ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

அமெரிக்க எஜமான விசுவாசம் - இந்திய - ஈரான் உறவில் விரிசல் - இந்திய அரசின் நன்றிகெட்ட போக்கு..!

      கடந்த சில நாட்களாக ஒரு செய்தி பத்திரிகையில் நம் கவனத்தையெல்லாம் ஈர்த்தது மட்டுமல்ல. கடந்த கால வரலாற்றையும் நமக்கு நினைவு படுத்தியது. அந்தக் காலத்து அந்த நிகழ்வுகளை  மத்திய அரசுக்கும், நம்  மக்களுக்கும் நினைவுபடுத்த வேண்டியது நம் கடமையாகும். 
           சமீபத்திய பத்திரிக்கைச் செய்தி என்னவென்றால், கடந்த ஆறு மாத காலமாக இந்தியா ஈரானிடமிருந்து வாங்கிய எண்ணெய்க்கான கடனை இன்னும் செலுத்தவில்லை என்பது தான். அதுமட்டுமல்ல இந்தியாவிற்கும் ஈரானிற்கும் இடையேயான வங்கிப் பரிவர்த்தனைகளை கடந்த ஆறு மாதகாலமாகவே நிறுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
.            ஈரான் தன் நாட்டிலிருந்து குழாய் மூலம், பாகிஸ்தான் வழியாக குறைந்த விலையில் எரிவாயு தருவதாக ஈரான் தானே முன்வந்தது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. ஈரான் அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் போதே, தன் அமெரிக்க எஜமானை திருப்திப்படுத்த - சந்தோஷப்படுத்த அந்த குழாய் எரிவாயுவை மத்திய அரசு கோட்டை விட்டது என்பதையும் யாரும் மறந்திருக்க  முடியாது. 
            இருபது ஆண்டுகளுக்கு முன்பு  ஐ. நா சபை ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. ''காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானதா.. பாகிஸ்தானுக்கு சொந்தமானதா..?'' என்பது தான் அந்த  வாக்கெடுப்பு. ஐ. நா சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும்  அந்த  வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தன. அந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்ட ஈரான், தான் ஒரு முஸ்லிம் நாடாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியாவிற்கு ஆதரவாகவே, காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்று வாக்களித்தார்கள் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள்  மறந்து விட்டார்கள்.  மூன்று முறை இது போன்று வாக்கெடுப்பை ஐ. நா.  சபை நடத்தியது. மூன்று முறையும் ஈரான்  இந்தியாவிற்கு ஆதவாகவே  வாக்களித்தது என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும்.  ஆனால், 2009 - ஆம் ஆண்டு சர்வதேச அணுசக்தி ஆணையத்தில் அமெரிக்காவால் ஈரானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ( அமெரிக்க விசுவாசம் காரணமாக )  ஆதரவாக - ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்பது ஒரு வேதனையான நிகழ்ச்சி மட்டுமல்ல. இந்தியாவின் சுயசார்புத் தன்மையில் - கூட்டுச் சேரா கொள்கையில் ஏற்பட்ட களங்கம்  ஆகும்.  சோதனையான காலத்தில் நமக்குத் துணையாக - ஆதரவாக  இருந்த ஒரு நாட்டுடன் நன்றி  விசுவாசத்துடன் இருக்கவேண்டிய நம் ஆட்சியாளர்கள்  அமெரிக்காவை குளிரச் செய்வதற்காக  ஈரானுக்கு எதிராக நடந்துகொண்டது என்பது ஒரு  நன்றிகெட்டத்தனமாகும்.
               இப்படிப்பட்ட நாட்டோடு நன்றி பாராட்டி நட்போடு உறவு வைத்துக்கொள்வது மட்டுமல்லாது, அவர்கள் வலிய தரும் உதவிகளையும் நன்றியுணர்வோடு பெற்றுக்கொண்டு நட்பு பாராட்டுவதும் நம் நாட்டிற்கே பெருமையளிப்பதும், தனித்தன்மை வாய்ந்ததும் ஆகும்.  அதுமட்டுமல்ல, குழாய் மூலம் எரிவாயுவை  ஈரானிடமிருந்து பெறபட்டால், எரிவாயுவின் விலையை மேலும் மேலும் உயர்த்தாமல் மக்களுக்கு குறைவான விலையில் சமையல் எரிவாயுவை கொடுக்க முடியும். என்ன சொன்னாலும் மக்களைப் பற்றிய சிந்தனை இருந்தால் தானே இந்த அரசு செய்யும்.



2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

nandri ketta baradham

puduvairamji.blogspot.com சொன்னது…

நன்றி கெட்டவர்கள் நம் ஆட்சியாளர்களே தவிர நம் நாடு அல்ல..