ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமா..?

                ''ஆடுவோமே - பள்ளு பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று '' - என்று பாரதி கனவு கண்டான். இந்த தேசம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நமக்கு  ஆனந்த சுதந்திரம் கிடைத்து விட்டாதாய் நம்பிக்கையுடன் எழுதப்பட்ட கவிதை வரிகள் இவை. அவர் இப்போது உயிருடன் இருந்தால் இந்த நாடு  போகிற போக்கைப் பார்த்து நொந்து போயிருப்பார்.
                நமக்கு சுதந்திரம்  கிடைத்திருக்கிறதா என்றால்.. கிடைத்திருக்கிறது. ஆனந்த சுதந்திரம் கிடைத்திருக்கிறதா என்றால்.. இல்லை என்பது தான் உண்மை. ஆனந்த சுதந்திரம் என்றால் என்ன ? மாவீரன் பகத்சிங் வார்த்தைகள் தான் இதற்கு உண்மையான பதிலாக இருக்க முடியும்.  
''பாலுக்கு அழும் குழந்தை; கல்விக்கு ஏங்கும் மாணவன்;
வேலை தேடும் இளைஞன்; வறுமையில் வாடும் தாய்;                                  இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா''                உண்மையான ஆனந்த சுதந்திரம் என்பது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம் - இவை எல்லாமும் எல்லோரும் பெற்றால் தான் உண்மையான சுதந்திர இந்தியா ஆகும். ஆனால் மேலே சொன்ன அத்தனையையும் நம்மிடமிருந்து பறித்துக்கொள்ளும் ஆட்சியாளர்கள் கையில் தான் இந்த   நாடு சிக்கித் தவிக்கிறது என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும். 
                ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ; நாங்கள் சாகவோ'' என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலை  எதிர்த்து சீறினானே பாரதி. அதே நிலைமை தான் இன்றும். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற பெயரில் நம் நாட்டின் செல்வங்கள்  - சொத்துக்கள்  - வளங்கள்  அனைத்தும்  இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளால், அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகளால், இந்திய - அமெரிக்க பெருமுதலாளிகளால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்படுகிறது - கொள்ளையடிக்கப்படுகிறது. அதனால் இந்தியா இரண்டு இந்தியாவாக பிரிந்து கிடக்கிறது.


தொலைந்து போன பொருளாதார விடுதலை..  
         
ஒன்று : வளமான இந்தியா ( Shining India )  மற்றொன்று : வாடும் இந்தியா ( Suffering India )     என்றவாறு இந்திய ஆட்சியாளர்களே பிரித்து வைத்திருக்கிறார்கள். ''வளமான இந்தியாவில்'' ஆட்சியாளர்களின் சலுகைகளை பெற்றும், மக்களை சுரண்டியும்  வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்காகத் தான் ஆட்சியாளர்கள் ஆட்சி நடத்துகிறார்கள். இங்கே உள்ள பணக்காரர்கள் பல லட்சம் கோடிகளை சுருட்டி மேலும் மேலும் பணக்காரர்களாகின்றனர். அதே சமயத்தில் ''வாடும் இந்தியாவில்'' வாழும் மக்கள் பொருளாதாரத்தில் ஆட்சியாளர்களால் பின்னோக்கித்  தள்ளப்பட்டு  ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகவே வறுமையில் வாடுகிறார்கள். இவர்கள் அரசால் திணிக்கப்படும் வரிச் சுமைகள், அரசு நடவடிக்கை எடுக்காததால் உயர்ந்து கொண்டேப்போகும் விலைவாசி, அதிகாரத்திலிருப்பவர்கள் - ஆட்சியாளர்கள் செய்யும் சுரண்டல்கள் இவைகளால் இந்த மக்களின் பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 95 சதவிதத்தினர்களான இவர்களைப் பற்றிய அக்கறை என்பது ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஊழல் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தலை விரித்தாடுகிறது. மக்களுக்கு சேரவேண்டிய நிதியை ஊழல் செய்து சொத்து சேர்க்கிறார்கள். இங்கே ஊழல் என்பது அறிவிக்கப்படாமலே தேச உடைமை செய்யப்பட்டிருக்கிறது.

கனவாகிகொண்டேப் போகும் சமூக விடுதலை..

              சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவில் சமூக விடுதலை என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே - ஒரு எட்டாக் கனியாகவே உள்ளது. தீண்டாமைக் கொடுமை என்பதும் நம் நாட்டில் பல இடங்களில் இப்போதும்  கொழுந்து விட்டு எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அரசின் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட பகுதியில் வாழும் கடைசி மனிதன் வரை போய்   சேர்வதில்லை என்பது தான் உண்மை. இன்றைக்கு அரசுத் துறைகளும், அரசு சார்ந்த துறைகளும்  தனியார்மயமாவதால், போராடிப்பெற்ற இடஒதுக்கீடு  என்ற உரிமை மெல்ல மறைந்து கல்வியிலும்  வேலைவாய்ப்பிலும்  இடஒதுக்கீடு என்பதே காணாமல் போய்கொண்டிருக்கிறது. அவர்களைப் பற்றி ஆட்சியாளர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
             ஆனந்த சுதந்திரம் என்பது வெறும் அரசியல் சுதந்திரம்  மட்டுமன்று, அதனுடன் பொருளாதார சுதந்திரமும்,   சமூக சுதந்திரமும் சேர்ந்ததே. மூன்றும் சேர்ந்த ஆனந்த சுதந்திரம் பெற்றால் தான் பகத்சிங் சொன்னது போல்..
''பாலுக்கு அழும் குழந்தை; கல்விக்கு ஏங்கும் மாணவன்;
வேலை தேடும் இளைஞன்; வறுமையில் வாடும் தாய்;                                  இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா'' 

கருத்துகள் இல்லை: