புதன், 18 நவம்பர், 2015

வெள்ளம் கடுமையாக பாதித்த கடலூர் மாவட்டத்தை தோழர்.ஜி.ஆர் பார்வை...!

                மக்கள் நலப்பணியில் மார்க்சிஸ்ட்டுகள்...!            


அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து கடுமையாக பாதித்த கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியகாட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளரும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர். ஜி.ராமகிருஷ்ணன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அம்மக்களுக்கு பாத்திரங்கள், அரிசி, போர்வை போன்ற நிவாரணப்பொருட்களை வழங்கினார். அரசு செய்யவேண்டிய இந்த பணிகளை எந்த ஒரு பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் தனியொரு அரசியல் கட்சி செய்வது என்பது பாராட்டுதற்குரியது.  













திங்கள், 16 நவம்பர், 2015

இப்படியும் ஒரு முதலமைச்சர்... அப்படியும் ஒரு முதலமைச்சர்...!

              வாராது வந்த மாமழை... எப்போது மழைக்காக ஏங்கி தவிக்கும் தமிழகம், கடந்த ஒரு வாரகாலமாக பொழிந்த மாமழையால் நீர் தேங்கி தவிக்கிறது. இயற்கைக்கு விரோதமாக குளம், குட்டை, ஏரிகளையெல்லாம் அழித்தொழித்து வீடுகளையும், மால்களையும், ரிசார்ட்டுகளையும், பஸ் ஸ்டாண்டுகளையும்  கட்டியதால், மழை நீரெல்லாம் சென்றடைய இடமின்றி, தனக்கு சொந்தமான குளம், குட்டை, ஏரிகள் இருந்த   பழைய   இடத்தை நோக்கிப் பாய்ந்ததினால் இன்று தமிழகத்தின் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் புகுந்துவிட்டது. மக்கள் அல்லல்படுகிறார்கள். 
              இன்னொரு பக்கம் ஆற்றங்கரை, ஏரிக்கரைகளில் எல்லாம் ஆக்கிரமித்து, தண்ணீர் போகும் பாதைகளை அடைத்து வீடுகளை கட்டியதன் விளைவு, மழைநீர் வெள்ளமாக மாறும் போது, தான்  முன்பு ஒரு காலத்தில் சுதந்திரமாய் ஓடிய பாதைகளில் அடைத்து கட்டப்பட்ட வீடுகளில் புகுந்து அடித்து சென்றுவிட்டது. இயற்கைக்கு விரோதமாக செயல்படுபவர்களை ''ஓட்டு அரசியல்'' காரணமாக மாநில  அரசும் தடுத்து நிறுத்தாமல் கண்டுகொள்வதில்லை. 
              எனவே இந்த மாமழையினால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் மரணமடைந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகளும், உடமைகளும்  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்துவிட்டன.   ஏராளமான சாலைகளும், பாலங்களும்,  சேதமடைந்திருக்கின்றன. அரசால் பராமரிப்பு   செய்யப்படாமல் கிடந்த அணைகளும், ஏரிகளும் மழைநீரால் நிரம்பி வழிகின்றன. இவைகளை எல்லாம் நேரிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து தமிழக மக்கள் அச்சத்தில் வெளிவரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவதிப்படும் மக்களை  சந்தித்து ஆறுதல் சொல்லவும், மீட்புப்பணிகளை முடுக்கிவிடவும் நேரில்வந்து களத்தில் இறங்கவேண்டிய ஒரு முதலமைச்சர் கொடநாட்டு உல்லாச பங்களாவில் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து முடங்கிக்கிடக்கிறார். 
           இப்படியும் ஒரு முதலமைச்சர்... ஜனநாயகத்தில் இப்படியும் ஒரு கோளாறு...! மக்கள் தான் இந்த கோளாறுகளை எல்லாம் சரிசெய்யவேண்டும். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
            இந்தியன் வங்கியில் உதவி பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீராம் செல்வராஜ் அவர்கள் தன்னுடைய பதிவில் கல்கத்தா நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை குறிப்பிட்டிருக்கிறார்.
            
          அவர் கல்கத்தாவில் இந்தியன் வங்கி கிளையில் வேலை செய்த போது, சென்னையில் இப்போது பெய்துவரும் பெரும் மழை போல் அங்கும் பெய்திருக்கிறது.  செல்வராஜ் சார் அவர்களும் தன் நண்பருடன் சாலையில் 2 அடி மழைநீரில் நடந்து இந்தியன் வங்கி கிளையை நோக்கி நடந்து சென்றுள்ளனர். அப்போது ஒரு லாரி அவர்கள் அருகில் வந்து நின்றதாம். நீங்கள் எங்கே போகவேண்டும்... சொல்லுங்கள்... அங்கே   இறக்கிவிடுகிறேன்  என்று லாரியில் இருந்தவர் சொல்லியிருக்கிறார். இவர்களோ  ''பரவாயில்லை நாங்கள் போய்விடுகிறோம்'' என்று சொல்லிக்கொண்டே  அழைத்தவர் யார் என்று பார்த்துள்ளார்கள். அவர் வேறு யாருமில்லை. மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு தான். அவரைப்பார்த்ததும் இவர்களால் நம்பவே  முடியாமல் திகைத்து நின்றிருக்கிறார்கள். முதல்வரோ இவர்களைப் பார்த்து, ''நீங்கள் சவுத் இந்தியனா...?'' -  ஆம்...  ''சரி வாருங்கள்'' என்று அழைத்து சென்றிருக்கிறார். 
          அளவுக்கு அதிகமான மழை என்பதால், முதல்வராகிய ஜோதிபாசு அவர்களே போர்க்கால நடவடிக்கை எடுத்து, லாரியில் வந்து சேதப்பகுதிகளில் அல்லல்படும் மக்களை நேரில் சந்தித்து உதவிகளை செய்துள்ளார். 
            இதை படிக்கும்போதே மெய்சிலிர்க்கிறதே... நேரில் பார்த்தவர்களுக்கு   எப்படியிருக்கும் என்று யோசித்துப்பார்க்கிறேன்.
             23 ஆண்டு காலம் தொடர்ந்து முதல்வராக இருந்தவர். 1996 இல் பிரதமர் பதவிக்கு வரவேண்டியவர். 2000ஆம் ஆண்டு தமது உடல்நிலையைக் காரணமாக முதல்வர்  பதவியிலிருந்து தானாக விலகியவர்.  இப்படிப்பட்ட மாமனிதர் அவ்வளவு சாதாரணமாக மக்கள் பணியில் இறங்கியது இந்த காலத்தில் நம்ப முடியாத ஒன்று. 
          அதுமட்டுமில்லாமல் அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மழைநீர் வடிய தொடங்கியதும் மொத்தம்  மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் உருளைக்கிழங்கு, பல்லாரி விலையை  ஏற்றாமல் இருக்க கேட்டுக்கொண்டு  கடைக் கடையாக ஏறி இறங்கினார்களாம். 
             இரயில்வே தொழிலாளர்கள் சங்கத் தலைவராக இருந்து சாமானிய மக்களிடம் பழகிய ஒரு மார்க்சிய போராளியான ஜோதிபாசு தலைமையில் இடதுசாரி  அரசு அத்தனை ஆண்டுகள் நீடிக்க காரணம், மக்கள் மீது அவர் கொண்ட அக்கறை தான் என்று திரு. ஸ்ரீராம் செல்வராஜ் அவர்கள் மெய்சிலிர்க்கக் குறிப்பிட்டுள்ளார்.   

சனி, 14 நவம்பர், 2015

மோடி அவர்களே... நீங்கள் விட்டுக்கொடுத்தால் நாங்கள் விட்டுக்கொடுப்போம்...!


LPG - சமையல் எரிவாயு மான்யம் வேண்டாமென்று              
பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா...?                   

                 கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் எரிவாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் -   “நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்ற  குரல் கேட்கும்  ( இந்தியில் தான்…!)


        ''நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் எரிவாயுக்கான மான்யத்தை விட்டுக்கொடுத்து ஏழைகள் வீட்டில் அடுப்பெரிய உதவுங்கள்'' என்றும்,  ''இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நீங்களும்  உதவலாமே''  என்றும்  நமக்கு அறிவுரை வேறு சொல்லுவார். எரிவாயு சிலிண்டரை பதிவு செய்ய நாம் அழைத்தால், மோடி நாம் அழைக்காமலேயே நமக்கு இந்த போதனைகளை சொல்லுவார். ஆனால் போன் செலவு நம்முடையது.


         சில மாதங்களுக்கு முன்பு  தான் பிரதமர் நரேந்திரமோடி இந்திய பெருமுதலாளிகள்   சம்மேளன கூட்டத்தில் பேசும்போது ''இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகி உள்ளது.  இது இந்த நாட்டின் ஏழைகளுக்கான  வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும். அதேப்போல் இன்னும் அதிகம் பேர் ''மான்யத்தை தியாகம் செய்ய'' முன் வரவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். 


                 இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக விவரித்து நரேந்திரமோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 

          “நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம் அமைந்திருக்கிறது. அந்த கடிதத்தின் தமிழ் வாசகம் கீழே...!

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு, 

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக்கொடுக்க
முன்வர வேண்டுமென்று, வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,என் செலவிலேயே – 
வேண்டி, விரும்பிகேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!


– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்யமுடியுமா…?


– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா…?


– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, பென்ஷன் போன்ற 
சலுகைகளை உயர்த்தி மசோதாக்கள் கொண்டு 
வரும்போது மட்டும் - அதெப்படி ஒருமித்த குரலில் 
ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி 
நிறைவேற்றிக்கொள்கிறீர்கள்…?


– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை -
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் எப்போது காண்பது…?


– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் 
திருமதி.ஏஞ்சலா மெர்கெல் - தன் அலுவலகப்பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –
கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்தியத்திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே 
ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு 
பயணிப்பது எப்படி…?


– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பதை நீங்கள்
நினைத்துப் பார்ப்பதே இல்லையா…?


– நீங்கள் ஒவ்வொருவரும் 
பயன்படுத்தும் தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணிப்பதற்காக – 
உருப்படியான வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர் சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –
எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரிப்பணமாக 
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் 
நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா...?


– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமா என்று குடிமக்களாகிய 
நாங்கள் எதிர்பார்க்கலாமா...?

– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவமனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. 
உங்கள் சகஇந்தியர்கள் எத்தனையோ பேர் சரியான 
மருத்துவ உதவி கிடைக்காமல் தினமும் செத்துக் 
கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா…?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்த செலவில் 
செய்துக்கொள்ளும் நாள் என்றாவது வருமா…?


– அப்படி என்ன உங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு ''Z'' என்றும்,
''Z+'' என்றும் சொல்லிக் கொண்டு நீங்களும், 
உங்கள்  மந்திரிகளும்  திரிகிறீர்கள்...?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரிப் பணத்திலிருந்து வருவது தானே...?
இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்றைக்குத்தான் மாறும்…?


–  ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு 
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –
உங்களுக்கு மட்டும்  ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள்…? 
அது நியாயம் தானா....?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே…!
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லை
என்றா இந்த மலிவு விலை…? இது தகுமா...?


– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் ஏழைக்குடிமகன் 
தான் காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உறுத்தவில்லையா...?


– நாங்கள் செலுத்தும் வரிகள் தான் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
Professional Tax,
Toll Gate, 
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Road Tax, 
Automobile Registration Tax 
and 
Property Tax –

– மக்கள் சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் 
பிடித்துக்கொள்ளும் இந்த அரசு நிர்வாகம் 
உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு 
உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வரி வசூல்
செய்யப்படுகிறது…?


– உங்களுக்காகவே  நீங்களே இயற்றிக்கொண்ட 
சட்டங்கள் மூலம் கிடைத்துள்ள அத்தனை 
சலுகைகளையும் விட்டுக்கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் என்றாவது வருமா…?


– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – 
உங்களுக்கு நீங்களே எடுத்துக்கொண்ட இந்த சலுகைகள் 
அத்தனையையும் என்றைக்கு விட்டுக் கொடுக்கிறீர்களோ –
அன்றைக்கு குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை –
நீங்கள் கோராமலேயே நிச்சயம் நாங்கள் 
அனைவரும் விட்டுக்கொடுப்போம்…!!! 

                                                                         இப்படிக்கு,

                                                                 சாமான்ய இந்தியன் 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது வாட்ஸ் ஆப்பில் தோழர் ஒருவர் அனுப்பிய தகவல் 

இலண்டனில் மோடிக்கு வரலாறு காணாத வரவேற்பு...!

  


 



 


 

   

                     கொடுமை... கொடுமைன்னு கோயிலுக்குப் போனா... அங்க ஒரு கொடுமை தலைவிரிச்சி ஆடுச்சாம்... அதுபோல இங்க தான் தன்னுடைய சொந்த தொகுதியான வாரணாசி நகராட்சித் தேர்தலில் 58 தொகுதியில் 50  தொகுதிகளில் பாரதீய ஜனதாக்கட்சி தோல்வி, கேரள மாநில   உள்ளாட்சித் தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி படுதோல்வி, பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி படுமோசமான தோல்வி... ஒரே தோல்விமயம் தான்.  இந்த தோல்விகளுக்கெல்லாம் பிரதமர் நரேந்திரமோடியும், கட்சியின் தலைவர் அமித்ஷாவும் தான் பொறுப்பேற்க வேண்டுமென்று ஒரு பக்கம் இத்தனை நாட்களாக  வாய் மூடிக்கிடந்த பாரதீய ஜனதாக்கட்சியின் மூத்தத் தலைவர்களெல்லாம் மோடியையும் அமித்ஷாவையும் இடிக்க, இன்னொரு பக்கம் கட்சியின் எம்.பிக்களும் தோல்விக்கு காரணமான இவர்களை இடிக்க, வழக்கம் போல் மவுனம் காத்த மோடி, தன்னுடைய துக்கத்தை போக்க - புண்ணான மனசை இடம் மாறி ஆற்ற திடுதிப்பென்று இங்கிலாந்து தலைநகரம் இலண்டன் நோக்கிப் பறந்தார். தானும் துக்கத்திலிருந்து ஆறுதல் பெறலாம், தன் மீதும் தன் ஆட்சியின் மீதும் அதிருப்தியில் இருக்கும் இந்திய மக்களின் பார்வையில் மாறுதல் தரலாம் என்ற கணக்கோடு இலண்டனுக்கு கிளம்பினார்.
           வழக்கம் போல் மோடிக்கு நெருக்கமான இந்திய முதலாளிகள் தான் இந்த பயணத்திற்கும், இங்கிலாந்து மகாராணி, பிரதமர், முதலாளிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களின் சந்திப்புகளுக்கும் முன்னின்று ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். வழக்கம் போலவே இந்த பயணத்திலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரோ அல்லது துறை அதிகாரிகளோ அல்லது பிரதமர் அலுவலக அதிகாரிகளோ யாருமில்லாமல், இந்திய முதலாளிகள் பரிவாரத்தோடு இலண்டன் சென்றார். வகை வகையான உடையலங்காரம் என்ன... நடையலங்காரம் என்ன...உரையலங்காரம் என்ன... இந்தியாவில் எது நடந்தாலும் வாயை திறக்காத மோடி, இலண்டனில் திறந்த வாயை மூடவே இல்லை. பிஸி  ஷெட்டுயூல்... அன்பே வா - எம்ஜிஆர் மாதிரி ஏகப்பட்ட கூட்டங்கள் தான் போங்க... வாரணாசி, கேரளா, பீகார், தேர்தல், தோல்வி போன்ற  எல்லாவற்றையும் மறந்து இலண்டனில் ஆரவாரத்தில் மூழ்கி கிடக்கையில், இன்னொரு  பக்கம் இவரு  போகிற இடங்களிலெல்லாம் ஏகப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் முழக்கங்களும் வாசகங்களும் இலண்டனையே அதிர வைத்தன.
  மற்றொரு பக்கம், 200க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் ''சகிப்புத்தன்மையற்ற'' மோடிக்கு எதிராக கடிதம் எழுதி இங்கிலாந்து பிரதமருக்கு அனுப்பி வைத்தனர். 
          வேறொரு பக்கம், 50க்கும் மேற்பட்ட இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மோடிக்கு எதிராக தங்கள் பிரதமரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். 
      இவைகள் அத்துனையையும் வழக்கம்போல் ஊடகங்கள் திட்டமிட்டு  மறைத்துவிட்டன. 

ஞாயிறு, 8 நவம்பர், 2015

இடதுசாரிக்கட்சிகளுக்கு கேரள மக்கள் கொடுத்த வெற்றிப்பரிசு...!



                நேற்று உலகம் முழுதும் நவம்பர் 7 - புரட்சி தினம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனால் கேரள மக்களோ நேற்றைய இந்த தினத்தை மேலும் சிறப்புடையதாக மாற்றிவிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு  உள்ளாட்சித்தேர்தல் வெற்றியை புரட்சிதினப்பரிசாக அளித்து சிறப்பு சேர்த்தனர். அதற்காக கேரள மக்களை நெஞ்சார பாராட்டவேண்டும். 
             இடது ஜனநாயக முன்னணியிலுள்ள இடதுசாரிக்கட்சிகளை இந்த தேர்தலோடு ஒழித்துக்கட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக்கட்சியும் ஒருபுறம் மதவாத அமைப்புகளோடும், சாதிய அமைப்புகளோடும், மறுபுறம்  தங்களுக்கு ஒத்து ஊதும் ஊடகங்களோடும் வெட்கமில்லாமல் ஒன்றாக கைகோர்த்து தேர்தல் களத்தில் இறங்கின.
            அதுமட்டுமில்லாமல்    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கதையும், இடது ஜனநாயக முன்னணியின்  கதையும் இந்த தேர்தலோடு முடிவுக்கு வந்துவிடுமென்று ஊடகங்கள் ''கிளி ஜோசியக் கணிப்புகளை'' கொஞ்சம் கூட  தயக்கமில்லாமல்  அள்ளி வீசின.
             ஆனால் இடது ஜனநாயக முன்னணி கட்சிகளோ  ''மக்களாகிய நாம் தோற்காமலிருக்க... இடது ஜனநாயக முன்னணிக்கு வாக்களியுங்கள்'' என்று கேரள மக்களிடம் விடுத்த வேண்டுகோளை தலைமேல் ஏற்று, ஊழல்வாத காங்கிரஸ் கட்சியையும், மதவாத பாரதீய ஜனதாக்கட்சியையும், சாதிய - மதவாத அமைப்புகளையும், உண்மையை உரைக்காத ஊடகங்களையும் தூக்கியெறிந்து கேரள  மக்கள் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். 
           ஆயிரக்கணக்கான தியாகிகளின் செங்குருதியில் சிவந்த கேரள மண்ணிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளை  துடைத்தெறிவது என்பதும், எங்கள் மனதிலிருந்து தூக்கி எறிவது என்பதும் அவ்வளவு எளிதானகாரியமல்ல என்பதை கேரள மக்கள் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் தெளிவாக பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை நெஞ்சார  பாராட்டவேண்டும். வாழ்த்தவேண்டும்.   
     இந்த வெற்றி என்பது நேரம் அறிந்து இடதுசாரிக்கட்சிகளுக்கு கொடுத்தப்பரிசு.                               

சமையல் எரிவாயு மானியத்திற்கும் வைக்கப்போறான் ஆப்பு...!


               ''உங்களுக்கு சொந்தவீடு இருக்கா...? சொந்தமா கார் வெச்சிருக்கீங்களா...? இருசக்கர வாகனம் வேற இருக்கா...? அப்ப எதுக்குங்க  கேசுக்கான மானியம் உங்களுக்கு...? சமையல் எரிவாயுக்கான முழுத்தொகையையும் கொடுத்து வாங்கிக்கவேண்டியது தானே...? ஏழைங்க வீட்டில அடுப்பெரிய வசதிப்படைச்சவங்க கேசுக்கான மானியத்தை விட்டுக்கொடுக்கக்கூடாதா...?'' 
           இதை நான் சொல்லலீங்க...! ஓட்டுப்போட்டுப் பாத்தீங்களே... உட்காரவெச்சி பாத்தீங்களே... நம்ம பிரதமரு மோடி தாங்க இப்படி சொல்றாரு...! அவரு என்னா பண்ணுவாரு பாவம்... ரேடியோவில சொன்னாரு... தொலைக்காட்சியில சொன்னாரு... மொபைல் போன்ல சொன்னாரு... ஜீரோவ அமுக்க சொன்னாரு... நீங்க எதையாவது கேட்டீங்களா...? அவரு சொன்னப் பேச்சை கேட்டீங்களா...? இல்லையே...! 
              பாத்தாரு... இவிங்கெல்லாம் இப்படி சொன்னா கேட்கமாட்டாங்க... மயிலே... மயிலேன்னா... இறகு போடாது... வெச்சாரு ஒரு ஆப்பு...! ஓட்டு போட்டவங்க... பாடதவங்க... சாமி கும்புடுறவங்க... கும்புடாதவ்ங்க... மாட்டு மூத்திரத்தை குடிக்கிறவங்க... மாட்டிறைச்சி சாப்புடுறவங்க... யாரையும் விட்டுவைக்கல... பாரபட்சம் இல்லாம மோடி இந்திய மக்கள் எல்லாருக்கும் வெச்சாரு ஆப்பு...! இவரு சொன்ன பேச்சை  கேட்டு 42 இலட்சம் வசதிபடைச்சவங்க   எங்களுக்கு மானியம் வேணாமுன்னு சொல்லிப்பூட்டாங்களாம். எவ்வளவு சொல்லியும்  இவரு பேச்சைக்கேட்காத மிச்சமிருக்கிற வசதி படைச்சவங்களுக்கெல்லாம் அவராவே மானியத்தை புடுங்கிவிட்டுடுவாராம். 
            யாரு அந்த வசதி படைச்சவங்கன்னா...? கடனை வாங்கி வீட்டைக்கட்டி... கடனுல  வாங்கின காரை பெட்ரோல் போடமுடியாம வீட்டு வாசலில நிறுத்திவெச்சிபுட்டு... இருசக்கர வாகனத்தை ஓட்டிகிட்டு, கடனுக்கும்  சாப்பாட்டுக்கும்  அல்லாடிகிட்டு இருக்கிற அந்த வசதி படைச்சவங்ககிட்ட இருந்து தான் மோடி மானியத்தை ஒரேயடியா புடுங்கப்போறாரு.  
           குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சமையல் சிலிண்டர் வழங்கத் தேவையில்லையாம்.
                     அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மானியம் ரத்தாகுமாம். 
          அப்போது தான் அம்பானி, அதானி, டாடா, பிர்லா போன்ற நலிவடைந்தவர்களுக்கு மேலும்  உதவ முடியுமாம்.
             இப்படியெல்லாம் ஆப்பு வைக்க மோடி தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறாராம்.
            ஒரு விஷயத்தை நீங்க மறந்திருப்பீங்க...!
             இதே மாதிரியான ஒரு திட்டத்தை முந்திய காங்கிரஸ் கட்சி தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும்   முன்வைத்தது. ஆனால் அன்று இடதுசாரிக்கட்சிகள் பலத்த  எதிர்ப்பை காட்டியதால்  அந்த திட்டம் அப்போதே  கைவிடப்பட்டது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
            ஆனால் இன்றைக்கு நிலைமை வேறுமாதிரியாக இருக்கிறது. பாராளுமன்றத்தில் இடதுசாரிக்கட்சிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள சூழ்நிலையில், தனி பெரும்பான்மையுடன் ராட்சச பலத்துடன் உள்ள மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக்கட்சி  அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று  குறியாக உள்ளது.
            அதன் பிறகு மக்கள் கேஸ் சிலிண்டர் போல் வெடிப்பார்களா...? அல்லது புஸ்வானம் போல் புஸ்ஸ்ஸ்னு போயிடுவாங்களான்னு பார்ப்போம்.

திங்கள், 2 நவம்பர், 2015

ஜெயலலிதா பிரபலப்படுத்திய சூப்பர் ஹிட் பாடல்....!


            இன்றைக்கு தமிழகத்தில் முகநூலிலும், வாட்ஸ்ஆப்பிலும், மொபைல் ரிங்டோனிலும்  ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல், நம்ப தோழர்.கோவன் பாடிய ''ஊருக்கு ஊரு சாராயம்...'' என்ற மதுவிலக்கு பாடல் தான். இந்த பாட்டை பாடியதற்கு தான் ஜெயலலிதாவிற்கு கோபம் வந்து, கோவனை பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார். 
       இதற்கு முன்பு இந்த பாட்டை யாரும் விரும்பிக்கேட்டதாக தெரியவில்லை. தோழர்.கோவன் சார்ந்த கலைக்குழுவில் மட்டும் தமிழகத்தில் ஆங்காங்கே பாடப்பட்டு வந்தது. சினிமா மாதிரி அப்படி ஒன்றும் ''ஹிட் சாங்கும்'' கிடையாது. முக்கல் முனகல் இருக்காது. சிந்திக்கத் தூண்டும் கருத்து இருக்கும். அது யாருக்கு வேண்டும். அதனால இந்த பாடலை கோவன் கைது செய்யப்படும் வரையில் யாரும் கண்டுகொள்ளவே இல்லை என்றே சொல்லலாம். 
          ஆனால் அந்த பாட்டை எப்படியோ  அம்மையார் கேட்டுவிட, அம்மையாருக்கு கடும்கோபம் வந்துவிட்டது. விளைவு - கோவன் கைது செய்யப்பட்டார். கோவனின் கைது செய்தி காட்டுத்தீயாய் தமிழகம் முழுதும் பரவ,  கூடவே அம்மையாருக்கு கோபத்தைத் தூண்டிய அந்தப் பாடலும் காட்டுத்தீயாய் ஒளி - ஒலி வடிவங்களில் பரவி மக்களின் கவனத்தை ஈர்த்து, கருத்தை ஈர்த்து சூப்பர் ஹிட் பாடலாக ''டாப் 10'' இல் பிடித்த பாடலாக மாறியிருக்கிறது. விளம்பரச்செலவே கொஞ்சம் கூட இல்லாமல் இந்தப் பாடலை மக்களிடம் பிரபலப்படுத்திய   பெருமை ஜெயலலிதாவையே சாரும். அதற்காக தற்போது கொடநாட்டில் வசிக்கும் போயஸ்கார்டன் அம்மையாரை  கோவனின் அந்தப்பாடலைப் பாடியே ''அர்ச்சனை'' செய்யலாம்.

தமிழகத்தின் எதிர்காலம் மக்கள் நலக்கூட்டணியே....!


             தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கம் என்ற பேரில் அரசைத் தட்டிக் கேட்கும் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து போராடிவருகிறது. 
           இன்று இந்த நான்கு அரசியல் கட்சிகளும் சேர்ந்து இன்று ''மக்கள் நலக்கூட்டணி'' என்ற தேர்தல் கூட்டணியை துவக்கி, அக்கூட்டணிக்கான ''குறைந்த பட்ச செயல்திட்டத்தையும்'' வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டு கால திராவிடக்கட்சிகளின் பிடியில் சிக்கி மூச்சித்திணறி செத்துக்கொண்டிருக்கும் தமிழகத்தை காப்பாற்றும் அருமருந்தாய் அந்த செயல் திட்டம் தெரிகிறது. 
மக்கள் நலக்கூட்டணியின்
குறைந்தபட்ச செயல்திட்டம் வரைவு அறிக்கை
1.  மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளை எதிர்ப்போம்
இந்திய நாட்டில் கால்நூற்றாண்டுக்கு மேலாக மத்திய அரசு கடைபிடித்து வரும் உலகமய, தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்கைகள் தமிழ்நாட்டிலும் மக்கள் வாழ்விலும், மாநில நலனிலும் நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்பட்ட இக்கொள்கைகளை நரேந்திர மோடி அரசும் தீவிரமாக அமலாக்கி வருகிறது.
இந்திய இறையாண்மைக்கும், மக்கள் நலனுக்கும் விரோதமாக பாஜக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இக் கொள்கைகளை எதிர்த்து வலுமிக்க போராட்டங்களை மக்கள் நலக் கூட்டியக்கம் முன்னெடுத்துச் செல்லும்.
• பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்தவும்,
• நாட்டின் உற்பத்தித் தொழில்துறை வளர்ச்சிக்கு வழிகாணாமல், பங்குச்சந்தை சார்ந்த பொருளாதாரமாக மாற்றப்பட்டு வருவதை எதிர்த்தும்.
• வரைமுறையற்ற அந்நிய நிதி மூலதனம் குவிந்து வருவதை தடுக்கவும், கட்டமைப்புத் துறைகளில் அரசின் முதலீடுகளைப் பெருக்கவும், உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவிக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலையேற்றத்தைத் தடுக்கவும் உரிய பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள போராடுவோம். தொழில்துறையிலும், நிதித்துறையிலும், பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தவும், கருப்பு பணத்தை முற்றாக பறிமுதல் செய்திட வலியுறுத்துவோம்,
• வேளாண்மை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளுக்கு மானியங்களை வெட்டிக் குறைப்பதையும், மக்கள் நலத்திட்டங்களை சுருக்குவதையும் எதிர்த்துப் போராடுவோம்.
• மக்கள் நலன் காக்கும் மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்துவோம்.
2.  இந்துத்துவ மதவெறி சக்திகளை முறியடித்தல்
மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக, அரசு நிர்வாகத்தை பயன்படுத்தி மதவெறி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா அமைப்புகள் இந்திய நாட்டின் பாரம்பரிய பன்முகத் தன்மைக்கு விரோதமாக மதவெறி கருத்துக்களை பரப்பி மதக் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றன. பசுவதைத் தடை என்ற பெயரில் மாட்டிறைச்சியை மையப்படுத்தி படுகொலைகளும், பதற்றமும் உருவாக்கப்படுகிறது. சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உருவாகியுள்ளது.
சமூகத்தில் பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி படுகொலைகள் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதிர்ச்சிகரமான தாக்குதல்களாக அமைந்துள்ளன. மதவெறி இந்துத்துவ சக்திகளை எதிர்த்து வலுவான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். மக்கள் ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்வது, அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் சகோதரத்துவத்துடன் இணைந்து வாழும் மாநிலமாக தமிழகத்தை திகழச் செய்து மதச்சார்பின்மையினை நிலைநாட்டுவோம். மேலும் அறிவியல் பூர்வமான, முற்போக்கு பகுத்தறிவு கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதுடன் கருத்துச் சுதந்திரத்தையும், படைப்பாளிகளையும் பாதுகாப்போம். சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்துவோம்.
மதத்தின் பெயரால் உருவாக்கப்படும் எவ்வித மதத்தீவிரவாதமும் நாட்டை சீரழித்து விடும் என்பதால் அவற்றை முளையிலேயே கிள்ளி எறிவோம்.
3.  சாதி வெறி சக்திகளை எதிர்த்தல்
தமிழகத்தில் அரசியல் ஆதாயத்திற்காக சாதி வெறி சக்திகள் சாதிய மோதல்களை திட்டமிட்டு நடத்தி வருகின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்கின்றன. சாதி மறுப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பகிரங்கமாக அச்சுறுத்தப்படுகின்றன.
இத்தகைய சாதிவெறி சக்திகளை எதிர்த்தும் சகோதர உணர்வை வலுப்படுத்திடவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். மேலும் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை தடுத்திட தனிச் சட்டம் நிறைவேற்றவும், சாதி மறுப்புத் திருமணங்கள் புரிந்தோர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திடவும் மத்திய அரசை வற்புறுத்துவோம். மக்களவையில் நிறைவேற்றப்பட்டு தற்போது மாநிலங்களவையில் கிடப்பில் போடப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்க வலியுறுத்துவோம்.
4.  ஊழல் ஒழிப்பு
• உயர்மட்ட ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் இயற்றுவோம்.
• கிராம ஊராட்சி முதல் தலைமைச் செயலகம் வரை ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை உத்தரவாதம் செய்வோம்.
• அதிகாரத்தைப் பயன்படுத்தி சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதோடு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் தங்களது சொத்து விபரத்தை ஒவ்வொரு ஆண்டும் பகிரங்கமாக வெளியிடுவது,
• ஊழல் வழக்குகளுக்கு உள்ளானவர்கள் அதிகாரத்திலிருந்து வெளியேறி விசாரணையை சந்திப்பது ஆகிய நடவடிக்கைகளை உறுதி செய்வோம்.
வெளிப்படையான அரசு நிர்வாகம்
• நேர்மையான நிர்வாகம், விரைவான, நிறைவான மக்கள் சேவையை உறுதிப்படுத்த சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவோம்.
• அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையும், அரசியல் தலையீட்டை அறவே தடுப்பதும் உறுதி செய்யப்படும். அரசை தேடி மக்கள் என்பதற்கு மாறாக, மக்களை நாடி அரசு என்ற வகையில் நிர்வாக அமைப்பில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்,
• சட்டமன்ற ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவோம். சட்டமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுவதோடு சட்டமன்ற விவாதக் குறிப்புகள் அனைத்தும் வலைதளத்தில் வெளியிடப்படும்.
• ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
• சமூக விரோத கும்பல் போலி ஆவணங்கள் மூலம் வீடு, மனை, நிலங்களை கைப்பற்றுவதை தடுக்க பத்திரப் பதிவுத் துறையில் நவீன மின்னணு தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படும்.
உள்ளாட்சி நிர்வாகம்
• உள்ளாட்சி அமைப்புகள் சுயமாக செயல்படும் வகையில் கூடுதல் நிதி மற்றும் அதிகாரம் வழங்கப்படும்.
• உள்ளாட்சி நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தப்பட்டு திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து மக்களின் ஒப்புதல் பெறப்படும். நகர்ப்புறங்களில் வார்டு அடிப்படையான மக்கள் கூட்டங்கள் நடத்துவது கட்டாயமாக்கப்படும்.
• உள்ளாட்சி நிர்வாகங்களில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தனியான ஆணையம் அமைக்கப்படும்.
• கிராமப்புற - நகர்ப்புற சிறிய நடுத்தர கட்டுமான பணிகள் காண்டிராக்ட் மூலம் நிறைவேற்றுவது மட்டுமின்றி மக்கள் பங்களிப்போடும் வாய்ப்புள்ள இடங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கிட உள்ளாட்சி அமைப்புகள் மூலமே நிறைவேற்றப்படும்.
கனிம வளக் கொள்ளைகள்
• ஆற்று மணல், தாது மணல், கிரானைட் முதலான கனிமவள கொள்ளைகளை தடுத்து நிறுத்திடுவோம். இதுகாறும் நடந்துள்ள கனிம கொள்ளையில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு துணைபோன அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• இதன் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து கனிம வள வியாபாரமும் அரசு நிர்வாகத்தின் மூலம் மக்களின் மேற்பார்வையோடு நேர்மையான முறையில் செயல்படுத்தப்படும்.
• விவசாயிகள் சொந்த உபயோகத்திற்கு ஏரி,குளங்களில் மண் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
5.  சமூக நீதி
• தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறை பாதுகாக்கப்படும். மேலும் தனியார் துறையில் இடஒதுக்கீட்டினை விரிவுபடுத்துவதற்கான சட்டத் திருத்தம் வலியுறுத்தப்படும். மேலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு வழங்க ஆவண செய்யப்படும்.
• சமூக நீதிக்கு எதிராக அண்மைக் காலத்தில் இந்துத்துவா சக்திகள் ஒன்று சேர்ந்து வருகின்றன. இதனைத் தடுக்க முற்போக்கு ஜனநாயக சக்திகளும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களும் சிறுபான்மை மக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
• அரசுத்துறைகளில் மாநில அரசு கடைபிடிக்கும் இடஒதுக்கீடு முறை பற்றிய வெள்ளையறிக்கை அவ்வப்போது வெளியிடப்படும்.
• நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.
6.  தமிழ்மொழி வளர்ச்சி
• தாய்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும்.
• தாய் மொழி தமிழ் பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண் 266 திருத்தம் செய்து தமிழ் பாடத்தை முதல் பாடமாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் கணிணி உள்ளிட்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் தாய்மொழி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளும் தாய் மொழிக் கல்வியில் ஏற்படுத்தப்படும்.
• தமிழை பயிற்று மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
• உயர்நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழி வழக்காடு மொழியாக பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• தமிழகத்தில் தற்போது உள்ள அரசு நூலகங்கள் மேம்படுத்தப்படுவதுடன் புதிய நூலகங்கள் உருவாக்கப்படும். நூலகங்களுக்கு தேவையான பல்துறை நூல்கள் அவ்வப்போது முறையாக வாங்கப்படும்.
நாட்டுப்புற கலைகள்
•• நாட்டுப்புற கலைகளை பாதுகாத்திட, வளர்த்திட நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
•• நாட்டுப்புற கலை பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு கல்லூரிகளில் நாட்டுப்புற கலை பட்டப்படிப்பும் உருவாக்கப்படும்.
7.  மாநில உரிமைகள்
• மத்திய- மாநில உறவுகள் சீரமைப்புக்கும், வலிமையான கூட்டாட்சி முறைக்கும், மாநில சுயாட்சி நிலை பெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• மாநிலங்களிலிருந்து மத்திய அரசு பெறுகின்ற வரி வருவாயில் 50 விழுக்காடு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்திட குரல் கொடுப்போம்.
• தமிழ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் நிர்வாக மொழியாக தீர்மானிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
• பொதுப்பட்டியல், மாநிலப் பட்டியல் இரண்டிலும் இல்லாத எஞ்சிய அதிகாரங்கள் (Residuary Power) அனைத்தையும் மாநிலங்களுக்கு வழங்கிட போராடுவோம்.
8.  நதிநீர் பிரச்சனைகள்
• தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைத்திட வலியுறுத்தவும், காவிரியின் குறுக்கே மேகதாது, இராசி மணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
• பவானி நதி மற்றும் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவும், பாலாற்றின் குறுக்கே குப்பம் பகுதியில் ஆந்திர அரசு தடுப்பு அணை கட்ட முயற்சிப்பதைத் தடுத்து நிறுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
• தென்னக நதிகளையும், மாநில ஆறுகளையும் இணைக்க உரிய முயற்சிகளை மேற்கொள்வோம்.
• நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீரை திறந்து விடுவது மற்றும் திருநெல்வேலி மாவட்டம், செண்பகவல்லி அணையை சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
• நதிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் நமது உரிமைகளை அனைத்துக் கட்சியினர் ஒருங்கிணைப்போடு போராடி பெற்றிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில், அண்டை மாநிலங்களோடு பரஸ்பர நல்லுறவு கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்டை மாநிலங்களில் கடலில் வீணாக கலக்கும் நீரை தமிழகத்திற்கு பெறுவதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
9.  இலங்கை தமிழர்கள் பிரச்சனை
• இலங்கையில் வடக்கு - கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அந்த மண்ணில் பூர்வ குடி மக்களாவர். கடந்த 60 ஆண்டு காலமாக கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழர்களுக்கு இலங்கை அரசால் சம உரிமை மறுக்கப்பட்டு இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்ட நிலையில் தங்கள் உரிமைகளுக்காக அங்கு தமிழ் மக்கள் போராடி வந்தனர். இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஐ.நா. மன்றம் வகுத்துள்ள மனித உரிமை பிரகடனத்தை துச்சமாக மதித்து அப்பாவி தமிழர்களை இலங்கை அரசின் ராணுவப் படைகள் படுகொலை செய்தன.
• தமிழ் மக்களின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தவும், நீதியை நிலைநாட்டவும், குற்றவாளிகள் தப்பி விடாமல் உரிய தண்டனை பெறவும் பன்னாட்டு நீதிபதிகளையும் கொண்ட நம்பகத் தன்மை வாய்ந்த நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான வடக்கு - கிழக்கு மாநிலங்களில் உள்ள கட்டாய சிங்கள குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
• தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களுக்கு நிகரான சம உரிமைகள் வழங்க வேண்டும். தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து, இலங்கை தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிலம் மீள் ஒப்படைப்பு செய்திட வேண்டும்.
• அகதி முகாம்களில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தப்படும்.
10.  சட்டம் - ஒழுங்கு
• தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், சிறுமிகள் மீது பாலியல் கொடுமைகள், வழிப்பறி, செயின் பறிப்பு போன்றவைகள் நடைபெறாமல் தடுத்திடவும், சீரான சட்டம் - ஒழுங்கை பேணி பாதுகாத்திடவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சமூக விரோத சக்திகளை முறியடிப்பது, கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கடத்தல் போன்ற குற்ற நடவடிக்கைகளை முற்றாக ஒழித்து பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வது உறுதி செய்யப்படும்.
• காவல்துறை மக்களுக்கு சேவைத்துறை என்ற நிலை உருவாக்கப்படும்.
• காவல்நிலையங்களில் அத்துமீறல்கள், சித்திரவதைகள், லாக்கப் மரணங்கள், அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. காவல்துறை அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தால் விஷ்ணுப் பிரியா என்ற டி.எஸ்.பி. தற்கொலை செய்யும் மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகைய அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படும். தவறிழைக்கும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களது ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதோடு அமைதியான போராட்டங்கள் நடத்துவோர் மீது கொடூரமான தாக்குதல் அரசின் தூண்டுதலால் நடத்தப்படுகிறது. பல நகரங்களில் போஸ்டர், தட்டிகள் வைப்பதற்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய செயல்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகள் பேணிப்பாதுகாத்திடவும், ஜனநாயக ரீதியான மக்கள் இயக்கங்கள், வெகுமக்கள் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கிடவும் ஆவண செய்யப்படும்.
• பெண்கள் மீதான பாலியல் புகார்கள் மீது நடவடிக்ககை எடுக்க தவறும்பட்சத்தில் அத்தகைய காவலர்கள் மீது ஐ.பி.சி. 166 ஏ-வது பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• காவலர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை மற்றும் 8 மணி நேர வேலை உறுதி செய்யப்படும்.
ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு
• முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை பாதுகாக்கப்படும்.
• ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதையும் பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரம் உத்தரவாதம் செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
• அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு மக்கள் உரிமை போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளும் திரும்ப பெறப்படும்.
11.  மதுவிலக்கு
• தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை செயல்படுத்த தேவையான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• “சசிபெருமாள் மது ஒழிப்பு இயக்கம்” உருவாக்கப்பட்டு மது ஒழிப்பிற்கு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். போதை ஒழிப்பிற்கான சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்படும்.
• டாஸ்மாக் பணியாளர்களுக்கு தகுதிக்கேற்ற முறையில் அரசுத் துறையில் மாற்று பணி வழங்கப்படும்.
• தமிழ்நாட்டில் மது உற்பத்தி ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு மது ஆலைகளை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
12.  வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாடு
• வேளாண் நெருக்கடி தீவிரமடைந்து மாநிலத்தில் பெரும்பகுதி மக்களான கிராமப்புற மக்கள் வேலை, வருமானத்தை தேடி நகர்ப்புறங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. கடன் வலையில் சிக்கி இருக்கிற விவசாயிகள் நிலம் உட்பட தங்கள் உடமைகளை அடிமாட்டு விலைக்கு விற்பதால், நிலமற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விவசாயத்தை மேம்படுத்தவும், அதை லாபகரமான தொழிலாக மாற்றவும், கிராமப்புறங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
• நெல், கரும்பு, மணிலா, பருத்தி, மரவள்ளி, ராகி, கம்பு, சோளம், மக்காச்சோளம், மஞ்சள், கொப்பரைத் தேங்காய், இரப்பர் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களுக்கும் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் அடக்க விலையோடு 50 விழுக்காடு சேர்த்து விலை தீர்மானிக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மற்றும் தானியங்கள் அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் முழு அளவு கொள்முதல் செய்யப்படும்.
• கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ. 1000 கோடி வட்டியுடன் வழங்கிட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• இயற்கை முறை விவசாயத்திற்கு முழு மானியம் வழங்கப்படும். மரபணு மாற்று பயிர்களுக்கும், அதன் சோதனைக்கும் தடை விதிக்கப்படும்.
• விவசாயிகளுக்கு 20 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்குவதுடன், மின்னிணைப்பு கோரியுள்ள அனைவருக்கும் மின்னிணைப்பு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• பயிர்க்கடன் கோருகின்ற அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும். ஏழை, எளிய, நடுத்தர விவசாயிகளின் பயிர்க் கடன் பாக்கிகள் ரத்து செய்யப்படும்.
• விவசாயிகள் பெற்றுள்ள நகைக் கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு அசலை செலுத்துபவர்களுக்கு நகைகள் திருப்பி அளிக்கப்படும்.
• ஏழை, நடுத்தர விவசாயிகளுக்கு உரம், பூச்சிமருந்து, விதை உள்ளிட்ட இடுபொருட்கள் 50 விழுக்காடு மானிய விலையில் வழங்கப்படும்.
• பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் மாட்டுத் தீவணம் வழங்குவதோடு பாலுக்கு கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். ஆவின் நிறுவனம் தரம் உயர்த்தப்பட்டு உற்பத்தி செய்யப்படும் முழு அளவு பாலும் கொள்முதல் செய்யப்படும்.
• பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு ரூ. 25/- என்று நிர்ணயிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• பழங்கள் - காய்கறிகள் அழுகாமல் பாதுகாத்திட குளிர்பதன நிலையங்கள் அந்தந்த பகுதியில் அமைக்கப்படும்.
• விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும், அனைத்து சாகுபடிக்கும் இதனை விரிவுபடுத்தப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நிலம்
• சாகுபடி பரப்பளவு குறையாமல் பாதுகாத்திட விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும், விவசாயம் அல்லாத பணிகளுக்கு மாற்றப்படுவதையும் தடுத்திட தேவையான சட்டம் இயற்றப்படும்.
• 1894 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை விட கொடுமையான பிரிவுகளைக் கொண்டு விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து அபகரிக்க வழிவகை செய்யும் தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள “தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம் - 1997” ரத்து செய்யப்படும்.
• நிலம் கையகப்படுத்துதலில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் குறையாத வகையில் புதிய அணுகுமுறை மேற்கொள்ளப்படும்.
• தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை அமலாக்கி உபரி நிலத்தையும், அரசு தரிசு நிலத்தையும் நிலமற்ற ஏழை, எளிய விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் வீதம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
• கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும். இந்நிலங்களில் நீண்ட காலமாக குத்தகை செய்து வரும் நிலமற்ற ஏழை குத்தகை சாகுபடியாளர்களுக்கும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் அந்நிலங்களை சொந்தமாக்குவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும். இதனால் கோவில் சம்பந்தப்பட்ட பூஜை மற்றும் பராமரிப்பு பணிகள் பாதிக்காத வண்ணம் உறுதி செய்யப்படும். குத்தகை சாகுபடியாளர்களின் பழைய பாக்கிகள் ரத்து செய்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• இதுவரை அமலாக்கப்படாத மத்திய வன உரிமைச் சட்டம் 2006 தமிழ்நாட்டில் அமலாக்கப்பட்டு ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிலம் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
• தமிழகத்தில் எஸ்டேட்ட நிலங்களில் நீண்ட காலமாக குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
• குமரி, நீலகிரி மாவட்டங்களில் அமலாக்கப்பட்டு வரும் “தனியார் வனப்பாதுகாப்புச் சட்டம்” திருத்தப்பட்டு விவசாயிகளுக்கு நில உரிமை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பாசனம்
• மேட்டூர் நீர்த்தேக்கம் உட்பட, நீர்ப்பாசன ஆதாரங்கள், ஏரிகள், குளங்கள், பாசன வடிகால் வாய்க்கால்கள் மக்கள் ஒத்துழைப்போடு தூர்வாரி பராமரிக்கப்படும். அனைத்து பாசனக் கால்வாய்களும் நவீனப்படுத்தப்படும். இதற்கென தனிவாரியம் உருவாக்கி உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் அரசு துறை அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம் பெற ஆவன செய்யப்படும்.
• காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன், ஷேல் எரிவாயு, பெட்ரோலியம் உள்ளிட்ட திட்டங்களுக்கு இடமளிக்காமல் இப்பகுதி விவசாயத்திற்கு மட்டுமேயான பகுதியாக இருக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். காவிரி பாசனத்தை நவீனமயப்படுத்திட சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
• நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
              தமிழகம் இதுவரை காணாத ''உண்மையான மக்கள் திட்டம்''