திங்கள், 4 நவம்பர், 2013

''ஆரம்பம் - ஒரு நல்ல பாடம்'' - உண்மையிலேயே பாராட்டவேண்டும்...!

       
            தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த திரைப்படங்களில் ''ஆரம்பம்'' படம் பார்த்தேன்.  பார்த்து முடித்தவுடன் அந்த படத்தில் நான் கவனித்த ''ஒரு முக்கியமான விஷயத்தை'' மட்டும்  எடுத்து எழுதவேண்டும் என்று என் மனம் உறுத்திக்கொண்டே இருந்தது. அந்தப் படத்தைப் பார்த்த இரசிகர்களும், இளைஞர்களும் அதை கவனித்து இருப்பார்களா என்று தெரியவில்லை. படத்தின் விமர்சனத்தை எழுதிய எந்தப் பத்திரிக்கைகளும் அதை கவனிக்கவில்லையா என்று தெரியவில்லை. அதைப் பற்றி ஒரு பத்திரிக்கையும் குறிப்பிடவில்லை என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
            இந்தப் படத்தில் யாரும் கவனிக்காத ''ஒரு முக்கிமான விஷயம்'' என்னென்னா...? இந்த படம் முழுக்க ''சிகரெட் வாடையோ, சாராய வாடையோ'' அடிக்கவேயில்லை என்பது தான் இந்தப் படத்தின் சிறப்பு. வழக்கமாக கடந்த இருபது ஆண்டுகளாக எடுக்கப்படும் திரைப்படங்கள் அனைத்திலும் சிகரெட் பிடிப்பது போலவும், குடிப்பது போலவுமான காட்சிகள் இருந்தாகவேண்டும். குடியை கெடுக்கும் குடியையும், சிகரெட்டையும் காட்டாமல் படமே எடுக்கமாட்டார்கள். எல்லா படங்களிலும் ஹீரோ குடிப்பார் அல்லது வில்லன் குடிப்பார். ஹீரோ ஸ்டைலா சிகரெட் பிடிப்பார்  அல்லது எல்லோரும் சேர்ந்து குடிக்கிற ''பாரை'' காட்டுவார்கள். இது தான் இன்றைய திரைப்படங்களின் இலச்சணம்.... இலக்கணம்...!
           இந்த வழக்கமான இலக்கணங்களை இந்தப் படத்தில் உடைத்திருக்கிறார்கள். அதற்காக உண்மையிலேயே  இயக்குனர் விஷ்ணுவர்த்தன், கதாநாயகன் அஜித் குமார் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் நெஞ்சார  பாராட்டத்தான் வேண்டும். இது போன்ற  திரைப்படத்தை எடுத்ததன் மூலம் தனது இரசிகர்கள் மீதும், இளைஞர்கள் மீதும் அவர்களுக்கு இருக்கின்ற அக்கறையை காட்டியிருக்கிறார்கள். மற்ற ஹீரோக்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மற்ற ஹீரோக்களும், இயக்குனர்களும் இலாப நோக்கத்தோடு படம் எடுப்பதை விடுத்து இது போன்ற நல்ல விஷயங்களை பின்பற்றவேண்டும் என்பது தான் ''ஆரம்பம்'' திரைப்படம் எடுத்துச் சொல்லும் ''நல்ல பாடம்'' என்பது தான் இந்தப் படத்தைப்பற்றிய எனது விமர்சனம்.

கருத்துகள் இல்லை: