ஞாயிறு, 15 மே, 2016

தமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....!


             கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல்வேறு சந்தர்பங்களில், பல்வேறு வழிகளில் தமிழக மக்களை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும் இன்று மீண்டும் தலைகுனிய வைத்திருப்பது வெட்கக்கேடானது. 
                   கடுமையான பணப்பட்டுவாடா எதிரொலியாக அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும்  தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது வெட்கக்கேடானது. தேர்தல் விதிமுறைப்படி  இதுவரை வேட்பாளர் இறந்துவிட்டால் அல்லது கலவரங்கள் நடைபெற்றால் தான் தேர்தலை ஒத்திவைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். 
             அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவைச்  சேர்ந்த  முன்னாள் போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும்  திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிச்சாமி போட்டியிடுகிறார்கள். இந்த இரு பணமுதலைகள் இந்த தொகுதியில் தேர்தல் ஆணையமே திணறிப்போயிருக்கிறது. இவர்கள் செய்த பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையத்தாலேயே  கட்டுப்படுத்த முடியாத அளவிற்குப் போனதால் தான் இந்த நடவடிக்கையாம். கடவுளிடம் தான் அரவக்குறிச்சி தொகுதியை ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு தேர்தல் ஆணையம் நொந்துப்போயிருக்கிறது. 
          கடுமையான பணப்பட்டுவாடா காரணமாகவும்,  இந்த தொகுதியில் தான் திமுக-அதிமுகவிடமிருந்து வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த பணம் அதிக அளவு கைப்பற்றப்பட்டதன் காரணமாகவும் தேர்தலை ஒத்திவைக்கும் முடிவுக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டிருக்கிறது. அநேகமாக இதுபோன்ற தேர்தல் ஒத்திவைப்பு என்பது தேர்தல் வரலாற்றிலேயே இது தான் முதல்முறையாக இருக்கும். தமிழகம் தான் முன்மாதிரியாக இருக்கும் என்பது வெட்ககேடானது. 
            தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை ஒரு வாரத்திற்கு  முன்னதாகவே எடுத்திருந்தால், மற்ற தொகுதிகளில் பணப்பட்டுவாடா குறைக்கப்பட்டிருக்கும். இந்த முடிவை எடுப்பதற்கு தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை காத்திருந்தது புதிராக இருக்கிறது. 
             இனிமேலாவது தங்களுக்கு பணத்தைக் கொடுத்து ஓட்டுகளை வாங்கி ஆட்சிக்கு வரத்துடிக்கும் திமுக-அதிமுக ஆட்சிகளை தூக்கியெறிய தமிழக மக்கள் தயங்கக்கூடாது. உலகத்தின் பார்வைக்கு தங்களை பிச்சைக்காரர்களாக படம் பிடித்துக்காட்டிய திமுக-அதிமுக கட்சிகளை தமிழக மக்கள் துரத்தியடிக்கவேண்டும். இப்போதாவது தமிழக மக்கள் திமுக அதிமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள...? 

கருத்துகள் இல்லை: