர சேரத்தான் தேவை அதிகமாகும். தேவையைச் சுருக்கிக்கிட்டா பேராசையும் சுருங்கிடும். நான் சம்பாதிக்கறது எங்களுக்கு நிறைவா இருக்கு. அது போதும் எங்களுக்கு” என்று எளிய வார்த்தையில் வாழ்க்கையைச் சொல்லிவிடுகிறார் செல்வி.
நானும் என் குழந்தைகளும் பசிக்கொடுமையால வாடியிருக்கோம். பசிக்கொடுமை தெரிஞ்சதாலதான் இன்னைக்கும் ஒரு ரூபாய்க்கு மேல் இட்லி விலையை உயர்த்த மனசு வர மாட்டேங்குது.
நன்றி :