திங்கள், 8 ஆகஸ்ட், 2011

நண்பர்கள் தின கொண்டாட்டம் - நம் இளைஞர்களுக்கு தேசபக்தியும் சமூக அக்கறையும் எங்கே போனது..?

 சரித்திரம் தேர்ச்சி கொள் - பாரதி             

             நேற்று ஆகஸ்ட் 7 - ஆம் தேதி நம் இந்திய இளைஞர்களின் மூளையை சிறைப்படுத்திய ஒரு நாள். இந்த நாளுக்காக கடந்த பதினைந்து  நாட்களாக மாணவர்களும், இளைஞர்களும் பரவசமூட்டும் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். நேற்றைய ஞாயிறு கோலாகல கொண்டாட்டங்களோடு அல்லோல்லோ பட்டது. நேற்று சர்வதேச நண்பர்கள் தினமாம். ஒரு தினத்தை கொண்டாடனும் என்றால் அதற்கு ஒரு வரலாறு வேண்டுமல்லவா..? இந்த நண்பர்கள் தினத்திற்கும் ஒரு  ''வரலாறு'' உண்டு.  
                      அமெரிக்காவில் எப்போதோ வாழ்ந்த நண்பர்கள் இருவரில் ஒருவர் இறந்த பின், மற்றொருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவத்தினை நினைவுபடுத்தி ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது. இது என்ன தொன்று தொட்டு நடக்கிற கொண்டாட்டமா..? இல்லையே. அண்மைக்  காலமாகத் தான் இது போன்ற வளர்ச்சியை பார்க்கிறோம். சமீபக் காலமாக நம் நாட்டில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், டாக்டர்கள் தினம் அடுக்கடுக்காய் புதிது புதிதாய் தினங்களும், கொண்டாட்டங்களும் முளைக்கின்றன. இதெல்லாம் எதற்காக..? யாருக்காக..?  யாருடைய லாபத்திற்காக..? என்பதை யோசித்துப் பாருங்கள்.
                    லாப வெறிகொண்டு அலையும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் பசிக்கு தீனி போடத் தான் இப்படிபட்ட புதிது  புதிதான கொண்டாட்டங்கள். இப்படியாக தினங்களை கண்டுபிடித்து இளைஞர்களையும் மாணவர்களையும் உசுப்பேற்றிவிட்டு  விலையுயர்ந்த வாழ்த்து அட்டைகளையும், பிரத்யேக பரிசுப் பொருட்களையும், அடையாளச் சின்னங்களையும் மிக அதிகமான விலைக்கு விற்று லாபம் சம்பாதிப்பதே இதன் நோக்கம் ஆகும். பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியா ஒரு மிகப் பெரிய சந்தை. குப்பையைப் போட்டு தொலைக்காட்சியிலும், எப். எம். ரேடியோவிலும் கவர்ச்சியாய் விளம்பரம் செய்தால் போதும், இந்திய மக்கள் சிந்தித்துப் பார்க்காமலேயே எவ்வளவு விலை சொன்னாலும் வாங்கிவிடுவார்கள். இளைஞர்களின் - மாணவர்களின் பையிலிருந்து பணத்தைப் பிடுங்கும் ஒரு
வகைக் கொள்ளையாகும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது                  
                    ஆனால் நம்  நாட்டு இளைஞர்கள் தேசத்தின் சுதந்திர தினத்தையோ, குடியரசு தினத்தையோ, மே தினத்தையோ, மகளிர் தினத்தையோ இப்படி  கொண்டாடுகிறார்களா..? என்றால் இல்லை என்பது தான் துரதிஷ்டவசமானது.
     அன்றைய தினத்திற்காக மேலே சொன்ன பன்னாட்டு கார்பரேட் கம்பெனிகள் இளைஞர்களையும் மாணவர்களையும் கவர்வது  போல் எதையும் செய்வது இல்லை. தொலைக்காட்சியும், ரேடியோவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தியாக தினங்களின் வரலாறுகளையும் சிறப்புக்களையும் சொல்லாமல் ''இந்தியத் தொலைகாட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக'' என்று சொல்லி நான்கு புதியப் படங்களை காட்டி குழந்தைகளையும், மாணவர்களையும், இளைஞர்களையும் திசைத் திருப்பிவிடுவார்கள். இவர்களுக்கு தேசப் பற்றும், சமூக அக்கறையும் வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வார்கள். இதை  தான் அரசாங்கமும் முதலாளிகளும் திட்டமிட்டே செய்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

நேற்று நான் கண்ட வேதனை..!

                 நேற்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் இளைஞர்களும்  மாணவர்களும் அவரவர்கள் ''வசதிக்கேற்ப'' கொண்டாடினார்கள்.
                        பல பேர் சினிமா தியேட்டர்களில் கொண்டாடினார்கள். எல்லா தியேட்டர்களிலும் இவர்கள் கூட்டத்தைத்  தான் பார்க்க முடிந்தது. இன்னும் பல பேர் ''பார்''களில் கொண்டாடினார்கள்  என்பது தான் வேதனையான விஷயமாகும். ''பார்''களின் வெளியே கண்டபடி பேசிக்கொண்டு ஏகப்பட்ட இளைஞர்களின்  கூட்டத்தைப் பார்க்கும் போது இந்த தேசம் எதை நோக்கி போகிறது என்பது கேள்விக் குறியாக இருந்தது. நேற்று  மாலையில் புதுவைக் கடற்கரையில் இருபால் இளைஞர்களையும்   ஒரு சேர  பார்க்க முடிந்தது. பால் வித்தியாசமில்லாமல் அவர்கள் பழகியது கண்கொள்ளாக் காட்சியாகவும், ஒரு   முன்னேற்றமாகவும் தெரிந்தது. காந்தி சிலையருகில் நிறைய இருபால் இளைஞர்களும் கூடினார்கள். நிச்சயமாக அவர்கள் கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பம் படித்தவர்களாக இருக்கக்கூடும். திடீரென்று எங்கிருந்தோ இராட்சச ''கேக்'' வந்தது. எல்லோரும்  சேர்ந்து அந்த ''கேக்''கை வெட்டினார்கள். வெட்டியப் பிறகு அதை எல்லோருக்கும் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தோம்.ஆனால் என்ன செய்தார்கள் தெரியுமா..? அந்த இளைஞர்களெல்லாம்  தங்கள் கைகளினால் காட்டுமிராண்டித்தனமாக அள்ளி எடுத்தார்கள். எடுத்ததை அப்படியே அடுத்தவர் முகத்தில் பூசினார்கள். அடுத்தவர் மீது வீசி எறிந்தார்கள். இப்படித் தான் அவர்களோ மற்றவர்களோ சாப்பிடாமல் வீணாக்கப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்கு இடையே, வீசி எறிந்தவற்றில் கீழே தரையில் விழுந்த சிறு சிறு ''கேக்''குத் துண்டுகளை, கடற்கரையில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் சிறுவர்களும், குப்பைகளை பொறுக்கும் வயதானப் பெண்களும் பொறுக்கி எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்கள் என்பதைப் பார்க்கும் போது கண்கள் குளமானது.
                            இன்றைய கல்வி முறை மனித நேயத்தை மழுங்கடித்து விட்டதா..?  இன்றைய இளைஞர்களுக்கு தேசபக்தியும், சமூக அக்கறையும்  எங்கேப்  போனது..? உலகமயமும், தனியார்மயமும் அவைகளை மறக்கடிக்க செய்துவிட்டனவா..? எங்கோ இரு நண்பர்கள் செத்தார்கள் என்பதற்காக இவர்கள் நண்பர்கள் தினம் கொண்டாடுகிறார்களே..? நம் இலக்கியங்கள் நட்பின் இலக்கணங்களை சொல்லிக்கொடுத்தனவே அதை அவர்கள் மறந்து விட்டனரா..? அல்லது இன்றைய நம் கல்விமுறை இவைகளையெல்லாம் சொல்லத் தவறிவிட்டனவா..?

 நம் இலக்கியங்கள் சொல்லித் தந்த நட்பின்  இலக்கணம்..

        சங்க காலத்தில், பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவர் பிசிராந்தையாரும், சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழனும்  ஒருவரையொருவர் பார்க்காமலேயே  நட்பை வளர்த்து நண்பர்களாக வாழ்ந்த வரலாற்றை நாம் மறக்கமுடியுமா..?  கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து மரணமெய்தியசெய்தி கேட்டு, பிசிராந்தையாரும் தன் நண்பரின் பக்கத்திலேயே வடக்கிருந்து மரணமெய்திய  நிகழ்ச்சியை போல் நட்பை உயர்வு செய்யும்  வேறு நிகழ்ச்சியை சொல்ல முடியுமா..?
                அதேப்போல் சங்ககாலத்தில், வாழும் காலத்தை அதிகரிக்கச் செய்யும் நெல்லிக்கனியை தான் சாப்பிடாமல் தன் நண்பரான அவ்வைக்கு கொடுத்தானே அதியமான்... இதையும் நம் இளைஞர்கள்மறந்துவிட்டனரா..?
                     அதேப்போல், ''நட்பு'' என்ற அதிகாரத்தில் பத்து குறள்களை தந்திருக்கிறாரே திருவள்ளுவன்... அதையும் இந்த இளையோர் கூட்டம் மறந்து
   விட்டதா..?  தெரியவில்லை. நம் இலக்கியங்கள் நமக்கு நிறைய கொடுத்திருக்கிறது.. அதை நினைவில் வைப்போம்.. கொண்டாடுவோம்..

கருத்துகள் இல்லை: