வெள்ளி, 8 நவம்பர், 2013

மங்கள்யான் - செவ்வாயும் நமக்கு தொட்டுவிடும் தூரம் தான்....!

          
            இந்தியாவின் நீண்ட நாளைய கனவை நமது விஞ்ஞானிகள் நனவாக்கியிருக்கிறார்கள். நாம் முன்பு விண்ணைத் தொட்டோம். பின் நிலவைத் தொட்டோம். இப்போது செவ்வாயும் நமக்கு தொட்டுவிடும் தூரம் தான். விண்வெளி ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுடன் போட்டிப்போடும் அளவிற்கு இந்தியாவும் வளர்ந்திருக்கிறது என்பதில் நமக்கெல்லாம் பெருமையளிக்கிறது.

             நேற்று முன் தினம் இந்தியா செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பிய ''மங்கள்யான்'' செயற்கைக்கோள் என்பது இந்திய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் என்றே சொல்லவேண்டும். இதற்காக பாடுபட்ட ''இஸ்ரோவில்'' பணிபுரியும்   நம் இந்திய விஞ்ஞானிகள் அனைவரையும் நெஞ்சாரப் பாராட்டவேண்டும். அவர்களின் கூரிய விஞ்ஞான அறிவையும், அயராத உழைப்பையும், திறம்பட்ட கூட்டுமுயற்சியையும் கண்டிப்பாக பாராட்டியாகவேண்டும்.
             இந்தியாவின் சொந்த முயற்சியால் செவ்வாய் கிரகத்திற்கு ''மங்கள்யான்'' செயற்கைக்கோளை உலக நாடுகள் அனைத்தும் வியந்துபோயின. உலக அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்க, உலகம் முழுதும் நம்மை அண்ணார்ந்து பார்க்கின்றனர். மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடைய இன்னும் பத்து மாதங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால் மங்கள்யான் செவ்வாயின் மேற்பரப்பில் இறங்கப்போவதில்லை என்றும்,  அதன் சுற்றுப்பாதையில் மிதந்தபடி செவ்வாய் கிரகத்தை பற்றி இதுவரை அறியப்படாத  தகவல்களை மங்கள்யான் சேகரித்து அனுப்பும் என்றும் சொல்லப்படுகிறது.
              மங்கள்யானுடன் லைமன் ஆல்பா போட்டோமீட்டர் உள்பட 5 உபகரணங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று மீத்தேன் வாயு இருப்பைக் கண்டறியும் என்றும், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப்பதைக் கண்டறிவதுதான் மங்கள்யானின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். மங்கள்யான் மீத்தேன் இருப்பை உறுதிசெய்தால், பின் அங்கு மனிதர்கள் வாழக்கூடிய சூழலையும் ஆய்வு செய்வதும் மங்கள்யான் திட்டத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
           இந்த திட்டத்தில் இரண்டு கேள்விகள் நமக்கு எழுகின்றன.
           ஒன்று... செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யானை அனுப்பியதால், தனிப்பட்டமுறையில் இந்திய மக்களுக்கு என்ன பயன் விளையும்....? என்ற மிகமுக்கியமான கேள்வி எழுகிறது. இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன்,  "இது ஒரு தேசியப் பெருமிதம்" என்று கருத்து சொல்கிறார். ஆனால் இன்னொரு பக்கம் அதன் முன்னாள் தலைவர்  ஜி.மாதவன் நாயர்,  "இந்தத் திட்டம் நாட்டுக்கு வீண் செலவு" என்று வேறுவிதமாக கருத்து சொல்கிறார். ஆனால் அந்த இரண்டு பேருடைய கருத்துக்களும் சரியானதே. ஏற்புடையதே.
            விண்வெளி ஆராய்ச்சிக்கு நம் நாடு செய்யும் செலவு என்பது மற்றைய நாடுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது மிக மிக குறைவே. எனவே ரூ.450 கோடி செலவு செய்து அனுப்பப்பட்ட மங்கள்யான் ஒரு தேசியப் பெருமிதம் தான். இந்திய விஞ்ஞானிகள் மெச்சத்தகுந்த அறிவியல் ஆற்றல் படைத்தவர்கள். இது போன்ற அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளை ஊக்குவித்தால் தான், நம் நாட்டிலிருக்கும் அறிவியல் ஆற்றல் படைத்த இளம் விஞ்ஞானிகள் வாய்ப்பை தேடி வேறு நாட்டிற்கு படைஎடுக்கமாட்டார்கள். என்றாலும், இந்தியா போன்ற வளரும் நாட்டின் இன்றைய சூழ்நிலையில் - தீர்க்கப்படாத மக்களின் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் போது இந்த திட்டம் ஒரு வீண் செலவோ என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இந்தியாவிலேயே அனைத்து மக்களுக்கும்  சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல், 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் உண்ண உணவில்லாமலும், தங்க இடமில்லாமலும், மின்சார வசதியில்லாமலும், கழிப்பறை வசதி இல்லாமலும் வாழமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கையில், செவ்வாயில் மனிதன் வாழமுடியுமா என்ற ஆராய்ச்சி நமக்கெல்லாம் நகைக்கும்படித்தான் இருக்கிறது. இந்தியாவிலேயே நிம்மதியா வாழமுடியலையாம். இதுல செவ்வாயில போயி என்னத்த வாழறது என்ற இரண்டாவது கேள்வியும் நமக்குள் எழுகிறது.

1 கருத்து:

அ. பாண்டியன் சொன்னது…

இந்திய விஞ்ஞானிகளின் கனவுத் திட்டம் நனவானதில் இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையே. தங்கள் பதிவு பலதரப்பட்ட காரணிகளையும் அலசியிருப்பது அழகு. பகிர்வுக்கு நன்றி..