ஞாயிறு, 25 டிசம்பர், 2011

முதல்வர் அவர்களே... அரசு ஊழியர்களுக்கு விருதுகள் வேண்டாம் - தேவைக்கேற்ற சம்பளம் கொடுங்கள்...!




                                                                     
அரசு ஊழியர்கள் மீது                                      
முதல்வருக்கு                    
ஏனிந்த கரிசனம்...?
                                                                     


          நடந்து முடிந்த  உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ''தினம் ஒரு அறிவிப்பு'' என்பது முதலமைச்சர் எப்போதும் தமிழக மக்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்பது போன்ற ஒரு பிரமிப்பை உண்டாக்கியிருக்கிறது. 
                  அப்படி வந்த அறிவிப்பு வரிசையில் நேற்று வந்த அறிவிப்பு என்பது சற்று வித்தியாசமாக இருந்தது. அரசு ஊழியர் பக்கம் முதலமைச்சரின் கனிவான பார்வை பட்டிருப்பது போல் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.
                    அந்த அறிவிப்பு என்னவென்றால், சிறப்பாகப் பணியாற்றும் மூன்று 
அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் சுதந்திரதினத்தன்று பதக்கமும், ரூ. 2 லட்சம் பரிசுத்தொகையும் கொண்ட ''நல் ஆளுமை விருது''   வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதலமைச்சர் இந்த விருது கொடுப்பதன் மூலம் அரசு ஊழியர்களின் உழைப்பை அங்கீகாரம் செய்யவேண்டும் என்று நினைத்தாரா...? அல்லது இப்படிப்பட்ட விருதுகள் கொடுப்பதன் மூலம் அரசு ஊழியர்கள் உள்ளிருக்கும் திறமையை வெளியே கொண்டுவரவேண்டும் என்று நினைத்தாரா...? அல்லது அரசு ஊழியர்கள் மத்தியில்   இப்படி ஒரு போட்டியை உருவாக்கி அவர்களை இப்போதை விட சிறப்பாக வேலை செய்ய வைக்கவேண்டும் என்று நினைத்தாரா...? என்பது தெரியவில்லை. இது அரசு ஊழியர்கள் மீது முதலமைச்சரின் ''கருணையான பார்வையா'' அல்லது ''கடுமையான பார்வையா'' என்பது  தெரியவில்லை.  எது எப்படியோ அரசு ஊழியர்கள் உஷாராக இருக்கவேண்டும். அடுத்து என்ன அறிவிப்பு வருமோ.....? 
  அரசு அலுவலகங்களில் 
  பணிக்கலாச்சார சீர்கேடுகள்...!
                       
             முதல்வர் அவர்களே... அரசு ஊழியர்களுக்கு விருது கொடுப்பது இருக்கட்டும். அரசு அலுவலகம் என்றால் வெறும் ஊழியர்கள் மட்டுமல்ல. அவர்கள் அதில் ஒரு அங்கம் தான். அரசு அலுவலகம் என்றால் முதலமைச்சர், அமைச்சர்கள், ஆட்சியர்கள், மாநில - மாவட்ட உயர் அதிகாரிகள், காவல் மற்றும் நீதித்துறைகளின்   அதிகாரிகள் இப்படியாக ''உயர்மட்ட அதிகாரம் படைத்தவர்களில்'' தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை அரசு அலுவலகம் என்பது நீண்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா...?      
               அப்படியென்றால், இன்றைக்கு தமிழகத்தைப் பொருத்தமட்டில் - இந்த இரண்டு திராவிடக்கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து அரசு அலுவலகம் என்றால் ஒரு ''முதலையை''  போல் ஆக்கிவிட்டார்கள். கண்ணை மூடி நன்றாக யோசித்துப்பாருங்கள். தமிழகத்தின் ''அரசு  எந்திரம்'' என்பது ஒரு ''முதலை'' வடிவத்தில் தெரியும்.    உயர்மட்ட அதிகாரம் படைத்தவர்கள் எல்லாம் முதலையின் ''தலைப்பக்கத்தைச்'' சேர்ந்தவர்கள். பிறகு முதலையின் பின் பக்கம் மெல்ல குறுகலாகச் செல்லும் ''வால்''  பக்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஊழியர்கள். தலை எவ்வழியோ அப்படித்தான் வாலும் போகும்.  
                      அப்படித்தான் இன்றைக்கு அரசு அலுவலகத்தில் பணிக்கலாச்சாரம் என்பதே சீர்கெட்டுப் போயிருக்கிறது என்றால் அதற்கு இந்த இரண்டு திராவிடக்கட்சிகளின் ஆட்சி முறை தான் காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. எந்த தேவைகள் என்றாலும் அரசு அலுவலகம் செல்லவேண்டும் என்றால் வெறும் கையோடு செல்லமுடியாது. அதாவது காசு இல்லாமல் அரசு அலுவலகங்களில் வேலை நடக்காது என்பது இன்றைய தமிழக மக்களின் கசப்பான அனுபவமாகும்.
                 வேலைக்கேற்ப - அந்த வேலையின் தன்மைக்கேற்ப நூறிலிருந்து பல லட்சங்கள் வரை கொட்டி அழுதால் தான் அங்கே நம் வேலை நடக்கும். இறப்பு சான்றிதழ் வாங்குவதாக இருந்தாலும் கூட காசு கொடுத்தால் தான் வாங்க முடியும் என்ற ''நல்லப்  பழக்கம்'' என்பது இங்கே ''தேச உடைமை'' செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்தது. முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகத்தில் புறப்பட்டு,   அமைச்சர்கள் மற்றும் மேலே   சொன்ன  உயர்மட்ட அதிகாரம் படைத்தவர்கள்  அலுவலகம் வழியாக பாய்ந்து  கீழே  உள்ள  மற்ற  பிரிவு  அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரை வந்து சேருகிறது. 
                இந்த சூழ்நிலையில் சேவை மனதோடு செய்கிற  நல்ல பணிக்கலாச்சாரத்தை எங்கே பார்ப்பது...? இதில் என்ன அளவுகோல் வைத்து சிறந்த ஊழியர்களை தேர்ந்தெடுப்பீர்கள்....? அப்படி தேர்ந்தெடுக்கப்படும் அந்த மூன்று பேர் நிச்சயமாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களாக தான் இருப்பார்கள். ஆளுங்கட்சியின் பிரச்சாரங்களுக்கு தேவைப்படுபவர்களாக தான் அவர்கள் இருப்பார்கள். எப்படியிருந்தாலும் இந்த விருதும்  கூட காசு கொடுக்காமல் அவர்களுக்கே கூட கிடைக்காது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. .
             முதல்வர் அவர்களே... எவ்வளவோ அதிரடி வேலைகளையெல்லாம் செய்கின்றீர்கள். அதைப்போல் முதலில் தாராளமயமாகிவிட்ட ஊழலையும், இலஞ்சத்தையும்  ஒழித்துக்கட்டுங்கள். பள்ளியிலும், கல்லூரியிலும் தனியார்மயத்தை ஒழித்துக்கட்டுங்கள். வேலைவாய்ப்பு அலுவலகம் இருக்கும் போது பணியாளர் தேர்வாணையம் எதற்கு....? தேர்வாணையமும் காசு சம்பாதிப்பதற்கான ஏற்பாடு தான். அதையும் ஒழித்துக்கட்டுங்கள். பைசா செலவில்லாமல் படித்து, பைசா செலவில்லாமல் வேலை கிடைத்தாலே போதும், பிறகு தானாக சிறந்த ஊழியர்கள் கிடைப்பார்கள். அத்தனை பேரும் சிறந்த ஊழியர்கள் தான்.
                இதை நீங்கள் மேலிருந்து செய்து காட்டுங்கள். தலை நன்றாக செயல்பட்டால் வாலும் நன்றாக செயல்படும்.

சனி, 24 டிசம்பர், 2011

வர்க்கப்போராளிகள் வெண்மணித் தியாகிகளின் நினைவைப் போற்றுவோம் ....


      

சேற்றில் இறங்கி                                       
நாற்றை நட்டு                                             
களை பிடுங்கி                                             
நீர் பாய்ச்சி                                                   
பயிர் வளர்த்து                                                
சோறு படைக்கும்                                     
விவசாயக்கூலித்                                       
தொழிலாளர்கள்                                        
தஞ்சை தரணியில்                                    
கீழ்வெண்மணியில்                                                                                                                                                                  வெறும்  அரைப்படி       
நெல்லே கூலி உயர்வாய்                       
கேட்டனர்...                                                   
இப்படியாய்                                                  
வேலை நேரம்                                              
கூலி நிர்ணயம்                                            
உழைப்பிற்கேற்ற                                       
கூலி உயர்வு                                                  
என                                                                    
கோரிக்கை வைத்துப்                               
போராடக் கற்றுக்கொடுத்தது               
செங்கொடி இயக்கம்....                             
உன்னை அடித்தால்                                   
திருப்பி அடி என்று                                     
தாழ்த்தப்பட்ட அம்மக்களுக்கு                
கற்றுக்கொடுத்தவன்                                
செங்கொடித் தலைவன்                                 
தோழர் சீனிவாசராவ்....  
இவர்கள்                                                                          
அரைப்படி நெல்   
கூலி  உயர்வு
கேட்ட போது
பண்ணையாள்  ஒரு
சூழ்ச்சி செய்தான்....
உங்களுக்கு  
அரைப்படி நெல் 
கூலி
உயரவேண்டுமென்றால்
உங்கள் வீட்டின் 
மேலே பறக்கும்
செங்கொடி
இறங்கவேண்டுமென்றான்....
அதிர்ந்து போன
அம்மக்காள்
எங்களை உயர்த்திவிட்ட 
செங்கொடியை
நாங்கள் இறங்கவிடோம்
என்று ஆர்ப்பரித்தனர்...
கோபங்கொண்ட 
ஆண்டை  
தன் கையிலிருந்த
துப்பாக்கியால்
அக்கூலித் தொழிலாளர்களைப் 
பார்த்து சுட்டபோது....
                          பெண்களும் குழந்தைகளும்
                            சில ஆண்களும் என
                            44 பேர்கள் மட்டும்
                            ராமய்யாவின் குடிசைக்குள்ளே
                            புகுந்துவிட
                            அவர்களை அப்படியே
                            கொளுத்திவிட்டு
                            தீக்கிரையாக்கினர்.                                  
                            43 ஆண்டுகளுக்கு முன் 
                            டிசம்பர் 25 அன்று  
                            எழுந்த அந்த
                            போராட்டத் தீப்பிழம்பு.. 
                            அவர்களிடமிருந்து  
                            எழுந்த தீயின்  வெளிச்சம்... 
                                                                              இன்று வரை
                                                                              நம்    
                                                                              உரிமைப்
                                                                              போராட்டங்களுக்கு
                                                                              வழிகாட்டிக்கொண்டு 
                                                                              தான்  
                                                                              இருக்கின்றது....   
                                                                              நெல் மணிக்காக
                                                                              செங்கொடியை 
                                                                              தாழாமல் பிடித்த 
                                                                              வெண்மணித் 
                                                                              தியாகிகளின்
                                                                              நினைவைப்
                                                                              போற்றுவோம்....

                                                 

                          
                                                                           
                                                                                                           

வெள்ளி, 23 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு : உரிமை காப்போம் - சகோதர உறவைக் காப்போம்!

                    
                    
                                                                 
தோழர். ஜி. ராமகிருஷ்ணன்,  
தமிழ்மாநிலச் செயலாளர்,  
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.   
                                                                         


                  முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் பாரம்பரிய உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
                     தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர முடியாது. அணையில் 142 அடி அளவுக்கு தண்ணீர் தேக்க வேண்டும், முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்புப்படையை அனுப்ப வேண்டும், அணையை பலப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பேரவையில் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை, தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.
                      முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தின் அளவைப் பொறுத்தே தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவை உள்ளது. இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய ஒன்றாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. அணையின் அளவு 136 அடியாக குறைக்கப்பட்டதால் ஏற்கெனவே பாசனப் பரப்பு சுருங்கியுள்ளதோடு, ஒரு பகுதியில் இருபோக சாகுபடி ஒருபோக சாகுபடியாக மாறி யுள்ளது.
               இந்தப் பிரச்சனையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் 5பேர் கொண்ட அதிகாரம் பெற்ற உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் பாசனப் பாதுகாப்பு குறித்து இந்த அதிகாரம் பெற்ற குழு ஆய்வு செய்து வருகிறது. இந்தக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க உள்ளது.
                     முல்லைப் பெரியாறு பிரச்சனை என்பது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனை ஆகும். அணையின் பாதுகாப்பு குறித்து பொறியாளர்கள் மற்றும் நீரியல் துறை நிபுணர்களே துல்லியமான முடிவை கூறமுடியும். உயர் நிலைக்குழு அமைத்துள்ள தொழில் நுட்பக்குழு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறது.
                    நிபுணர்குழுவின் அறிக்கை மற்றும் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு இரு தரப்பும் காத்திருப்பதே பொருத்தமாக இருக்கும். தமிழகம் மற்றும் கேரளம் தங்களது தரப்பு நியாயத்தை முழுமை யாக உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கேரள சட்டமன்றத்தில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், புதிய அணை கட்ட வேண்டுமென்றும் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஏற்புடையதல்ல.
                     இந்தப் பின்னணியில், தமிழக -கேரள எல்லையில் இருவாரங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. கேரளத்திற்கு சென்ற சபரிமலை பக்தர்கள் தாக்கப்பட்டதாகவும், அங்கிருந்து தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. அதே போன்று தமிழகத்தில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு டீக்கடைகள், பேக்கரிகள் தாக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
                      தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் கவலையளிக்கத்தக்க இத்தகைய போராட்டங்களை கைவிட வேண்டும். பொருளாதாரத்தடை, எல்லை முற்றுகை போன்றவைகள் பிரச்சனையை தீர்க்க உதவாது. மாறாக மக்கள் ஒற்று மையை சிதைக்கவே இட்டுச்செல்லும். தமிழகமும் கேரளமும் பாரம்பரியமாக நல்லிணக்கமும் நல்லுறவும் கொண்ட மாநிலங்களாகும், புவியியல் ரீதியாக மட்டுமின்றி பொருளியல் ரீதியாகவும் இரு மாநிலங்களும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. காய்கறி, முட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு செல்கின்றன. ஆழியாறு - பரம்பிக்குளம் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் ஒரு பகுதிக்கு குடிநீர் கிடைக்கிறது.
                     கேரளத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேரளத்திலும் நீண்ட நெடுங்காலமாக நல்லிணக்கத்தின் அடிப்படையில் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்து வருகின்றனர். பண்பாட்டு ரீதியாகவும், இரு மாநில மக்களுக்கிடையிலும் நெருங்கிய உறவு நீடித்து வருகிறது என்பதை இலக்கியங்களின் வாயிலாகவும், கலைகளின் வாயிலாகவும் அறிந்து கொள்ள முடியும்.
                 இந்தப் பின்னணியில், சகோதர மக்களிடையே மோதல் தூண்டிவிடப்படுவது மிகவும் துரதிருஷ்டவசமாகும். தமிழக - கேரள எல்லையின் இரு பகுதியிலும் பதற் றத்தை ஏற்படுத்தும் சக்திகளுக்கு இடம் தராமலும், ஆத்திரமூட்டும் செயல்களுக்கு இரையாகா மலும், பாரம்பரிய நட்புறவு மற்றும் அண்டை மாநில நல்லுறவை பேணுமாறு இரு மாநில மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
                    கேரளாவில் வேலை நிமித்தம் பணிபுரியும் தமிழ் மக்களுக்கும் சபரிமலை பக்தர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள அரசு வழங்க வேண்டுமென்றும், தமிழகத்தில் வன்முறைச் சம்பவங்களுக்கு இடமளிக்காமல் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டை தமிழக அரசு செய்திட வேண்டும் என்றும் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
                      மத்திய அரசு இந்த விசயத்தில் வெறும் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, இரு மாநிலங்களிலும் சுமூக நிலையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்பதையும் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
                  கட்சியின் கேரள மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில், அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்பவர்களை தடுத்திட இரு மாநிலங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளும், இடதுசாரி ஊழியர்களும் ஜனநாயக சக்திகளும் பணியாற்ற வேண்டும், சபரி மலைக்குச் செல்கிற அடுத்த மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோருக்கு அனைத்துவித பாதுகாப்பு வழங்குவது, அரசு மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும் ஈடுபடவேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சனையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு விரைந்து கிடைத்திட மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

* தமிழகத்தின் பாரம்பரிய பாசன, குடிநீர் உரிமையை பாதுகாப்போம்.

* தமிழக-கேரள மக்களுக்கு இடையி லான சகோதர உறவை பாதுகாப்போம்.

புதன், 21 டிசம்பர், 2011

சாகித்ய அகாதமி விருது பெற்ற தோழர். சு.வெங்கடேசனுக்கு பாராட்டுகள்...!

               2011க்கான தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு அவர் எழுதிய ''காவல் கோட்டம்'' நாவலுக்காக வழங்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியையும் பெருமித்தையும் ஒருசேர எமக்கு வழங்கியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளரான அவர் பெற்றுள்ள இவ்விருது எம் அமைப்புக்கே கிடைத்த விருதாக எமது இயக்கத்தின் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களும் பெருமையுடன் கொண்டாடுகிறார்கள்.
          தமிழ் நாவல் வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த காவல் கோட்டம் நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பான செய்தியாகும். அறுநூறு ஆண்டுகால மதுரையின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு கி.பி.1300லிருந்து 1900 வரையிலான காலத்தின் கதையை அரசியல், சமூகவியல், இனவரைவியல் கண்ணோட்டத்துடன் இந்நாவல் பேசுகிறது. வரலாறும் புனைவும் பிரித்தறிய முடியாதபடிக்குப் பின்னிச்செல்லும் நுட்பமான அழகியலோடு இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. தாதனூர் என்னும் சிறு கிராமத்து மக்களின் களவும் காவலுமான வாழ்வினூடாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதுரையைக் கைப்பற்றுவதில் துவங்கி ரேகைச்சட்டத்தால் களப்பலியாகும் ஒரு மக்கள் குழுவின் வரலாறாகவும் இந்நாவல் விரிகிறது. என்னதான் முயன்றாலும் ஆங்கிலேய மூளைகளால் கணித்திடவே முடியாத ஒரு எளிய ஆனால் வலுவான உள்ளூர் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்வதாகவும் காவல் கோட்டம் அமைகிறது. ஏற்கனவே இருந்த பண்பாட்டை அழித்து புதிதாக எதையும் தராத ஆங்கில அரசு என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட ஒரு வரலாற்று உண்மையின் கலாபூர்வமான வடிவமாகவே காவல் கோட்டம் நாவல் அமைந்துள்ளது. 1050 பக்கங்களில் விரியும் ஒரு பெருங்கதையாக ஓர் உள்ளூர் வரலாறு சொல்லப்பட்டிருப்பது தமிழில் அரிதாக நடக்கும் படைப்பு முயற்சியாகும்.ஏழு ஆண்டுகால கடுமையான ஆய்வுகளையும் உழைப்பையும் உண்டு செறித்து எழுந்து நிற்கும் காவல் கோட்ட்த்துக்காக இவ்விருது வழங்கப்பட்டிருப்பது அந்த உழைப்புக்குக் கிடைத்த உரிய அங்கீகாரமாகவே தமுஎகச கருதுகிறது.
ஓட்டையிடாத புல்லாங்குழல், பாசி வெளிச்சத்தில், ஆதிப்புதிர் போன்ற தொகுப்புகளின் வழியே ஒரு நுட்பமான கவிஞராக வெளிப்பட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொடர்ந்து ஆட்சித்தமிழ்,கலாச்சாரத்தின் அரசியல், கருப்பு கேட்கிறான் கிடா எங்கே, மதமாற்றத்தடைச்சட்டம், சமயம் கடந்த உ.வே.சா போன்ற பல நூல்களால் ஓர் ஆழமிக்க ஆய்வாளராக முகம் காட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக அவர் ஆற்றிவரும் களப்பணிகள் அவரது இன்னொரு முகம்.தன் ஆவேசமிக்க உரைகளின் மூலம் அணிகளை மன எழுச்சிகொள்ள வைப்பவர் சு.வெங்கடேசன்.
     2011 செப்டம்பரில் விருதுநகரில் நடைபெற்ற தமுஎகசவின் மாநில மாநாட்டில் அவர் தமுஎகசவின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்வளவு இளம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தமிழ்ப் படைப்பாளி என்கிற பெருமையையும் இதன்மூலம் அவர் பெறுகிறார்.
    தமுஎகச படைப்பாளிகள் இன்னும் உற்சாகத்துடன் தம் படைப்பு முயற்சிகளில் ஈடுபட இவ்விருது தூண்டுதலாக அமையும். தோழர் சு.வெங்கடேசனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆவிசேரக் கட்டியணைத்துத் தெரிவித்துக்கொள்கிறது.
அருணன்                          ச.தமிழ்ச்செல்வன்
கௌரவத்தலைவர்           மாநிலத்தலைவர்

''பகவத்கீதை'' முதலாளித்துவத்தையும், மதவாதத்தையும் வாழவைக்கிறது...!

                           பகவத்கீதை பல ஆண்டுகளுக்குப்பின் இன்று மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. பகவத்கீதையை தடை செய்யக்கோரி ரஷியாவில் உள்ள டோம்ஸ்க் நகர  நீதிமன்றத்தில்   வழக்கு  ஒன்று  தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 28 - ஆம் தேதிக்கு   நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
               இது  நடைபெற்றுக்கொண்டிருப்பது  ரஷியாவில்... ஆனால் அதற்குள் இங்கே பாரதீய ஜனதா கட்சி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கத் தொடங்கிவிட்டார்கள். வழக்கம்   போல்  பாராளுமன்றத்தை  நடத்தவிடாமல்  அமளியில்  ஈடுபட்டனர். பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பகவத்கீதை ''தேசிய புத்தகமாக'' அறிவிக்கவேண்டுமாம். பா. ஜ. க. -வின் மக்களவைத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் போகிறபோக்கில் சும்மா சொல்லிட்டுப் போய்ட்டாங்க. போதாக்குறைக்கு இந்திய அரசும் இது ஒரு மதசார்பற்ற நாடு என்பதை மறந்துவிட்டு, ரஷியாவின் பகவத்கீதை தடையை கண்டிக்கிறது.
                 கோடிக் கோடியாய் குவியும்  அமெரிக்க நிதியில் கொழுத்து வளரும்  ''இஸ்கான்'' என்று அழைக்கப்படும் ''சர்வதேச ஹரே கிருஷ்ணா இயக்கம்'' இந்தியாவிலும் ரஷியாவிலும் ''பஜனைப் போராட்டங்களை'' நடத்திவருகின்றன.  
                 இந்துக்களின் கடவுளாக கருதப்படுபவர் தான் ''கிருஷ்ண பரமாத்மா'' அவரின்  ''புகழையும் ,  பெருமையையும்     பிரச்சாரம்   செய்வதற்கென்றே     ''இஸ்கான்'' என்ற  இந்த ''ஹரே கிருஷ்ணா கோஷ்டி'' தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் தோற்றத்திற்கான காரணகர்த்தா அமெரிக்கா தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பறந்து விரிந்து வாழவேண்டும் என்ற நோக்கத்தில் தான், இதுநாள் வரையில் அமெரிக்கா  பெருத்த நிதி கொடுத்து கொழுக்க வளர்த்திருக்கிறது. 
                 இதை ஏன் அமெரிக்கா வளர்க்கவேண்டும் என்றால்....இதுபோன்ற மதவாத  இயக்கங்கள் -   ஆன்மீக இயக்கங்கள் வளர்ந்தால் தான், உலகத்தில் எந்த மூலையிலும் ''கம்யூனிசம்'' வளர்ந்துவிடாமல்,   முதலாளித்துவம் வாழமுடியும். இது தான் இதிலிருக்கிற முக்கிய  காரணம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
                இந்துக்கடவுள் பல பேர் இருக்கும் போது கிருஷ்ணனை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்....?  அதற்குப்பின்னாலும் மிகப்பெரிய காரணம் இருக்கிறது. அது என்னவென்றால்.... கடவுள்களிலேயே மனிதர்களைப்போல் தொற்றமளிக்கக்கூடியவர்கள் மூன்று பேர்.  முருகன், ராமன், கிருஷ்ணன் ஆகியவர்கள் தான் அந்த மூன்று பேர். அவர்களில் முருகன் தமிழ்க் கடவுள். அவரின் எல்லை தமிழ்நாடோடு சரி. அடுத்து ராமனை எடுத்துக்கொண்டால்.... புராணங்களில் ராமனை ஒரு போண்டாட்டிக்காரனாகவும், ஒழுக்கமுள்ளவனாகவும், தாய் தந்தை சொல் தட்டாதவனாகவும், யுத்த தர்மம் உள்ளவனாகவும் காண்பிக்கப்படுகிறது. ஒரு சராசரி மனிதனை விட அதிகமாக காண்பிக்கப்படும் கதாபாத்திரம் தான் ராமன். ராமன் பெயரில் இயக்கம் நடத்தினால் உளவியல் ரீதியாக மக்கள் இவ்வளவு கட்டுபாடுகள் கொண்ட ராமன் பெயரில் இந்த இயக்கம் நடைபெறுவதால் இந்த இயக்கத்திலும் கடுமையான கட்டுபாடுகள் இருக்குமோ என்று மக்கள் இந்த இயக்கத்தோடு ஒட்டமாட்டார்கள் என்பதனால் தான் கிருஷ்ண இயக்கமாக ஆரம்பித்தார்கள். கிருஷ்ணனை பொறுத்தவரை சராசரி மனித குணங்கள் அத்தனையும் இருக்கும். சிறு வயதில் அம்மாவிற்கு தெரியாமல் வெண்ணை திருடி சாப்பிடுவது, தவறுகள் செய்துவிட்டு அம்மாவிடம் பொய் சொல்லுவது - மறைப்பது போன்ற தவறுகளையும் செய்வார். பெண்களிடம் பாலியல் சீண்டல்கள், பெண்கள் குளிக்கும் போது அவர்களது ஆடைகளை தூக்கிச் செல்வது - குளிக்கும் போது பார்ப்பது - விமர்சனம் செய்வது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள்,  நண்பர்களோடு ஊர் சுற்றித் திரிவது, சகோதரர்கள் மத்தியில் போர் செய்யத் தூண்டுவது, யுத்தத் தந்திரம் என்ற பெயரில் யுத்தத் தர்மத்திற்கு எதிராக ஆலோசனை வழங்குவது போன்ற ஒழுங்கின்மையும், கலாச்சார சீர்கேடும்   கொண்டவராகத்தான் புராணங்களில் கிருஷ்ணன் ஒரு பரமாத்மாவாக காட்டப்படுகிறார். 
               இப்படிப்பட்டவர் பெயரில் ஒரு இயக்கமென்றால் மக்களுக்கும் எந்த பிரச்சனைகளும் கிடையாது. அதன் மூலம்  உலக மக்கள் அனைவரையும் கவரமுடியும். குறிப்பாக இளைஞர்களை இந்த இயக்கத்தின் பால் ஈர்க்கமுடியும். அதன் மூலம் இயக்கத்தை வளர்த்து - கிருஷ்ண பக்தியை வளர்த்து, ஆன்மீகத்தை வளர்ப்பதன் மூலம் முதலாளித்துவத்தை பாதுகாக்கமுடியும். கம்யூனிசம் வளராமல் பார்த்துக்கொள்ளமுடியும். அதற்கு இந்த இயக்கம் வளர்வதற்கு ''பகவத்கீதை'' தேவைப்படுகிறது. இவர்களைப் பொறுத்தவரை பகவத்கீதை ஒரு பிரச்சார நோட்டீஸ் ஆக - பிரசுரமாக தான் பார்க்கிறார்கள். இவர்களது இயக்கப் பிரச்சாரத்துக்குத் தான் இந்த பகவத்கீதை பயன்படுகிறது.  பெரும்பாலும் இதை எல்லோருக்கும் இலவசமாகத்தான் வழங்குகிறார்கள் அல்லது மிகக் குறைந்த விலைக்கு விற்கிறார்கள். அறுபது உலக மொழிகளில் அச்சிடப்படுகிறது.  இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. 
          இந்த புத்தகத்தில் தான் இவர்கள் பிரச்சாரமே இருக்கிறது. அதை தடை செய்தால் இவர்களது ''கிருஷ்ண லீலைகள்'' பிரச்சாரம் தடைப்பட்டுவிடும் என்ற பயம் தான் இன்று அவர்களின் போராட்டம் என்பதை மறுத்துவிடமுடியாது. அது மட்டுமல்ல இன்று இந்தத் தடையை அனுமதித்தால் உலக நாடுகள் முழுதும் இதே தடையை செய்யத் தொடங்கிவிடும் என்கிற அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது.

''ஜன கன மன'' - ஓங்கி ஒலித்து நூறாண்டுகள்....!


''ஜன கன மன'' - 
100 ஆண்டுகள் 


                      ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஒன்றாய்  சேர்த்து  நம்  பள்ளிப்பருவத்திலேயே நமக்கு  கற்றுக்கொடுத்தது நம் நாட்டின் தேசியகீதமான ''ஜன கன மன'' தான்.   இது நாம் சிறுகுழந்தையாய் பள்ளிக்குள் அடியெடுத்து வைக்கும் போதே - நாம் எழுத்துக்களை எழுதக் கற்றுக்கொள்ளும் போதே, நம் காதில் வாங்கி பொருள் புரியாமல் நாம் பாடிய பாடல். பிறகு நாமே படித்து பார்த்து, அதில் புதைந்திருக்கும் பொருள்களை புரிந்துகொண்டு மெய்சிலிர்த்தப் பாடல் இது. ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நமக்கெல்லாம் ஊட்டியப்பாடல் இது.  இது தான் நம் தேசத்திற்கு ரவீந்தரநாத் தாகூர் அவர்களால் கொடுக்கப்பட்ட தேசியகீதம். இந்த பாடல் நம் நாட்டின் விடுதலை போராட்டத்தில் ஓங்கி ஒலித்து  இன்று - டிசம்பர் 27 - அன்று நூறாண்டுகள் ஆகின்றது என்பது நமக்கெல்லாம் பெருமையளிக்கும் தகவலாகும். நாம் வாழும் காலத்தில் நமக்கு கிடைத்த பெருமை இது.
               தாகூர்  ''பாரத விதாத்'' என்ற தலைப்பிட்டு எழுதிய இந்தப் பாடல்  முதன் முதல்   அன்றைய கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் 1911 - ஆம் ஆண்டு டிசம்பர் 27 - அன்று தேசபக்த பாடலாக பாடப்பட்டது. பிறகு சுதந்திர இந்தியா 1950 - ஆம் ஆண்டு ஜனவரி 26 - ஆம் நாள் குடியரசு நாடாக அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே 24 - ஆம் தேதியன்றே இந்திய அரசாங்கத்தால் இந்தப் பாடல்  தேசியகீதமாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பாடப்பட்டது.
             வங்க எழுத்தாளர்  பன்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ''வந்தேமாதரம்'' பாடல் சுதந்திரப்போராட்டக்காலத்தில் மக்களிடத்தில் எந்த அளவிற்கு எழுச்சியை உண்டாக்கியதோ அதே அளவிற்கு வங்க கவிஞன் தாகூர் எழுதிய ''ஜன கன மன'' பாடலும் மக்களிடத்தே எழுச்சியையும், தேசபக்த உணர்வையும் எழுப்பியது.  நம் தேசத்தின் விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது மட்டுமல்ல, இன்றைக்கு தேசியகீதமாக நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்குவகிக்கும் ''ஜன கன மன'' பாடலின் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாட விழா எடுப்போம். 
                ''வந்தேமாதரம்'' பாடலின் நூற்றாண்டினை சென்ற 2006 -ஆம் ஆண்டு செப்டம்பர் 7 - தேதி அன்றைய காங்கிரஸ் தலைமையிலான  மத்திய ஆட்சியாளர்கள் அரசு விழாவாக கொண்டாடினர். பாரதீய ஜனதா கட்சி கூட அதில் ஆர்வம் காட்டியது.  அது ஒரு தேசபக்த விழாவாக அல்லாமல்  அரசியல் ஆதாயம் தேடும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் நாட்டை இன்றைக்கு தலைமை வகித்து ஆட்சி நடத்தும் ''இன்றைய வீணாப்போன காங்கிரசுக்கு'' ஜன கன மன'' வரலாறு தெரியுமா என்றே தெரியவில்லை. தேசத்தை விலை பேசி விற்கும் இந்த கூட்டத்திற்கு தேசத்தின் வரலாறு தெரிந்திருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை தான்.  
                 இந்திய நாட்டின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் சீர்குலைந்து வரும் இன்றைய  சூழ்நிலையில்  ''ஜன கன மன'' - நூற்றாண்டு விழா மிகவும் அவசியமானது.   ஆண்டு முழுதும் இந்த பாடலை  தேசபக்தியோடு நாடு முழுதும் ஓங்கி ஒலிக்கச் செய்யவேண்டும்.   

செவ்வணக்கம் தோழர் கிம் ஜோங் இல்....!

                   

                                              RED SALUTE  TO      

                                              COMRADE KIM JONG IL    

          
 
                        வடகொரியா என அழைக்கப்படும் கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதியும், கொரியத் தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளருமான கிம் ஜோங் இல் டிசம்பர் 17ம் தேதி மறைந்துவிட்டார்.
                  வடகொரிய மக்களோடும், கொரியத் தொழிலாளர் கட்சியோடும் தனது ஆழ்ந்த அதிர்ச்சியையும் இரங்கலையும் பகிர்ந்துகொண்டு, செம்பதாகையைத் தாழ்த்தி அஞ்சலி செலுத்தியிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
                  ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் செங்கொடியை உயர்த்திப்பிடித்து, சோசலிசத்தை நோக்கிய பயணத்தில் முன்னேறுகிறோம் என உலகிற்கு உரத்து அறிவித்த சின்னஞ்சிறிய நாடு வட கொரியா. கொரிய மக்களின் மகத்தான தலைவர் கிம் இல் சுங் தலைமையேற்று நடத்திய புரட்சியை அவருக்குப் பின்னர் கடந்த சுமார் 17 ஆண்டு காலம் பாதுகாத்து, முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல மிகக்கடுமையான போராட்டத்தை நடத்தியவர் கிம் ஜோங் இல்.
                     கிம் ஜோங் இல் தலைமையில் வடகொரிய தேசம், உலக வரலாற்றிலேயே மிகக்கடுமையான காலகட்டத்தில் பயணம் செய்தது. அண்டை நாடான தென்கொரியாவின் எல்லையில் கடந்த சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய அமெரிக்க ராணுவமுகாம், எந்த நேரமும் வடகொரியாவைத் தாக்கும் முஸ்தீபுகளுடன் அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது.
                    அதுமட்டுமின்றி, அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கும் முனைப்பில் வடகொரியா ஈடுபட்டிருப்பதாகக் கூறி, அந்நாட்டை ‘தீமையின் அச்சு’ நாடுகள் வரிசையில் சேர்த்தது அமெரிக்கா; இந்தக் காரணத்தை கூறிக்கொண்டே வடகொரியா மீது வரலாறு காணாத பொருளாதாரத்தடைகள் பாய்ந்தன. அனைத்து வழிகளிலும் அந்நாட்டின் வளர்ச்சியை முடக்க முயற்சித்து வருகிறது ஏகாதிபத்தியம். தனது இந்த நோக்கத்தை நிறை வேற்றிக்கொள்ள தென்கொரியாவையும் ஜப்பானையும் அது பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
                    எந்த நேரமும் தாக்கப்படலாம் என்ற அபாயத்திலேயே இருந்தபோதிலும், சுயசார்புக்கொள்கை எனும் கிம் இல் சுங்கின் கோட்பாட்டை காலத்திற்கு ஏற்றவாறு, நாட்டின் சூழலுக்கு ஏற்றவாறு பொருத்தி, சோசலிசப்பாதையில் முன்னேறுவது என்ற உறுதிப்பாட்டோடு வட கொரியாவை வழிநடத்திச் சென்றார் கிம் ஜோங் இல்.
                  தனது இறுதி மூச்சு வரையிலும் மார்க்சிய- லெனினியக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்தவர்; சோசலிசமே எதிர்காலம் என உரத்து முழங்கியவர் கிம் ஜோங் இல்.
                    இல்லின் மறைவைத் தொடர்ந்து கொரியத் தொழிலாளர் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், இவரது மகனுமான கிம் ஜோங் உன், அரசுக்கு தலைமையேற்கிறார். அவரது தலைமையின் மீது மக்களும், கட்சியும், மத்திய ராணுவக் கமிஷனும், நாடாளுமன்றமும் நம்பிக்கையும் ஆதரவும் தெரிவித்துள்ளன.
                   ஆனால் எப்போதும் போல நிலைமையைப் பயன்படுத்தி வடகொரியப் புரட்சியை சீர்குலைக்க ஏகாதிபத்தியக் கழுகுகள் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் உயர்த்திப்பிடித்த சிவப்புப் பாதையில் உறுதியுடன் பயணிப்போம் என வட கொரிய மக்கள் முழங்கு கிறார்கள்.

செவ்வணக்கம், தோழர் கிம் ஜோங் இல்.....

செவ்வாய், 20 டிசம்பர், 2011

இரத்தம் குடித்து ஓய்ந்தபின் கடைசி அமெரிக்கப் படையும் வெளியேறியது...!

              கடந்த ஒன்பது ஆண்டுகளாக இராக்கில் அந்த நாட்டின் அதிபரின் உயிரைக்  குடித்து, குழந்தைகள் - பெண்கள் உட்பட லட்சக்கணக்கான இராக் மக்களை கொன்று  இரத்தம் குடித்து ஓய்ந்தபின், இராக்கை ஆக்கிரமித்திருந்த அமெரிக்காவின் கடைசி படை சென்ற ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது.  
                      தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டப் போவதாகவும், இராக்கில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உயிர்களை கொள்ளும் அணுஆயுதங்களை தேடப்போவதாகவும், இராக்கில் சர்வாதிகாரத்தை ஒழித்து ஜனநாயகத்தை மலரச் செய்யப்போவதாகவும் - பல பொய்யான  காரணங்களை கூறி அமெரிக்க ராணுவம், இஸ்ரேல், இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, போலந்து ஆகிய   தன் ராணுவக் கூட்டாளிகளோடு  சென்ற மார்ச் 2003 - லில் இராக்கில் நுழைந்தது  என்பதை நீங்கள் யாரும் மறந்திருக்கமுடியாது.
                அமெரிக்காவிற்கு இராக்கின் எண்ணெய் வளத்தை அள்ளிக்கொடுக்க மறுத்த இராக் அதிபர் சதாம் ஹுசைன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது, மக்கள் உரிமைகளை காக்கும் ஜனநாயக அரசை நிறுவப்போவதாக சொல்லி ஒரு பொம்மை அரசை நிறுவியது, பெண்கள் - குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது, போரில் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளிக்காமல் சாகடித்தது  போன்ற மனிதகுலத்துக்கு எதிரான வேலைகளை தான் இதுவரை அமெரிக்கா அங்கே செய்துவந்தது.  அமெரிக்க நுழைவிற்கு பின் இராக் மக்கள் நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை நடத்தமுடியாமல் தவித்தனர். கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாடெங்கும் இரத்தவாடைகள் தான் அடித்தன.
               இதற்காக அமெரிக்க அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா...? ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த தொகையை பசியால் வாடும் - பசிப்பிணியால் உயிரைவிடும் சோமாலிய மக்களுக்கு உணவு கொடுத்திருந்தால் அவர்கள் இறக்காமல் உயிர்வாழ்ந்து கொண்டிருப்பார்கள். 
              அதுமட்டுமல்ல ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை அமெரிக்கா இழந்திருக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்திருக்கிறது. இத்தனை உயிர்களையும் பலிவாங்கிய அமெரிக்கப் படை கொடுத்த விலை என்பது ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் ஆகும். இதனால் அமெரிக்காவிற்கு கிடைத்த இலாபம் இராக்கின் எண்ணெய் வளம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதேபோல் இந்த எண்ணெய்க்குப் பதில் இராக்கிற்கு கிடைத்த பரிசு... நாட்டின் தலைவனையும் மக்களையும் இழந்ததும், நாட்டின் அமைதி குலைந்ததும், பொருளாதார சீர்கேடும், குழந்தைகளின் கல்வி இழப்பும் தான் என்பது வெளிப்படையானது. 

பாதகம் செய்பவரை கண்டால் நீ பயங்கொள்ளல் ஆகாது பாப்பா....!

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்   
தடுப்பு மசோதா - அறிந்துகொள்வோம்....         
- உ. வாசுகி  


                     பெண்ணுரிமையும் மனித உரிமையே என்ற புரிதலை ஏற்படுத்த நீண்ட காலம் ஆனது. அதே போல், சில விதமான வன்முறையை, வன்முறை என்று புரிய வைக்கவும் பல காலம் தேவைப்படுகிறது. உதாரணமாக, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் என்பது லேசான விஷயமாக, டேக் இட் ஈஸி பாலிசியாகப் பார்க்கப்பட்டது. காவல்துறை தலைவர் கேபிஎஸ்.கில், ரூபன் தியோல் பஜாஜ் என்ற பெண் அதிகாரியை, ஒரு விருந்தில் பின் பக்கம் தட்டினார்; சற்று ஆபாசமாகவும் பேசினார். ரூபன் தியோல் புகார் செய்தார், வழக்காக்கினார். 8 வருடம் சட்டப் போராட்டத்தை நடத்திய பிறகே, நீதிமன்றம் அவர் செய்தது குற்றம் என்று சிறு தண்டனை கொடுத்தது. அதற்கே, பத்திரிகைகள் ரத்தக்கண்ணீர் வடித்து, தீவிரவாதிகளை அடக்கியவர், மிகப் பெரிய தேச பக்தர், அவருக்கா இந்த நிலை, இந்தச் சின்ன விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிது பண்ண வேண்டும் என்று எழுதித் தீர்த்தன. கில்லுக்கு இது சின்ன விஷயமாக இருக்கலாம். ஆனால், ரூபன் அப்படிப் பார்க்கவில்லை என்பது தான் முக்கியம். பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில், ”பெரிசா என்ன பண்ணிட்டாரு, எஸ் எம் எஸ் குடுத்தாரு, அவ்வளவு தானே. வர்றியான்னு கேட்டாரு, அவ்வளவு தானே” என்கிற போகிற போக்கில் வசனங்கள் உதிர்க்கப்படுவதைக் கேட்டிருக்கிறோம். அனுபவிப்பவர்களுக்கு, அது ஒரு இம்சை, மன உளைச்சலை ஏற்படுத்தும் தொல்லை. வெளியே சொல்ல முடியாமல், மனதுக்குள் வைத்து குமுறுகிற 24ஒ7 பிரச்சனை.
                 குழந்தை திருமணத்தைத் தடுக்க ராஜஸ்தான் அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவரான பன்வாரி தேவி பலாத்காரம் செய்யப்பட்ட போது, அது தொடர்பான விஷாகா வழக்கில், 1997ல் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட வழிகாட்டுதல், சமூகத்தின் கன்னத்தில் பளீரென்று அறைந்து, பாலியல் துன்புறுத்தல்/சீண்டல் குற்றம் என்று உணர்த்தியது. செய்பவர் என்ன நினைக்கிறார் என்பதை விட, பாதிக்கப்படுபவர் அதை எப்படி உணர்கிறார் என்று பார்க்க வேண்டும் என்றது. இந்த வழிகாட்டுதலை, சட்டமாக்க வேண்டும் என்று மாதர் அமைப்புகள் அப்போதிருந்தே கோரி வந்தாலும், தேசிய மகளிர் ஆணையம், மாதர் மற்றும் தன்னார்வ இயக்கங்களுடன் கலந்தாலோசித்து, 2007ல் ஒரு மசோதாவை உருவாக்கி, பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகத்திடம் அளிக்க, அது 2010ல் இறுதி செய்யப்பட்ட மசோதாவை அரசிடம் அளித்தது. இம்மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. சில தினங்களுக்கு முன், நிலைக்குழுவின் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. மசோதாவின் சில முக்கிய அம்சங்களை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்போதுதான், அதன் அமலாக்கத்தில் பங்களிப்பு செய்ய முடியும்.

பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன?

              உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டது நல்ல அம்சம். வரவேற்கத்தகாத பாலியல் அடிப்படையிலான நடவடிக்கைகள் அனைத்தும், தொடுவது, வார்த்தைகள், சைகை, ஆபாசப் படங்களைக் காட்டுவது, மின்னணு சாதனங்களைப் பயன்படுத்திப் பாலியல் செய்திகளை அனுப்புவது உட்பட, பாலியல் துன்புறுத்தல். நான் சொன்னபடி கேட்டால், வேலையில் உன்னை முன்னேற்றுகிறேன் என்று சொல்வது, கேட்காவிட்டால் வேலையிலிருந்து உன்னைத் தூக்கிவிடுவேன் என்பது, வேலைச் சூழலை அச்சுறுத்தும் விதத்தில் மாற்றுவது போன்ற பல விஷயங்களைப் பேசுவதும், செய்வதும் குற்றம்.

எது பணியிடம்?

                   அரசுத் துறை, தனியார் துறை, கல்வி நிலையங்கள் என்று எல்லாமே வேலையிடமாகக் கருதப்படுகிறது. பெண் ஊழியர், வேலையின் நிமித்தம் பயணம் செய்தால், ரயில்/பஸ்/விமானம்/கப்பல் போன்ற வாகனங்களும் பணியிடமாகக் கருதப்பட்டு, அங்கு அந்த ஊழியருக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலையும் நிறுவனம் கணக்கில் எடுக்கவேண்டும் என்று மசோதா கூறுகிறது. நீ பஸ்ஸில் போகும் போது தானே நடந்தது? ஆபிசில் இல்லையே? நாங்கள் ஏன் அதற்கு மெனக்கெட வேண்டும் என்று யாரும் கேட்க முடியாது. கூடுதலாக, நிலைக்குழு தனது பரிந்துரையில், அலுவலகம் போக, வர நிறுவனமே ஏற்பாடு செய்து கொடுக்கும் வாகனம் கூட, பணியிடமாகக் கருதப்பட்டு, ஊழியரின் பாதுகாப்புக்கு நிறுவனம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இத்தகைய வாகனங்களில் குற்றம் நடந்தது என்பது நமக்கு நினைவிலிருக்கும்.

யாருக்கெல்லாம் இம்மசோதா பயன்படும்?
        அமைப்பு சார் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், அப்ரெண்டிஸ், மாணவிகள், ஆராய்ச்சி மாணவிகள், நோயாளிகள் ஆகியோர் இதைப் பயன்படுத்தலாம். முதலாளி முதல் சக ஊழியர் வரை மட்டுமல்ல, வேலை தொடர்பாக பணியிடத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள், மாணவிகள் என்றால் ஆசிரியர், ஆராய்ச்சி கைடு, நோயாளிகள் என்றால் மருத்துவர், மருத்துவமனை சிப்பந்திகள் போன்றவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தால், புகார் கொடுக்கலாம். மாணவிகளுக்கு சக மாணவர்கள் மூலம் கூட, பாலியல் துன்புறுத்தல் நடக்கலாம். எனவே, சக மாணவர்களையும் இதில் இணைக்கவேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.
                    மசோதா, தேசிய மகளிர் ஆணைய பரிந்துரையை மீறி, வீட்டுப் பணியாளர்களை சட்டத்தின் வரம்புக்குள்ளிருந்து அகற்றிவிட்டது. வீட்டுப் பணியாளர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று மசோதாவில் தனியாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. தனிப்பட்ட வீட்டுக்குள் நடக்கும் அத்துமீறல்களை நிரூபிப்பது கஷ்டம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. நான்கு சுவருக்குள் அத்துமீறல் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் என்ற அடிப்படையில், வீட்டுப்பணியாளர் அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்புக்குரல் எழுப்பின. தற்போது, நிலைக்குழு, அவர்களையும் சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளது. வீட்டுக்குள் நடக்கும் வன்முறையை தண்டிக்க, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டமே வந்து விட்ட பிறகு, நான்கு சுவருக்குள் நடக்கிறது என்ற காரணம் கூறி, சட்டத்திலிருந்து வீட்டுப் பணியாளர்களைத் தள்ளி வைப்பது, எடுபடாது என்பது உண்மைதானே?
                   புகார் கமிட்டிகள் : நிறுவனங்கள் என்றால், உள் நிறுவன புகார் குழு  அமைக்கப்பட வேண்டும். அது தவிர, ஸ்தல அளவில், உள்ளூர் புகார் குழு  அமைக்கப்பட வேண்டும். புகார் கமிட்டியின் தலைவராக சீனியர் பெண்மணி நியமிக்கப்பட வேண்டும். உள் நிறுவன புகார் குழுவில் தலைவராகப் போட, அந்த நிறுவனத்தில் சீனியர் பெண்மணி இல்லை என்றால், சகோதர நிறுவனங்களிலிருந்தோ, தன்னார்வ அமைப்பிலிருந்தோ போட வேண்டும். பெண்கள் பிரச்சனைகளில் அக்கறையும், அனுபவமும் உள்ள தன்னார்வ அமைப்பு பிரதிநிதியும் இடம் பெற வேண்டும். உள்ளூர் புகார் குழுவில், கூடுதலாக, தொழிற்சங்கப் பிரதிநிதியும் போடப்பட வேண்டும். உள் நிறுவன புகார் குழு இல்லையென்றாலொ, தவறு செய்தவர் முதலாளி என்றாலொ, உள்ளூர் புகார் குழு, புகாரைப் பெறலாம் என்று மசோதா கூறுகிறது. பெறலாம் என்பதை, பெற வேண்டும் என்று மாற்ற வேண்டும்.

விசாரணை முறை

               எழுத்து மூலமாகப் புகார் பெற்ற உடன், கமிட்டி, முதலில் சமரசப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று மசோதா கூறுகிறது. சமரசம் ஏற்பட்டால், விசாரணை நடத்த வேண்டியதில்லையாம். இது சரியல்ல, சமரசத்துக்கு வர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் புகார் கொடுக்கும் பெண்ணுக்கு ஏற்படும். எப்படியுமே, தண்டனை பரிந்துரைக்கும் போது, பணி விதிகளில் கூறியுள்ள பல்வேறு நடவடிக்கைகளில் – மன்னிப்பு கேட்பது முதல் வேலை நீக்கம் வரை- குற்றத்தின் தன்மைக்கேற்ப ஒன்றைப் பரிந்துரைக்கலாம். குற்றத்தின் தன்மை குறைவு என்றால், குறைவான நட வடிக்கை எடுக்கலாம். அப்படியிருக்கும் போது முதல் கட்ட நடவடிக்கையாக சமரசம் என்பது தேவையில்லை என்று வலி யுறுத்த வேண்டியிருக்கிறது.
                        விசாரணை, துறை விதிகளில் உள்ளபடி நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தனியான விசாரணை முறை எதுவும் சட்டத்தில் இடம் பெறவில்லை. ஒரு வேளை, விதிகளை உருவாக்கும் போது, குறிப்பிடப்படலாம். ஆனால், சட்டத்திலேயே இருப்பது தான் உதவியாக இருக்கும். தவறான நடத்தை என்றால், துறையே விசாரிக்க முடியும் என்கிற நிலைமை ஏற்கனவே உண்டு. ஆனாலும், உச்சநீதிமன்றம், தனியான புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்? புகார் கமிட்டி என்பது விசேஷமாக அமைக்கப்படவேண்டும் என்றால், அது நடத்தும் விசாரணையும் சற்று மாற்றமாக இருக்க வேண்டும் தானே? பாலியல் பிரச்சனைகளில் புகார் கொடுத்தவரையும், குற்றம் சாட்டப்பட்டவரையும் ஒன்றாக வைத்து விசாரிப்பதில் சங்கடங்கள் உண்டு. ஒருவரை ஒருவர், குறுக்கு விசாரணை, நேருக்கு நேராக செய்வதும் பிரச்சனைகளை உண்டாக்கும். தனித் தனியாக விசாரிப்பதும், ஒருவர் கேட்க விரும்பும் கேள்விகளை எழுதி வாங்கி, கமிட்டியே மற்றவரிடம் கேட்பதும் போன்ற சில வேறு பட்ட முறையை, விசாரணையின் போது கடைப்பிடிக்க வேண்டும். அந்தந்த புகார் கமிட்டியின் புரிதலுக்கும், முடிவுக் கும் இதை விடாமல், சட்டத்திலேயே விசாரணை முறை இடம் பெறுவது தெளிவை உண்டாக்கும்.
                புகார் நிலுவையில் இருக்கும் போது, புகார்தாரர் கோரினால், அவரையோ, குற்றம் சாட்டப்பட்டவரையோ இடமாற் றம் செய்யலாம். புகார்தாரருக்கு விடுப்பு கொடுக்கலாம். இது, ஏற்கனவே அவருக்கு உரிமையுள்ள விடுப்புக்குக் கூடுதலானதாக இருக்க வேண்டும். இக்காலத்தில், புகார் கொடுத்தவரை இடை நீக்கம் செய்வதோ, அவர் விருப்பத்துக்கு மாறாக இட மாற்றம் செய்வதோ கூடாது என்று மசோதா முன்மொழிவது சரியானதே.
                       90 நாட்களுக்குள் விசாரணை முடிய வேண்டும்; கமிட்டி கொடுக்கும் பரிந்துரையை 60 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம்/முதலாளி நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றவில்லை என்றால் சிறை தண்டனை/அபராதம் உண்டு என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
                      கொடுக்கப்பட்ட புகார் பொய்யென் றால், புகார் கொடுத்தவர் மீதும், தவறாக சாட்சி சொன்னால், சாட்சி சொன்னவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மசோதா கூறுகிறது. இது, புகார் கொடுக்க முன்வருபவர்களைத் தயங்கச் செய்யும் என்றும், நிரூபிக்கவில்லை என்றாலே புகார் பொய்யானதாகி விடுமா என்றும் பெண்கள் அமைப்புகளால் வலுவாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இது, விஷாகா தீர்ப்பின் சாராம்சத்துக்கு முற்றிலும் முரணானது. ஏற்கனவே, தமிழக அரசின் ஆணையில் இந்த அம்சம் இடம் பெற்ற போது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து, பின்னர், மகளிர் ஆணைய மும் ஆட்சேபணை தெரிவித்து, இந்த ஷரத்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. அது, தற்போது மசோதாவில் இடம் பெற்றிருப்பது ஆபத்தானது. மற்ற சட்டங்களில் இத்தகைய பிரிவு இல்லை. குற்றம் உண்மையா, பொய்யா என்று தான் பார்க்கப்படும். நிரூபிக்கப்பட்டால் தண் டனை, நிரூபிக்கப்படவில்லை என்றால், வழக்கு தள்ளுபடி செய்யப் படும். அவ் வளவு தான். குற்றம் சாட்டப்பட்டு, பின் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டவர், அடுத்து மான நஷ்ட வழக்கு வேண்டு மானால் தொடுக்கலாம். நிலைமை இப் படியிருக்க, இந்த சட்டத்தில் மட்டும், ஏன் புகார் கொடுப்பவருக்கு இந்த மிரட்டல்? நிலைக் குழு, இந்தப் பிரிவை முற்றாக நீக்க வேண்டும் என்று பரிந்துரைத் துள்ளது.

முதலாளி / நிறுவனத்தின் கடமை
                வரும் முன் காப்போம் என்ற அடிப்படை யில், புகார் கமிட்டி மற்றும் தொடர்புள்ள விவரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்துவது, இக்குற்றம் நடக்காமல் இருக்க பயிற்சிகள்/கூட்டங்கள் நடத்துவது, பாதுகாப்பான வேலைச்சூழலை உருவாக்குவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட பெண் கிரிமினல் புகாரை காவல்துறையிடம் கொடுக்க விரும்பினால், அதற்கு உதவுவது போன்றவற்றையும் செய்ய வேண்டும்.
                      தேசிய/மாநில மகளிர் ஆணையங் கள், இச்சட்ட அமலாக்கத்தைக் கண்காணித்து, பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
                    ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதையும் ஆராய வேண்டும் என்று நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இச்சட்டம், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டம். பல்லாண்டுகளாகப் பெண்கள் அனுபவித்து வந்த, சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத இந்தக் கொடுமையை அங்கீகரித்து, பல கட்டப் போராட்டங்கள் நடத்தியபின் வந்து கொண்டிருக்கிற சட்டம். இதில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் மனுவுக்கு மேல் மனு கொடுக்கிறது என்பதற்காக இதை இணைத்தால், போட்டி புகார்கள் கொடுக்கப்படும். பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்கொள்வதன் மீதான அழுத்தம் குறையும். எனவே, இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
                           தேவைப்படுகிற திருத்தங்களுடன் இச்சட்டத்தை நிறைவேற்றி, விதிமுறைகளை உடனடியாக உருவாக்கி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று, அமலாக்கத்தைத் துவக்க வேண்டும். சட்டம் முறையாக வந்தாலும், அதை அமல்படுத்துவதற்கான போராட்டம் காத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம். இருப்பினும் வருகிற சட்டம் சிறந்த ஆயுதமாக இருப்பது, போராட்டத்தை வலுப்படுத்தும்.

திங்கள், 19 டிசம்பர், 2011

அன்று ஜெயலலிதா செய்ததை இன்று சசிகலா செய்தார் - அபூர்வ நட்பு உடைந்து போனது...!

           சரியாக 24 ஆண்டுகளுக்கு முன் 1987 - ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களின்  மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஜெயலலிதா புதிய சக்தியாக உருவெடுத்தார். எம்ஜியாரால் ஆரம்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட  கட்சியை கைப்பற்றவும், அவர் விட்டுச்சென்ற ஆட்சியை கைப்பற்றவும் ஒரு தனி ஆளாக பல்வேறு முயற்சிகளை செய்த போது, மன்னார்குடியிலிருந்து வந்த  சசிகலாவை தன் உற்ற தோழியாக - நம்பிக்கைக்குரிய தோழியாக தனக்கு அருகிலேயே வைத்துக்கொள்ளத் தொடங்கினார்.  இவர்களது இந்த நட்பு என்பது  நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து  உச்சத்தை அடைந்தது. 
      
              இதற்கிடையில், ஜெயலலிதா எண்ணியபடி கட்சியும், பிறகு ஆட்சியையும் ஒவ்வொன்றாக அவரது கைக்கு வந்து சேர்ந்தது.    கடந்த  இரண்டு முறையும்  ஜெயலலிதா முதலமைச்சராக பணியாற்றிய போதும், தற்போது முதலமைச்சராக பணியாற்றும் போதும் சசிகலாவின் அறியுரையின்படியும் ஆலோசனையின்படியும் தான் ஆட்சியினை நடத்தி சசிகலா ஜெயலலிதாவிற்கு நெருக்கமானார்.     இப்படியாக ஆலோசகராகவும், ராஜதந்தரியாகவும்  விளங்கிய சசிகலாவின் நட்பு 30 ஆண்டுகளை கடந்துவிட்டன.
                இந்த முப்பது ஆண்டுக்காலங்களில் தான், சசிகலா தன்னுடைய உறவினர்களை ஒவ்வொருவராக  அதிமுக கட்சியிலும், ஜெயலலிதாவின் வீட்டிலும் திறமையாக சேர்த்துவிட்டார். அப்படித்தான் தன் அக்காள் மகன் சுதாகரை ஜெயலலிதாவின் வாயாலேயே வளர்ப்பு மகன் என்று அறிவிக்கச்செய்தது மட்டுமின்றி உலகமே திரும்பிப்பார்க்கும்படி ஒரு இளவரசரின் திருமணம் போல்  ஜெயலலிதாவாலேயே நடத்தவும் செய்தார். இந்தச் செயல்களால் இன்றைக்கு ஜெயலலிதாவை  நீதிமன்றத்திற்கும் நடக்கவைத்திருக்கிறார்.
                   இவைகளெல்லாம் எப்படியாவது போகட்டும். மேலே சொன்ன அனைத்தும் ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்டதும், ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரமும் ஆகும். 
                   இங்கே நாம் பார்க்கவேண்டியது என்னவென்றால், நட்பு என்பது வீட்டுவாசல் வரை தான். அது ஆட்சி செய்யும் கோட்டைக்கும்  வரக்கூடாது.
                             தற்போது மூன்றாவது முறையாக ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்து, ஆட்சி - அதிகாரத்தில் அவரது அன்புத்தோழி சசிகலாவின்  தலையீடு என்பது கட்டுக்கடங்காமல் வரம்புமீறி சென்றிருக்கிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட அல்லாத சசிகலா ஆட்சி - அதிகாரங்களில் தலையிடுவது  என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 
                  இப்படியாக  சசிகலாவின் தலையீட்டை தாக்குப்பிடிக்க முடியாதாது மட்டுமல்ல,  அன்று ஜெயலலிதா செய்தது போலவே கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற திட்டம் போட்டதாலும்     கோபமுற்ற  ஜெயலலிதா அவரையும் அவரது கணவர் உள்ளிட்ட  குடும்ப உறுப்பினர்கள்    அனைவரையும்  கட்சியிலிருந்து  நீக்கியுள்ளார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவின்றன. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக இருந்த அன்புத்தோழி சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேறிவிட்டார்.  
                     இனி ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் கொண்டாட்டம் தான் போங்கள். கொஞ்ச காலத்திற்கு இந்த செய்தியும், பட்டிமன்றமுமாகத் தான் இருக்கும். 

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு நாட்டின் மக்கள் தலைவர் கிம் ஜோன்கில் மறைந்தார் - அமெரிக்கா கழுகு கிழக்காசியாவில் வட்டமிடுகிறது...!

 
அமெரிக்காவின் 
சிம்மசொப்பனம் - 
கொரிய குடியரசு 
மக்கள் தலைவர் 
மறைந்தார்...
 
                                  
 
       வடகொரியா என்று அழைக்கப்படும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு நாட்டின் மக்கள் தலைவர்  கிம் ஜோன்கில், உயர் ராணுவ  ஆய்வுப்பணியில் இருக்கும் போது சென்ற டிசம்பர் 17 - ஆம் தேதி தன்னுடைய 69 - வது வயதில்   மாரடைப்பால் காலமானார் என்று வடகொரியா தொலைக்காட்சி செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. கொரியா தொழிலாளர் கட்சியின் தலைவராகவும், நாட்டின் அதிபராகவும், நாட்டின் ராணுவத்தளபதியாகவும்   பணிசெய்து, தேசத்தின் சுயசார்பு மற்றும் வளர்ச்சிக்கு உழைத்தவர். ''மாபெரும் தலைவர்'' என்றும், ''அன்புத் தலைவர்'' என்றும், ''தேசத்தின் தந்தை'' என்றும், ''இரும்பு தளபதி'' என்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட  கிம் ஜோன்கிலின் மறைவு என்பது வடகொரியா மக்களிடையே சோகத்தை உண்டாக்கியிருக்கிறது. இவரது இறப்பு கொரிய தொழிலாளர் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகவும், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய சோகமாகவும் கருதப்படுகிறது.
                   ஏகாதிபத்திய சூழ்ச்சியினால் சோவியத் யூனியன் உள்ளிட்ட சோஷலிச நாடுகளெல்லாம் சிதறுண்டு போன சூழ்நிலையில், அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக இருக்கும் சோஷலிச நாடுகளில் வடகொரியாவும்  ஒன்று. மக்கள் சீனம், கியுபா குடியரசு, சோஷலிச வியட்நாம் வரிசையில் இன்று இந்த கொரிய குடியரசு நாடும் விளங்குவதில் கிம் ஜோன்கிலின் பங்கு மிக அதிகம். இவரது குன்றாத தேசபக்தியும், அயராத உழைப்பும் வடகொரியாவை வீரத்தின் விளைநிலமாக மாற்றியிருக்கிறது.  அதனால் தான்,  வடகொரிய ராணுவம் உலகத்திலேயே நான்காவது இடத்தில் உயர்ந்தியிருப்பதால்,  வடகொரியா அமெரிக்காவிற்கு நீண்ட கால சவாலாக இருந்துவருகிறது. 
                 கிம் ஜோன்கில் அமெரிக்காவிற்கு அடங்கி நடக்காததால், அமெரிக்காவும், அமெரிக்க அடிவருடி நாடுகளும் இவரை சர்வாதிகாரி என்றே அழைக்கின்றனர். அதனால் அமெரிக்க நாசப்படுத்தத் துடிக்கும் நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. எனவே கிம் ஜோன்கில் இறப்பில் ஏதாவது இலாபம் காண முடியுமா என்று அமெரிக்க கழுகு கிழக்காசியாவின் மேல் வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. இந்த பகுதிகளில் குழப்பம் விளைவிக்க, அமெரிக்கா அதிபர் ஒபாமா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு ராணுவங்களை தயார்படுத்தி வைக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார். அதனால் வடகொரியாவை ஒட்டிய தென்கொரிய எல்லைப்பகுதிகளில் ராணுவம் உஷார்நிலையிலும்,  பதட்டமான நிலையிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது.
             என்ன நடக்கப்போகிறது என்று உலகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.

சனி, 17 டிசம்பர், 2011

சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது - இது சரியோ...? இது முறையோ...?

                    சூதாடிகளுக்கும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் இந்தியாவின் மிக உயரிய பரிசு ''பாரத ரத்னா''  விருது கொடுப்பது சரிதானா..? முறை தானா...?  
              சச்சின் ஒரு விளையாட்டு வீரர். அதுவும் உலகம் முழுதும் அனைவராலும் விளையாடப்படும் விளையாட்டுமல்ல... உலகம் முழுதும் பரவிக்கிடக்கும் விளையாட்டுமல்ல... வெறும் பத்து நாடுகளில் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு தான் இந்த கிரிக்கெட் விளையாட்டு. அதனால் தான் ஒலிம்பிக் போட்டி போன்ற உலக அளவிலான போட்டிகளில் இதுவரை கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை.
                அப்படிப்பட்ட விளையாட்டில் சாதனை செய்தாரா என்றால்... சாதனை செய்திருக்கிறார்... நாமெல்லாம்  பெருமைப்படத்தக்க அளவில் சாதனை புரிந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அனால் அவை அத்தனையும் ஒரு  தனிமனித சாதனை... 
             அவர் அப்படிப்பட்ட சாதனைகள் புரிவதற்காகவே, ஆட்சியாளர்களால் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு செய்திருக்கும் சாதனைகள் தான் அத்தனையும். இதே போல் வாய்ப்புகள்  கிரிக்கெட் ஆடும் அத்தனைப் பேருக்கும் கொடுக்கப்பட்டால் அவர்களும் தனிமனித சாதனைகளை அவர்களது ஆட்டத்தில் செய்துகாட்டுவார்கள்.
                 அதுமட்டுமல்ல, இன்றைக்கு உலகமய சூழலில் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக கிரிக்கெட் என்பது ஒரு சூதாட்டமாக மாறிவிட்டா சூழலில் - கிரிக்கெட் என்பது பணம் கொட்டுகிற விளையாட்டாக மாறிவிட்ட சூழ்நிலையில்  கிரிக்கெட் என்பது சாதனை படைக்கும் களமாக இல்லாமல், மனம் சேர்க்கும் - சொத்து சேர்க்கும் கஜானாவாக மாறிவிட்டது. 
               அப்படி சம்பாதித்த பணத்திற்கு சச்சின் போன்ற கிரிக்கெட் வீரர்கள் அரசுக்கு கட்டவேண்டிய வரியை சரியாக - முறையாக - நியாயமாக கட்டியிருப்பார்களா....? என்றால்... இல்லை... இல்லவெ இல்லையெ...! இவர்களுக்கு அரசாங்கமே இவர்களுக்கு கொடுக்கும்  வரிச்சலுகையை இவர்கள் அனுபவிப்பது மட்டுமல்லாது... தங்களுக்கு வரும் வருமானத்தை முறையாக அரசுக்கு காட்டுவதுமில்லை.... முறையாக கட்டவேண்டிய வரியையும் இதுவரை கட்டியதுமில்லை...
              இவர் ஒரு நேர்மையான இந்திய குடிமகன்  இல்லை என்பதுமட்டுமல்ல, ஓர் உண்மையான இந்திய குடிமகனாகவும் அவர் நடந்துகொள்ளவில்லை என்பதையும் இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். பெப்சி, பூஸ்ட், மெட் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இவர் தான் நிறுவனத் தூதராக இருந்து, அந்த கம்பெனிகளின் விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தவர் என்பதையும் இந்த நாடு அறியும். இப்படிப்பட்டவர் எப்படி ஓர் உண்மையான இந்தியக் குடிமகனாக இருக்கமுடியும் என்று சொல்லுங்கள்.
              இப்படிப்பட்டவருக்குத் தான் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டால் அது எப்படி சரியாக இருக்கும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
             இதுவரை கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொது சேவை துறையில் சாதித்தவர்கள் மட்டுமே பாரத ரத்னா விருது பெற முடியும் என்ற விதி நடைமுறையில் இருந்துவந்தது. பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதை பெற முடியும் என்று விதியில் மாற்றம் செய்யப்பட்டு சென்ற நவம்பர் 16-ம் தேதி அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய  விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
            இப்படிப்பட்ட இவருக்கு தான், இந்த உயரிய விருதினை தருவதற்காகவே, பாரத ரத்னா விருது பெறுவதற்கான விதியில் மத்திய அரசு இப்போது புதிய திருத்தம் செய்துள்ளது. விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கும் பாரத ரத்னா பரிசு வழங்க தான் இந்த மாற்றம் என்று பொதுவாக சொல்லியிருந்தாலும் அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் டெண்டுல்கருக்காக தான் இந்த மாற்றம் என்றால் அதில் நியாயம் இல்லை.
                             சென்ற 1954-ம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. மக்களை பற்றி சிந்தித்தவர்களும், தேசத்தை பெருமைக்குல்லாக்கியவர்களுமான சர் சி.வி.ராமன், சி.வி.ராஜகோபாலாசாரி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்  ஆகிய  இவர்களில் தொடங்கி, இதுவரை 41 பேருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.
             கடந்த காலங்களில் இந்த உயரிய விருதினை ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், அமார்த்தியா சென், ஜெயபிரகாஷ் நாராயண், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் அம்பேத்கர், எம். எஸ். சுப்புலட்சுமி, பண்டிட் ரவி சங்கர், உஸ்தாது பிஸ்மில்லாகான், மொரார்ஜி தேசாய், எம். ஜி. ராமச்சந்திரன், ராஜீவ் காந்தி,  லதா மன்கேஷ்கார், அன்னை தெரசா, கான் அப்துல் காபார் கான், நெல்சன் மண்டேலா.... போன்ற உலகின் - தேசத்தின் - சமூகத்தின் உயர்ந்த தலைவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த உயரிய விருதினை பெறுவதற்கு சச்சின் டெண்டுல்கருக்கு மேலே சொன்னவர்களில் ஏதாவது ஒரு தகுதியாவது உண்டா...? என்பதை அவரே தன்னை எடைபோட்டுப்பார்க்கவேண்டும்.