புதன், 7 டிசம்பர், 2011

தமிழக - கேரள ''தலைவர்களே''.... அமைதிக்கு உருப்படியாய் வழிகாட்டுங்கள்...!


முல்லை பெரியாறு :                                                   ஒற்றுமையையும்,                                         ஒருமைப்பாட்டையும் 
காக்கட்டும்...!
                                                              
                       
             கடந்த சில நாட்களாகவே தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் இருந்து வருகின்ற செய்திகள்  என்பது மிகுந்த வருத்தத்தை தான் உருவாக்குகின்றன. இரு மாநில மக்களிடையே பகைமை வளர்ந்து பதட்டம் மேலோங்கி  உள்ளது. கேரளாவில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கடைகளை நொறுக்குவதும்,  சபரிமலைக்கு செல்லும் பக்தர்களை தடை செய்வதும்,  தமிழகத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்புவதுமான தமிழக மக்களுக்கு கோபத்தை உண்டுபண்ணக்கூடிய செயல்களில் கேரள மக்கள் ஈடுபடுவதும், பதிலுக்கு தமிழகத்தில் கேரளாவைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களை தாக்குவதும், கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்துவதும், கேரளாவுக்கு வழக்கமாய் செல்லும் பால், காய்கறிகள் போன்ற உணவுப்பொருட்களை தடை செய்வதுமான கேரள மக்களுக்கு கோபமூட்டக்கூடிய செயல்களில்  ஈடுபடுவதும் என்பது நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் விரும்புகிற யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாகும்.
             அமைதிக்கு வழிகாட்டவேண்டிய இரு மாநிலத் தலைவர்களே அமைதிக்கு கேடுவிளையும்படி பேசுவது என்பது தேசத்துக்கு நல்லதல்ல என்பதை உணரவில்லை என்பதும் வருத்தமளிக்கும் விஷயமாகும். பாராளுமன்ற மாநிலங்களவையில் இந்த இரு மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோதிக்கொள்கிறார்கள். கேரளா மற்றும் தமிழகத்திலுள்ள  தலைவர்கள் தங்கள் இஷ்டப்படியெல்லாம் அறிக்கைகளை விட்டு இரு மாநில மக்களையும் கொந்தளிக்க செய்து அதில் அரசியல் வியாபாரம் செய்வதும், அதை இரு மாநில அரசுகளும் மற்றும் மத்திய அரசும் மெத்தனமாக வேடிக்கைப்பார்ப்பதுமாக  தான் இருக்கிறார்கள்.
               இவ்வளவு  பிரச்சனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போல் பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு தன் கடமையை ஆற்றியிருக்கிறார். இங்கே தமிழக  மக்களின் உயர்வுக்காக அவதாரம் எடுத்த ''தமிழினத்தலைவர்கள்'' வைகோ, ராமதாசு, திருமாவளவன், சீமான், விஜயகாந்த் போன்றவர்கள் வழக்கம் போல் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுகிற வேலையை செய்துகொண்டிருக்கின்றனர். 
                தமிழக மக்களை உசுப்பேற்றி விடும் வேலைகளை தான் இவர்கள் செய்கிறார்கள். இவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்கள். ''இந்தியா உடையும்... துண்டாகும்..'' போன்ற வைகோவின் பிரிவினைவாத பேச்சுக்களும், இரு மாநில பேச்சுவார்த்தைகளில் தமிழகம் கலந்துகொள்ளக்கூடாது என்று ராமதாசும், விஜயகாந்தும் சொல்லும் கருத்துக்களும் - அனைத்தும் கண்டிக்கத்தக்கவையாகும்.  தமிழக மக்கள் இவர்களின் வார்த்தைகளை நிராகரித்து தூக்கி எரியவேண்டும்.
                   மத்திய அரசு மேலும் கண்டுகொள்ளாமல் இருந்தால் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், அமைதிக்கும் குந்தகம் விளையும்படியான மோசமான நிலைமைக்கு நாடும், நாட்டு மக்களும் தள்ளப்படுவார்கள். எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, அணையின் பலம் பற்றிய கேரள மக்களின் பயத்தை போக்குவது பற்றியோ அல்லது அணையின் உறுதியை  நிரூபிப்பது பற்றியோ அல்லது புதிய அணை தேவைக்கான நியாயத்தை பற்றியோ... எதுவாக இருந்தாலும் நடுநிலையோடு மத்திய அரசு அறிவுப்பூர்வமாக - அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து  முடிவெடுக்கவேண்டும் என்பதே அமைதியை விரும்பும் இரு மாநில மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

2 கருத்துகள்:

Gurumurthy சொன்னது…

Sensible concern expressed and constructive suggestions given by the author. Well done Ramji. Congrats.
- J.Gurumurthy

பெயரில்லா சொன்னது…

neengal edhirpaarppadhupol avvalavu elidhil madhdhiya arasu ondrum pesadhu vendumendral ranuvaththai anuppum nam pakkaththu maanilamana andhiravil nadakkavillaya adhupolathan idhuvum nandri