வெள்ளி, 27 மே, 2011

இந்திய இளம் பெண்ணின் மீது அமெரிக்க போலீஸ் காட்டுமிராண்டித்தனம்

இந்திய தூதரக அதிகாரி மகள் கண்ணீர்....
    இந்திய பெண் என்பதால் புகார் மீது உரிய விசாரணை கூட செய்யாமல் அமெரிக்க போலீசார் கையில் விலங்கிட்டு காட்டுமிராண்டித்தனமாக  சிறையில் அடைத்து அவமானப்படுத்தியுள்ளனர் என்பது நமக்கெல்லாம் அதிர்ச்சி தரும் தகவலாகும்.
               அமெரிக்காவின் நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் இந்திய தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு துணைத்தூதரக அதிகாரியாக தேபாஷிஷ் பிஸ்வாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். பதினெட்டே வயதான  இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் ஜான் ப்ரௌன்  பள்ளியில் கணித பாடப்பிரிவில்  படித்து வருகிறார்.
       கிருத்திகா பயிலும் பள்ளி மற்றும்  ஆசிரியர்கள் குறித்து தரக்குறைவான வாசகங்களுடன் கிருத்திகா பெயரில்  இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மீது  போலீசில்  புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை விசாரித்த அமெரிக்க போலீசார் தூதரக அதிகாரியின் மகள் கிருத்திகா மீது சந்தேகப்பட்டனர். ஆனால் அமெரிக்க போலீசோ  கிருத்திகாவை தூதரக அதிகாரியின் மகள் என்கிற முறையிலும் - ஒரு இளம் பெண் என்கிற முறையிலும் முறையாக  உரிய விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல்,  உடனடியாக கிருத்திகாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் மகள் கைது செய்யப்பட்டிருக்கும்  தகவலை கூட அவரது தந்தை தேபாஷிஷ் பிஸ்வாஸ்க்கு  தெரியப்படுத்தவில்லை. 24 மணி நேரம் சிறையில் இருந்த பின்னர் தரக்குறைவான இ.மெயில் அனுப்பியது வேறு ஒருவர் என்பது தெரிய வந்ததும்  உடனே கிருத்திகாவை அமெரிக்கா போலீசார் விடுதலை செய்துவிட்டனர். ஆனால் கிருத்திகா பயின்ற குயின்ஸ் ஜான் ப்ரௌன்  பள்ளி நிர்வாகம் கிருத்திகாவை ஒரு மாதம் இடை நீக்கம் செய்திருந்தது. பின்னர் புகாரில் உண்மையில்லை என தெரிந்தவுடன், பள்ளி நிர்வாகம் கிருத்திகாவை இடைநீக்கம் செய்ததை வாபஸ் பெற்றதாக கிருத்திகாவுக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டிளித்த கிருத்திகா கூறியதாவது:
         எனக்கு தூதரக அதிகாரி மகள் என்கிற முறையில்  அதிகார பாதுகாப்பு உள்ளது. ஆனால் அதனை அமெரிக்க போலீசார் மதிக்கவில்லை. விசாரணையின் போது என்னை “பாத்ரூம்” செல்லக்கூட அனுமதிக்கவில்லை. சக கைதிகள் முன்னிலையிலேயே  செல்லச்சொல்லி கட்டாயப்படுத்தி  கொடுமை படுத்தினார்கள். குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் பாலியியல் தொழில் செய்து கைது செய்யப்பட்ட பெண்களோடும், HIV நோயால் பாதிக்கப்பட்ட பெண்களோடும் அடைத்து விடுவோம் என்று மிரட்டினார்கள். எனது உணர்வுகளை அவர்கள் ஒருபொருட்டாக கூட மதிக்கவில்லை. தர்ம சங்கடத்துக்குள்ளாகியதாக கூறியவாறே கண்ணீர் விட்டு அழுதார்.
     உடனே அருகில் இருந்த அவரது வழக்கறிஞர் ரவி பத்ரா செய்தியாளர்களிடம் கைது சம்பவம் குறித்து விளக்கினார். அப்போது அவர், கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி நடந்த இந்த கொடுமையான சம்பவம் என்பது சர்வதேச தூதரகச் சட்டங்களையெல்லாம் மீறப் பட்ட செயலாகும். அவர் கைது செய்யப்பட்ட தகவல்   அவரது தந்தைக்கோ அல்லது இந்திய தூதர் பிரபு தயாளுக்கோ கூட தெரிவிக்கப்படவில்லை. கிருத்திகாவுக்கு கைவிலங்கிட்டு சிறையில் அடைத்தது தூதரக மரபுகளை மீறிய செயலாகும். உள்நோக்கத்தோடு, வேண்டுமென்றே கிருத்திகா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருடைய வேதனைக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் நியூயார்க் நகர மேயர், தனது பொறுப்பை கிருத்திகாவுக்கு வழங்கி சாவியை ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் வேண்டுமென்றே எந்தவிதமான குற்றமும் செய்யாத  கிருத்திகாவை கைது செய்து சட்டவிரோதமாக சிறையில்  வைத்ததற்காக நஷ்டஈடாக ரூ.7 கோடி வழங்க வேண்டும் என்றும்  நியூயார்க் நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக கிருத்திகா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும்  கூறினார்.
                 ஒரு அண்டை நாட்டு தூதரக அதிகாரியின் பெண் என்றும் பார்க்காமல், பள்ளியில் பயிலும் இளம் பெண் என்று கூட பார்க்காமல் காட்டுமிராண்டித்- தனமாக அமெரிக்க போலீஸ் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. இந்திய அரசும் இதைக் கண்டித்து தூதரக முறையிலான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: