சனி, 6 ஆகஸ்ட், 2011

அடுக்கடுக்கான ஊழல்கள் - காங்கிரஸ் கட்சியும், பா ஜ க-வும் தேசத்தின் அவமானச் சின்னங்கள்.

  நாடே வெட்கித்  தலைகுனிகிறது..   
                  சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா  கட்சியும் தயங்காமல் ஊழல் செய்யும் கட்சிகள் என்பது தான் இந்த தேசத்தின் கடந்த கால வரலாறு. ஊழல் செய்வதில் இந்த இரு கட்சிகளும் சளைத்தவர்கள் அல்ல.
                  சமீபத்தில் தான் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் அந்தக் கட்சியுடைய முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வெளியேற்றப்பட்டார். அந்த சாக்கடை ஈரமே காயவில்லை, அதற்குள் இன்னொரு ஊழல் சாக்கடை நாற்றமெடுக்க ஆரப்பித்துள்ளது.  காங்கிரஸ் ஆட்சி செய்யும் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் இப்போது மிகப்பெரிய ஊழல் வலையில் சிக்கியுள்ளார். வழக்கம் போல், நம் ''ஒரு மண்ணாங்கட்டியும்  தெரியாத'' பிரதமருக்கும் இந்த ஊழலில் பங்கிருப்பதாக ஊடகங்கள் ஏற்கனவே சொல்லி வருகின்றன.  
              2010 ஆம் ஆண்டு புதுதில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டன. போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே,  மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடத்தப்பட்டிருப்பதாக    புகார்கள்  எழுந்தன. இதையடுத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி பல நூறு கோடிகளை விழுங்கியிருக்கிறார் என்ற குற்றத்திற்காக  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
              இந்த  சூழ்நிலையில், இந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்திய மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  போட்டி ஏற்பாடுகளில் மிகப் பெரிய அளவில் முறை கேடுகளும், வீண் செலவுகளும் செய்யப்பட்டுள்ளதுடன், ஒப்பந்தங்கள் வழங்குவதில் வேண்டப்பட்டவர்களுக்கு சலுகைகளும் காட்டப்பட்டுள்ளதாகவும்  சுமார் 743 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது என்பது ஒரு அதிர்ச்சி தரும் தகவலாகும். 
அதே போல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய விவரங்கள் : 

பிரதமருக்கும் மிகப்பெரிய பங்கு : அப்போதைய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில்  தத்தின் கடும் எதிர்ப்புகளையும், ஆட்சேபணைகளையும் மீறி காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டார். பல நூறு கோடி மக்கள் பணத்தை விழுங்கிவிட்டு, தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக தனக்கு மறதி நோய்  இருப்பதாக கூசாமல் பொய் சொல்லும் இந்த கயவனை,  பிரதமர் அலுவலகப் பரிந்துரையின் பேரிலேயே 2004 ஆம் ஆண்டு  இப்பதவிக்கு நியமித்திருக்கிறார்கள். அவர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு பிரதமர் அலுவலகம்தான் பொறுப்பு என்பது இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிறது.    
ஷீலா தீட்சித்தின் தேவையற்ற செலவுகள் : காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக, தெரு விளக்குகள் அமைக்கப்பட்டதில் சுமார் ரூ.101 கோடி அளவுக்கு வீண் செலவுகள் செய்யப்பட்டுள்ளது.  ஒப்பந்தங்கள் தவறானவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.  ரூ.5000க்கு தரமற்ற விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒரு விளக்கிற்கு ரூ.25,000 வீதம் அரசுப் பணம் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கு பகுதிகளில் உள்ள சாலைகளை அழகுபடுத்துவது, உள்கட்டமைப்பு வசதிகள், போன்றவற்றிற்கான ஒப்பந்தங்கள் தவறானவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தாழ்தள பேருந்துகள் வாங்கியது, காமன்வெல்த் நகரம், உணவு, நாற்காலி பெறப்பட்டது வரை அனைத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இவற்றுக்கு எல்லாம் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தே பொறுப்பு என்கிறது அறிக்கை.
இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்கிற முகமூடியுடன் உலாவரும் ஷீலா தீட்சித் நியாயமான முறையில் பதவி விலகவேண்டும் என்பதையே நாடு எதிர்பார்க்கிறது.   

கருத்துகள் இல்லை: