வியாழன், 11 ஆகஸ்ட், 2011

சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துகிறது மத்திய அரசு.. இது அயோக்கியத்தனமான செயல்..!

தேவை உணவு பாதுகாப்புச் சட்டம் அல்ல.. 
உணவு உரிமைச் சட்டம்... 
                சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆண்டுக்கு நான்கு மட்டுமே இனி மானிய விலையில் வழங்கப்படும் என்றும், அதற்க்கு மேல் வாங்கும் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் கிடையாது என்றும் விரைவில் மத்திய அரசு அறிவிக்கவுள்ளதாம் என்கிற வயிறே பகீரென்று எரியும் செய்தி எரிவாயு வெளியே கசிந்தவண்ணம் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக யூகமாக பேசப்பட்ட விஷயங்கள் இப்போது பகிரங்கமாக விவாதப் பொருளாக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரம் கொண்ட அமைச்சரவைக்குழு இந்த ஆலோசனையை சுற்றுக்கு விட்டுள்ளதாக ஒரு ஆங்கில நாளேட்டில் செய்தியே வெளிவந்துள்ளது. தற்போது சமையல் எரிவாயு விலை ரூ.390 முதல் ரூ.450 வரை மாநிலத்திற்கு தகுந்தாற்போல் விற்கப் படுகிறது. ஆனால், மானியம் நிறுத்தப்பட்டால் இதன் விலை ரூ.650 - லிருந்து ரூ.750 - வரை ஆகும்.
 .                இந்த முடிவென்பது நடைமுறைக்கு வந்தால், ஆண்டுக்கு நான்கு எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே மானியத்துடன் கூடிய விலையில் கிடைக்கும். அதே ஆண்டில் வாங்கும் மற்ற சிலிண்டர்களுக்கு மானியம் அல்லாத முழு விலையையும் கொடுத்து மக்கள் வாங்கவேண்டிய கட்டாயத்தை அரசு உருவாக்குகிறது. சராசரியாக ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்திற்கு ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் தேவைப்படுகிறதென்றால், நான்கிற்கு மட்டுமே அரசு மானிய விலையில் கொடுக்கும். அதே ஆண்டில் மற்ற எட்டு சிலிண்டர்களையும் மானியம் அல்லாத  விலையில் அதிக விலை கொடுத்து தான் வாங்கவேண்டும். இந்த நான்கு  கூட எதற்கு என்றால் எட்டு சிலிண்டர்களையும் முழுவிலைக்கு உங்களை வாங்க வைத்து உங்கள் மனதை  பழக்குவதற்கு தான். ஓராண்டு கழிந்த பிறகு, இப்போது நான்கிற்கு
மட்டுமே கொடுக்கப் போகிற மானியத்தையும் வெட்டிவிடுவார்கள். சமையல் எரிவாயுவுக்கு கொடுக்கப்படுகிற மானியம் முழுவதையும் வெட்டுகிற ஏற்பாடு தான்  இது.
            உணவு பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் வெறும் அரிசியையும், கோதுமையையும் மட்டுமே சலுகை விலையில் கொடுப்பது போதாது. அரிசியையும் கோதுமையையும் குறைந்த  விலையில் கொடுத்து விட்டு அதில் விட்ட பணத்தை, சமையல் எரிவாயுவில் பிடுங்கிக்கொள்ளும் திட்டமே இது என்பதை மறந்துவிடக்கூடாது. 
                    ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வின் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் எரிவாயுவின் விலைகளை உயர்த்துவது என்பது மக்களுக்கு எதிரான துரோகம் ஆகும். சமையல் அறையில் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், காய்கறி வகைகள் என அன்றாடம் பயன் படுத்தும் பல்வேறு உணவுப் பொருட்களின்  விலைகளை உயர்த்துவதன் காரணமாக குறிப்பாக பெண்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இது வருமானம் என்பது உயராமல் அப்படியே இருக்கிறது. விலைவாசி மட்டும் உயர்ந்துகொண்டே போகிறது. இதனால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துகொண்டே போகிறது. உணவு தயாரிப்புக்கான அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் சமையல் எரிவாயுவின் விலையையும் கூட்டினால் அது குறிப்பாக நடுத்தர குடும்பத்து மக்களை கடுமையாக பாதிக்கும். உணவு  தயாரிப்பும், உணவு உட்கொள்ளுதலும் குறைந்து போகும் அபாயம் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சமையல் அறையையே மூடும் நிலை வரும். உணவை பறிக்கும் செயல் ஆகும். இதுவும் ஒரு வகை பயங்கரவாதம் - உயிரியல் பயங்கரவாதம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 
                      # ஏற்கனவே விலைவாசியின் உயர்வால் ஏழை - எளிய குடும்பத்து பெண்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். புதுவையில் நேரடியாக  2000 பெண்களிடம் செய்யப்பட்ட ஆய்வில் '' விலைவாசி  உயர்வு உங்களை எப்படி பாதித்திருக்கிறது?'' என்று கேட்ட போது, ஏறக்குறைய அனைத்து பெண்களும்  சொன்ன பதில் என்பது, ''வீட்டிலிருக்கும் ஆண்களும் , குழந்தைகளும் சாப்பிடுவார்கள். ஆனால் நாங்கள் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டோம்'' என்று பதில் வந்த போது  அதிர்ந்து போனோம். அதேப்போல், ''எங்களுக்கு உடம்பு சரியில்லைனா டாக்டரிடம் செல்லாமல் நாங்களே கை வைத்தியமா எங்க உடம்பை பார்த்துப்போம்'' என்பது    இன்னொரு அதிர்ச்சி தரும் தகவல் ஆகும்.
                        #வெளியே வராமல்,வீட்டிலிருந்த படியே எல்லா வேலைகளையும் கவனிக்கும், house wife என்று தங்களை அடையாள படுத்திக்கொள்ளும் பெண்கள் கூட இன்றைக்கு விலைவாசி உயர்வினால்  வருமானம் போதாமல் பகுதிநேர வேலைக்கோ அல்லது முழுநேர வேலைக்கோ செல்கிறார்கள் என்று இந்து பத்திரிகை நடத்திய ஆய்வில் வெளியாகி இருக்கிறது.
                            # உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில், இந்தியாவில் 51 சதமான பெண்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டிருக்கிறது. பெண்கள் இப்படி உணவை குறைத்துக்கொள்ளும் போக்கு நீடித்தால், இந்த  சதமானம் என்பது  அதிகமாகும்.
                                    # அதேப்போல், இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 46 சதமான குழந்தைகள் சரியான சத்துணவு இல்லாமல் நோஞ்சான் குழந்தைகளாக இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவலையும்
உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.
                    எனவே நமக்குத் தேவை உணவு பாதுகாப்புச் சட்டமல்ல.. உணவு
தயாரிக்க தேவைப்படும் எரிவாயு - மண்ணெண்ணெய் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மானியங்களுடன் கூடிய குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க வழிச் செய்யும் ''உணவு  உரிமைச் சட்டம்'' தான் நமக்குத் தேவை.                           
         சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தும் அரசின் தறுதலைத்தனமான போக்கை அனுமதிக்க முடியாது. இது நம் உணவு உரிமைகளை பறிக்கும் பிரச்சனை. இந்திய மக்கள் அனைவரும் அரசுக்கு எதிராக கொதித்தெழ வேண்டும். நாம் பிராயிளர் கோழிகள் அல்ல. பிராயிளர் கோழிகள் தான் நாளை நம்மை வெட்டப்போகிறார்கள் என்ற நினைப்பே இல்லாமல், எந்நேரமும்  சாப்பிடுவதும்.. எச்சம் போடுவதும்.. தூங்குவதும்.. ஆன வேலைகளை மட்டுமே செய்யும். நாம் அப்படி  இல்லை. மனிதர்கள்.. நீ போராடினால் தான் மனிதன்..  போராடு.. மனிதா.. போராடு... 

கருத்துகள் இல்லை: