சனி, 30 நவம்பர், 2013

நரேந்திர மோடியின் தள்ளி வைக்கப்பட்ட மனைவி....!

புதன், 20 நவம்பர், 2013

கழிப்பறை வசதியும் மனித உரிமையே - அதை கொடுக்கவேண்டியது அரசின் கடமையே...!

             

            நேற்றைய தினம் நவம்பர் 19 ''உலக கழிப்பறை தினமாக'' அனுசரிக்கப்பட்டது. இந்த நாளை ஐக்கிய நாடுகள் சபையினால் ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறையின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தவே பிரத்தியேகமாக நவம்பர் 19 - ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டு நடத்தப்பட்டது. திறந்தவெளிக் கழிப்பிடங்களினால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டையும், கழிப்பறையின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு உணர்த்துவதற்கான ஒரு ஏற்பாடு தான் இந்த நாள். நம் நாட்டைப் பொருத்தவரை கழிப்பறை பிரச்சனை என்பது ஒரு ''தேசியப் பிரச்சனையாக'' இருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் கடந்தும்,  பல்வேறு பெருமைமிக்க அறிவியல் வளர்ச்சிகளை கண்டும்,  உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் நம் தேசத்தில் ''திறந்தவெளிக் கழிப்பிடம்''  என்பது ஒரு ''தேசிய அவமானம்'' தான் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. இன்றைக்கு இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் சுமார் 62 கோடி பேர் கழிப்பறை வசதியில்லாமல் அவதிப்படுகிறார்கள் என்பது நாமெல்லாம் வெட்கப்படவேண்டிய விஷயமாகும். இதில் பெண்கள் சாலையோரங்களிலும், ரயில் பாதையோரங்களிலும், புதர்களின் மறைவிடங்களிலும் இருள் சூழ்ந்த நேரங்களில் அன்றாடம் மிகுந்த சிரமங்களுக்கிடையில் திறந்தவெளிக் கழிப்பிடங்களை பயன்படுத்தி கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என்பதை நினைக்கும் போது நமெக்கெல்லாம் தலைக்குனிவாய் இருக்கிறது. ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரை எத்தனையோ ஆட்சியாளர்களை நாம் பார்த்துவிட்டோம். அவர்கள் எல்லோரும் வந்தார்கள்... ஆண்டார்கள்... சென்றார்கள். ஆனால் ஒருவரும் இந்த கழிப்பறை பிரச்சனையைத் தீர்ப்பதற்கு எந்த திட்டமும் தீட்டவில்லை. சென்ற ஆண்டு மன்மோகன் சிங் அரசு இந்திய பெருமுதலாளிகளுக்கு 5இலட்சம் கோடி அளவிற்கு வரிச்சலுகைகளையும், மானியங்களையும் அளித்தார். அதில் ஒரு சிறு பகுதியை இந்த இல்லாதப்பட்ட ஜெனங்களுக்கு கழிப்பறைக் கட்ட செலவு செய்திருந்தால் நாட்டிலுள்ள அத்தனை வசதியற்ற மக்களும் கழிப்பறை பெற்றிருப்பார்கள். திறந்தவெளிக் கழிப்பிட கொடுமைகளிலிருந்து விடுபட்டிருப்பார்கள்.

கடந்த 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று ஐக்கிய நாடுகள் சபை ''மனித உரிமை பிரகடனம்'' ஒன்றை வெளியிட்டது. அதில் 30 ஷரத்துகள் உள்ளன. அவை அத்துனையும் என்ன சொல்கிறது என்றால், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்பு - இவை அத்தனையும் உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமைகளாகும். இந்த உரிமைகள் அத்தனையையும் உலகத்திலுள்ள  நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு கட்டாயமாக அமைத்துத் தரவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது. அதனால் தான் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 - ஆம் தேதி ''மனித உரிமை தினம்'' கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவிலும் அந்த நாளை கடைபிடிப்பதோடு சரி... அடிப்படை உரிமைகளை மக்களுக்கு அளித்து நடைமுறைப்படுத்தும் எண்ணம் எந்த அரசுக்கும் இல்லை என்பது தான் உண்மை. அதிலும் குறிப்பாக கழிப்பறை என்பது மனித உரிமை என்பதையும், அதை கட்டாயமாக அனைத்து மக்களுக்கும் அளிக்கவேண்டியது அரசின் கடமை என்பதையும் அரசும் மக்களும் உணரவேண்டும். அதுவரையில் திறந்தவெளிக் கழிப்பிட பழக்கத்தை - கொடுமையை ஒழிக்கமுடியாது. 
           

திங்கள், 18 நவம்பர், 2013

சச்சின் கிரிக்கெட்டில் ரத்தினம் தான், ஆனால்.....?

 கட்டுரையாளர் : அ. குமரேசன்,            
                                 பத்திரிக்கையாளர்                       
           இந்திய விளையாட்டுக் களத்தில், அதிலும் கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுல்கர் நிச்சயமாக ஒரு ஒளிவீசும் ரத்தினம்தான். தனது ஆட்டமுறைக்கு என உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றிருக்கிற, இந்தியாவில் கோடிக்கணக்கானவர்களை பக்தர்களாகவே பெற்றிருக்கிறவர் அவர்.
              ‘பாரத ரத்னா’ விருதினை அரசு அறிவிக்காமலே விட்டிருந்தாலும் அவருக்கு அந்த அன்பை விடவும் பெரிய விருது எதுவும் இருக்கப்போவதில்லை. இந்தியாவில் கிரிக்கெட் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருப்பதில், அவரது திறமையும் நுட்பமும் மிக்க பங்களிப்பு தலையாய ஒன்று. அதனால்தான், ஓய்வு பெறுவதற்கு முந்தைய தனது கடைசி ஆட்டத்தின் முடிவில், அவ்வளவு பெரும் மக்கள் திரள் முன்னிலையில் அவர் கண்ணீருடன் விடைபெற்றபோது, அதைத் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்த அனைவருமே உணர்ச்சிவசப்பட்டார்கள்.
              பொதுவாக இப்படிப்பட்ட விருதுகள் ஒருவர் ஓய்ந்து ஒதுங்கி மறக்கப்பட்ட பிறகுதான் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் சச்சின் புகழ் வெளிச்சத்தில் இருக்கிறபோதே, துடிப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறபோதே, இளமை வயதின் விளிம்பில் நிற்கிறபோதே இந்த விருது வழங்கப்படுகிறது. அதுவும், அவர் அவ்வாறு ஓய்வு பெற்ற நாளிலேயே பிரதமர் இதை அறிவிக்கிறார்.
            இது நம் நாட்டிற்கு ஒரு மாறுபட்ட அனுபவம்தான்.ஆயினும், நாட்டின் மிக உயர்ந்த விருது சச்சினுக்கு வழங்கப்படுவதில் உள்ள சில உறுத்தல்களைக் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது.முதலில் சொல்ல வேண்டியது, இவரோடு சேர்த்து ‘பாரத ரத்னா’ அறிவிக்கப்பட்டுள்ள மூத்த அறிவியலாளர் சி.என்.ஆர். ராவ் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவரது முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருப்பது.
        திட வேதியல் துறை அறிவியலாளரான அவர் இங்கே அடிப்படை வேதியியல் கல்வியைக் கட்டிக்காப்பதில் முன்னின்றவர். அவரது ஆராய்ச்சி நூல்களும், பல ஆய்வு நிறுவனங்களை உருவாக்கிய முயற்சிகளும் நாட்டின் அறிவியல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை.
            இந்தியாவின் சுயமான எதிர்கால முன்னேற்றத்தில் அறிவியலுக்கு உள்ள இடத்தைப் புரிந்துகொண்டவர்கள் அனைவரும் ராவ் இந்த விருதைப் பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள். இளம் அறிவியலாளர்கள் இதனால் ஊக்குவிக்கப்படுவார்கள், அது அறிவியல் வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அவருக்கு மட்டுமேயாக இப்போது இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தால், அதையொட்டி அவரைப் பற்றியும், அறிவியலைப் பற்றியும் நாடு முழுவதும் இப்போது பேசப்பட்டுக்கொண்டிருக்கும். ஆனால், சச்சின் கழுத்தில் போடப்படும் மாலைகளின் குவியலுக்கு அப்பால் அறிவியலாளரின் சிறப்பு ஓரங்கட்டப்படுவது ஆரோக்கியமானதுதானா?சச்சினுக்கு இந்த விருதை வழங்க வேண்டும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே கோரிக்கைகள் எழுந்தன.
             அடுத்தடுத்து விரைவாக, விளையாட்டுத் துறையினருக்கும் வழங்கத்தக்க வகையில் பாரத ரத்னா விதிகள் திருத்தப்பட்டதிலும், அவர் ஓய்வுபெறுவதையொட்டி உருவான உணர்ச்சிமயமான சூழலுக்காகக் காத்திருந்து அறிவிக்கப்பட்டதிலும் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழவே செய்கிறது.
               அரசியல் உள்நோக்கம்தான் இருக்கிறது என்று நேரடியாகக் கூற முடியாவிட்டாலும், கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பைப் பெற்றவருக்கு இந்த விருதை அளித்ததன் மூலம் அந்தக் கோடிக்கணக்கானோரின் ஆதரவைத் தன் பக்கம் இழுக்க முடியாதா என்ற உள்நோக்கம் இல்லவே இல்லை என்றும் கூறிவிட முடியாது. இப்படிப்பட்ட உத்திகளில் காங்கிரசார் கரைகண்டவர்களாயிற்றே!ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான சேவைகள் என்ற அடிப்படையில் இல்லாமல், தனிப்பட்ட சாதனைகளுக்காக மட்டும் நாட்டின் உயர்ந்த விருதை வழங்குவது பற்றிய வினாக்களும் புறப்படத்தான் செய்கின்றன.
               நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சச்சின் அங்கே மக்கள் பிரச்சனைகள் பற்றிப் பேசியிருக்கிறாரா? விளையாட்டுத்துறையில் மலிந்திருக்கிற பிரச்சனைகள் பற்றியோ, நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள் பற்றியோ கருத்துக் கூறியிருக்கிறாரா? நாடாளுமன்றத்திற்கு வெளியே, ஐபிஎல் தில்லுமுல்லுகள் உள்ளிட்ட விவகாரங்களிலும் இதர சமூக நிகழ்ச்சிப்போக்குகளிலும் எந்த அளவுக்குத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்? 1992ல் அயோத்தி அக்கிரமத்தைத் தொடர்ந்து மும்பையில் மதவெறிக் கும்பல் சூலாயுதங்களோடு தெருவில் இறங்கியபோது, சுனில் கவாஸ்கர் அவர்களைத் தடுத்து நிறுத்தி சிறுபான்மை மக்களுக்கு அரணாக நின்றது நினைவுக்கு வருகிறது.
   கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தக விளம்பரச் சரக்காகவும் தன்னை உருவாக்கிக்கொண்டவர் சச்சின். விளையாட்டின் மூலமாகவும் விளம்பரங்களின் மூலமாகவும் கோடிக்கணக்கில் பணம் ஈட்டினார். அதெல்லாம் அவரது திறமைக்கும் புகழுக்கும் கிடைத்த அங்கீகாரங்கள் என்றே வைத்துக்கொண்டாலும், அவரை அனைத்து இளைஞர்களுக்குமான முன்னுதாரணமாகக் கொள்ள முடியுமா? தலையிடத் துடிக்கும் சமூக அக்கறையோ தட்டிக் கேட்கும் அரசியல் விழிப்புணர்வோ இல்லாத தலைமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே கார்ப்பரேட் பிரம்மாக்களின் திட்டம்.
           அதைக் கட்டமைக்கிற வேலைக்கு இந்த நட்சத்திரமும் பயன்படுகிறாரே என்ற ஆதங்கம், சமுதாயத்தை அரசியல்படுத்த விரும்புகிற எவருக்கும் ஏற்படவே செய்யும்.கிரிக்கெட் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு, நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளும் தேசிய விளையாட்டும் கூட கடைக்கோடிக்கு ஒதுக்கப்பட்டதிலும், ஒற்றை ரசனையில் சமுதாயத்தை வார்க்கிற உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட் கனவான்களின் செயல்திட்டம் இருக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ அதற்கும் சச்சின் போன்றோர் உதவுகிறார்கள்.இதைச் சொல்வதால், சச்சின் என்ற கிரிக்கெட் நட்சத்திரத்தின் தனித்துவமான அசத்தல் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. விளையாட்டுத் துறை சார்ந்த அந்தச் சாதனைகளுக்கான உயர்ந்த அங்கீகாரம், இப்படிப்பட்ட விருதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
       ஏன், விளையாட்டுத்துறையைப் பிடித்துள்ள பல்வேறு நோய்களிலிருந்து அதனை மீட்பதற்கான உயர் பொறுப்புகளை, அதற்கான வயது இருக்கிறபோதே வழங்கலாமே? அது அவரைப் பெருமைப்படுத்தியதாகவும் இருக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு நிறுவனம் (பிசிசிஐ) உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளை மீட்கலாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துமே...அணியில் விளையாடிக்கொண்டிருந்தவர் என்ற முறையில் பல்வேறு பிரச்சனைகளில் அவரது மவுனம் புரிந்துகொள்ளத் தக்கதுதான்.
         இனியேனும் சமுதாயத்தைக் கண்கொண்டு பார்ப்பாரா....? மனம் திறந்து பேசுவாரா...? மாற்றமுயல்வோருக்குத் தோள் கொடுப்பாரா...? அப்படியெல்லாம் செய்வாரானால் ரத்தினம் பல மடங்கு ஒளி வீசும். பாரதம் பார்க்கத்தான் போகிறது.
நன்றி :

ஞாயிறு, 17 நவம்பர், 2013

இளம்பெண்ணை உளவு பார்த்த மோடியும், அவரது கூட்டாளியும்...!

        
          வர வர நமக்கெல்லாம் தலைகுனிவை ஏற்படுத்தும் ''பிரதமர் கனவு வேட்பாளர்'' நரேந்திர மோடியின் ''லீலைகளும்'' வெளியே வரத்தொடங்கிவிட்டன. ''கோப்ரா போஸ்ட்'' என்ற புலனாய்வு இணையதள ஊடகம் இந்த பரபரப்புச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
           2009 - ஆம் ஆண்டில் பெங்களூரிலிருந்து அகமதாபாத்திற்கு வருகை புரிந்த பெண் பொறியாளர் ஒருவரை குஜராத் மாநிலத்தின் மூத்த போலீஸ் அதிகாரி ஜி.எல்.சிங்கால் என்பவரின் தலைமையில் குஜராத் போலீசார் உளவு பார்த்துள்ளனர். அகமதாபாத்தில் அந்தப் பெண் சென்ற இடங்களிலெல்லாம் - விமான நிலையம், தங்கியிருந்த ஹோட்டல், உணவகம், ஷாப்பிங் மால், உடற்பயிற்சிக்கூடம், மருத்துவமனை என பல்வேறு இடங்களில் பின்தொடர்ந்து வேவு பார்த்துள்ளனர் என்பது அதிர்ச்சித் தரக்கூடிய  தகவல்களாகும். . வேவு பார்க்கப் பட்டதாகக் கூறப்படும் அந்த  பெண்ணின் பெற்றோர் குஜராத்தின் அகமதாபாத் நகரில் வசிப்பதாகவும்,  அவர்களைப் பார்க்க தான் அந்தப் பெண், பெங்களூரில் இருந்து அகமதாபாத் அடிக்கடி வந்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
            ''மேலிட உத்தரவின்'' பேரில், அப்போதைய உள்துறை அமைச்சரும், மோடியும் நெருங்கிய கூட்டாளியுமான அமித் ஷா தான் இந்த ''மானங்கெட்ட'' வேலைக்கு போலீசாரைப் பணித்ததாக அந்த இணையதள ஊடகம் சுட்டிக்காட்டுகிறது. தொலைபேசி உரையாடலிலும் ''மேலிட உத்தரவின்'' பேரில் தான் அந்தப் பெண் வேவு பார்க்கப்பட்டதாக மோடியின் கூட்டாளி அமித் ஷாவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்படியென்றால் ''மேலிடம்'' என்று சொல்லப்படுவது யார்....? குஜராத்தில் ''மேலிடம்'' என்று சொன்னால், சந்தேகமில்லாமல் அது நரேந்திர மோடியை தான் குறிக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. நிச்சயமாக வேறு யாரையும் குறிப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகவே இளம்பெண்ணை உளவு பார்த்த விஷயத்தில் ''பிரதமர் கனவு வேட்பாளர்'' நரேந்திர மோடிக்கும் முக்கிய பங்கு இருப்பது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.
           அதிகாரம் மற்றும் போலீசாரை பயன்படுத்தி இளம்பெண் ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையை வேவு பார்ப்பது என்பது ஒரு அநாகரீகமான செயலாகும். அதுமட்டுமல்லாது இயற்கை மரபுகளுக்கும், சட்டவிதிகளுக்கும் எதிரானது.
          அதுமட்டுமல்ல, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர் நரேந்திர மோடி, அவரது கூட்டாளி அமித் ஷா மற்றும் சம்பந்தபட்ட போலீஸ் அதிகாரிகள் மீது முறையான நீதிமன்ற விசாரணை நடத்தப்படவேண்டும். இந்த விவகாரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால், ''இம்முறையாவது'' அவர் தண்டிக்கப்படவேண்டும்.

உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டம் - விக்னேஸ்வரன் சிறப்புப் பேட்டி...!

               யாழ்ப்பாணம் முதல்வர் அலுவலகத்தில் வைத்து இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி. இதில், இலங்கைத் தமிழர் நிலை பற்றியும் இந்தியத் தமிழர்களின் உணர்வுகள் குறித்தும் அடிக்கடி ஏற்படும் மீனவர் கைது குறித்தும் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் தனது மனநிலையைப் பகிர்ந்துகொள்கிறார் விக்னேஸ்வரன். அரசியல்வாதியாக இருந்தும் அரசியலற்ற சமூகக் கண்ணோட்டத்துடன் அவர் கூறியதாவது: 

“ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு” என்பது உங்கள் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தனித் தமிழீழம் குறித்து உணர்ச்சிபொங்கப் பேசி வருகின்றனர். இது உங்களுக்கு என்னவிதமான தாக்கத்தை உருவாக்குகிறது?
* உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டமாக இதை எண்ணத் தோன்றுகிறது. உணர்வு, சுதந்திரத் தென்னிந்தியாவிலிருந்து கொந்தளிக்கிறது. அறிவோ, யதார்த்தத்தின் நிலையறிந்து நிதானமாக இலங்கையில் பயணிக்கிறது. 

தமிழக மீனவர்கள் இலங்கையிலும் இலங்கை மீனவர்கள் தமிழகத்திலும் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். மொத்தத்தில் இரு தரப்பிலும் பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள்தான். இதைத் தவிர்க்க நீங்கள் செய்யக்கூடியது என்ன?
* உண்மையில் பாதிக்கப்படுவது யார் என்பதை உலகுக்கு உணர்த்துவதே நான் செய்யக்கூடியது. நீங்கள் தமிழர்கள். பாதிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால், உண்மையில் பாதிக்கப்படுவது இந்திய - இலங்கை கடற்பரப்பில் வாழும் கடல் இனங்களே. எதற்காக இந்திய மீனவர்கள் தங்கள் கடல் எல்லை தாண்டி இரவு 1 மணியளவில் நன்றாக நாங்கள் பார்க்கக்கூடிய தூரத்திலேயே பயணித்து மீன் பிடிக்கிறார்கள்? பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம். காரணம், இந்திய கடல் பிராந்தியத்தில் இழுவலைப் படகுகள் மூலம் கடல் வளங்களாகிய மீன்களை வாரி இழுத்து காலி செய்துவிட்டார்கள். பணத்தாசையால் பெரும் படகு முதலாளிகள் தங்கள் நாட்டுக்கும் கடல் வளத்துக்கும் செய்துள்ள துரோகம் இது. உங்கள் பகுதியில் மீன் கிடைக்காததால், இலங்கைக் கடல் பகுதியில் மீன் வாருகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால், இலங்கை கடல் பிராந்தியத்திலும் கடல் இனங்கள் அற்று ஒன்றுமில்லாமல் போய்விடும். எங்கள் நாட்டில் இழு படகுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் அப்படியல்ல. இழு படகுகளால் மீன் வளங்கள் மட்டுமல்ல; பவளப்பாறைகள்கூட இழுத்துவரப்படுகின்றன. இழு படகு உபயோகத்தை இந்தியா தடை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சட்டம் வருமா என்பது சந்தேகமே. தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் அவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இழு படகை விட்டுவிட்டு மீண்டும் கரை வலையை மீனவர்கள் உபயோகித்தால் மீன் இனம் பெருகும். கடல் அன்னை பூரிப்பாள். இன்று பயனடைந்து கொண்டிருப்பவர்கள் இழு படகுகளுக்குச் சொந்தக்காரர்களான பெரும் பணக்காரர்களே. சிறு மீனவர்கள் அல்லர். 

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாடு குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
* பகிஷ்கரிப்பது ஒரு தந்திர உபாயம். பிழை செய்தவர்கள் தங்கள் பிழைகளை உணர நாடும் கருவி அது. பகிஷ்கரிப்பு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுதான் முக்கியம். அதுபோல மாநாடு சென்று மனத்தாங்கல்களை வெளிப்படுத்துவதும் ஒரு தந்திரம்தான். இவற்றில் எதைப் பின்பற்றுவது என்பது நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்நிலையில் நாங்கள் பகிஷ்கரிப்பது என தீர்மானித்துள்ளோம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் கலவையாகும். ஒவ்வொரு கட்சித் தலைவரும் ஒவ்வொரு குரலில் பேசுகின்றனர். அவர்கள் அனைவரோடும் கைகோத்து நிலையான ஆட்சியைத் தர நீங்கள் வைத்திருக்கும் வியூகம் என்ன ?
* அன்பு ஒன்றுதான். என்னதான் அவர்கள் பேசினாலும் அவர்கள் எங்கள் உடன்பிறப்புகள். அவரவர் கருத்துகளுக்கு காரணம் உண்டு. வன்முறையின் சூழலில் வளர்ந்தவர்கள் அவர்கள். ‘அடித்துப் பறித்தால்தான் கிடைக்கும். அரவணைத்தால் அனைத்தும் போய்விடும்’ என்பது அவர்கள் கொள்கை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு ஏற்ப, அனைவரும் கைகோத்ததால், வெற்றி பெற்றோம். ஒற்றுமை குறைந்தால் கீழிறங்க வேண்டிவரும் என்ற எண்ணம் அவர்களை ஒன்றுபடுத்திவைக்கிறது. “பஞ்சமே ஆனாலும் பாரம் அவனுக்கன்னாய் நெஞ்சமே அஞ்சாதே நீ” என்பதே எங்கள் வியூகம். இறைவன் எங்களைக் கைவிடமாட்டான். 

மாகாண அதிகார வரம்பில் காவல்துறை இல்லை. சரியான அதிகாரப் பகிர்வினை அடைய நீங்கள் வைத்திருக்கும் திட்டம் என்ன?
* அதிகாரம் ஒழுங்காகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பது தெரிந்தே நாங்கள் தேர்தலில் ஈடுபட்டோம். மக்கள் சக்தி எங்களுடன் உள்ளது என்பதை தேர்தல் மூலம் இலங்கை அரசுக்கு தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தை மூலமே அதிகாரப் பகிர்வைப் பெற வேண்டும். இப்போது அதிகாரம் போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். 

உங்கள் ஆட்சியில் எதனை அமல்படுத்த அதிக முன்னுரிமை தருகின்றீர்கள்?
* போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களுக்கு முன்னுரிமை தருகிறேன். வேலையற்றோர், விதவைகள், வீடு - நிலங்களை இழந்து நிற்போர் ஆகியோருக்கு நிவாரணம் வழங்கவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. 

இந்திய உதவியுடன் வீடு கட்டித் தரும் திட்டம் எந்த அளவில் உள்ளது? அதை விரைவுபடுத்த நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி என்ன?
* குறிப்பிட்ட தொகையே வீடுகட்ட ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது ஆண்டுகள் சில கடந்த நிலையில், பொருள்களின் விலையேற்றத்தால் வீடுகளை கட்டி முடிக்க இயலாமல் பலர் திண்டாடுகின்றனர். இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதருடன் பேசிக்கொண்டிருக்கிறோம். குறைந்த வட்டியுடன் கடன் வசதி செய்து தரும்படி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். 

இலங்கை அரசின் மும்மொழித் திட்டம் வரவேற்பு பெற்றுள்ளதா?
* தமிழ் மக்கள் நினைக்கிறார்கள் - எங்களை சிங்களம் படிக்கவைத்துவி்ட்டு சிங்களர்கள் தமிழ் படிக்கமாட்டார்கள் என்று. மேற்படிப்பு படிப்பதற்கு தமிழும் சிங்களமும் தெரிந்திருக்க வேண்டும் என்று பள்ளியிலேயே கட்டாயப்படுத்தினால்தான் பலன் இருக்கும். அலுவலகங்களில் மட்டும் செயல்படுத்தி ஒன்றும் ஆகாது. 

யாழ்ப்பாணத்துக்கு வருமாறு இந்தியப் பிரதமரை அழைத்திருந்தீர்கள். அதுபோல இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு நீங்கள் வருவீர்களா? அதற்கான திட்டம் ஏதும் உள்ளதா?
* தமிழகத்துக்கு வர திட்டம் தீட்டவேண்டியதில்லை. கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் தமிழகம் வந்துபோய்க் கொண்டிருக்கிறேன். தற்போது அரசியல் நிமித்தம் நீங்கள் அழைத்து நான் வருவதுதான் பொருத்தமாக இருக்கும். நீங்கள் அழைத்தால் என் பாதுகாப்பு உங்கள் பொறுப்பு. அழைக்காமல் நானாக வந்தால் எனக்கு அவன் பொறுப்பு. 

தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளனர். அவர்கள் தாயகம் திரும்ப என்ன செய்யப் போகிறீர்கள்?
* தற்போது வடக்கு மாகாணத்திலிருந்து ராணுவத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டால், அகதிகள் திரும்ப வழி ஏற்படும். அகதிகளுக்கு வீட்டு வசதிகள், தொழில் வாய்ப்புகள் செய்துதர வேண்டியது எங்கள் பொறுப்பு என்பதை உணர்ந்துள்ளோம். 

வடக்கு மாகாணத்தில் தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு பெருக்கத்துக்கும் முதலீட்டுக்கும் இந்தியாவிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
* விவசாயம், கால்நடைப் பண்ணை, கைத்தொழில்கள் ஆகியவற்றில் எங்களுக்கு இந்தியா அறிவுரை வழங்க வேண்டும். கலை - கலாச்சாரத்தில் எங்களது வரலாற்றை உலகுக்கு எடுத்துரைப்பதில் இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. பெரும் முதலீட்டை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கிறோம். 

உங்கள் குடும்பமே சிங்கள - தமிழ் இனங்களின் இணக்கமான வாழ்வுக்கு உதாரணம்தான். இலங்கையில் இரு இனங்களும் இணக்கமாக வாழ நீங்கள் முன்வைக்கும் யோசனைகள் என்னென்ன?
* என் இரு மகன்களும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அதற்காக இரு இன மக்களும் மற்ற இனத்தில் வரன் தேட வேண்டும் என கூறமாட்டேன். புரிந்துணர்வும் பரஸ்பர நம்பிக்கையும்தான் இணக்கத்தை ஏற்படுத்தும். சிங்களர்களே சிறுபான்மையினர் மனோநிலையில்தான் வாழ்கின்றனர். மற்றவர்களைக் காட்டிலும் நாம் தாழ்ந்துவிட்டோமே என்ற எண்ணத்தில் எங்களைத் துன்புறுத்துகின்றனர். இதற்குக் காரணம் தமிழ்நாடுதான். இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக தமிழக மக்கள் பேசப்பேச, இத்தனை கோடிப் பேரின் ஆதரவு இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு யாரும் இல்லை என்கிற எண்ணம் மேலோங்க எங்களைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்கிறார்கள் சிங்களர்கள். 

ஒரு பேட்டியில் “இதற்கு முன் அரசியலில் ஈடுபட்டது இல்லை” என்று கூறியிருந்தீர்கள். இப்போது அரசியலில் இறங்கியிருப்பது ஏன்?
* பெயர், புகழ், கல்வி, அந்தஸ்து, பணம் எல்லாம் பெற்ற பின் அமைதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவன் நான். அரசியல் எனக்கு வேண்டாத ஒன்று. ஆனால், சேவை நமது கடமை என்று ஆன்மிகம் சொல்கிறது. உற்றார் உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், “வடமாகாணத் தமிழ் மக்களுக்கு நீ சேவை செய்தே ஆகவேண்டும்” என நிர்ப்பந்தித்தபோது இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு தேர்தலில் நிற்க சம்மதித்தேன். நான் அரசியலில் இறங்கவில்லை: இறக்கிவிடப்பட்டேன்.
 
நன்றி :

சனி, 16 நவம்பர், 2013

சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது - இது நியாயம் தானா....?

 
                                                                                                                                        
         
                                                                                                                                                                   
                                                                                                        
         
          சச்சின் டெண்டுல்கர் இன்று தான் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று மைதானத்தை வெளியேறுகிறார். இன்னும் அவர் தன் வீட்டிற்கு கூட போய் செர்ந்திருக்கமாட்டார். அதற்குள் பிரதமர் அலுவலகத்திலிருந்து சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது என்ற அறிவிப்பு வந்துவிட்டது. ''பாரத ரத்னா'' விருதென்ன விளையாட்டு சமாச்சாரமா சாதாரணமா எல்லாருக்கும் தூக்கிக்கொடுக்க...?
           சூதாடிகளுக்கும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் இந்தியாவின் மிக உயரிய பரிசு ''பாரத ரத்னா''  விருது கொடுப்பது சரிதானா..? முறை தானா...? நியாயம் தானா....?                                                        
              சச்சின் ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் தனிப்பட்ட சாதனைப் படைத்த வீரர் தான் என்பதை யாரும் மறுக்கவில்லை. சச்சின் உலகம் முழுதும் அறியப்பட்டவர் என்று சொல்ல முடியாது. ஆனால்  கிரிக்கெட் விளையாட்டை பற்றி அறிந்த நாட்டிலுள்ள மக்களால் நன்கு அறியப்பட்டவர் தான். ஏனென்றால்  உலகம் முழுதும் அனைவராலும் விளையாடப்படும் விளையாட்டுமல்ல. உலகம் முழுதும் பரவிக்கிடக்கும் விளையாட்டுமல்ல. கிரிக்கெட் என்ற விளையாட்டே போய் சேராத நாடுகள் உள்ளன. கிரிக்கெட் பற்றியே அறியாத மக்களும் கோடிக்கணக்கில் உள்ளனர். ஏனென்றால் வெறும் பத்து நாடுகளில் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு தான் இந்த கிரிக்கெட் என்ற விளையாட்டு. அதனால் தான் ஒலிம்பிக் போட்டி போன்ற உலக அளவிலான போட்டிகளில் இதுவரை கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை என்பதற்கான மிக முக்கிய காரணம். கிரிக்கெட் விளையாட்டு என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய 10 காலனி நாடுகளில் மட்டுமே விடுதலைக்குப் பின் இன்றும் ஆடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் அடிமைகளை கிரிக்கெட் விளையாடவிட்டு வேடிக்கைப்பார்த்து போழுதுபோக்கியிருக்கிறார்கள். 
                அப்படிப்பட்ட விளையாட்டில் சாதனை செய்தாரா சச்சின் என்றால் கேட்டால், நிச்சயமாக சாதனை செய்திருக்கிறார் என்று சந்தேகமில்லாமல் சொல்லலாம். நாமெல்லாம்  பெருமைப்படத்தக்க அளவில் சாதனை புரிந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அனால் அவை அத்தனையும் ஒரு  தனிமனித சாதனை தான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 
 அவர் அப்படிப்பட்ட சாதனைகள் புரியவேண்டும் என்பதற்காகவே ஆட்சியாளர்களால் அவருக்கு வாய்ப்புகளும், நேரங்களும், விளம்பரங்களும், ஊக்கமும்  கொடுக்கப்பட்டு சச்சினால் செய்யப்பட்டிருக்கும் சாதனைகள் தான் அத்தனையும்  என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.   கிரிக்கெட் ஆடும் அத்தனை வீரர்களுக்கும் இதே போல் வாய்ப்புகளும், நேரங்களும், விளம்பரங்களும், ஊக்கமும்  கொடுக்கப்பட்டால் அவர்களும் தனிமனித சாதனைகளை நிச்சயம்  செய்துகாட்டுவார்கள்.
                 அதுமட்டுமல்ல, இன்றைக்கு உலகமய சூழலில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக கிரிக்கெட் மைதானம் என்பது ஒரு சூதாட்டக்களமாக மாறிவிட்ட சூழ்நிலையில் - கிரிக்கெட் என்பது பண மழை  கொட்டுகிற விளையாட்டாக மாறிவிட்ட இந்த சூழ்நிலையில்  கிரிக்கெட் என்பது சாதனை படைக்கும் களமாக இல்லாமல், பணம்  - சொத்து சேர்க்கும் கஜானாவாக மாறிவிட்டது. 
               அப்படி சம்பாதித்த பணத்திற்கு சச்சின் போன்ற பெரிய கிரிக்கெட் வீரர்கள் அரசுக்கு கட்டவேண்டிய வரியை சரியாக - முறையாக - நியாயமாக கட்டியிருப்பார்களா....? என்றால்... இல்லை... இல்லவே இல்லை என்பது தான் உண்மை. அதை வருமானவரித்துறையும் கண்டுகொள்வதே இல்லை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சச்சினும் இதில் விதிவிலக்கல்ல. இவர் இப்படியாக கிரிக்கெட் ஆடியும், விளம்பரங்களில் நடித்தும் ''கொள்ளையாக'' சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கிறார். இவர் தேசியக்கொடியை பிடிப்பதற்கே அருகதையில்லாதவர். 
               இவர் ஒரு நேர்மையான இந்திய குடிமகன்  இல்லை என்பதுமட்டுமல்ல, ஓர் உண்மையான இந்திய குடிமகனாகவும் அவர் நடந்துகொள்ளவில்லை என்பதையும் இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். பெப்சி, பூஸ்ட், மெட் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இவர் தான் நிறுவனத் தூதராக இருந்து, அந்த கம்பெனிகளின் விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தவர் என்பதையும் இந்த நாடு அறியும். இப்படிப்பட்டவர் எப்படி ஓர் உண்மையான இந்தியக் குடிமகனாக இருக்கமுடியும் என்று சொல்லுங்கள்.
              இப்படிப்பட்டவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டால் அது எப்படி சரியாக இருக்கும் - நியாயமாக இருக்கும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
             இதுவரை கலை, இலக்கியம், அறிவியல்   மற்றும் பொதுச்சேவை துறைகளில்  பெருமைப்படத்தக்க சாதனைகள் படைத்தவர்கள் மட்டுமே ''பாரத ரத்னா'' விருது பெற முடியும் என்ற விதிமுறை  நடைமுறையில் இருந்து வருகிறது. பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதை பெற முடியும் என்று விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டு சென்ற 2011 - ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பு  வெளியிட்டது. அப்போதே இவருக்கு  இந்த உயரிய விருதினை தருவதற்காகவே, பாரத ரத்னா விருது பெறுவதற்கான விதிமுறையில் மத்திய அரசு திருத்தம் செய்கிறது என்ற விமர்சனம் வந்தது. விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கும் பாரத ரத்னா விருது  வழங்க தான் இந்த மாற்றம் என்று அரசு பொதுவாக சொல்லியிருந்தாலும் அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் டெண்டுல்கருக்காக தான் இந்த மாற்றம் என்று வெளிப்படையாகவே தெரிந்ததும் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்து எதிர்ப்புக் கிளம்பவே மத்திய அரசின் முயற்சி கைவிடப்பட்டது. 
              ஆனால் இன்று ஓய்வுபெறும் ஒரு உணர்ச்சிமிக்க சூழ்நிலையில் - யாரும் எதிர்ப்பார்க்காத இந்த சூழ்நிலையில் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு என்பது துரதஷ்டமானது. ''பாரத ரத்னா'' விருதின் மாண்பும், பெருமையும் காப்பாற்றப்படவேண்டுமானால், மத்திய அரசு சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது கொடுப்பதாக எடுத்திருக்கும் முடிவை திரும்பப்பெறவேண்டும். ''பாரத ரத்னா'' விருதை வழங்கி பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு சச்சினைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று காங்கிரஸ் கட்சி பகல் கனவு காண்கிறது.
                             சென்ற 1954-ம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. மக்களையும், தேசத்தையும் பற்றி தன்னலமில்லாமல்  சிந்தித்தவர்களும், நம் தேசத்தை பெருமைக்குள்ளாக்கியவர்களுமான சர் சி.வி.ராமன், சி.வி.ராஜகோபாலாச்சாரி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்  ஆகிய  இவர்களில் தொடங்கி, இதுவரை 41 பேருக்கு ''பாரத ரத்னா'' விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
             கடந்த காலங்களில் இந்த உயரிய விருதினை ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், அமார்த்தியா சென், ஜெயபிரகாஷ் நாராயண், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் அம்பேத்கர், எம். எஸ். சுப்புலட்சுமி, பண்டிட் ரவி சங்கர், உஸ்தாது பிஸ்மில்லாகான், மொரார்ஜி தேசாய், எம். ஜி. ராமச்சந்திரன், ராஜீவ் காந்தி,  லதா மன்கேஷ்கார், அன்னை தெரசா, கான் அப்துல் காபார் கான், நெல்சன் மண்டேலா.... போன்ற உலகின் - தேசத்தின் - சமூகத்தின் உயர்ந்த தலைவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த உயரிய விருதினை பெறுவதற்கு மேலே குறிப்பிடப்பட்டவர்களின் தகுதிகளில் ஏதாவது ஒரு தகுதியாவது ''கிரிக்கெட் சூதாடி'' சச்சின் டெண்டுல்கருக்கு உண்டா...? என்பதை அவரே தன்னை எடைபோட்டுப்பார்க்கவேண்டும்.  நீங்களும் யோசித்துப்பாருங்கள்.         

''கிரிக்கெட் கடவுள்'' சச்சினுக்காக வருத்தப்படும் வாலிபர்களே...!

      

 
       கடந்த ஒரு வாரகாலமாகவே நாட்டுல ஒரே பரபரப்பாகவே இருக்கிறது. கேஸ் விலை  ரூ.1000/-தை தாண்டியபோதும் மக்களிடம் இவ்வளவு பரபரப்பு இல்லை. வெங்காயம் விலை ரூ.100/-ஐ தொட்டபோதும் மக்களிடம் இவ்வளவு பரபரப்பு இல்லை. ஆனால் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாராம். என்ன ஆரவாரம்... என்ன பரபரப்பு... ஊரெல்லாம் சச்சின் பேச்சு தான். அதுவும் இன்றைய இளைஞர்கள்  சச்சின் ஓய்வு பெறுகிறாரே என்று வருத்தப்பட்டு நொந்து நூடுல்ஸ் ஆகிகொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
           அதிலும் இளைஞர்களெல்லாம் சும்மா இருந்தாலும் இங்கிருக்கக்கூடிய ஊடகங்கள் சும்மாயிருப்பதில்லை. இவர் ஏதோ தன்னலம் கருதாமல் மக்களுக்காக உழைத்தவர் போலவும், இவர் பணம் ஏதும் சம்பாதிக்காமல் கிரிக்கெட் விளையாட்டை காப்பாத்தி வைத்திருப்பது போலவும் இந்த ஊடகங்களெல்லாம் சேர்ந்து டெண்டுல்கரை ''கிரிக்கெட் கடவுள்'' ரேஞ்சுக்கு உயர்த்தி தங்கள் இலாபத்தை அதிகரிக்க சும்மாயிருக்கிற  இளைஞர்களையும்  உசுப்பெற்றிக்கொண்டுத் திரிகிறார்கள்.
           சச்சின் டெண்டுல்கர் யார்...? சுதந்திரப்போராட்டத் தியாகியா...? அல்லது கலை, இலக்கியம், அறிவியல், இராணுவம்  அல்லது பொதுச்சேவை போன்ற ஏதாவது ஒரு துறையில் சாதனை புரிந்தவரா...? அல்லது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மாபெரும் பணி செய்தவரா...? அல்லது சாதாரண மக்களின் உயர்வுக்காக பாடுபட்டவரா....? அல்லது இவர் தான் ஒரு கவுரவ எம்.பி-யா இருக்கிறாரே, பாராளுமன்றத்தில என்றைக்காவது பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடியிருப்பாரா...அல்லது பாராளுமன்றத்துல அவர்களுக்காக பேசியிருப்பாரா....? அப்படி எதுவும் இல்லையே...! ஒரு சாதாரண கிரிக்கெட் வீரர் தானே. அதுவும் தன்னுடைய நாட்டுக்காகவோ, தன்னுடைய டீமுக்காகவோ ஆடமாட்டார். தன்னுடைய சொந்த சாதனைகளை உயர்த்திக்கொள்வதற்காக மட்டுமே இதுவரை விளையாடியவர். இவர் மும்பை அரசியல்வாதிகளின் செல்லப்பிள்ளையாகவும் பெருமுதலாளிகளின் செல்லப்பிள்ளையாகவும் இருப்பதனால் தான்,  இவரைவிட சிறப்பாக விளையாடிய முன்னணி கிரிக்கெட் வீரர்களெல்லாம் ஓரங்கட்டப்பட்டு சச்சின் மட்டுமே இன்றுவரை முன்னிறுத்தப்படுகிறார். இப்போதும் கூட சச்சினுக்கோ... அவரது காட் பாதருக்கோ... ஆட்சியாளர்களுக்கோ இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதில் மனமில்லை... விருப்பமில்லை....! பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாடுகளிலிருந்தும் முன்னணி  விளையாட்டுவீரர்களிடமிருந்து விமர்சனங்கள் வரவே கட்டாயத்தின் பேரில்தான் ஓய்வு பெறுகிறார் என்பது தான் உண்மை. விட்டா சாதனை பண்ணுகிறேன் பேர்வழி என்று அறுபது வயது வரை ஆ...டி...கிட்டே இருந்திருப்பாரு.
 கிரிக்கெட்டைத் தவிர இவர் செய்த மற்ற சாதனைகளையும் பாருங்க.

     (1) இந்திய தேசியக்கொடியை தன் சட்டையில் பொறித்துக்கொண்டு, இந்திய  தேசியக்கொடியை கையில் பிடித்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடி சம்பாதித்த  பணத்தையும், பல்வேறு விளம்பரங்களின் மூலம் சம்பாதித்தப் பணத்தையும்  வெளிநாடுகளில் முதலீடு செய்து கொண்டிருக்கும் ஒரு நல்ல ''தேசபக்தர்'' தான் இன்றைக்கு ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர்.

           (2) கடந்த 2003 - ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்தயக்கார் வீரர் மைக்கேல் ஷூமேக்கர் பெர்ராரி அன்றைக்கே  75 இலட்சம் மதிப்புள்ள   ''360 Modena Ferrari'' காரை அன்பளிப்பாக வழங்கினார். பிராட் மேன் சாதனையைச் சமன் செய்ததையொட்டி கார் வழங்கப்பட்டது. அன்று இவர் அந்த காரை இந்தியாவிற்கு கொண்டுவர அவர் 120% இறக்குமதி வரியாக ரூ.1.13 கோடி கட்டியிருக்கவேண்டும். ஆனால் அன்பளிப்பாக வந்த காருக்கு வரிவிலக்கு கேட்டு அன்றைய மத்திய அரசுக்கு விண்ணப்பித்தார். உடனே மத்திய அரசும்  அவருக்கு வரி விலக்கு அளித்தது. இப்படியாக  அரசிடம் வரிவிலக்கு பெற்று இந்தியாவிற்கு இறக்குமதி செய்த அந்த காரை சச்சின் பின்னர் சூரத்தைச் சேர்ந்த ஜெயேஷ் தேசாய்க்கு விற்று விட்டார்.      இதற்காக அன்றே சச்சின் அரசுக்கு மூலதன லாபவரி கட்டியிருக்கவேண்டும். ஆனால் அவர் அந்த வரியை கட்டவில்லை.

          (3) சச்சின் உலகிலேயே மிகப்பெரும் ''பணக்கார'' கிரிக்கெட் வீரர் என்பதை எல்லோரும் அறிந்ததே. அப்படிப்பட்டவர்தான்  தன்னுடைய சொந்த ஊழியர்களுக்கு தேநீர், சிற்றுண்டி வழங்கிய செலவுக்கான ரூ.57,969 - க்கு வருமான வரி விலக்கு கேட்டிருக்கிறார். தொலைபேசி, கேளிக்கைச் செலவுகள் ஆகியவற்றுக்கு ரூ.50ஆயிரமும், இவரிடம்  உள்ள 40 கார்களுக்கும் ஆன  செலவுகளுக்காக ரூ.1,42,824-ம் வரிவிலக்கு கேட்டுள்ளார். ஆனால் வருமானவரித்துறை இவற்றையெல்லாம்  நிராகரித்துவிட்டது.

        (4) சச்சின் டெண்டுகர் 2001-02 மற்றும் 2004-05 நிதியாண்டுகளில் ESPN - Star Sports, PepsiCo மற்றும் Visa நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்ததற்காக அந்நிய செலாவணியாக Rs.5,92,31,211/- பெற்றிருக்கிறார். இந்த வருமானத்திற்காக அவர்  வருமான வரியாக மட்டும் ரூ.2,08,59,707 செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறையினர் [(CIT-A)- Commissioner of Income Tax-Appeal] நோட்டிஸ் கொடுத்தனர்.
                  இதை எதிர்த்து நம்ம சச்சின் என்ன செய்தார் தெரியுமுங்களா...?  ''அய்யா...! எனக்கு கிரிக்கெட் ஆடுவது தான் முதல் தொழில்னு நீங்களெல்லாம் தப்பா நினைச்சுகிட்டு இருக்கீங்க.  அது நெசமில்லீங்க.  அடிப்படையில நான் ஒரு கலைஞனுங்க... நடிகனுங்க... நடிப்புதான் என் பிரதான தொழிலுங்க. இந்த  கிரிக்கெட்டெல்லாம் அப்புறம்தானுங்க. அதனால என்னோட  நடிப்புத் தொழில் மூலமா நான்  சம்பாரிச்ச பணத்துக்கு  under Section  80RR - Income Tax Act -ன்  படி வரிச்சலுகை குடுங்க அய்யா..."  அப்படின்னு கேட்டவர் தான் கிரிக்கெட் ஆட்டக்காரர் என்று நீங்க நினைத்துக்கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர் கொடுத்த பதில் கடிதத்தை பெற்று அவரின் நடிப்புத்தொழிலைப் பற்றி ''தீர'' விசாரிச்ச வருமானவரித்துறையும்  "ஆமாங்க நெசமாவே இவர் ஒரு நடிகர்தானுங்க. நாங்க தான் தப்பாப் புரிஞ்சிகிட்டோம்'' என்று சான்றிதழ் கொடுத்து, வரியாக கேட்ட அந்த இரண்டு கோடி சொச்சத் தொகையையும் கட்டவேண்டாம் என்று சொல்லி வரிச்சலுகையும் கொடுத்துட்டாங்க.
        சச்சினுக்காக வருத்தப்படும் வாலிபர்களே... இப்படிப்பட்டவரைத் தான் ஊடகங்களெல்லாம் ''கிரிக்கெட் கடவுள்'' என்று சொல்லி உங்களை உசுப்பேத்தித் திரிகிறார்கள். நீங்களும் இப்படிப்பட்டவருக்காக  வருத்தப்படுகிறீர்கள்.
     அடுத்தவர்களுக்காக வருத்தப்படுங்கள்... வருத்தப்படவேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் அடுத்தவர்களுக்காக வருத்தப்பட்டால்தான் மனிதன். ஆனால் யாருக்காக வருத்தப்படவேண்டும் என்பது தான் என் கேள்வி...?

செவ்வாய், 12 நவம்பர், 2013

இந்திய வெளியுறவு கொள்கையில் தலையிடும் மாநிலக்கட்சிகளின் அதிகப்பிரசங்கிதனம்....!

        
         உள்நாட்டு பிரிவினைப்போர் முடிவு பெற்று, (மயான)அமைதியான சூழலில் 53 நாடுகளின் தலைவர்களை அழைத்து காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பின் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்துவரும் இலங்கை அரசு, மாநாட்டின் தனி சிறப்பு மற்றும் வெற்றியின் மூலம் உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்று உலக அரங்கில் இலங்கையை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு முயற்சிகள்  செய்து வரும் இந்த சூழ்நிலையில், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு  மட்டும் அமைதி குலைந்து ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.
            இலங்கையில் ''காமன்வெல்த் மாநாடு'' என்று எப்போது அறிவித்தார்களோ, அப்போதிலிருந்து நவக்கிரகங்களாக - திசைக்கு ஒன்றாக பிரிந்துகிடக்கும் தமிழக திராவிடக்கட்சிகள் ''ஒற்றுமையுடன்'' ஒரேக்குரலாக ''கோஷ்டிகானம்'' பாட ஆரம்பித்தார்கள். ''தமிழர்களை கொன்று குவித்த இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது'' என்று ஒரு கட்சியும், ''ராஜபட்சே நடத்தும் மாநாட்டை இந்தியா கலந்துகொள்ளாது புறக்கணிக்கவேண்டும்'' என்று வேறொரு கட்சியும், ''இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒரு துரும்பும் நகரக்கூடாது'' என்று மற்றொரு கட்சியும், இன்னுமொரு படி மேலேபோய் ''மாநாட்டை இலங்கையில் நடத்தாது தடை செய்யவேண்டும்'' என்று இன்னொரு கட்சியும் என இலங்கையை தனிமைப்படுத்த வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தின. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அதிமுக அரசு' இலங்கை மாநாட்டில் மத்திய அரசு கலந்துகொள்ளக்கூடாது என்பதையே மிரட்டலான தொணியில்  தமிழக சட்டமன்றத்தில் இரண்டு முறை  தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. இந்த விஷயத்தில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், அனைத்து திராவிடக்கட்சிகளும் கட்சி வேறுபாடு இல்லாமல் ''என்றுமில்லாத'' ஒற்றுமையை காட்டுகின்றன என்பது தான்.
        ஆனால்  இலங்கை அரசுக்கு எதிரான இந்த கோஷ்டிகானமும், ஒற்றுமையும், போராட்டங்களும், தீர்மானங்களும்  எதற்காக என்பது தமிழக மக்களுக்கு தெரியாமல் இல்லை. இது தங்கள்  கையில் உள்ள வாக்குச்சீட்டை குறிவைத்து நடத்தப்படும் ''மாயாஜாலம்'' தான் என்பதை தமிழக மக்கள் புரிந்து தான் வைத்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் மீது பாசத்தைப் பொழிவதில் தமிழக திராவிடக்கட்சிகளுக்குத் தான் எத்தனைப் போட்டி. இதைப்பார்க்கும் போது, ''அவ என்ன சொல்றது... நான் சொல்லுறேன்... சாப்பாடு எதுவும் இல்லை... வேற வீட்டைப்பாரு'', என்ற மாமியார், மருமகள், பிச்சைக்காரன் கதை தான் நினைவிற்கு வருகிறது.
          இது ஒரு புறமிருக்க. இன்னொரு பக்கம், இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்பது இலங்கை என்ற ஒரு தனி நாடு மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. அந்த கூட்டமைப்பில் உள்ள 53 நாடுகளும் சம்பந்தப்பட்டது. அத்தனை நாடுகளும் கலந்துகொள்ளும் மாநாட்டை இந்தியா புறக்கணிக்குமானால், உலக அரங்கில் இந்தியா தனிமைப்பட்டுவிடும். மற்றைய நாடுகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக திகழும் நமது நாட்டின் ''வெளியுறவுக் கொள்கை'' என்பது கேள்விக்குறியாகி விடும். பாதிப்புக்குள்ளாகும்.
இந்திய நாட்டின் வெளியுறவுக்கொள்கை என்பது பிரதமரோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. முறையான வெளியுறவுக்கொள்கையை வகுத்த இந்திய அரசியல் சாசனம் மற்றும்  பாராளுமன்றம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டது. உள்ளூர் அரசியலுக்காக தமிழக திராவிடக்கட்சிகளும், தமிழக அரசும் நடத்தும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் போராட்டங்களும், நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் ஒட்டுமொத்த இந்திய வெளியுறவுக்கொள்கைகளுக்கும், அரசியல் சாசனத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் எதிரானது மட்டுமல்ல ஒரு போதும் ஏற்கத்தக்கதுமல்ல.
          பக்கத்து நாடுகளுடனான உறவை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை வைப்பதும் சிறுபிள்ளைத்தனமாகும். நம் நாட்டு மக்கள் அமைதியாக நிம்மதியாக வாழவேண்டும் என்றால் பக்கத்து நாடுகளுடானான உறவையும், நட்பையும் பேணவேண்டும். வளர்க்க வேண்டும். மேம்படுத்தவேண்டும். அது தான் தலைசிறந்த வெளியுறவுக்கொள்கையாக இருக்க முடியும். அதுமட்டுமல்ல அது தான் உண்மையான இராஜதந்திரம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
           இனிமேலாவது சொந்த இலாபத்திற்காக - ஓட்டு அரசியலுக்காக இது போன்ற ''கோரிக்கைகளை'' வைத்து முழங்குவதை இங்குள்ள திராவிடக்கட்சிகள் கைவிடவேண்டும். அது தான் ஒட்டுமொத்த தேச அமைதிக்கு நல்லது.

வெள்ளி, 8 நவம்பர், 2013

மோடியை விட்டு 2002 விலகாதது ஏன்...?


 கட்டுரையாளர் : என். ராம்,           
                                  தலைவர், தி இந்து குழுமம்                   
             குஜராத்தில் 2002-ல் நடந்த சிறுபான்மையினர் படுகொலை பா.ஜ.க-வைப் பொருத்தவரை மிகவும் தர்மசங்கடமானது. மோடி பிரதமரானால் மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் என்பதை 2002-லிருந்து இன்றுவரை ஆறாமலிருக்கும் வடு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. மோடி இப்போது எங்கு சென்றாலும் ஒரே ஓசை மயம். இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற அவருடைய பிரச்சாரம் இப்போது வேகம் எடுத்திருக்கிறது.
          தன்னம்பிக்கை மிளிரும் அவருடைய பீடு நடையில் மிளிரும் உண்மை அதுதான். பிரச்சாரத்தில் நன்றாகப் பேசுகிறார்; ஆனால், வாஜ்பாயின் பேச்சுக்கலைக்கு ஒப்பாகாது மோடியின் பேச்சு. அனாயாசமானதும், பல தசாப்தங்களின் பயிற்சியாலும் வந்த கலை வாஜ்பாயினுடையது. மோடிக்கென்று தனிப்பட்ட ஈர்ப்பும் இருக்கிறது. நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் இளைஞர்களையும் அவர் கவர்ந்திருக்கிறார். நாட்டின் மிக உயர்ந்த ஒரு பதவிக்கு வேட்பாளராக மோடியை அறிவித்துவிட்டதால், அரசியல் சந்தையில் பாரதிய ஜனதாவின் சரக்குக்கு முறுக்கேறி இருக்கிறது.
         சுமார் பத்தாண்டுகளாகப் பதவியிலிருந்து காயலான்கடை கடைச்சரக்குபோல் ஆகிவிட்ட காங்கிரசும் பாரதிய ஜனதாவும் களத்தில் நின்றால், எந்தக் கட்சிக்கு அதிக இடங்கள் - வாக்குகள் கிடைக்கும் என்று அறிய கருத்துக்கணிப்பே தேவை இல்லை. சமூக பொருளாதாரத் திட்டங்களைக் கொண்டுவருவதில் காட்டிய வறட்சி, ஈடு இணையில்லாமல் எல்லா மட்டங்களிலும் அது நிகழ்த்தியுள்ள ஊழல்கள் விளைவாக காங்கிரஸ் இப்போதே கடைநிலைக்கு வந்து விட்டது. எல்லா அரசியல் கருத்துக்கணிப்புகளுமே மோடியும் அவருடைய கட்சியும் முன்னிலை வகிப்பதாகக் கூறுகின்றன. ஒன்றிரண்டு அவர்களுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முன்னிலை வகிக்கும் என்று கூறுகின்றன.
         பாரதிய ஜனதா தவிர சிரோமணி அகாலிதளம், சிவசேனை ஆகியவை மட்டும்தான் இந்தக் கூட்டணியில் இப்போது எஞ்சியிருக்கின்றன.  இந்தக் கூட்டணி 190-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறவேண்டும் என்றால், மக்களவையில் கூட்டணிக்கு 272 இடங்களுக்கு மேல் தேவை. கருத்துக் கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோருவதில் அதிசயம் என்ன?

பரிவாரங்களின் ஆவேச எதிர்பார்ப்பு
           இந்தி பேசும் மாநிலங்களிலும் சில மேற்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெருத்த தொண்டர் படையும் மக்களிடையே ஆதரவும் இருக்கிறது. அந்த மாநிலங்களில் வலதுசாரி இந்துத்துவச் சக்திகளான சங்பரிவாரங்கள் மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பிரச்சார இயந்திரங்களை முடுக்கிவிட்டுவிட்டன. பரிவாரங்கள் ஆவேச எதிர்பார்ப்புடன் இப்போதே முண்டா தட்ட ஆரம்பித்துவிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இவர்கள் தான் அரசியல் சட்டத்துக்கு விரோதமான கொள்கைகளையும் இந்தியாவின் அடிப்படை பண்புக்கு முரணான இந்துத்துவக் கொள்கைகளையும் அமல்படுத்தும் சக்திகளாக இருப்பார்கள்.

கணக்கு எடுபடுமா?
                இந்தியா என்பது பல்வேறு மதம், மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட பன்மைச் சமூகம்; இந்தோனேசியா, பாகிஸ்தானுக்குப் பிறகு உலகிலேயே முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் சுமார் 17 கோடி வாழ்கிற நாடு இது. கர்நாடகம் தவிர்த்த தென்னிந்திய மாநிலங்களிலும் கிழக்கு இந்திய மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு அமைப்பு ரீதியான பலமோ ஆதரவோ இல்லை. அங்கிருப்பவர்கள், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக சங்பரிவாரங்கள் முன்னிலைப்படுத்தும் ‘வளர்ச்சி நாயகன்’ எப்படிப்பட்டவர், குஜராத்தில் அவர் கொண்டுவந்த முன்னேற்றங்கள் என்ன என்பதை அறியும் ஆவலில் இருக்கின்றனர். சங்பரிவாரங்கள் மட்டுமல்ல; இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் படித்தவர்களில் ஒரு பகுதியினரும்கூட அவரை ‘வளர்ச்சியின் நாயகன்’ (விகாஸ் புருஷ்) என்றே அழைக்கின்றனர்; ஆதரிக்கின்றனர். ‘வளர்ச்சியின் நாயகன்’, வருங்கால இந்தியாவின் தவிர்க்க முடியாத முன்மாதிரியாக ‘துடிப்பு மிக்க குஜராத்’தை உருவாக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

கணிப்புகள் நம்பகமானவையா?
          2014 மக்களவைப் பொதுத்தேர்தல் தொடர்பாக வரும் கருத்துக் கணிப்புகளைப் பார்க்கும்போது, இந்தக் கணிப்புகள் உண்மையானவையா, நம்பத்தகுந்தவையா என்ற சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்தக் கணிப்புகளுக்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை. அப்படியிருந்தும் வாக்காளர்கள் என்ன மனநிலையில் இருக்கின்றனர், எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அவர்கள் வாக்களிப்பார்கள் என்று கேள்விப் பட்டியல் மூலம் ‘எப்படியோ’ கண்டுபிடித்துவிடுகிறார்கள் கணிப்பாளர்கள். கட்சிகளுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்றுகூட கணக்குபோட்டு விடுகிறார்கள்! 16-வது மக்களவைப் பொதுத்தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கோ, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கோ போதுமான அளவு இடங்கள் கிடைக்காது என்று சொல்கிறது ஒரு கணிப்பு. மோடி முகாமுக்கு இந்தக் கணிப்பு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மோடி முகாமுக்கு என்ன பயம்?
           மக்களவைப் பொதுத்தேர்தலுக்குப் பிறகு, மாநிலக் கட்சிகள் இணைந்து வலுவான ஓரளவுக்கு நிலைத்தன்மையுள்ள கூட்டணியைத் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டு ஆட்சிக்கு வரும்; இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரசும் அதற்கு ஆதரவு தரும் என்ற அந்தக் கணிப்பின் விளைவுகள் குறித்துதான் மோடி முகாம் கவலை அடைந்திருக்கிறது. “இந்தத் தேர்தல் களத்தில் நாம் முன்கூட்டியே உச்சக்கட்டத்துக்குச் சென்று விட்டோமோ?” என்ற சந்தேகம்கூட சில பாரதிய ஜனதா தளகர்த்தர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. குஜராத் முதல்வரால் பிரதமராக முடியாது என்ற இந்த நிலைக்குக் காரணம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற இந்திய வாக்காளர்கள் தான். ஆர்எஸ்எஸ்-ஸின் கொள்கைகளாலும் சித்தாந்தங்களாலும் வழிநடத்தப்படும் மோடியைப் பற்றி ஜனநாயக சக்திகளும் மதச்சார்பற்ற சக்திகளும் இடைவிடாமல் மேற்கொண்ட பிரச்சாரங்கள், போராட்டங்களின் விளைவே இந்த விழிப்புணர்வு.

‘வளர்ச்சியின் நாயகர்’ பின்கதை என்ன?
            2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குஜராத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக புதுப்புது தகவல்கள், சான்றுகள் முளைத்த வண்ணம் உள்ளன. மூத்த போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் சாட்சியம் அளிக்கத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் 1983-ல் நடைபெற்ற தமிழர் இனப்படுகொலைகளுக்கு இணையானது குஜராத் படுகொலைகள் என்று கருத இடம் உண்டு.
          கோத்ரா ரயில் எரிப்பில் இறந்தவர்களின் உடல்கள் திட்டமிட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன; போகிற வழியில் வகுப்புக் கலவரங்கள் தூண்டப்பட்டன; செயல்படாமலிருக்குமாறு காவல் துறைக்கு மாநிலத்தின் உயர் தலைமையிலிருந்தே வாய்மொழி ஆணைகள் சென்றன என்றெல்லாம் கூறுகின்றன வந்துகொண்டிருக்கும் சான்றுகள். முஸ்லிம்களுக்குப் ‘பாடம் கற்பிக்க’ கொலை, பாலியல் வன்முறை, சித்ரவதை, சூறையாடலில் ஈடுபட வன்முறைக் கும்பல்களுக்கு பாதுகாப்பும் உதவிகளும் அளிக்கப்பட்டதுடன் அவர்கள் பிடிபடாமல் தப்பிக்கவும் வழி செய்யப்பட்டன என்ற தகவல்களும் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘வளர்ச்சியின் நாயகன்’ என்று புகழப்படுபவர் எப்படிப்பட்ட செயல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்று ஜனநாயகப் பாரம்பரியத்தில் வந்த நமது பத்திரிகைகள் உண்மைகளை வெளிப்படுத்தி அவருடைய உண்மை உருவை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
                ஆதரவாளர்கள் ஆயிரம் சொன்னாலும் மோடியும் அவருடைய அரசும் 2002-ல் என்ன செய்தார்கள் என்பதுடன் அவர் பிரிவினையாளர் என்பதையும் கோடிக்கணக்கான மக்களுக்கு அவை தொடர்ந்து நினைவூட்டிவருகின்றன. பத்திரிகைகளும் மக்கள் இயக்கங்களும் தொடர்ந்து மேற்கொண்டுவரும் முயற்சிகளால், பத்தாண்டுகளுக்கு முன்னால் இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆழமான காயம் இன்னமும் ஆறவில்லை என்பதை ஜனநாயக இந்தியாவும் உலகமும் மறக்கவில்லை. குஜராத் மக்கள்தொகையில் 9 சதவீதமாக இருக்கும் முஸ்லிம்கள் இன்னமும் சேரிகள் போன்ற சுகாதாரக் கேடான பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்களும் வந்துகொண்டிருக்கின்றன.
              2002 சம்பவங்களுக்கு யார் முழுப் பொறுப்பு என்பதை அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் தெரிந்துவைத்துள்ளனர்.
             கடந்த 25ஆண்டுகளில் நடந்த மிக மோசமான வகுப்புக் கலவரத்தில் முதல்வரும் அவருடைய அரசும் ஆற்றிய பங்கும் அதற்குப் பிறகு நீதி கிடைத்துவிடாமல் தடுக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைகளும், உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசியல் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட உறுதியான நடவடிக்கை எடுத்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும் அவர்கள் அறிவார்கள்.

காரில் அடிபட்ட நாய்க்குட்டிகளா முஸ்லிம்கள்?
            கலவரங்கள் குறித்து ‘வளர்ச்சியின் நாயகன்’ கவலைப்படவில்லை என்பதும் கலவரங்களைத் தடுக்கத் தவறியதற்காக ‘வளர்ச்சியின் நாயகன்’ இன்னமும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை என் பதையும் அரசியல் விழிப்புணர்வுள்ளவர்கள் அறிவார்கள். “காரை ஒருவர் ஓட்டிச்செல் லும்போது பாதையில் ஒரு நாய்க்குட்டி காரில் சிக்கி அடிபட்டால், அந்த காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருப்பவருக்கு மனவருத் தம் இருக்காதா என்ன? - மன வருத்தம் இருக்கத்தான் செய்யும்” என்று தன் நிலை குறித்து விளக்கம் அளித்தார் ‘வளர்ச்சியின் நாயகன்’.
                 சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தார்மீகரீதியாகவும் 2002 வகுப்புக் கலவரங்கள் எதிர்காலத்திலும் எளிதில் மறைந்து விடாது. மோடி பிரதமரானால் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்சனை முற்றி மேலும் சிக்கலாகவே மாறும். காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், சில மாநிலக் கட்சிகள் மட்டும் மோடியை எதிர்க்கவில் லை; பாரதிய ஜனதாவின் தோழமைக் கட்சியாகவே பிகார் ஆட்சியில் இருந்த நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் இந்த ஒரு காரணத்துக்காகவே கூட்டணியை விட்டு விலகியது. மோடி பிரதம ராவதை ஏற்கவே முடியாது என்றது. “மோடி என்ற தனிநபர் மீது வெறுப்போ கோபமோ இல்லை; அவர் அமல்படுத்த விரும்பும் கொள்கைகள், அவருடைய கண்ணோட்டம் ஆகியவற்றை ஏற்க முடியாமல் தான் எதிர்க்கிறோம்” என்றுதான் எதிர்ப்பவர் கள் எல்லோரும் சொல்கிறார்கள்.
           இந்தியாவில் அவருக்கு எதிரான அரசியல் எதிர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கிறது சர்வதேச அரங்கில் அவருக்கிருக்கும் மற்றவர் பொறாமைப்பட முடியாத ‘வேண்டப்படாதவர்’ அந்தஸ்து. பன்னாட்டு நிறுவனங்கள் தன்னுடைய மாநிலத்தில் முதலீடு செய்ய சிவப்புக்கம்பளம் விரிக்கும் முதலமைச்சர் என்ற சிறப்பு இருந்தபோதிலும் அவரைத் தங்கள் நாட்டுக்கு வர அனுமதிக்க விசா தர முடியாது என்று அமெரிக்கா 2005-ல் மறுத்துவிட்டது. மதச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் அல்லது அதற்குக் காரணமானவர்கள் என்று கருதப்படுவோருக்கு விசா தருவதில்லை என்ற சட்டப்பிரிவின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1984-ம் 2002-ம்
              84-ம் 2002-ம்1984-ல் தில்லியில் 8,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்; 2002-ல் குஜராத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். இவ்விரு சம்பவங்களிலும் பத்திரிகைகளும் போலி மதச்சார்பின்மைவாத அரசியல்வாதிகளும் இரட்டை வேடம் போடுவதாக சங்பரிவார பத்திரிகைத் தொடர்பாளர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர். ஓர் இனப்படுகொலைக்கு இன்னோர் இனப்படுகொலை சமமாகிவிடும் என்று சொல்வதே குமட்டுகிறது. ஒரு வாதத்துக்காக இதை ஏற்றாலும்கூட சீக்கியர்கள் படுகொலைக்கு பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்பில்லை என்றாலும் - நாடாளுமன்றத்தில் 2005 ஆகஸ்ட் 12-ல் மன்னிப்பு கேட்டார் (மன்னிப்புதான் கேட்டார்; கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு முழுத்தண்டனை பெற்றுத்தரவில்லை, சமரச நடவடிக்கைகளும் போதாது என்பதெல்லாம் உண்மைதான். இருந்தாலும் அது தார்மீக ரீதியான ஒரு செயல், அரசியல் ரீதியான ஒரு சமிக்ஞை).
           ஆனால், மோடி என்ன செய்தார்? 2002 கலவரம் தொடர்பாக அவர் இதுவரை நேரடியாக நாட்டு மக்களிடம் வருத்தமும் தெரிவிக்கவில்லை, கலவரத்தைத் தடுக்கத் தவறியதற்காக மன்னிப்பும் கோரவில்லை. இதில்தான் அவருடைய சித்தாந்த ரீதியான அரசியல் உத்தி அடங்கி இருக்கிறது. சங் பரிவாரங்களின் வகுப்புவாதச் சித்தாந்தத்துக்கு இரைபோடும் உத்தி. பத்தாண்டுகளாகப் பரிவாரங்களுக்குள் ஏற்பட்ட சித்தாந்தக் குழப்பம், அரசியல் குழப்பம் ஆகியவற்றுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தீர்க்கமான முடிவுக்கு வந்திருக்கிறது. நாட்டை ஆளவும் மக்களை ஒன்றுதிரட்டவும் இந்துத்துவக் கொள்கைகளே இனிமையமாக இருக்க வேண்டும் என்பதே அது.

கண்ணை நம்பாதீர்
              இந்தியப் பெருநிறுவனங்களின் கண்ணை ‘வளர்ச்சி நாயகன்’ கோஷம் மறைத்து விட்டது. காங்கிரஸின் கொள்கைகளால் வெறுத்துப்போன வாக்காளர்களுக்கும் இந்த கோஷம் கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால், சங் பரிவாரங்களின் கொள்கைகள் என்னவோ விட்டுத்தர முடியாத இந்துத்துவா, நாட்டு மக்களைப் பிளவாடும் செயல் திட்டங்கள், அடையாளங்கள், பிரச்சாரங்கள் ராமஜன்மபூமியும் அதில் ஒன்று ஆகியவை இணைந்த அடிப்படைவாதம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
                  எங்கேயும் மக்கள் எவரும் எவரை விடவும் தாழ்ந்தவர் இல்லை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியமான அடிப்படையாக இருப்பதுடன், கொள்கை அளவில் மட்டும் அல்லாமல், நடைமுறையிலும் அது கடைப்பிடிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்படுகிறதோ, அந்த மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியாவுக்கு, மோடி பிரதமராவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் என்பதை 2002-லிருந்து இன்றுவரை ஆறாமலிருக்கும் வடு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.
 நன்றி
Return to frontpage

மங்கள்யான் - செவ்வாயும் நமக்கு தொட்டுவிடும் தூரம் தான்....!

          
            இந்தியாவின் நீண்ட நாளைய கனவை நமது விஞ்ஞானிகள் நனவாக்கியிருக்கிறார்கள். நாம் முன்பு விண்ணைத் தொட்டோம். பின் நிலவைத் தொட்டோம். இப்போது செவ்வாயும் நமக்கு தொட்டுவிடும் தூரம் தான். விண்வெளி ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுடன் போட்டிப்போடும் அளவிற்கு இந்தியாவும் வளர்ந்திருக்கிறது என்பதில் நமக்கெல்லாம் பெருமையளிக்கிறது.

             நேற்று முன் தினம் இந்தியா செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பிய ''மங்கள்யான்'' செயற்கைக்கோள் என்பது இந்திய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் என்றே சொல்லவேண்டும். இதற்காக பாடுபட்ட ''இஸ்ரோவில்'' பணிபுரியும்   நம் இந்திய விஞ்ஞானிகள் அனைவரையும் நெஞ்சாரப் பாராட்டவேண்டும். அவர்களின் கூரிய விஞ்ஞான அறிவையும், அயராத உழைப்பையும், திறம்பட்ட கூட்டுமுயற்சியையும் கண்டிப்பாக பாராட்டியாகவேண்டும்.
             இந்தியாவின் சொந்த முயற்சியால் செவ்வாய் கிரகத்திற்கு ''மங்கள்யான்'' செயற்கைக்கோளை உலக நாடுகள் அனைத்தும் வியந்துபோயின. உலக அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்க, உலகம் முழுதும் நம்மை அண்ணார்ந்து பார்க்கின்றனர். மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடைய இன்னும் பத்து மாதங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால் மங்கள்யான் செவ்வாயின் மேற்பரப்பில் இறங்கப்போவதில்லை என்றும்,  அதன் சுற்றுப்பாதையில் மிதந்தபடி செவ்வாய் கிரகத்தை பற்றி இதுவரை அறியப்படாத  தகவல்களை மங்கள்யான் சேகரித்து அனுப்பும் என்றும் சொல்லப்படுகிறது.
              மங்கள்யானுடன் லைமன் ஆல்பா போட்டோமீட்டர் உள்பட 5 உபகரணங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று மீத்தேன் வாயு இருப்பைக் கண்டறியும் என்றும், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப்பதைக் கண்டறிவதுதான் மங்கள்யானின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். மங்கள்யான் மீத்தேன் இருப்பை உறுதிசெய்தால், பின் அங்கு மனிதர்கள் வாழக்கூடிய சூழலையும் ஆய்வு செய்வதும் மங்கள்யான் திட்டத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
           இந்த திட்டத்தில் இரண்டு கேள்விகள் நமக்கு எழுகின்றன.
           ஒன்று... செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யானை அனுப்பியதால், தனிப்பட்டமுறையில் இந்திய மக்களுக்கு என்ன பயன் விளையும்....? என்ற மிகமுக்கியமான கேள்வி எழுகிறது. இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன்,  "இது ஒரு தேசியப் பெருமிதம்" என்று கருத்து சொல்கிறார். ஆனால் இன்னொரு பக்கம் அதன் முன்னாள் தலைவர்  ஜி.மாதவன் நாயர்,  "இந்தத் திட்டம் நாட்டுக்கு வீண் செலவு" என்று வேறுவிதமாக கருத்து சொல்கிறார். ஆனால் அந்த இரண்டு பேருடைய கருத்துக்களும் சரியானதே. ஏற்புடையதே.
            விண்வெளி ஆராய்ச்சிக்கு நம் நாடு செய்யும் செலவு என்பது மற்றைய நாடுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது மிக மிக குறைவே. எனவே ரூ.450 கோடி செலவு செய்து அனுப்பப்பட்ட மங்கள்யான் ஒரு தேசியப் பெருமிதம் தான். இந்திய விஞ்ஞானிகள் மெச்சத்தகுந்த அறிவியல் ஆற்றல் படைத்தவர்கள். இது போன்ற அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளை ஊக்குவித்தால் தான், நம் நாட்டிலிருக்கும் அறிவியல் ஆற்றல் படைத்த இளம் விஞ்ஞானிகள் வாய்ப்பை தேடி வேறு நாட்டிற்கு படைஎடுக்கமாட்டார்கள். என்றாலும், இந்தியா போன்ற வளரும் நாட்டின் இன்றைய சூழ்நிலையில் - தீர்க்கப்படாத மக்களின் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் போது இந்த திட்டம் ஒரு வீண் செலவோ என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இந்தியாவிலேயே அனைத்து மக்களுக்கும்  சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல், 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் உண்ண உணவில்லாமலும், தங்க இடமில்லாமலும், மின்சார வசதியில்லாமலும், கழிப்பறை வசதி இல்லாமலும் வாழமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கையில், செவ்வாயில் மனிதன் வாழமுடியுமா என்ற ஆராய்ச்சி நமக்கெல்லாம் நகைக்கும்படித்தான் இருக்கிறது. இந்தியாவிலேயே நிம்மதியா வாழமுடியலையாம். இதுல செவ்வாயில போயி என்னத்த வாழறது என்ற இரண்டாவது கேள்வியும் நமக்குள் எழுகிறது.

செவ்வாய், 5 நவம்பர், 2013

படேலுக்கு இணையாக மோடியை முன்னிறுத்துவது மோசடியானது....!

 




                    சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சியில் கரண் தாப்பர் நடத்தும் ''டெவில்ஸ் அட்வகேட்'' என்ற  நிகழ்ச்சியில் பங்கேற்ற மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி ''பிரதமர் கனவு வேட்பாளர்'' நரேந்திர மோடியை கீழ்கண்டவாறு கடுமையாக விமர்சனம் செய்தார்.                                               
          சர்தார் வல்லபாய் படேல் தற்போது உயிரோடு இருந்திருந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக நரேந்திர மோடி விஷம் கக்கி வருவதைப் பார்த்து மிகவும் வேதனையடைந்திருப்பார். மேலும் நரேந்திரமோடியை ஒரு போதும் தனது தத்துவார்த்த வாரிசாக சர்தார் வல்லபாய் படேல் ஏற்றுக்கொண்டிருக்கவே மாட்டார்.
               அவரது வாரிசாக தன்னைத்தானே மோடி புகழ்ந்துகொள்வதும், அவரது பா.ஜ.க ஆதரவாளர்கள் கொண்டாடுவதும் எந்தவிதத்திலும் பொருத்தமற்றதும்,  இது  படேலை முற்றிலும் அவமரியாதை செய்வதுமான செயலாகும்.
                 2002 - ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெருமளவில் மதவெறிப் படுகொலைகள் நடந்தபோது, மோடி தனது ''ராஜதர்மத்தை'' நிறைவேற்றிவிட்டார் என்று கூறி அப்போதைய பிரதமர் வாஜ்பாய், மோடியை புகழ்ந்தார். அப்போது அவர்கள் படேலைப் பற்றி எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. ஒருவேளை படேல் தற்போது உயிரோடு இருந்திருந்தால் மிகவும் வருத்தமடைந்திருப்பார். வேதனையும் கவலையும் அடைந்திருப்பார். 
                இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக மட்டுமல்ல. குஜராத்திலிருந்து வந்தவர் என்ற முறையிலும் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த தாக்குதலைத் தடுக்க முடியாமல் போய்விட்டதே என்று படேல் கவலைப்பட்டிருப்பார் என்றே நினைக்கிறேன். படேலுக்கு இணையாக மோடியை முன்வைப்பது முற்றிலும் மோசடியானது. ஏற்றுக்கொள்ளமுடியாதது. 
            சர்தார் வல்லபாய் படேல் என்பவர் மகாத்மா காந்தியின் சீடராக இருந்தவர். மகாத்மா காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற மாபெரும் குடைகளின் கீழ் வளர்ந்தவர். மோடி என்பவர் ஆர்.எஸ்.எஸ் என்ற குடையின் கீழ் வளர்ந்தவர். இப்படி வேண்டுமானால் ஒப்பிட்டுப் பேசலாம். மேலும் மற்றொரு அம்சத்தையும் இருவருக்கும் இடையில் ஒப்பிடலாம். அது என்னவென்றால் படேல் என்ற தனி மனிதர் எப்போதுமே ஒரு குழுவை இயக்குபவராக, கூட்டு உணர்வை ஏற்படுத்துபவராக இருந்தார். ஆனால்  அவரது வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தன்னை முன்னிறுத்தியதில்லை. எப்போதுமே இதர மக்களுக்காகவே பாடுபட்டவர். ஆனால் மோடியைப் பொறுத்தவரை குழு உணர்வை ஏற்படுத்துகிறார். அதிலும் அது முழுக்க முழுக்க தன்னை மட்டுமே முன்னிறுத்துவதாக அமைந்திருக்கிறது. 
            காங்கிரஸ் என்ற இயக்கம் சர்தார் வல்லபாய் படேலை மறந்து வெகுகாலமாகிவிட்டது என்றும், அவர் மறைந்து 63 ஆண்டு காலம் ஆகியுள்ள நிலையிலும், அவரது பணிகளை சிறு அளவிற்கு கூட நினைவுகூறத் தயாராக இல்லாத கட்சியாக மாறிவிட்டது. நேருவைத் தொடர்ந்து இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, தற்போது ராகுல்காந்தி என அவரது குடும்ப வாரிசுகள் மட்டுமே அரசு அதிகாரத்தின் மூலமாக பலன் பெற்றுவருகிறார்கள். ஆனால் படேலின் குடும்பத்திலிருந்து அப்படி யாரையும் சொல்ல முடியாது. 
            நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேருவை மகாத்மா காந்தி முன்வைத்தபோது, நேருவை விட 16 ஆண்டுகள் மூத்தவராக இருந்த போதிலும், வல்லபாய் படேல் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார். ஏனென்றால் காங்கிரஸ்காரராக இருப்பதையும் காந்தியின் சீடராக இருப்பதையும்  மட்டுமே அவர் பெருமிதமாக நினைத்திருந்தார். நேருவே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்றும் சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டவர் அவரே என்றும் ஏற்றுக்கொண்டவர் தான் படேல் என்பதுமறக்கமுடியாதது.
            மேற்கண்டவாறு பேசிய மகாத்மா காந்தியின் பேரனான ராஜ்மோகன் காந்தி, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும், இந்திய விடுதலைக்காக போராடியவருமான சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  
நன்றி : 

திங்கள், 4 நவம்பர், 2013

''ஆரம்பம் - ஒரு நல்ல பாடம்'' - உண்மையிலேயே பாராட்டவேண்டும்...!

       
            தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த திரைப்படங்களில் ''ஆரம்பம்'' படம் பார்த்தேன்.  பார்த்து முடித்தவுடன் அந்த படத்தில் நான் கவனித்த ''ஒரு முக்கியமான விஷயத்தை'' மட்டும்  எடுத்து எழுதவேண்டும் என்று என் மனம் உறுத்திக்கொண்டே இருந்தது. அந்தப் படத்தைப் பார்த்த இரசிகர்களும், இளைஞர்களும் அதை கவனித்து இருப்பார்களா என்று தெரியவில்லை. படத்தின் விமர்சனத்தை எழுதிய எந்தப் பத்திரிக்கைகளும் அதை கவனிக்கவில்லையா என்று தெரியவில்லை. அதைப் பற்றி ஒரு பத்திரிக்கையும் குறிப்பிடவில்லை என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
            இந்தப் படத்தில் யாரும் கவனிக்காத ''ஒரு முக்கிமான விஷயம்'' என்னென்னா...? இந்த படம் முழுக்க ''சிகரெட் வாடையோ, சாராய வாடையோ'' அடிக்கவேயில்லை என்பது தான் இந்தப் படத்தின் சிறப்பு. வழக்கமாக கடந்த இருபது ஆண்டுகளாக எடுக்கப்படும் திரைப்படங்கள் அனைத்திலும் சிகரெட் பிடிப்பது போலவும், குடிப்பது போலவுமான காட்சிகள் இருந்தாகவேண்டும். குடியை கெடுக்கும் குடியையும், சிகரெட்டையும் காட்டாமல் படமே எடுக்கமாட்டார்கள். எல்லா படங்களிலும் ஹீரோ குடிப்பார் அல்லது வில்லன் குடிப்பார். ஹீரோ ஸ்டைலா சிகரெட் பிடிப்பார்  அல்லது எல்லோரும் சேர்ந்து குடிக்கிற ''பாரை'' காட்டுவார்கள். இது தான் இன்றைய திரைப்படங்களின் இலச்சணம்.... இலக்கணம்...!
           இந்த வழக்கமான இலக்கணங்களை இந்தப் படத்தில் உடைத்திருக்கிறார்கள். அதற்காக உண்மையிலேயே  இயக்குனர் விஷ்ணுவர்த்தன், கதாநாயகன் அஜித் குமார் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் நெஞ்சார  பாராட்டத்தான் வேண்டும். இது போன்ற  திரைப்படத்தை எடுத்ததன் மூலம் தனது இரசிகர்கள் மீதும், இளைஞர்கள் மீதும் அவர்களுக்கு இருக்கின்ற அக்கறையை காட்டியிருக்கிறார்கள். மற்ற ஹீரோக்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மற்ற ஹீரோக்களும், இயக்குனர்களும் இலாப நோக்கத்தோடு படம் எடுப்பதை விடுத்து இது போன்ற நல்ல விஷயங்களை பின்பற்றவேண்டும் என்பது தான் ''ஆரம்பம்'' திரைப்படம் எடுத்துச் சொல்லும் ''நல்ல பாடம்'' என்பது தான் இந்தப் படத்தைப்பற்றிய எனது விமர்சனம்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

பி.ஜே.பி.-யின் மீது விசுவாசத்தைக்காட்டும் லதா மங்கேஷ்கர்...!

           

             சென்ற வெள்ளிக்கிழமை அன்று புனேவில் இந்தி திரைப்படப் பாடகி லதா மங்கேஷ்கர் தனது தந்தையார் தினநாத் மங்கேஷ்கரின் நினைவாகக் கட்டியுள்ள ''சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை'' ஒன்றின் துவக்க விழாவிற்கு ''பிரதமர் கனவு வேட்பாளர்'' நரேந்திரமோடியையும் அழைத்திருந்தார். தனது ''பிரதமர் கனவு'' பிரச்சாரக்கூட்டத்தை 200 கோடி ரூபாய் அளவிற்கு  செலவு செய்து ஏற்பாடுகளை செய்யும் நரேந்திரமோடி இலவசமாய் கிடைத்த இந்த ''பிரச்சார மேடையையும்'' விட்டுவைக்கவில்லை. பிரபலங்களோடு தன்னை இணைத்துக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அவங்ககிட்ட இருக்கும் ஒரு பத்து ஓட்டையாவது தனக்கு சாதகமாக மாற்ற முடியாதா என்ற  ஏக்கத்தில் மோடி கலந்து கொண்டார். கலந்துகொண்டது மட்டுமல்லாமல், தான் சொன்னபடி லதா மங்கேஷ்கரை சிந்தாமல், சிதறாமல், குறையில்லாமல் பேசவும் வைத்தார்.
            நரேந்திரமோடியை மேடையில் வைத்துக்கொண்டு லதா மங்கேஷ்கர் நரேந்திரமோடி சொல்லிக்கொடுத்தது போல் “நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனது சகோதரரைப் போலத் திகழ்கிறார். இந்தியாவின் பிரதம மந்திரியாக நரேந்திரமோடி தான் வரவேண்டும் என்று எனது இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இதுதான் ஒவ்வொருவரின் விருப்பமும் கூட....!”  என்று மெய்சிலிர்க்க பேசி, 2001 - ஆம் ஆண்டு தனக்கு ''பாரத் ரத்னா'' பட்டம் அளித்து கவுரவப்படுத்திய பாரதீய ஜனதாக் கட்சிக்கு தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார்  என்பதை தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

வெள்ளி, 1 நவம்பர், 2013

வல்லபாய் பட்டேல் மீது மோடிக்கு என்ன அப்படியொரு ''காதல்''....?

             
               சமீப காலமாக  தான் பிரதமாராகவே ஆகிவிட்டதாக கனவு கண்டுகொண்டு ஆட்டம் போடுவதும், மேடைகளிலும் பேட்டிகளிலும் முன்னாள் பிரதமர் நேருவை பலவாறு சாடுவதும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், அன்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடைசெய்தவருமான சர்தார் வல்லபாய் பட்டேலை தலையில் தூக்கிக்கொண்டு ஆடுவதுமான நரேந்திரமோடியின் வேலைகளும் லீலைகளும் சகித்துக்கொள்ளமுடியாமல் போகிறது. இவரது இந்த ஆட்டத்தை பி.ஜே.பி - காரர்களே சகித்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் வருகிறது.
          வல்லபாய் பட்டேல் மீது மோடிக்கு அப்படி என்ன காதல்... பாசம்....? பொதுவாகவே காதல் என்பது சாதி, மதம், மொழி, இனம், நாடு பார்க்காமல் வருவது. ஆனால் பி.ஜே.பி கட்சியை சேர்ந்த மோடிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பட்டேல் மீது இப்படியொரு பாசம் வந்திருக்கிறதென்றால் அதை ''காதல்'' என்று தானே சொல்லவேண்டும். ஆனால் இது திடீரென்று வந்ததல்ல. திட்டம் போட்டு வந்தது தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
          குஜராத் ''காந்தியின் மாநிலம்'' என்ற பெயரையும், புகழையும், வரலாற்றையும் மாற்றவேண்டும். அதற்கு அதே மாநிலத்தை சேர்ந்த இன்னொரு தலைவர் தேவைப்பட்டார். அதிலும் அவர் இந்துமத உணர்வாளராகவும் இருக்கவேண்டும். அப்படி ஒரு தலைவர் மோடிக்குத் தேவைப்பட்டார். அவர் தான் வல்லபாய் பட்டேல். பட்டேல் அப்பட்டமான ''காவி மனிதர்'' என்று தன்னைக் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், இந்துமத உணர்வாளராகவும்  இந்துமத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-வுடன் மென்மைத்தன்மையுடனும் வாழ்ந்திருக்கிறார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதனால் தான் மோடி தனக்குத்தானே ''சின்ன சர்தார்'' என்ற நாமத்தை சூட்டிக்கொண்டார்.
         அதுமட்டுமல்லாமல், பட்டேல் அன்றைய தினம் கம்யூனிஸ்ட் கட்சிக்கெதிரான - கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கேதிரான கொள்கையை உடைய காங்கிரஸ் கட்சிக்காரர்களில் முதன்மையானவர். அதனால் தான் இவர் உள்துறை அமைச்சராக பதவி வகித்த போது, அந்த அமைச்சர் பொறுப்பை கம்யூனிஸ்ட்டுகளை அடக்குவதற்கும், ஒடுக்குவதற்கும் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தினார். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் உரிமைப் போராட்டங்களை கடுமையாக அடக்கி ஒடுக்கினார் என்பதற்காகவே அவருக்கு ''இரும்பு மனிதர்'' பட்டப்பெயர் அளிக்கப்பட்டது. அந்த ''இரும்பு மனிதர்'' என்ற நாமத்தின் மீதும் நம்ப ''நமோ''-விற்கு ஈர்ப்பு வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். எப்படியாவது அந்த நாமத்தை ''சுட்டு'' தன் பெயரோடு சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், காங்கிரஸ் கட்சியிலிருந்த வல்லபாய் பட்டேலை அவரைக் கேட்காமலேயே பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்த்துக் கொண்டு, பட்டேலின் முகமூடியை எடுத்து மாட்டிக்கொண்டார். 
           அது போலவே மோடிக்கு பட்டேல் மீதான ''காதலுக்கு'' இன்னொரு காரணமும் இருக்கிறது.  இந்திய அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இனத்துவருக்கான இடஒதுக்கீட்டை அன்றே வல்லபாய் பட்டேல் கடுமையாக எதிர்த்திருக்கிறார் என்பதும், அவரது எதிர்ப்பினாலேயே சிறுபான்மை இனத்துவருக்கான இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறாமல் போய்விட்டது என்பதும் இன்றைக்கும் மறக்கமுடியாத அன்றை அரசியல் நிகழ்வு யாராலும் மறுக்கமுடியாது.
         அதுமட்டுமல்ல 1947 பிரிவினையின் போது  பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட்டதைப் போல, இந்தியாவில் இருந்து முஸ்லீம்களும் விரட்டியடிப்பட வேண்டும் என்று வல்லபாய் பட்டேல் கொதித்தார் என்பதும், ஆனால் நேரு பட்டேலின் அத்தகைய கருத்துக்களை கடுமையாக எதிர்த்தார் என்பதும், இஸ்லாமியர்கள் இந்தியாவின் ஓர் அங்கம் என்பதை உணர்த்தி, பட்டேலின் அத்தகைய கருத்துகளுக்கு நேரு முற்றுப்புள்ளி வைத்தார் என்பதும் மறக்கப்பட்ட வரலாறு.
            நேருவின் மீதான எரிச்சலுக்கும், பட்டேல் மீதான ''அதீதமான காதலுக்கும்'' அன்றைய இந்த நிகழ்வுகள் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அதனால் தான் பிரதமர் பதவிக்காகவும், ஓட்டுக்காகவும் அவ்வப்போது பச்சோந்தியைப் போல் நிறம் மாறிக்கொண்டிருக்கும் நரேந்திரமோடி மேலே சொன்ன அந்த வரலாற்றுப் பிழைகளை மறக்காமல்,  '' தான் ஒரு வல்லபாய் பட்டேல்'' என்றும், அன்றைய பட்டேல் ''ஒரு மோடி'' என்றும் பிதற்றித் திரிந்துகொண்டிருக்கிறார்.