ஞாயிறு, 17 நவம்பர், 2013

இளம்பெண்ணை உளவு பார்த்த மோடியும், அவரது கூட்டாளியும்...!

        
          வர வர நமக்கெல்லாம் தலைகுனிவை ஏற்படுத்தும் ''பிரதமர் கனவு வேட்பாளர்'' நரேந்திர மோடியின் ''லீலைகளும்'' வெளியே வரத்தொடங்கிவிட்டன. ''கோப்ரா போஸ்ட்'' என்ற புலனாய்வு இணையதள ஊடகம் இந்த பரபரப்புச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
           2009 - ஆம் ஆண்டில் பெங்களூரிலிருந்து அகமதாபாத்திற்கு வருகை புரிந்த பெண் பொறியாளர் ஒருவரை குஜராத் மாநிலத்தின் மூத்த போலீஸ் அதிகாரி ஜி.எல்.சிங்கால் என்பவரின் தலைமையில் குஜராத் போலீசார் உளவு பார்த்துள்ளனர். அகமதாபாத்தில் அந்தப் பெண் சென்ற இடங்களிலெல்லாம் - விமான நிலையம், தங்கியிருந்த ஹோட்டல், உணவகம், ஷாப்பிங் மால், உடற்பயிற்சிக்கூடம், மருத்துவமனை என பல்வேறு இடங்களில் பின்தொடர்ந்து வேவு பார்த்துள்ளனர் என்பது அதிர்ச்சித் தரக்கூடிய  தகவல்களாகும். . வேவு பார்க்கப் பட்டதாகக் கூறப்படும் அந்த  பெண்ணின் பெற்றோர் குஜராத்தின் அகமதாபாத் நகரில் வசிப்பதாகவும்,  அவர்களைப் பார்க்க தான் அந்தப் பெண், பெங்களூரில் இருந்து அகமதாபாத் அடிக்கடி வந்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
            ''மேலிட உத்தரவின்'' பேரில், அப்போதைய உள்துறை அமைச்சரும், மோடியும் நெருங்கிய கூட்டாளியுமான அமித் ஷா தான் இந்த ''மானங்கெட்ட'' வேலைக்கு போலீசாரைப் பணித்ததாக அந்த இணையதள ஊடகம் சுட்டிக்காட்டுகிறது. தொலைபேசி உரையாடலிலும் ''மேலிட உத்தரவின்'' பேரில் தான் அந்தப் பெண் வேவு பார்க்கப்பட்டதாக மோடியின் கூட்டாளி அமித் ஷாவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்படியென்றால் ''மேலிடம்'' என்று சொல்லப்படுவது யார்....? குஜராத்தில் ''மேலிடம்'' என்று சொன்னால், சந்தேகமில்லாமல் அது நரேந்திர மோடியை தான் குறிக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. நிச்சயமாக வேறு யாரையும் குறிப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகவே இளம்பெண்ணை உளவு பார்த்த விஷயத்தில் ''பிரதமர் கனவு வேட்பாளர்'' நரேந்திர மோடிக்கும் முக்கிய பங்கு இருப்பது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.
           அதிகாரம் மற்றும் போலீசாரை பயன்படுத்தி இளம்பெண் ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையை வேவு பார்ப்பது என்பது ஒரு அநாகரீகமான செயலாகும். அதுமட்டுமல்லாது இயற்கை மரபுகளுக்கும், சட்டவிதிகளுக்கும் எதிரானது.
          அதுமட்டுமல்ல, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர் நரேந்திர மோடி, அவரது கூட்டாளி அமித் ஷா மற்றும் சம்பந்தபட்ட போலீஸ் அதிகாரிகள் மீது முறையான நீதிமன்ற விசாரணை நடத்தப்படவேண்டும். இந்த விவகாரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால், ''இம்முறையாவது'' அவர் தண்டிக்கப்படவேண்டும்.