ஞாயிறு, 22 மே, 2011

உண்மையிலேயே பெண்கள் இவரைத்தான் வழிபடவேண்டும்..

அவர் தொடங்கிய பயணம் முடியவில்லை...
        "பிரிட்டிஷாரின் வரவு இந்தியருக்கு கடவுள் தந்த பரிசு” என்று மனம் திறந்து கூறிய வரை “நவீன இந்தியாவின் விடிவெள்ளி” என வரலாறு பதிவு செய்தது. வெளிப்பார்வைக்கு இது முரண்பாடு போல் தோன்றக்கூடும். ஆனால், அவரின் செயல்பாடுகள் மிகுந்த பொருள் மிக்கவை. அதனால் தான் “நாட்டைப் பிடித்துள்ள நோய் களுக்கு நிவாரணம் செய்யப் பிறந்த ஆயுர்வேத வைத்தியர்” எனவும் “இந்நாட்டு மாதர்களின் அபிவிருத்திக்கு பாடுபட்ட மகான்” எனவும் பாரதியார் புகழாரம் சூட்டினார். இந்த பெருமைக்குரியவர் ராஜாராம் மோகன்ராய் ஆவார்.

        இன்றைக்கு 240 ஆண்டுகளுக்கு முன்பு 1772ஆம் ஆண்டு மே 22ம் நாள் மேற்கு வங்க மாநிலம் பர்தமான் மாவட் டத்தில் ராதா நகர்கிராமத்தில் ராமா காந்த் ராய் - தாரணி தேவிக்கும் மகனாகப் பிறந்தவர்தான் ராம்மோகன் ராய். இவரது தந்தைக்கு மூன்று மனைவிகள். இவர் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே வங்காளி, பிரெஞ்ச் மொழிகளில் வல்லமைப் பெற்றார். 10 வயதிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது. குழந்தைப் பருவத்திலேயே மனைவியும் இறந்துவிட்டார்.

              இவருடைய அண்ணன் இறந்தபோது அவரது மனைவி கட்டாயமாக 
உடன்கட்டை ஏற்றப்படுவதை பார்த்துப் பதறினார். தடுக்கக்கோரி தந்தையிடம் மண்டியிட்டார். ஆனால், அன்றைய சமூக வழக்கம் என்றுக் கூறி இவர் கண்ணெதிரே அண்ணி உயிரோடு உடன் கட்டையில் எரிக்கப்பட்டதை கண்டு பதறினார். அது இவர் நெஞ்சில் ஆழமான வடுவை ஏற்படுத்தி யது. இதற்கு எதிராக இவரது  இளமனது கொதித்தது.

     இதன்பிறகு பாட்னாவில் உயர்கல்வி முடித்தார். வாரணாசியில் சமஸ்கிருத மொழியையும் வேத நூல்களையும் கற்றுத் தெளிந்தார். அதன்பிறகு இவர் இந்து மதத்தை சீர்திருத்த வேண்டியதன் அவ சியம் குறித்து வலுவாகப் பேசத் தொடங்கினார். மூடநம்பிக்கைகளை சாடினார். சதி எனும் உடன்கட்டை பழக்கத்தை, குழந்தைத் திருமணத்தை கடுமையாக எதிர்த்தார். பெண் விடுதலைக்கு உரக்கக் குரல் கொடுத்தார்.

      இதற்கிடையில் கிழக்கிந்திய கம்பெ னியில் பணிபுரியலானார். அந்த சந்தர்ப்பத்தில் ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொண்டார். அதன் மூலம் உலகம் முழுவதும் நடப்பதை அறிந்து கொண் டார். இந்தப் பின்னணியில் இவர் அரபி மற்றும் பெர்சிய மொழிகளில் எழுதிய, “ஒரே கடவுளின் பரிசு” என்ற நூல் பெரும் பரபரப்பை உருவாக்கியது. கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

          “சாதி வேறுபாடுகள், கணக்கற்ற அதன் உட்பிரிவுகள் அனைத்தும் மக்களி டையே தேசபக்த உணர்வு மலரத் தடை யாக உள்ளன. ஆகவே, மதத்தில் ஏதா வது மாறுதல் நிகழ்த்த வேண்டும். அது வும் அரசியல் சமூக நலன்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.” என ராஜாராம் மோகன்ராய் கருதினார். இதற்கு ஆங்கிலக் கல்வி அவசியம் என உணரலானார். அதனை வலியுறுத்தவும் தயங்கவில்லை. இன்றைய நவீனக் கல்விக்கு ஒருவகையில் அவர் அன்று நடைமுறை யில் வித்திட்டார். இந்தச் சூழலில்தான் பிரிட்டிஷாரின் வரவு கடவுள் தந்த பரிசு என்றார். இதுகுறித்து ஈஸ்வரதத் கூறும் போது “அவர் அவ்வாறு ஏன் கூறினா ரெனில் ராம்மோகன்ராயின் இளமை நாட்கள் இந்திய சரித்திரத்தில் புதுமை தொடங்காத இருண்ட நாட்களாகும். பழமைச் சமுதாயம் அழிந்து ஒழிய வேண்டிய நிலையிலும் புதிய சமுதாயம் மலரத் தொடங்காத நிலையிலும், நாடு இருந்தது. சமய சமுதாயத் துறைகளும் விவசாயமும் தொழிலும் ஒரு குழப்பச்சூழலில் இருந்தது.” பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலைப்போர் உருவாகாத காலம். காங்கிரஸ் கட்சி இவர் மரணத்திற்குப் பிறகுதான் உருவானது என்பதும், சிப்பாய் கலகம் என்கிற முதல் விடுதலைப் போரும் இவர் மரணத்திற்குப் பின்னரே என்கிற உண்மையையும் மனதில் பதிந்து கொள்ள வேண்டும்.

            இவர் தொடர்ந்து சமூக சீர்திருத்த கருத்துக்களை எழுதிவரலானார். இவருடைய ஆங்கில எழுத்து வன்மையை பாராட்டிய பென்தெம் என்கிற ஆங்கில அதிகாரி “உங்கள் புத்தகத்தில் ஆசிரியரின் பெயர் இந்துப் பெயராக இல்லாவிட்டால் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் எழுதியதாகத்தான் நினைத்திருப்பேன்” என்று பாராட்டினார். கிருத்துவமதத்தை பரப்பும் நோக்குடன் கொல்கத்தா வந்த வித்யபாகிஷ் என்கிற கிருத்துவ அறிஞ ரோடு ஏற்பட்ட உறவு இவரது ஆன்மீக ஞானத்தை உரசிப்பார்க்க வாய்ப்பானது. இவர் பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தும், சிலை வழிபாடு மற்றும் சடங்கு களை எதிர்த்ததும், பெண்கல்விக்கு குரல் கொடுத்ததும் பலருக்கு இவர் மீது கோபத்தை உருவாக்கியது. இவரை கொல்லுவதற்குக்கூட பெருமுயற்சி எடுத்தனர்.

           வேதங்கள் ஒரே கடவுளைத்தான் கூறுகின்றன. மூடநம்பிக்கைகளையும் சடங்குகளையும், சாதியையும், பெண்ணடி மைத்தனத்தையும் அவை கூறவில்லை. இதனை வேதக் கல்வியின் மூலமாக உணர்ந்த ராஜாராம் மோகன்ராய் அதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல ‘வேதங்களின் சாரம்’ என்ற நூலை வங்க மொழியில் எழுதினார். இது ஒரு பகுதி மக்கள் விழிப்புணர்வு அடைய ஏது வானது. தாய்மொழிக் கல்வியை வலி யுறுத்தினார். அதே சமயம் ஆங்கிலக் கல்வி மூலமே உலக ஞானம் பெற முடி யும் என துணிந்துக் கூறினார். கல்லூரிகள் துவங்க அடித்தளம் அமைத்தார்.

          இவர் உருவாக்கிய பிரம்மசமாஜம் சமயங்களின் சபையாக இல்லாமல் சீர்திருத்த சபையாக இருந்தது. இவர் சாதிய வெறியை எதிர்த்தார். பெண்ணடி மைத்தனத்தை சாடினார். கணவன் இறந்தவுடன் மனைவியை உடன் எரிப்பது கொலையே, இதற்கும் மத நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை என்றார். இந்த கொடிய சதி பழக்கத்திற்கு எதிராக ஆவே சமிக்க அறிவுப்பூர்வமான கருத்துப்பிரச்சாரத்தை மேற்கொண்டார். கிருத்துவத்தை பயின்றார். இஸ்லாமை பயின்றார். ஆனால், ஒரே கடவுள் என்ற குறிக்கோ ளைப் பற்றி நின்றார். ஏராளமான புத்தகங் கள் எழுதினார். பல்வேறு பத்திரிகை களுக்கு ஆசிரியராக செயல்பட்டார். எதைப் பேசினாலும் எழுதினாலும் அது சமூக சீர்திருத்தம் சார்ந்ததாகவே இருந்தது.

             இவருடைய கடும் முயற்சியின் பலனாக 1829ம் ஆண்டு டிசம்பர் 4ம் நாள் ‘சதி’ எனும் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கம் வங்க மாநிலத்தில் தடைசெய்யப்பட்டது. அதை எதிர்த்து பழமைவாதிகள் லண்டனில் உள்ள ப்ரிவ்யூ கவுன்சில் எனப்படுகிற உயர்மன்றத்தை அணுகி னர். ராஜாராம் மோகன்ராய் லண்டனில் வாதாடச் சென்றார். 1832ம் ஆண்டு லண்டன் ப்ரிவ்யூ கவுன்சிலும் சதியை தடை செய்தது நியாயமே என்று தீர்ப் பளித்தது. அந்தச் சமயத்திலும் இந்தியாவில் ஜெய்பூர் உட்பட பிற இடங்களில் சதி அமலில் இருந்தது. 1846ல்தான் இந்தியா முழுவதும் சதி தடை செய்யப்பட்டது. இதற்கிடையில் 1833ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி லண்டனில் அவர் காலமானார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவருடைய சிலை அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கம்பீரமாய் எழுப் பப்பட்டது. (அதனை நீங்கள் படத்தில் காணலாம்).

ராஜாராம் மோகன்ராய் கனவு கண்ட பெண் விடுதலையின் சில கூறுகள் 
சட்டப்பூர்வமாக விடுதலை இந்தியாவில் மெல்ல மெல்ல கிடைத்தது. ஆயினும் முழுமையாகவில்லை. சட்டமன்றங்க ளில், நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு இன்னும் பேச்சோடு நிற்கிறது. பெண் விடுதலையில் நாம் போக வேண்டியது இன்னும் நெடும்தூரம். ராஜாராம் மோகன் ராய் 250வது பிறந்தநாளைக் காண இன்னும் பத்தாண்டுகளே உள்ளன. இந்தப் பத்தாண்டுகளையாவது பெண் விடுதலைக்காக உண்மை- யாக அர்ப்பணித்தால்தான் அது ராஜா ராம்மோகன் ராய்க்கு நாம் செலுத்துகிற உண்மையான அஞ்சலியாக அமையும்..
நன்றி : தீக்கதிர்  

கருத்துகள் இல்லை: