ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

நட்பை பாராட்டுவோம்...! நண்பர்களை போற்றுவோம்...!

          
         இந்த ஆண்டும்   தொலைக்காட்சிகள், எப்.எம் ரேடியோக்கள் கல்லூரி மற்றும் பள்ளி இளைஞர்களை உசுப்பேற்ற, பரிசுப்பொருட்கள், வாழ்த்து அட்டைகள், கையில் கட்டும் நட்பு கயிறுகள், சினிமா, கடற்கரை, உணவுவிடுதி, பார்  என  சந்தையில் வியாபாரம் மும்முரமாய் நடக்க ''நண்பர்கள் தினம்'' வழக்கம் போல் இன்றும் அர்த்தமில்லாமல் - இலக்கில்லாமல் - யாருக்கும் பயனில்லாமல் கழிந்துகொண்டிருக்கிறது. இதுவா கொண்டாட்டம்...?  இதனால் யாருக்கும் பலன்...? இப்படியெல்லாம் சிந்திக்கவேண்டாமா...? 
            வழக்கம் போல் மனதுக்குள் நெருடல்... வேதனை... எதை நோக்கி இந்த இளைஞர்கள் பயணிக்கிறது. எதை சாதிக்க இந்த இளைஞர்களை எதை நோக்கியோ வழிகாட்டுகிறார்கள். எங்கோ அமெரிக்காவில் இரண்டு இணைபிரியா நண்பர்களில், எப்போதோ ஒருவன் இறந்து விட துயரம் தாங்காமல் மற்றொருவனும் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டானாம். இது என்ன உலகத்திலேயே சிறந்த நட்பா...? இவர்கள் தான் மிகச்சிறந்த நண்பர்களா...? இவர்களை விட சிறந்த நண்பர்களை உலகத்தில் நாம் பார்த்ததில்லையா...? அல்லது படித்ததில்லையா...? 
             ''கம்யூனிசம்'' என்ற பொதுவுடைமை தத்துவத்தை  உலகத்திற்கு அளித்து, அறிவுப்பூர்வமான சிந்தனையை, மனிதநேயத்தை நமக்கெல்லாம் கற்றுத்தந்த மாமேதைகள் கார்ல் மார்க்சும் பிரடெரிக் ஏங்கல்சும் நட்பிற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இல்லையா...? இந்த நட்பை நாம் கொண்டாடியிருக்கிறோமா...?  
            நமக்கு பக்கத்தில்  இருக்கும் செஞ்சியை ஆண்ட இராஜா தேசிங்கு, போரின் போது தனது நெருங்கிய  இஸ்லாமிய நண்பன் பகைவர்களால் கொல்லப்பட தன்னை தானே வாளால் குத்திக்கொண்டு தன உயிரை மாய்த்துக்கொண்ட வரலாற்றை நாம் படித்ததில்லையா....? இந்த நட்பை நாம் கொண்டாடியிருக்கிறோமா...?
                  முன்பு   தமிழ் இலக்கிய  காலத்தில் வாழ்ந்த கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பைப்பற்றி படித்திருக்கிறோம். சோழநாட்டு மன்னனும், சேரநாட்டு புலவனும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே நட்பு பாராட்டினார். ''பார்க்காமலேயே காதல்'' தமிழ் திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம். ''பார்க்காமலேயே நட்பு'' சங்க இலக்கியம் பார்த்திருக்கிறது. ஒரு நாள் பிசிராந்தையார் சேரநாட்டிலிருந்து தன் நண்பனைக் காண சோழநாட்டிற்கு செல்கிறார். ஆனால் அரண்மனையை அடைந்த போது தன் நண்பனான சோழ மன்னன் ''வடக்கிருந்து''  இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். அதைக்கேட்டு துயரம் தாங்காமல் பிசிராந்தையார் தன்  நண்பனைப் போல் ''வடக்கிருந்து'' தன் உயிரை மாய்த்துகொண்டார். இதைவிட உண்மையான நட்புக்கு ஒரு சான்று சொல்லமுடியுமா...?
            நீண்ட ஆயுளை தரும் நெல்லிக்கனி தனக்கு கிடைத்த போது, அதை மன்னன் அதியமான் தனது நண்பர் அவ்வைக்கு கொடுத்து நட்பு பாராட்டிய நெகிழ்வான நிகழ்வை நாம் தமிழ் இலக்கியத்தில் படித்ததில்லையா...? 


          இப்படியாக பல உதாரணங்களை நம்மால் சொல்லமுடியும். உண்மையான நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்த பூமி இது. நம் நட்புகளே மிகப்பெரிது... உயர்வானது... அப்படிப்பட்ட அந்த நண்பர்களை நாம் கொண்டாடுவோம்... வணிகமயமான நம் வாழ்க்கையில் சுயநலமில்லாத நம் நட்புக்கும் நேரம் ஒதுக்குவோம்... அது தான் மகிழ்ச்சிக்கான பாதை என்கிறார் ஒரு ஆங்கில கவிஞர். ஒருவரிடமும் நட்பு பாராட்டாதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான் என்று சாடுகிறது ஒரு மேலைநாட்டு பழமொழி. உண்மையான நட்பு அர்த்தமுள்ளது. அப்படிப்பட்ட நட்பை கொண்டாடுவோம். இன்று ஒரு நாள் மட்டுமல்ல... தினம்... தினம்...!