செவ்வாய், 12 நவம்பர், 2013

இந்திய வெளியுறவு கொள்கையில் தலையிடும் மாநிலக்கட்சிகளின் அதிகப்பிரசங்கிதனம்....!

        
         உள்நாட்டு பிரிவினைப்போர் முடிவு பெற்று, (மயான)அமைதியான சூழலில் 53 நாடுகளின் தலைவர்களை அழைத்து காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பின் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்துவரும் இலங்கை அரசு, மாநாட்டின் தனி சிறப்பு மற்றும் வெற்றியின் மூலம் உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்று உலக அரங்கில் இலங்கையை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு முயற்சிகள்  செய்து வரும் இந்த சூழ்நிலையில், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு  மட்டும் அமைதி குலைந்து ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.
            இலங்கையில் ''காமன்வெல்த் மாநாடு'' என்று எப்போது அறிவித்தார்களோ, அப்போதிலிருந்து நவக்கிரகங்களாக - திசைக்கு ஒன்றாக பிரிந்துகிடக்கும் தமிழக திராவிடக்கட்சிகள் ''ஒற்றுமையுடன்'' ஒரேக்குரலாக ''கோஷ்டிகானம்'' பாட ஆரம்பித்தார்கள். ''தமிழர்களை கொன்று குவித்த இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது'' என்று ஒரு கட்சியும், ''ராஜபட்சே நடத்தும் மாநாட்டை இந்தியா கலந்துகொள்ளாது புறக்கணிக்கவேண்டும்'' என்று வேறொரு கட்சியும், ''இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒரு துரும்பும் நகரக்கூடாது'' என்று மற்றொரு கட்சியும், இன்னுமொரு படி மேலேபோய் ''மாநாட்டை இலங்கையில் நடத்தாது தடை செய்யவேண்டும்'' என்று இன்னொரு கட்சியும் என இலங்கையை தனிமைப்படுத்த வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தின. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அதிமுக அரசு' இலங்கை மாநாட்டில் மத்திய அரசு கலந்துகொள்ளக்கூடாது என்பதையே மிரட்டலான தொணியில்  தமிழக சட்டமன்றத்தில் இரண்டு முறை  தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. இந்த விஷயத்தில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், அனைத்து திராவிடக்கட்சிகளும் கட்சி வேறுபாடு இல்லாமல் ''என்றுமில்லாத'' ஒற்றுமையை காட்டுகின்றன என்பது தான்.
        ஆனால்  இலங்கை அரசுக்கு எதிரான இந்த கோஷ்டிகானமும், ஒற்றுமையும், போராட்டங்களும், தீர்மானங்களும்  எதற்காக என்பது தமிழக மக்களுக்கு தெரியாமல் இல்லை. இது தங்கள்  கையில் உள்ள வாக்குச்சீட்டை குறிவைத்து நடத்தப்படும் ''மாயாஜாலம்'' தான் என்பதை தமிழக மக்கள் புரிந்து தான் வைத்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் மீது பாசத்தைப் பொழிவதில் தமிழக திராவிடக்கட்சிகளுக்குத் தான் எத்தனைப் போட்டி. இதைப்பார்க்கும் போது, ''அவ என்ன சொல்றது... நான் சொல்லுறேன்... சாப்பாடு எதுவும் இல்லை... வேற வீட்டைப்பாரு'', என்ற மாமியார், மருமகள், பிச்சைக்காரன் கதை தான் நினைவிற்கு வருகிறது.
          இது ஒரு புறமிருக்க. இன்னொரு பக்கம், இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்பது இலங்கை என்ற ஒரு தனி நாடு மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. அந்த கூட்டமைப்பில் உள்ள 53 நாடுகளும் சம்பந்தப்பட்டது. அத்தனை நாடுகளும் கலந்துகொள்ளும் மாநாட்டை இந்தியா புறக்கணிக்குமானால், உலக அரங்கில் இந்தியா தனிமைப்பட்டுவிடும். மற்றைய நாடுகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக திகழும் நமது நாட்டின் ''வெளியுறவுக் கொள்கை'' என்பது கேள்விக்குறியாகி விடும். பாதிப்புக்குள்ளாகும்.
இந்திய நாட்டின் வெளியுறவுக்கொள்கை என்பது பிரதமரோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. முறையான வெளியுறவுக்கொள்கையை வகுத்த இந்திய அரசியல் சாசனம் மற்றும்  பாராளுமன்றம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டது. உள்ளூர் அரசியலுக்காக தமிழக திராவிடக்கட்சிகளும், தமிழக அரசும் நடத்தும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் போராட்டங்களும், நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் ஒட்டுமொத்த இந்திய வெளியுறவுக்கொள்கைகளுக்கும், அரசியல் சாசனத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் எதிரானது மட்டுமல்ல ஒரு போதும் ஏற்கத்தக்கதுமல்ல.
          பக்கத்து நாடுகளுடனான உறவை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை வைப்பதும் சிறுபிள்ளைத்தனமாகும். நம் நாட்டு மக்கள் அமைதியாக நிம்மதியாக வாழவேண்டும் என்றால் பக்கத்து நாடுகளுடானான உறவையும், நட்பையும் பேணவேண்டும். வளர்க்க வேண்டும். மேம்படுத்தவேண்டும். அது தான் தலைசிறந்த வெளியுறவுக்கொள்கையாக இருக்க முடியும். அதுமட்டுமல்ல அது தான் உண்மையான இராஜதந்திரம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
           இனிமேலாவது சொந்த இலாபத்திற்காக - ஓட்டு அரசியலுக்காக இது போன்ற ''கோரிக்கைகளை'' வைத்து முழங்குவதை இங்குள்ள திராவிடக்கட்சிகள் கைவிடவேண்டும். அது தான் ஒட்டுமொத்த தேச அமைதிக்கு நல்லது.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

காட்டிப்புட்டாங்கய்யா கம்யூனிஸ்ட் புத்திய.

பெயரில்லா சொன்னது…

''நம் நாட்டு மக்கள் அமைதியாக நிம்மதியாக வாழவேண்டும் என்றால் பக்கத்து நாடுகளுடானான உறவையும், நட்பையும் பேணவேண்டும்''

ராம்ஜி, காலையிலே சரக்கு அடிச்சிட்டு எழுதியதா ? சீன கம்முனிஸ்ட் ஆதரவா ?

காட்டிப்புட்டாங்கய்யா கம்யூனிஸ்ட் புத்திய. 100% correct

பெயரில்லா சொன்னது…

VELIURAVU KOLKAI ILLA...

VENGAYAM.......

FISHERMEN SUFFERING DAILY...

YENNA PUDUKUNKURAR

VELIURAVU MANTHIRI

வேகநரி சொன்னது…

மிக சரியாக சொன்னீர்கள்.