புதன், 21 டிசம்பர், 2011

''ஜன கன மன'' - ஓங்கி ஒலித்து நூறாண்டுகள்....!


''ஜன கன மன'' - 
100 ஆண்டுகள் 


                      ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஒன்றாய்  சேர்த்து  நம்  பள்ளிப்பருவத்திலேயே நமக்கு  கற்றுக்கொடுத்தது நம் நாட்டின் தேசியகீதமான ''ஜன கன மன'' தான்.   இது நாம் சிறுகுழந்தையாய் பள்ளிக்குள் அடியெடுத்து வைக்கும் போதே - நாம் எழுத்துக்களை எழுதக் கற்றுக்கொள்ளும் போதே, நம் காதில் வாங்கி பொருள் புரியாமல் நாம் பாடிய பாடல். பிறகு நாமே படித்து பார்த்து, அதில் புதைந்திருக்கும் பொருள்களை புரிந்துகொண்டு மெய்சிலிர்த்தப் பாடல் இது. ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நமக்கெல்லாம் ஊட்டியப்பாடல் இது.  இது தான் நம் தேசத்திற்கு ரவீந்தரநாத் தாகூர் அவர்களால் கொடுக்கப்பட்ட தேசியகீதம். இந்த பாடல் நம் நாட்டின் விடுதலை போராட்டத்தில் ஓங்கி ஒலித்து  இன்று - டிசம்பர் 27 - அன்று நூறாண்டுகள் ஆகின்றது என்பது நமக்கெல்லாம் பெருமையளிக்கும் தகவலாகும். நாம் வாழும் காலத்தில் நமக்கு கிடைத்த பெருமை இது.
               தாகூர்  ''பாரத விதாத்'' என்ற தலைப்பிட்டு எழுதிய இந்தப் பாடல்  முதன் முதல்   அன்றைய கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் 1911 - ஆம் ஆண்டு டிசம்பர் 27 - அன்று தேசபக்த பாடலாக பாடப்பட்டது. பிறகு சுதந்திர இந்தியா 1950 - ஆம் ஆண்டு ஜனவரி 26 - ஆம் நாள் குடியரசு நாடாக அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே 24 - ஆம் தேதியன்றே இந்திய அரசாங்கத்தால் இந்தப் பாடல்  தேசியகீதமாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பாடப்பட்டது.
             வங்க எழுத்தாளர்  பன்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ''வந்தேமாதரம்'' பாடல் சுதந்திரப்போராட்டக்காலத்தில் மக்களிடத்தில் எந்த அளவிற்கு எழுச்சியை உண்டாக்கியதோ அதே அளவிற்கு வங்க கவிஞன் தாகூர் எழுதிய ''ஜன கன மன'' பாடலும் மக்களிடத்தே எழுச்சியையும், தேசபக்த உணர்வையும் எழுப்பியது.  நம் தேசத்தின் விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது மட்டுமல்ல, இன்றைக்கு தேசியகீதமாக நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்குவகிக்கும் ''ஜன கன மன'' பாடலின் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாட விழா எடுப்போம். 
                ''வந்தேமாதரம்'' பாடலின் நூற்றாண்டினை சென்ற 2006 -ஆம் ஆண்டு செப்டம்பர் 7 - தேதி அன்றைய காங்கிரஸ் தலைமையிலான  மத்திய ஆட்சியாளர்கள் அரசு விழாவாக கொண்டாடினர். பாரதீய ஜனதா கட்சி கூட அதில் ஆர்வம் காட்டியது.  அது ஒரு தேசபக்த விழாவாக அல்லாமல்  அரசியல் ஆதாயம் தேடும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் நாட்டை இன்றைக்கு தலைமை வகித்து ஆட்சி நடத்தும் ''இன்றைய வீணாப்போன காங்கிரசுக்கு'' ஜன கன மன'' வரலாறு தெரியுமா என்றே தெரியவில்லை. தேசத்தை விலை பேசி விற்கும் இந்த கூட்டத்திற்கு தேசத்தின் வரலாறு தெரிந்திருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை தான்.  
                 இந்திய நாட்டின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் சீர்குலைந்து வரும் இன்றைய  சூழ்நிலையில்  ''ஜன கன மன'' - நூற்றாண்டு விழா மிகவும் அவசியமானது.   ஆண்டு முழுதும் இந்த பாடலை  தேசபக்தியோடு நாடு முழுதும் ஓங்கி ஒலிக்கச் செய்யவேண்டும்.   

கருத்துகள் இல்லை: