திங்கள், 30 மே, 2011

இலாபவெறி பிடித்து அலையும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

             இந்திய இளைஞர்களின் நேரத்தை - பணத்தை - படிப்பை விரையமாக்கும் - வீணடிக்கும்,  பணம் கொழிக்கும் - இலாபம் கொழிக்கும் விளையாட்டான கிரிக்கெட்டில், இந்திய முன்னணி வீரர்கள்  அபரிதமான  வருமானம் இருந்தால் மட்டுமே விளையாடுகின்றனர். சர்வதேச கிரிக்கெட் தர வரிசையில் இந்தியாவை முதல் இடத்தில் அழைத்துச் செல்லக்கூடிய - முன்னிலையில் வரக்கூடிய போட்டிகளில் கலந்துகொள்ள அக்கறை காட்டுவதில்லை. இப்போட்டிகளில்  வருமானம் குறைவாக உள்ளதால் இதுபோன்ற  போட்டிகளில் இந்த வீரர்கள் கலந்துகொள்ள மறுக்கின்றனர்  என்பது தான் உண்மை.  சமீப காலச் சம்பவங்கள் இந்த உண்மைகளை தெளிவாகவே வெளிப்படுத்துகின்றன. 
       மேற்கு இந்தியத் தீவுகளில் மூன்று டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணியின் முக்கியமான ஆட்டக்காரர்களான சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், கவுதம் காம்பீர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இடம் பெறவில்லை.
           தொடர்ந்து 90 நாட்கள் விளையாடியதால் சேவாக் மற்றும் காம்பீருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தாங்களாகவே விலகிக் கொண்டுள்ளனர். இதில் சச்சின் டெண்டுல்கர், தான் களைப்படைந்து விட்டதாகக் கூறியுள்ளார். முதலில் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை என்று கூறிய இவர், டெஸ்ட் போட்டிகளுக்கும் கைவிரித்து விட்டார். சர்வதேச டுவென்டி - 20 போட்டிகளில் பங்கேற்காத டெண்டுல்கர் பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடினார். இதனால் தேச அணியில் இடம் பெற முடியாது என்று கூறிவிட்டார். 
              யுவராஜ் சிங், தனக்கு மூச்சு விடுவதில் திணறல் இருப்பதாகக் கூறி ஒதுங்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாடும்போது மட்டும் எந்தத்திணறலும் இல்லாமல் தனது புனே வாரியர்ஸ் அணி பங்கேற்ற அனைத்து ஆட்டங்களிலும் ஆடினார்.
          கவுதம் காம்பீரோ, தனக்கு தோள்பட்டையில் இருந்த காயத்தை மறைத்து ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார். மேற்கு இந்தியத் தீவுகளுடனான ஒருநாள் போட்டிக்கு தன்னை கேப்டனாக அறிவித்தபோதும் காயம் பற்றித் தெரிவிக்கவில்லை. ஐபிஎல் முடிந்தவுடன் தான் காயம் பட்டுவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். இந்தக்காயம் உலகக்கோப்பைப் போட்டியின்போதே இருந்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உடற்பயிற்சியாளர் ஆண்ட்ரூ லெய்பஸ் கூறியுள்ளார்.
          45 நாட்களுக்கு உலகக்கோப்பைப் போட்டி நடந்தது. ஆறு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு 51 நாட்களுக்கு ஐபிஎல் போட்டி நடந்துள்ளது. இதனால்தான் மூத்த ஆட்டக்காரர்கள் களைப்படைந்துள்ளனர்.

மேற்கு இந்தியத் தீவில் விளையாடப்போகும் டெஸ்ட் அணி:

தோனி(கேப்டன்), விவிஎஸ் லட்சுமண்(துணை கேப்டன்), முரளி விஜய், அபினவ் முகுந்த், ராகுல் டிராவிட், விராட் கோலி, எஸ்.பத்ரிநாத், ஹர்பஜன்சிங், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், அமித் மிஸ்ரா, பிரக்ஞன் ஓஜா, ஜாகீர்
கான், முனாப் படேல், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல்.

கருத்துகள் இல்லை: