ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஊரு ரெண்டுபட்டா ஊடகங்களுக்கு தான் கொண்டாட்டம்...!

                     ''ஈரைப்  பேன் ஆக்கி... பேனை  பெருமாள் ஆக்கிறதுன்னு''  ஒரு பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வேலையை இன்றைக்கு ஊடகங்கள் ரொம்பப் பிரமாதமா செய்யறாங்க
               இன்றைக்கு முல்லைப்பெரியாறு அணை  சம்பந்தமான பிரச்சனை என்பது தமிழகத்திலும் கேரளாவிலும் பற்றி எரிகிற பிரச்சனையாக இருக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களின் எல்லைப்பகுதிகளிலும் பதற்றமாக இருக்கிறது. இவ்விரண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் மோதிக்கொள்கிறார்கள். உணர்வுப்பூர்வமாக எழுந்துள்ள இந்த பதற்றங்களை தணிப்பதற்கு எந்தவிதமான   முயற்சிகளையும்  செய்யாமால், அந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும்  வேலையை   தான் இன்றைக்கு ஊடகங்கள் செய்துவருகின்றன.
              பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தனியார் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்ததிலிருந்து மக்களின் உணர்ச்சிகளையும், வேதனைகளையும் காசாக்கி அதில் இலாபம் கொழிக்கும் வெறியோடு தான் ஊடகங்கள் அலைகின்றன. 
                 அப்படித் தான் ஒரு முறை ''அப்போதைய முன்னாள் முதல்வர்'' செல்வி ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது அவரது ''ரத்தத்தின் ரத்தங்கள்''  சேலம் அருகில் கல்லூரி மாணவிகள் வந்த பேருந்தினை மாணவிகளோடு கொளுத்தினர். அதில் நான்கு மாணவிகள் பரிதாபமாக இறந்துபோனார்கள் என்பதை நீங்கள் மறந்திருப்பீர்கள். அந்த பஸ் எரியும் போது அருகில் இருந்த சன் தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள், எரியும் அந்த பஸ்ஸில் மாணவிகளும் சேர்ந்து  எரிகிறார்களே என்று பதட்டப்பட்டு அவர்களை காப்பாற்ற முயற்சி செய்யாமல், அந்த பஸ்சும் மாணவிகளும் எரிவதை நிதானமாக படம் எடுத்து அதை சன் தொலைக்காட்சியில் திரும்பத்திரும்பக் காட்டி காசாக்கினார்கள்.
               ஊடகங்கள் இன்று மனசாட்சியே இல்லாமல் இலாப நோக்கத்தோடு நடந்துகொள்வது என்பது வருத்தமளிக்கும் விஷயமாகும். ''BREAKING NEWS'', ''சற்று முன்'' என உணர்ச்சிமிக்க செய்திகளை தொடர்ந்து தொலைக்காட்சிகளில் காட்டிக்காட்டி கோடிக் கோடியாய்  சம்பாதித்து  விடுகின்றனர்.
               இது போன்ற சூடான செய்திகளை - உணர்ச்சிமிக்க செய்திகளை தொலைக்காட்சிகள் மட்டும் காசாக்குவதில்லை. பல தினப்பத்திரிக்கைகளும், வாரப்பத்திரிக்கைகளும்  கூட இப்படித் தான் பரப்பரப்பாக செய்திகளை போட்டு பத்திரிக்கையின் விற்பனையை கூட்டிவிடுகின்றனர்.      
             கொலை, கொள்ளை, திரைப்பட கலைஞர்களின் கிசுகிசு, அரசியல்வாதிகளின் அந்தரங்கம்,   சாமியார்களின் பாலியல் இவைகளெல்லாம் ஊடகங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் ரொம்ப சுவாரசியமாக பத்திரிகைகளில் பல மாதங்களுக்கு எழுதி தள்ளிவிடுவார்கள். தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பிக்கொண்டே இருப்பார்கள். இவைகளினால் இவர்களுக்கு கோடிக் கோடியாய் கொட்டிக்கொண்டே இருக்கும்.
             ஆனால் இவர்கள் ஒரு தொழிற்சங்கமோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளோ நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, உழைப்பாளி மக்களுக்காக நடத்தும் இயக்கங்களையோ அல்லது போராட்டங்களையோ ஒரு சிறு துளி  கூட  தொலைக்காட்சிகளில் காட்ட மாட்டார்கள். பத்திரிகைகளில் அச்சிட மாட்டார்கள். இதை கூசாமலும் அச்சப்படாமலும் இன்றைய ஊடகங்கள் செய்கின்றன. இவர்களாகவே கூட மக்கள் பிரச்சனைகளையோ  - சமூக அவலங்களையோ   படம்பிடித்துக்காட்டவார்களா என்றால் -  பிரசுரிப்பார்களா என்றால் அதை செய்யமாட்டார்கள். ஏனென்றால் அதில் அவர்கள் எதிர்ப்பார்ப்பது போல் வருமானமோ இலாபமோ வராது என்பது தான் காரணம்.
இதில் இலாபம் கிடைக்கின்றது என்றால் மகாராஷ்டிரா மாநிலத்திலும், ஆந்திர மாநிலத்திலும் தினம் தினம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு சாகிறார்களே. அதை காட்டியிருப்பார்கள்.
              இப்படித்தான் இன்றைக்கு இலாபவெறி பிடித்து ஊடகங்கள் முல்லைப்பெரியாறு பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கி அதில் இலாபம் சம்பாதிக்க, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு  ஊடகங்களின் கண்களும், பார்வைகளும் தமிழக - கேரள  எல்லைப்பகுதி சூடான - பரப்பரப்பான செய்திகளுக்காக  உறங்காமல்  காத்துக்கொண்டிருக்கின்றன. இப்போதும் இந்த இரு மாநிலங்களின் இரண்டு எல்லைப்பகுதிகளிலும் இந்த ஊடகங்களின் காமிராக்கள் இரவும் பகலும் ''ஏதாவது நடக்காதா'' என்று நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு  கால் கடுக்க நின்றுகொண்டிருக்கின்றன.
              உலகமயம் - தாராளமயம் - தனியார்மயம் - இவைகளுக்கு வருமானம் - இலாபம் குவிப்பு - சொத்து சேர்ப்பு - இவைகள்   மட்டுமே தெரியும். மனிதநேயம் - ஒற்றுமை - ஒருமைப்பாடு - இவைகளைப் பற்றி அறியாது. அதைப்பற்றி கவலையும் படாது.

1 கருத்து:

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

Media is a Double side Weapon!
Print Mediaவை நாம் இந்தக் கணக்கில் எடுத்துக் கொள்ளமுடியாது.