சனி, 13 ஆகஸ்ட், 2011

ஆரக்ஷன் - இது கருத்துக் கூறும் உரிமையல்ல.. ஆதிக்கச் சக்திகளின் கூப்பாடு..

                  அண்மையில் வெளியான ''ஆரக்ஷன்'' என்கிற ஹிந்தி மொழி திரைப்படம் நாடு முழுதும் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது. அந்த திரைப்படத்தில் இடஒதுக்கீடுக்கு எதிரான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. விடுதலை பெற்று 65 - ஆவது ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஆண்டாண்டுகளாய் பலனை அனுபவித்தவர்கள் சிந்தனை இன்னும் மாறவில்லை என்பது தான் வருத்தமளிக்கக்கூடிய விஷயமாகும். கருத்துக்கூறும்  உரிமை - கருத்து சுதந்திரம் அரசியலமைப்புச் சட்டப்படி அனைவருக்கும் உண்டென்றாலும், ஒடுக்கப்பட்ட ஒரு  பிரிவினர்களுக்கு எதிராக ஒரு கருத்தை சொல்வதும், அதன் மூலம் அமைதியை குலைப்பதும், இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களை உசுப்பேத்தி அமைதியை  சீர்குலைப்பதுமான  கருத்துக்களை சொல்வதென்பது கருத்து சுதந்திரம் ஆகாது.
                      இடஒதுக்கீடு பற்றி எழுதும் முன் அதை பற்றிய வரலாற்றை திரும்ப திரும்ப படிக்கவேண்டும். அது  எதோ ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சலுகை என்றோ அல்லது இவர்கள் அனுபவித்து வந்த தட்டி பறித்து விட்டது போல் நினைப்பவர்கள் தான் அடிக்கடி இது  போன்ற  சர்ச்சைகளை கிளப்பிவிட்டு குளிர் காய்கிறார்கள்.

திரைப்பட தணிக்கைக் குழுவின் ஒருதலைப் பட்சமான செயல்பாடுகள் ..!

                 
              நடுநிலைமையோடு செயல்படவேண்டிய திரைப்பட தணிக்கைக் குழு
 இந்த ''ஆரக்ஷன்'' திரைப்படத்தில் மட்டும் சர்ச்சைக்குரிய பகுதிகளை கண்டு கொள்ளாமல் விட்டது. தணிக்கைக்வேண்டுமென்றே நூல்விட்டு குழு பார்க்கிறதோ..? என்கிற சந்தேகம் நமக்கெல்லாம் வருகிறது. ஏனென்று  சொன்னால்.. சென்ற ஆண்டு, தமிழ் திரைப்பட  இயக்குனர் ஏ. ஜனநாதன் அவர்கள் இயக்கி வெளியிட்ட ''பேராண்மை'' என்ற திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிற்கு ஆதரவான பல வசனங்களை திட்டமிட்டே வெட்டியிருக்கும் மத்திய தணிக்கைக் குழு, இந்த ஹிந்தி மொழி படத்தில் மட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரான கருத்துக்களை கொண்ட வசனங்களையும், காட்சிகளையும் அனுமதித்தது எப்படி..? தணிக்கைக்   குழு இது போல் நடுநிலை தவறியது என்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது.


இப்போது செய்ய வேண்டியது என்ன..?


                            உத்திரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநிலம் போன்ற மாநிலங்களில் அந்த மாநில அரசே சர்ச்சைக்குரிய இந்த திரைப்படம் திரையிடக்கூடாது என்று தடை விதித்திருக்கின்றன. பல ஊர்களில் ''ஆரக்ஷன்'' திரையிடப்பட்ட திரையரங்குகளில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. எனவே, தணிக்கைக் குழு இந்த திரைப்படத்தை மீண்டும் தணிக்கைச் செய்து சர்ச்சைக்குரிய வசனங்களையும், காட்சிகளையும் நீக்கி திரையிடவேண்டும். இது போன்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஏந்திவரும் திரைப்படங்களை திரைப்பட தணிக்கைக் குழு  உன்னிப்பாக கவனிக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள் ஆகும்.

கருத்துகள் இல்லை: